விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய கண்தெரியாத இசைஞன் ரஷ்ய நாவல்களில் குறிப்பிடத்தக்கது.
நாவல் ஒரு குழந்தையின் அழுகையொலியில் துவங்குகிறது. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் வசித்து வரும் பணக்கார குடும்பம் ஒன்றில் நள்ளிரவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் மயங்கிய நிலையிலிருக்கிறாள். குழந்தையின் அழுகையொலி கேட்டுக் கண்விழித்து ஏன் இப்படி அழுகிறது எனக்கேட்கிறாள். தாதி பயப்படத் தேவையில்லை என ஆறுதல் சொல்கிறாள். ஆனால் குழந்தையின் அழுகையொலி ஏதோ ஒன்றின் அறிகுறி போலவே இருக்கிறது.
குழந்தை வளர ஆரம்பிக்கையில் அதற்குக் கண்தெரியவில்லை என்பதைக் கண்டறிகிறார்கள். அந்தக் குடும்பமே வேதனைப்படுகிறது. பியோதர் எனப்படும் அந்தக் கண்தெரியாத பையனின் கதை தான் இந்த நாவல். பார்வையில்லாத போதும் அவனைச் சந்தோஷமாக வளர்க்க அந்தக் குடும்பம் முயல்கிறது. பியோதர் ஒலியால் உணர்வுகளைத் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். ஒலி தான் அவனது உலகம். அதன் வழியே அவன் தன்னைச் சுற்றிய இயக்கத்தை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்.
எத்தனை பேருக்கு நடுவிலிருந்தாலும் தனது அன்னையை அவனால் சரியாக அடையாளம் கண்டுபிடித்துவிட முடிகிறது. மற்றவர்களின் முகத்தைத் தொட்டு அவர்கள் யார் என்று அடையாளம் கண்டுகொள்கிறான். புதியவர்களாக இருந்தால் அவன் விரல்கள் மெல்ல முகத்தில் ஊர்ந்து அந்த ஆளைக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் வைத்துக் கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் ஆட்களையும் அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பிக்கிறான். பருவகால மாற்றத்தை அவன் ஒலியின் வழியாகவே அறிந்து கொள்கிறான். ஒருநாள் முதன்முறையாக அவன் வீட்டை விட்டு வெளியே வருகிறான். அவனது முகத்தில் சூரிய ஒளி படுகிறது. அவன் அந்த உணர்வில் சிலிர்ப்படைகிறான்.
கொரலன்கோ அந்த நிகழ்வை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். இயற்கையின் பல்வேறு ஒலிகளை அவனால் ஒரே நேரத்தில் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.
ஒரு நாள் முதன்முறையாகப் புல்லாங்குழல் ஓசையைக் கேட்கிறான். அந்த இனிமை அவன் மனதைக் கவர்ந்துவிடுகிறது. இசையில் ஆர்வம் கொள்ளத்துவங்குகிறான்.
அவனது தாய் பியோதருக்கு ப்யானோ கற்றுத்தருகிறாள். அவன் எப்படிக் கண் தெரியாத இசைஞனாக உருக் கொள்கிறான் என்பதைக் கொரலன்கோ மிக அழகாக எழுதியிருக்கிறார்.
பியோதர் வளரத்துவங்கியதும் கண்தெரியாமலே குதிரை ஒட்டப்பழகுகிறான். தன் வயதை ஒத்த சிறார்களுடன் விளையாடுகிறான். மகிழ்ச்சி அடைகிறான். பியோதரை உருவாக்குவது இசை. ஒரு மனிதனின் ஆளுமையை இசையால் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்கு இந்த நாவல் ஒரு சான்று.
தேனீ சீருடையான் நிறங்களின் உலகம் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். அது பார்வையற்ற அவரது இளவயது அனுபவங்களைப் பற்றிய நாவல். அதில் பார்வையற்றோர் பள்ளியில் தான் படித்த போது நடந்த நிகழ்வுகளை மிக அழகாக எழுதியிருக்கிறார். அதில் சினிமா பார்ப்பதற்காக பார்வையற்றவர்கள் எப்படிச் செல்வார்கள். சினிமாவை எப்படி கேட்டு அறிந்து கொள்வார்கள் என்று விரிவாக பதிவு செய்திருக்கிறார். ,இவரைப் போலவே மதுரையைச் சேர்ந்த ஒவியர் மனோகர் தேவதாஸ் பார்வையில்லாத நிலையில் அற்புதமான ஒவியங்களை வரைந்து வருகிறார். தனது அனுபவங்களை ஆங்கிலத்தில் நூலாகவும் எழுதியிருக்கிறார்.
லத்தீன் அமெரிக்காவின் ஒப்பற்ற எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் பார்வையற்றவர்.ஹெலன் ஹெல்லர் , ஹோமர், மில்டன் போன்ற படைப்பாளிகளும் பார்வையற்றவர்களே. Stevie Wonder, பார்வையற்ற பாடகர். Ray Charles பார்வையற்ற இசையமைப்பாளர். Nobuyuki Tsujii பார்வையற்ற ப்யானோ இசைக்கலைஞர்.
கொரலேன்கோ உக்ரேனைச் சேர்ந்தவர். தனது பதினேழு வயதில் தந்தையை இழந்தார் தந்தையற்றவர், பீட்டர்ஸ்பர்க்கிற்குச் சென்று. தொழில்நுட்ப பள்ளியில் மூன்று ஆண்டுகள் படித்த பிறகு, மாஸ்கோ சென்று உயர்கல்வி பயின்றார். பல்கலைக்கழகத்தில் படித்த நாட்களில் தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார். மாணவர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதன் காரணமாக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்ட கொரலன்கோ, க்ரோன்ஸ்டாட்டில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல வருடங்கள் கழித்து அவர் பீட்டர்ஸ்பர்க்கிற்குத் திரும்பினார்,
1879 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு வடகிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் படி அனுப்பி வைக்கப்பட்டார். அந்த நாட்களில் செருப்பு தைக்கும் தொழிலை கற்றுக் கொண்டு அதைக் கொண்டு வாழ்க்கை நடத்தினார். அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு புதிய அரசாங்கத்திற்குச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்ததற்காக, கோரொலென்கோ மீண்டும் நான்கு ஆண்டுகள் சைபீரியாவில் வசிக்கும்படி நாடுகடத்தப்பட்டார்.
இத்தனை நெருக்கடிகளைத் துயரங்களை அனுபவித்த போதும் அவரது எழுத்தில் புலம்பலோ, சுயபச்சாதாபமோ கிடையாது. கவித்துவமாகவே எழுதினார். மெல்லிய நகைச்சுவையும் காதலும் கலந்த கதைகளை எழுதி வந்தார்.
சைபீரியாவிலிருந்து திரும்பி வந்த அவரைச் சந்தித்துப் பேசிய மாக்சிம் கார்க்கி அதைப் பற்றி ஒரு நினைவுக்குறிப்பு எழுதியிருக்கிறார். பெரிய போராளியாகக் கருதப்பட்ட கொரலேன்கோ நேரில் காணும் போது சாது போல அமைதியாக இருந்தார். அவரிடம் கோபமில்லை. வெறுப்பில்லை. ஞானியைப் போலக் கனிவுடன் இருந்தார் என்றே குறிப்பிடுகிறார்.
ரஷ்யாவில் காலரா பாதித்த போது அந்த இடங்களுக்கு நேரில் சென்று நடந்த நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்ததோடு தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்திருக்கிறார் கொரலேன்கோ .
காலரா குறித்த அவரது அனுபவங்களை The Cholera Quarantine என எழுதிவெளியிட்டிருக்கிறார்.
கொரலேன்கோவின் சிறுகதைகள் மிகச்சிறப்பானவை. The River plays என்ற அவரது பயணக் குறிப்புகள் மிகவும் கவித்துவமாக எழுதப்பட்டிருக்கிறது.
நன்றி: https://www.sramakrishnan.com/?p=10407 இணையப்பக்கம்