நமது தமிழ் மரபு நீண்ட நெடிய சங்கிலி தொடர்ச்சியுடைய சமூக பண்பாட்டு வரலாறு கொண்டது. மேற்கத்திய உலகைப் போல 200-300 வருட வரலாற்றை பெரிய வரலாறு போல சித்தரிக்கப்படும் சமூகமல்ல தமிழ்ச் சமூகம்.
தமிழக பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்துவதில் மிகச் சிக்கலாக இருக்கிறது என்று பல ஆய்வு நண்பர்கள் என்னிடம் கூறியதுண்டு.
காரணமென்னவெனில் எந்த ஒரு வரலாற்றையும் நாம் வேரிலிருந்து பார்க்க தவறவிடுவதுதான். நமது வரலாறு எல்லாம் கிளைகளிலிருந்து முகிழ்ப்பவை போன்றுதான் பொதுப்புத்தியில் இருக்கிறது.
இரு வருடங்களுக்கு முன்பாக எனது தோழி லண்டன் விக்டோரியா & ஆல்பர்ட் மியூசியத்தில் ஆறு மாத காலம் அனுபவ பயிற்சிக்காக சென்று வந்தார். அவர் என்னிடம் கூறிய போது தமிழ் நாட்டின் பல்வேறு கலைப் பொருட்கள் மியூசியத்தில் உள்ளது.
ஆனால் சரியான முறையில் வகுப்பிட்டு ஆவணப்படுத்துவதில் சிக்கல் உள்ளதால் இன்னும் பல கலைப் பொருட்கள் ஆவணப்படுத்தாமல் வைத்துள்ளார்கள். காரணம் மூல வேரிலிருந்து ஆவணப்படுத்தி ஆய்வு செய்யும் நபர்கள் இல்லாத குறை என்றார்.
உதாரணமாக தி.மு.க. ஆரம்பித்த பிறகு கடலூர் மாநாட்டில் சி.என்.அண்ணாதுரை அவர்களால்” ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற முக்கிய சொல்லாடல் வைக்கப்பட்டு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கவும், பொதுமக்களிடம் சென்று ஓட்டு வாங்க உதவவும் பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் எத்தனை நபர்களுக்கு இந்த சொல்லாடல் திருமூலரின் வாசகம் என்று உடனடி ஞாபகத்திற்கு வரும்.
” நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற வரியை பயன்படுத்தும் போது எத்தனை பேருக்கு அப்பருடைய தேவார வரி என்று நினைவுக்கு வரும்.
சங்கம், கழகம் என்ற சொல் வள்ளலார், விருதை சிவஞானயோகி ஆகியோர் ஏன் பயன்படுத்த வேண்டும்.
இன்றைய திராவிடர் கழகம் என்ற சொல்லின் மூலம் வரும் முன்பாக விருதை சிவஞான யோகியால் ஆரம்பிக்கப்பட்ட திருவிடர் கழகம் என்ற பெயரில் தனித் தமிழ் வளர்ச்சிக்கான அமைப்பு ஒன்றினை நிறுவியவர். திருவிடர் கழகம் அமைப்பின் மூலமாக தமிழின் தோற்றம், வளர்ச்சி அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து தமிழ் கூறும் நல் உலகுக்கு தொண்டாற்றி வந்தது.
மறை மலைஅடிகளின் தனித்தமிழ் இயக்கத்துக்கு முந்தையது திருவிடர் கழகம். இக்கழகத்தின் மூலமாக திராவிடர்களின் பழைய வரலாறுகளினை ஆராய்தல், திராவிடர் என்பவர் யார், திராவிடர் தோற்றம் யாது, திராவிட நாட்டின் முற்கால பிற்கால நிலைமைகளினை ஆராய்தல், திராவிடரின் அறிவுச் செறிவு, தொழில் திறமை, கடற் செலவு, உணவு, பழக்கவழக்கம், அரசியல், சமயவியல், போர்த்திறன் போன்றவற்றை ஆராய்வதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இயங்கியது.
ஆகையால் நமது சமூகம் செறிவான பண்பாட்டு அடையாளம கொண்ட நீண்ட அறுபடாத சங்கிலி தொடர்ச்சியுடைய சமூகம். சமூக பின்புலத்தை அறிவதற்கு ஒவ்வொரு கலைச் சொல்லும் ஆய்வுக் கருவியாக உதவுகிறது.
இப்படியாக நமது சமூக பண்பாட்டு வேர்களை தேடினால் இயற்கை வழி மரபினதும்,பின்பு சமய வழி மரபினதும் தொடர்வதை அறிய முடிகிறது.
திருவொற்றியூர் தொண்டை நாட்டு தமிழ்வழி புலவர்களுக்கு காசியைப் போன்று ஒரு புண்ணிய இடமாகும். பட்டினத்தார் தொடங்கி ராமலிங்கம் சுவாமிகள்,மவுனகுரு சுவாமிகள், பூவை கல்யாணசுந்தர முதலியார், முத்துகிருஷ்ணபிரமம், குணங்குடி மஸ்தான், பரஞ்ஜோதி சுவாமிகள் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், தொழுவூர் வேலாயுத முதலியார், திருவொற்றியூரானடிமை வேத பதிப்பாசிரியர் த.ப.ராமசாமி பிள்ளை போன்றோர் ஏராளமானோர் வரலாற்றில் தொடர்பு உடையது.
திருவொற்றியூர் என்றால் பங்குனி உத்திர பெருவிழாவில் நால்வரின் ஒருவரான ஆளுடை நம்பி என்றழைக்கப்படும் சுந்தரருக்கும், புழல் கோட்டத்து ஞாயிறு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சங்கிலி நாச்சியார் அம்மையாருக்கும் இடையே திருவொற்றியூர் இறைவன் தோழனாக இருந்து ஒத்து அமைத்து மகிழ மரத்தின் கீழ் சத்தியம் செய்ய வைத்து திருவருள் புரிந்ததால் திருவொற்றியூர் என்று வழங்கலாயிற்று.
சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் தோழனாக இருந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தவர் நினைவாக மாசி திங்கள் மகிழடி சேவை நிகழ்ந்தேறி வருகிறது.
இடதுசாரிகளால் இன்று அன்புடன் அழைக்கப்படும் தோழன் என்ற வார்த்தைக்கு பாத்திரமானவர் திருவொற்றியூர் இறைவன்.
அப்பர் பெருமானார் கருவுற்ற நாண் முதலாக என்னும் திருப்பாட்டில் “திருவொற்றியூரா, திருவாலவாயா திருவாரூரா என்று விளிக்கிறார். அப்பர் பெருமானுக்கு தனித் திருக்கோவில் இங்கு காணலாம்.
மூத்த மடங்களின் வரிசையில் ஆமர்த்தக, புஷ்பகிரி, கோளகி மற்றும் ரணபத்திர சந்தான சைவ மடங்களில் கோளகி மடத்து சந்தான பரம்பரையினர் திருவொற்றியூரை மையமாக கொண்டு சிவாகம ஞானப் பணிகள் புரிந்து வந்துள்ளனர்.
கி.பி. 10 ம் நூற்றாண்டில் நிரஞ்சன தேவர் இந்த மடத்தில் சிவாகமம் போதித்து வந்தார். மூன்றாம் நந்திவர்மன் மகன் கோவிசயகம்ப வன்மன் ஆட்சியின் போது திருவொற்றியூரில் சிவன் கோவில் ஒன்று கட்டினர். இவரது மாணவர் சதுரானன பண்டிதர். இவர் கேரளாவிலிருந்து வந்தவர். நிரஞ்சன தேவருக்குப் பின்பு மடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்.
பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை பல சதுரானன பண்டிதர்கள் காணப்பட்டனர். இந்த மடமும் சதுரானன பண்டிதர் மடம் என்று வழங்கப்பட்டது.
கம்பனின் தனிப்பாடல் திரட்டில் ஒரு வரி கீழ்க் கண்டவாறு காணப்படுகிறது.
“தடக்கையான் சதுரானன பண்டிதன் மடத்துளாள் என் மனத்துறை வல்லியே’’
இந்த வரி திருவொற்றியூர் நோக்கி கள ஆய்வு செய்ய என்னை உந்தித் தள்ளியது. இந்த மடம் திருவொற்றியூரில் எந்த இடத்தில் இருந்திருக்கலாம் என தேட ஆரம்பித்தேன்.
இக் கள ஆய்வில் உயிர் இதழ் ஆசிரியர் சண்முகானந்தம் அவர்களை அழைத்துக் கொண்டு தெரு தெருவாக சுற்றி அலசினோம். மடம் எங்கிருந்தது என அறியமுடியவில்லை.
கம்பன் மனம் கவர்ந்த வள்ளி எங்கிருந்து திருவொற்றியூர் வந்து சேருகிறாள் என்ற வினாக்களை தேடி பயணம் ஆரம்பித்தது.
திருவெண்ணைநல்லூர் சடையப்பர் வள்ளலிடத்தில் இருந்ததை குறிக்கும் வண்ணமாக கம்பன் எழுதிய சோழமண்டல சதகத்தில் கீழ்க் கண்ட வரி இடம் பெறுகிறது.
தனதானியத்தின் உயர்ந்தோர்கள்
தாமே என்னும் தருக்கேயோ
வினவாது இரவில் நெற்கதிரால்
வேய்ந்தார் வல்லி வீடதல்லால்
கம்பனின் உள்ளம் கவர்ந்த வல்லியின் வீடு மழையில் நனையாமல் இருக்கச் சடையப்ப வள்ளல் கம்பரிடம்கூடச் சொல்லாமல் ஓர் இரவில் நெல் கதிர்களைக் கொண்டு வேய்ந்தார் என்றால் வள்ளி எவ்வளவு முக்கியமானவள் என மேறகண்ட சோழமண்டல சதக வரிகள் மூலம் அறிய முடிகிறது.
‘பொதுமாதர் வீட்டைப் புகழ் பெற வேநெல்
கதிராலே வேய்ந்தருளும் கங்கைப் – பதி நேர்
வரு வெண்ணெய் நாடன்வரு நாவலர்க்குத்
தருவான் அவன் சடையந்தான்’
என கம்பனின் இன்னொரு பாடல் வரி புலப்படுத்துகிறது.
திருவொற்றியூர் சதுரனன பண்டிதர் மடத்தில்தான் வாகீச முனிவர் என்பவரால் சித்தாந்தம் போதிக்கப்பட்டு ஞானமிர்தம் என்ற சித்தாந்த நுணுக்கங்கள் நிறைந்த நூல் அரங்கேறியது.
திருவொற்றியூர் திரு மயானமும், மடமுடைய சதுரானன பண்டிதன் , திருவொற்றியூர் இறைவன் நெய்யாடி அருளுவதற்காக நிவந்தமாக சதுரானனார் நானூற்றைம்பது காசு வைத்தாகவும், இப்படிக்கு இவை மடமுடைய சதுரானன எழுத்து போன்ற கல்லெழுத்து குறிப்புகள் காணப்படுகிறது.
வள்ளி என்ற பெயரில் தாசி வள்ளியை கம்பன் திருவொற்றியூர் சதுரானன பண்டிதர் மடத்தில் சந்தித்த நிகழ்வை சிறுகதையாக அழகாக வடித்திருப்பார் கு. அழகிரிசாமி.
சடையப்ப வள்ளலிடமிருந்து விடை பெற்ற கம்பன் வடக்கே சென்று காகதீய மன்னனின் விருந்தாளியாக பல நாட்கள் இருந்து விட்டு நகர்வலம் வருகிறார்.
தொண்டை மண்டலம் நோக்கி வருகை புரிகிறார் கம்பர். திருவொற்றியூர் சதுரானன பண்டிதர் மடம் கம்பனை உயர் மரியாதையோடு வரவேற்க தயாராக இருக்கிறது. திருவொற்றியூர் நகர் முழுவதும் விழா கொண்டாட்டமாக மாவிலை தோரணங்கள் கட்டி வரவேற்றனராம்.
கம்பனை வரவேற்க மட நிர்வாகம் தடபுடலாக இருந்தது. சடையப்ப வள்ளல் ஊரில் வசித்த வள்ளி என்ற தாசி ஒரு அசாதரண சூழலில் தனது அன்னை மறைவிற்கு பின்பு தொண்டை நாடு வந்து சேர்ந்தவள் .
மடத்தின் அனுமதியுடன் தனியாக தங்கியிருந்தாள்.
கம்பனுக்காக மிக விமரிசையான முறையில் தடபுடலான விருந்து அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட விருந்தில் கம்பன் களிப்பெய்தினார். அந்த விருந்து அவரது பழைய நண்பர் சடையப்ப வள்ளலை ஞாபகப்படுத்தியது.
அந்த விருந்தில் முக்கனிகளும் இடம் பெற்றன. அதில் இடம் பெற்ற இரு கனிகள் உற்பத்தியாகாத பருவ காலத்தில் கம்பன் விருந்தில் மட்டும் எப்படி முக்கனிகளும்இடம் பெற்றது என்பது குறித்து சதுரானன பண்டிதரும் திகைக்கிறார். அதே சமயம் கம்பனுக்கு அந்த விருந்தில் அக்கனி இடம் பெற்றதில் மகிழ்வடைகிறார் பண்டிதர்.
ஆனாலும் பண்டிதருக்கு சற்றுக் குழப்பம். சாப்பிட்ட பின் சிறிது நேரம் அயர்ந்த வேளையில் சதுரானன பண்டிதருடன் உரையாடிக் கொண்டிருக்கும் வேளை.
அந்த வேளையில் மடத்தில் வல்லீ கம்பன் அணிந்த காலணிகளை தனது கையில் பக்குவமாக தூக்கி வைத்து நன்றாக துடைத்துக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து கவனிக்கிறார் கம்பன்.
பண்டிதரோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அப்பெண்ணின் செயலை கண்டு அப் பெண்ணை அழைக்கிறார் கவிச்சக்கரவர்த்தி.
பண்டிதர் குறிப்பால் வல்லீயையை அழைக்கிறார். மடத்தில் பெண் இருப்பது குறித்து ஆச்சரியமடைகிறார் கம்பன்.
அப்பொழுது பண்டிதர் இந்த பெண் எந்த ஊர் என்று தெரியாது. அடைக்கலம் கேட்டாள். மடத்தில் சில வேலைகள் செய்து தனியாக தங்கி கொள்வதாக ஊர்ப்புறத்தில் உள்ள காளி கோவில் பூசாரி வீட்டில் தங்குகிறாள் என்றார்.
பணிப்பெண்ணை அவளை இங்கே கூப்பிடு என்றார் பண்டிதர்.
பணிப் பெண் பண்டிதர் மற்றும் கம்பர் முன் நின்று பேச முடியாமல் தலை குனிந்து சில விநாடி விக்கி விக்கி பேசினாள்.
சுவாமி இந்த அடிமையை மன்னிக்க வேண்டும் தங்கள் உரையாடலுக்கு இடையூறு செய்த மகா பாவி நான் போகிறேன் என்றாள்.
வேண்டாம் நீ போக வேண்டாம் இங்கே வந்து அழுத காரணத்தைச் சொல் என்கிறார் கம்பர்.
என்னை மன்னிச்சிடுங்க சுவாமி தாங்களே முன் நின்று பேசக் கூட தகுதியற்றவள் நான். உங்கள் பாட்லுக்கு நான் அடிமை என்று கூறி விட்டு கந்தர்வ குரலுடன் கம்பனின் ராமாயணத்தை அவள் பாட கம்பன் உட்பட மடத்தில் எல்லோரும் வல்லியின் கந்தர்வ குரலில் மயங்கி விட்டனர்.
பின்பு இவ்வளவு அழகாக பாடும் நீ யார் ? எங்கிருந்து வந்தாய் எனக் கேள்வி கேட்க, பூர்வம் இந்த ஊரே. பிழைப்புக்காக சோழநாடு சென்று திருவெண்ணைய் நல்லூர் என்றாள்.
உடனே கம்பன் சடையப்ப வள்ளல் கூரை வேய்ந்த வீட்டில் சிறுபிள்ளையாக இருந்த வல்லீயா நீ என்றார். பண்டிதரும் திகைத்து விட்டார்.
வல்லீ இப்பொழுது நீ யார் என்பதை அறிந்து கொண்டேன்.
பொது மாதர் வீட்டில் சடையப்ப வள்ளல் வேய்ந்ததை அப்பொழுது புகழ்ந்து பாடினேன் அன்று நான் வள்ளல் வீட்டில்தான் இருந்தேன் என்றார் கம்பர்.
தாங்கள் இருந்தது என்பது எனக்குத் தெரியும் சுவாமீ !
வல்லீ ! அப்போது நீ சிறு குழந்தையாக இருந்திருப்பாய்…
என் பெயரை மட்டும் சொல்ல வேண்டாம் சுவாமீ என்று வேதனையோடு கூறினாள் வல்லீ.
உன் பெயரில் உனக்கு ஏன் வெறுப்பு அப்படியானால் வேறு பெயர் வைத்துக் கொண்டு இருக்கலாமே என்றார் கம்பர்
”சுவாமி! பெயரை ஒழிக்கலாம் பிறப்பை ஒழிப்பது எப்படி? குலத்தை மாற்றுவது முடிகிற காரியமா! ?”
வல்லீ!
இறைவனுக்குத் தொண்டு செய்து வந்த அன்றே ஒருவனுடைய பண்டைய குலம் அழிந்து படுகிறது என்பார்கள். தொண்டக் குலத்தில் பிறப்பினால் வரும் உயர்வு தாழ்வுகள் இருக்க முடியாது சதுரானன பண்டிதருக்குப் பணிசெய்யும் நீ இப்போது தொண்டக் குலம் . உன் பழமை ஒழிந்தது உன் பெயரையுமே நீ அழித்து விட்டாய். நான் என்ற தன்மையை கூட அறவே ஒழித்து விட்டாய். இது முனிவர்களுக்கு கூட சாமான்யத்தில் சித்தி ஆகாத ஒரு பெரும் சாதனை .செயற்கரிய செய்த நீ துன்பத்தை வைத்துக் கொண்டிருப்பதை அறியாமல் வள்ளலின் அறச் செயல் உன் வாழ்க்கையை மாற்றியதோடு உயர்த்தியும் விட்டது வல்லீ!… என்றார் கம்பர்.
பண்டிதர் அவர்களே! வல்லியின் பெயரை உங்களால் இனி மறக்க முடியுமா? என்னால் முடியாது. வள்ளலின் அறம் இவளுக்கு குலம் தந்து உனகு ஆன்மீகச் செல்வமும் வந்து விட்டது என்றார்.
இந்த மாதிரியாக கம்பன் தாசி வல்லீயைச் திருவொற்றியூரில் சந்தித்த நிகழ்வை மையமாகக் கொண்டு கு,அழகிரிசாமி மிகவும் பிரமாதமாக கையாண்டிருப்பார்.
கு.அழகிரிசாமியின் இக்காலத்து திருவொற்றியூர் வல்லீ சிறுகதையும், கம்பனின் தனிப்பாடலும், சதுராணன பண்டிதர் மடத்தின் கல்வெட்டுக் குறிப்பும் , திருவொற்றியூரை நோக்கி சுகமான பயணம் செய்ய வைத்து வீதி வீதியாக அலைக்கழிக்க வைத்து விட்டது .
வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து ரிக் , யசூர், சாம வேதங்கள் முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து சுமார் 12 க்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஆயிரம் பிரதிகளுக்கு குறையாமல் அச்சிட்டு இலவசமாகவே அளித்தவர் திருவெற்றியூரான் அடிமை த.ப. ராமசாமி பிள்ளை அடங்கியதும் திருவொற்றிய்யூரே.
திருக்குறள் சுவாமிகள் என்றழைக்கப்படும் கிருஷ்ணானந்த சுவாமிகள் தற்பொழுது மவுனகுரு சுவாமிகள் என்ற பேரில் பட்டினத்தார் சுவாமி சமாதிக்கு அருகில் மவுனகுரு சுவாமி என்ற பேரில் சமாதி இருக்கிறது.
வள்ளலார் சுவாமிகளின் அத்யந்த சீடரான தொழுவூர் வேலாயுத முதலியார் ஜீவசமாதியும் திருவொற்றியூரில் அமைந்துள்ளது.
பலப் பல தொண்டை நாட்டுச் சான்றோர்கள் திருவொற்றியூரில் சமாதி ஆவதை காசிக்கு இணையாக கருதி இருக்கிறார்கள்.
திருவொற்றியூரின் ஒவ்வொரு வீதிகளும் வரலாற்றால் நிரம்பியுள்ளது. வரலாறே நிலமாகவும், குறிப்பாக சமய இலக்கிய பெருமை மிக்க மாந்தர்கள் நிறைந்த திருவொற்றியூர் நிலப்பகுதி என்னை எப்பொழுதும் வசீகரிக்கும் ஆனந்தமளிக்கும் இடம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
கட்டுரையாக்கம்: ரெங்கையா முருகன்
உதவி நூல்: பழ. அதியமான் தொகுத்த கு.அழகிரிசாமி கதைகள், காலச்சுவடு பதிப்பகம்.
கள ஆய்வில் உதவி; உயிர் இதழ் ஆசிரியர் சண்முகானந்தம்
குறிப்பு; திருவொற்றியூர் வல்லி சிறுகதையினை இப்பதிவில் சிறிய அளவில் பயன்படுத்தியுள்ளேன். இச்சிறுகதையை தேடிப்படியுங்கள். திருவொற்றியூர் உங்களையும் அழைக்கும்.