தனியாத் தீயின் நாக்குகள்
ஒரு வாசிப்பு பகிர்வு
=====================
எழுத்தாளர் ,மொழிபெயர்ப்பாளர் கமலாலயன் அவர்களின் சிறுகதை தொகுப்பு.
15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. அனைத்துமே மிக எளிதில் வாசிக்கக் கூடிய சொல்லாடல்களில் அமையப்பெற்ற சிறுகதைகள். தனிமனித, குடும்ப, சமூக பரிமாணங்களை பற்றி பேசுபவை.
முதல் வெளியீடு 2024 வெளிவந்துள்ளது. ஆயினும் கதைகள் அனைத்தும் 1980 களில் மற்றும் 90களில் எழுதப்பட்டவை. இன்று வாசித்தாலும் இன்றைய வாழ்விற்கு அப்படியே பொருந்துகிறது இவரது கதைகள்.
துணி
=======
“லேத் “பட்டறையில் பணி செய்கிற புண்ணியகோட்டி. பணியின் போது சிதறும் செம்பழுப்பான இரும்புத்தூள் அவரின் சட்டை பேண்ட் மற்றும் கால்களில் பட்டு நிறைய பொத்தல்களையும் ரணத்தையும் உண்டு பண்ணி விடுகிறது.
ஆனாலும் அந்தப் பணி செய்துதான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். அவரது மனைவி தபால் அலுவலகத்தில் பணிபுரியும் தெரிந்தவர் ஒருவரிடமிருந்து பெற்ற யூனிபார்மை தைத்து கணவருக்கு அணிவித்து அனுப்புகிறார்.
ஒரு நாள் பணிக்கு செல்கையில் தபால் அலுவலகத்தில் பணிபுரியும் வேறொரு நபர் இவரை அணுகி தன் அலுவலகத்தில் பணி புரியும் பணியாள் என்று நலம் விசாரித்து செல்லும் ருசிகர சம்பவத்தை கதையாக்கி இருக்கிறார்.
லேத் பட்டறையின் தொழில்நுட்பங்களை அணு அணுவாக விவரித்து இருப்பது இந்த கதையின் சிறப்பு அம்சமாகும்.
பார்வைகள் மாறும்
===================
சம்பள உயர்வு போராட்டம் காரணமாக சிறை சென்ற கணவனை காணச் செல்லும் மனைவி மற்றும் குழந்தையின் கதை. போராட்ட காரணங்கள், சிறையில் படும் அவஸ்தைகள், சிறை சென்ற கொஞ்ச நாளில் நல்லதொரு போராட்டத்திற்கு தான் வந்திருக்கிறோம் என்கிற தங்களுடைய பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நெகிழ்ச்சியோடு அமையப்பெற்றிருக்கிறது இக்கதை. நிச்சயம் இந்த அனுபவம் நூல் ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
துணைகள்
=============
ஒரு டெம்போ டிரைவர். லோடு ஏற்றி இறக்குபவர். அங்கே இங்கே கடனாக புரட்டி செகண்ட் ஹேண்ட் டெம்போவை விலைக்கு வாங்கி பின்பு தவணை கட்ட முடியாமல் விற்று விடுகிற அவலப் போக்கை சொல்லுகிற கதை. கதையின் இறுதி பாரா தலைப்புக்கு ஏற்ற வகையில் அருமையாய் அமைக்கப்பட்டிருக்கிறது.
குருவிக்குஞ்சும் கலைந்த
=========================
கூடும்
=======
வேப்ப மரத்தில் கட்டிய குருவிக்கூட்டில் இருந்து விழுந்து விடுகிற குருவி குஞ்சுகளை பற்றிய நெகிழ்ச்சியான கதை. ஜெயாவின் உள் உணர்வு அதிர்வுகளும் தாய்க்குருவிகளுடன் பேசும் பாங்கும் நம்மை அதிர வைக்கின்றன.
ஓய்ந்தவர்கள்
===============
பணி செய்து பணி ஓய்வுக்கு சென்றவர்களின் கதை. “என்னப்பா சொகமா இருக்கீங்களா” என்கிற கேள்விக்கு வேறு ஒரு அர்த்தமும் உள்ளது என்பதை இறுதி பத்தியை வாசிக்கிற பொழுது உணரலாம்.
பறப்பவர்களின் காலம்
======================
ஏதோ ஒரு அவசர வேலை நிமித்தமாக செல்லும் ரமணன் திடீரென ஒரு நண்பனை எதிர்கொள்வதும் ரயிலில் பயணிக்கும் பெண் ஒருத்தி சந்திக்கும் நட்பிற்கும் இடையிலான முரண்பாடுகளை சொல்லுகிற கதை. நண்பர்களை சந்திக்கவும் பேசவும் முடியாமல் போகிற தருணங்கள் வேதனை மிக்கவை.
வருணம்
==========
“திருமண அழைப்பிதழில் மாப்பிள்ளையின் அப்பா பெயரும் கோமதியின் அப்பா பெயரும் ஒன்றுடன் ஒன்று ஒரே வாலுடன் அச்சாகியிருந்தன.” கதையின் இறுதி பத்தி இது.கதை முழுவதும் காதல் திருமணத்திற்காக தந்தையுடன் போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை சொல்கிறது. ஆனால் நிறைவேறாமல் போவதற்கு எதுதான் காரணம் என்பதை இறுதிப் பத்தியில் நம்மை யோசிக்கவைத்து அதிர வைக்கிறார்.
தணியாத் தீயின்
=================
நாக்குகள்
===========
செய்தி சேகரிப்பவர்களுக்கு ஒருவிதமான இயந்திரத்தன்மையும் வணிக நோக்கும் தான் இருக்கும் என்கிற பொதுவான பிம்பத்தை உடைத்தெரிகிற கதை. அவர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை வலியுறுத்துகிற கதை..கீழ்வெண்மனியில் நடந்த சம்பவத்தை ஒட்டியது.
மடிகேரியின் கண்ணீர்
======================
எழுத்தாளர் கோடாகினா கௌரம்மா பற்றிய உண்மை கதை. கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னட எழுத்தாளர். 27 வயதிலேயே இறந்துவிட்ட பெண்ணிய இலக்கியவாதி பற்றிய உண்மைகள் கதை. மடிகேரியில் உள்ள கோட்டை சொல்வது போல அமைத்திருக்கிறார் இக்கதையை.
பற்றிக்கொள்ள
================
நூல் ஆசிரியர் தான் சந்தித்த அவலக் காட்சியைத்தான் கதையாக்க்கி இருக்கிறார் என நினைக்கிறேன். கதை மாயா யதார்த்த அமைப்பில் செல்கிறது.
வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் போகிற பேருந்தில் பயணிக்கிற ஒரு தாயும் சிறுமியும் பற்றிய கதை.
பற்றிக்கொள்ள பிடிப்பு ஏதும் இன்றி அங்கும் இங்கும் தள்ளாடுகிற ஒரு சிறுமி படிக்கட்டு வழியாக விழுந்து மரணம் அடைகிற நிகழ்வினை ஒரு பாராவில் சொல்லிவிட்டு, ஒரு எழுத்தாளனாக அந்த சிறுமியை காப்பாற்றுகிற விதத்திலே கதையை முடித்து இருக்கிறார். திரும்பத் திரும்ப வாசிக்கலாம் இக்கதையை.
குருவி
=======
வீடு கம்பெனி என்று நாள் முழுவதும் அல்லாடிக் கொண்டிருக்கும் ராகவன் தன் நண்பன் மூலமாக கிடைத்த குருவிகளை சுதந்திரமாக பறக்க விடுவது தான் கதை. எளிமையாக சொல்லப்பட்டாலும் குருவின் மேல் கொண்டிருக்கக் கூடிய பாசத்தின் காரணத்தை கதையைப் படித்து மெய்சிலிர்க்கலாம்.
எல்லா கதைகளும் அதன் போக்கில் இயல்பாய் அமைந்திருக்கின்றன. பக்கத்து வீடு, எதிர் வீடு, தெரு முனையில் உள்ள வீடு, என நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்கள்.இடையிடையே அறிவுரைகள் இல்லை. சலிப்பூட்டும் வர்ணனைகள் இல்லை.அனைத்து கதைகளும் உண்மை சம்பவத்தோடு நெருங்கி இருக்கின்றன.
நூலாசிரியர் கமலாலயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நூலின் விவரம்:
நூலின் பெயர்: தனியாத் தீயின் நாக்குகள்
நூல் ஆசிரியர்: கமலாலயன்
வகைமை: சிறுகதைகள்
பதிப்பகம்: பரிசல் பதிப்பகம்
விலை: 160/
நூல் அறிமுகம் எழுதியவர்:
சகுவரதன்
குடியாத்தம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.