கமலாலயன் (குறுநாவல், சிறுகதை, கட்டுரை, நேர்காணல்) சிறப்பு வெளியீடு நூல் அட்டைப்படம்

கமலாலயன் (குறுநாவல், சிறுகதை, கட்டுரை, நேர்காணல்) சிறப்பு வெளியீடு – நூல் அறிமுகம்

கமலாலயன் (குறுநாவல், சிறுகதை, கட்டுரை, நேர்காணல்) சிறப்பு வெளியீடு – நூல் அறிமுகம்

‘வாசிப்பில் ஆழங்கால் படாமல் மகத்தான படைப்புகளை உருவாக்கிவிட முடியாது’: எழுத்தாளர் கமலாலயன்

சுகன்யா ராமநாதன் 

எழுத்தாளர் கமலாலயனுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘இலக்கிய மெரினா விருது’ வழங்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நூல், அவரது படைப்புலகையும் ஆளுமையையும் பல கோணங்களில் அறிமுகப்படுத்துகிறது.

எண்ணம் சொல் செயல் – இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் அடி சறுக்காமல் வாழ்க்கை பயணம் மேற்கொள்ளும் மனிதர்கள் அரிதிலும் அரிது. அப்படி ஒரு அரிதான அருள் பொருந்திய மனிதர் தான் எழுத்தாளர் கமலாலயன்.

ஒரு உன்னதமான தோழர். கொண்ட கொள்கை மீது தளராத பிடிப்பு, அதை நிலைநிறுத்த தன்னால் இயன்ற அத்தனை உழைப்பையும் இயன்ற வழிகள் அனைத்திலும் வழங்கியவர், தொடர்ந்து வழங்கிக்கொண்டிருப்பவர்.

மகத்தான படைப்புகளை தமிழுக்கு கொடையாக வழங்கும் ஒரு அருமையான மொழிபெயர்பாளர். சமரசமற்ற உழைப்பையும் படைப்பாற்றலையும் தருபவர்.

இரண்டு ஆண்டுகளாக ஜோலார்பேட்டை இலக்கிய மெரினா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது எழுத்தாளர் கமலாலயனுக்கு வழங்கியிருப்பது மகிழ்ச்சியான செய்தி. சிறப்பு வெளியீடாக கமலாலயன் அவர்களின் குறுநாவல், சிறுகதைகள், கட்டுரை மற்றும் நேர்காணல் அடங்கிய தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது. தேநீர் பதிப்பகத்தின் வழக்கமான நேர்த்தியான வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலாலயன் படைப்புகளை அழகாக தாங்கி இருக்கிறது.

எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் ‘ தண்ணீர் யாருக்கு சொந்தம்?’ கமலாலயன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஆனந்த டெமுல்டே எழுதிய ‘ மகத் ‘ நூலைப் பற்றிய ஒரு முன்னுரை. எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ‘கனிவின் சிகரம் ‘ கட்டுரை கமலாலயன் என்ற ஆளுமை, அவரின் தோழமை மற்றும் அவருள் பொதிந்திருக்கும் மானுட பேரன்பின் தரிசனம் எனலாம்.

‘நகரப் பருந்துகள்’ குறுநாவல் நெஞ்சை உலுக்கும் ஒரு படைப்பு. அதிகாரம் தன் கோர பற்களால் காவு வாங்கும் எளிய மக்களின் ரத்தத்தால் எழுதப்பட்டது. போராட்ட களம் என்பது உணர்ச்சிகளின் எழுச்சி பீடம். அதனை எழுத்துகளில் கொண்டுவருவது அத்தனை எளிமையானதல்ல. உலக புகழ் பெற்ற ‘தாய்’ நாவலில் வாசகருக்கு எழும் உத்வேகம், அடக்குமுறையைக் கண்டு பொங்கும் போராட்ட உணர்வு, ‘நகரப் பருந்துகள்’ வாசிக்கும் போதும் ஏற்படுகிறது. தற்சமயம் நாடு இருக்கிற சூழ்நிலையில் யாவரும் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய ஒரு அருமையான படைப்பு. உண்மை சம்பவங்களைக் கொண்டு புனைவாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் குறுநாவல், அதிகாரத்தின் ஆணவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.  ஒரு முழு நாவலாக விரியக் கூடிய கூறுகளுடன்  இருக்கிறது.

கமலாலயன் அவர்களின் சிறுகதைகள், தனி மனிதர்களின் வாழ்க்கை பாடுகளை கிசுகிசுத்து போகும், பின் மென்மையாக மனதில் காலூன்றும் தன்மைக் கொண்டவை. அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களுக்கு நாம் முன் கூட்டியே தீரப்பெழுதிவிட்டுத் தான் பேச ஆரம்பிக்கிறோம். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாடுகளை நமது அக்கறையில்லாத பேச்சுகள் மேலும் காயப்படுத்துகிறது. வயதில் மூத்தவர்களின் மனங்கள் அவர்களின் உடல்களைப் போலவே மேன்மையாகும் காலத்தில், நாம் கூடுதல் கவனத்தோடு நடக்க வேண்டும் என்று நினைவூட்டும் கதை ‘ஓய்ந்தவர்கள்’.

‘துணைகள்’ என்ற கதை பெயரளவில் இருக்கும் கடவுளர்களின் துணை, நிஜ வாழ்க்கை கஷ்டங்களின் போது ஒரு போதும் துணைக்கு வராததை சுட்டிக்காட்டுகிறது. சமூக கட்டமைப்பு பெரும்பலானவர்களுக்கு இங்கு வாய்ப்புகளை லாவகமாக மறுத்துவிட்டு, கடவுள்களின் துணையோடு வெகு ஜோராக தன் சுரண்டலைத் தொடர்கிறது.

நூலில் இடம்பெற்றுள்ள நான்கு கட்டுரைகளும் நான்கு வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தில் நின்று பேசுகின்றது. ஒரு தெளிவான படைப்பு நோக்கமும் முதிர்ச்சியும் கமலாலயன் படைப்புலகில் இருப்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. ஒரு சமூகம் மேன்மையடைய என்னென்ன தேவையோ அதுவனைத்தையும் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்ற எத்தனிப்பு அவரிடம் இருப்பதை உணரலாம். நூலின் முன் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அவரின் நூல்களின் பட்டியல் அதற்கு ஒரு சான்று.

கல்வியின் திசைவழிகள், குழந்தைகளின் உரிமைகள், காயங்களின் வசந்தம் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் இந்த நான்கு கட்டுரைகளும் அவரின் வாழ்க்கையின் பல பரிணாமங்களை கூறுகின்றன. அறிவொளி இயக்கத்தில் அவரது தொடர் பங்களிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் அவரது பணி, இலக்கியத்தின் மீதும், எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும், பெண்கள் உரிமை மீதும் அவர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடே இந்த தேர்வுகள்.

‘கல்வியின் திசைவழிகள்’ கட்டுரை ஜாதிய காலனிய இந்தியா வரலாற்றில் கல்வி கடந்து வந்த பாதையை ஆதாரங்களின் அடிப்படையில் அலசுகிறது. இப்போது இருப்பது போலவே தான் எப்போதும் இருந்தது என்ற மனநிலை இளைய தலைமுறை மத்தியில் இருப்பதற்கு முக்கிய காரணம் நாம் வரலாற்றை மறந்தது தான். அதை நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டிய கடமையை இந்த கட்டுரை செய்கிறது.

‘குழந்தைகளின் உரிமைகள்’ என்ற தலைப்பில் இயல் சிறார் மின்னிதழில் எழுத்தாளர் கமலாலயன் யுனிசெஃப் பிரகடணத்தை முன்வைத்து தொடர்ந்து எழுதி வருகிறார். மனித உரிமைகள் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களாகத் தான் இன்றைய அதிகாரம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த வாழ்க்கைப் பயணத்தில், ஸ்டீவனின் சாதனைகளுக்குப் பின்னால் ஜேனின் பெரும் தியாகங்களும் மறைந்திருப்பதை இந்தக் கட்டுரை புதிய கோணத்தில் காட்டுகிறது.

மலையாள கவிஞர் பவித்தரன் தீக்குண்ணி பற்றிய கட்டுரை – ‘காயங்களின் வசந்தம்’. இலக்கிய உலகில் தடம்பாதித்திருந்த போதிலும், அவர் பிழைப்பிற்காக மீன் விற்கிறார் என்று வாசிக்கும் போது மனம் பதறுகிறது. அவரது சிறு வயது காலங்கள் முதல் தற்போது வரை அவர் எதிர் கொண்ட துயரங்கள், நம்மை திகைக்க வைக்கும்.

ஸ்டீவன் ஹாகிங் உலகறிந்த ஆளுமை. ஆனால் அவரது சாதனைகளுக்கு பின்னால் இருந்த பெண்மணி அவரது இணையர் ஜேன். காதல் புரிந்த காலத்தில் ஸ்டீவன் ஹாகிங் ALS நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்தே தான் அவரை திருமணம் செய்துகொள்கிறார் ஜேன். குழந்தைகள், ஸ்டீவன் உடல் நிலை காரணமாக அவரை பராமரித்தல் போன்ற மொத்தப் பாரத்தையும் அவரே சுமந்திருக்கிறார். இந்த வாழ்க்கை பயணத்தில், ஸ்டீவன் வெற்றிக்காக அவர் தன் அடையாளத்தையே  தியாகம் செய்திருக்கிறார் என்று நாம் ஒரு புதிய கோணத்தை காண்கிறோம்.

கமலாலயன் என்ற பேராளுமையை நாம் நூலின் இறுதிப் பகுதியில் இடம் பெற்றிருக்கும் நேர்காணலின் வழி அறியலாம். இலக்கியத்தின் மீதும் மானுடத்தின் மீதும் அவர் கொண்டுள்ள தீராத காதலே அவரின் பதில்களின் சாரம். புதிதாக எழுத வருபவர்களுக்கு கலையை கற்று தரும் வழிகாட்டியாக மட்டுமல்லாமல், இலக்கியம் பற்றிய ஒரு பார்வையையும் விதைக்கிறது.

ஆழ்ந்து படிக்கையில் வாழ்க்கை பற்றிய புரிதலும் ஒரு ஹைக்கூ கவிதையை போல, ஒரு சென் நுண் மொழி போல சில இடங்களில் நமக்கு ஒளி தரலாம்.

அவரது படைப்புலகிலிருந்தும் சமூகப் பணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கியத் தடங்களை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் பல்சுவை விருந்தாக இந்தச் சிறப்பு நூல் அமைந்துள்ளது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:கமலாலயன் (குறுநாவல், சிறுகதை, கட்டுரை, நேர்காணல்) சிறப்பு வெளியீடு
ஆசிரியர்:கமலாலயன்
வெளியீடு:
தேநீர் பதிப்பகம்
விலை:₹140.00 (7% Discount price was: ₹.130)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 சுகன்யா ராமநாதன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *