**சுமைதாங்கி**
அன்றொருநாளின் தனிமையில்
எதுவுமற்ற திசைநோக்கி
எதையோ இழந்ததின் விசாரத்தில்
அவளிருக்கும் மையத்தில் தொடங்கி
சுருள் சுருளாய் விரிகின்றன
பிளாஷ்பேக் வளையங்கள்…
ஒரு முனை பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கும் அவளை
தொடர்ந்து மாறும் நினைவாகிய காட்சிகள்
உள்நுழைத்து நுழைத்து
உருவி எடுக்கின்றன
தயவு தாட்சனையின்றி…
எத்தனை அழுதிருக்கிறாள்
எத்தனைச் சிரித்திருக்கிறாள்
இவையாவும் சமமென்கிறது
தோராயக் கணக்கு…
முழுதாய்ச் சுற்றி முடிந்த
வளையத்தின் தொடர் கொக்கியில்
இணைக்கச் சேகரிக்க வேண்டும்
இன்னுமவள் காலங்களை…
அதுசரி….
மகிழ்வைத் தின்று
ஏப்பம் விட்டவளுக்கு
கண்ணீரைச் சுவைத்து
வாழத் தெரியாதா என்ன…?
****************************** ******
**காலக்குதிரை**
வசீகர வடிவத்தின்
அளந்தெடுத்த மையத்தில்
அச்சாணிக்கு அடங்கியபடி
கூரியமூக்கு முட்கள் மூன்று
பிரித்தெடுத்த தன் நகர்வுகளால்
புட்டுப் புட்டு வைக்கிறது
காலக் குதிரையின் வேகக் கணக்கினை…
உள்ளக் கிணற்றில்
ஊறிக்கிடக்கும் நம்பிக்கையின்
மொறுமொறுப்பு
வெற்றியின் ருசிகூட்ட
ஆவலது அணைமீறியே
அடையத் துடித்தபடி…
கூர்த்தீட்டிய திட்டத்தினை
குறுக்கும் நெடுக்குமாக
அவ்வப்போது ஓட்டிப் பார்க்கும்
மனம் பூட்டிய இலக்கு ஏர்
ஓய்வது கொள்ளுதலின்றியே…
உள்நீந்தும் மீன் பெருக்குகளின்
எட்டிப் பார்த்தலுக்கு
காத்திருக்கும் மீன்கொத்தியாய்
வாய்ப்பொன்றின் உதயச் சுடருக்கு
வரிசையமைத்தபடி
சில நிறை அகல்கள்….!
****************************** ******
**பெண்ணெனும் பெருந்தேர்**
ஆரம்பகட்ட வலிகளின்
அவஸ்தையோடு உதித்தது
அன்றைய அவளின் தினம்…
கொஞ்சமென்ன..
நிறையவே அடக்க முயன்று
தோற்றுப்போவதும்
சமாளித்துக் கொள்வதுமாக
கடந்து கொண்டிருந்தது நாழிகை…
மார்பணைத்து
இதம் தந்துகொண்டிருப்பவனின்
இதயத் துடிப்போடு
சிசு உதைத்தலின் ஆனந்தம்
சுகந்தானெனினும்
அப்படியே இருந்துவிட
எப்படித்தான் முடியும் அவளுக்கு…
இனியிந்த சென்மம்
வேண்டாமென்னும்
சூளுரைக்கு
ஓங்கி ஓங்கி
ஒலி கொடுக்கிறதவள் குரல்…
வலியின் சிகரம் தொட்டு
உயிரைப் பலியாக்கத்
துணிந்தவளை விட்டு
கழலுகிறது இன்னுமொரு உயிர்
தன் பிறப்பெடுத்து…
வீறிடும் சத்தத்திற்கு
வீணையொலிச் சாயல்
ஆரிராரோ ராகத்தில்
அலுங்காது உறக்கம்…
ஆசிர்வதிக்கப் பட்டவளிலிருந்து
அழகாய் ஒரு தொடக்கம்
பெண் மகவென்னும் குட்டிப் பூ…
****************************** ******
**விளம்பரமில்லா வளர்ச்சி**
பிரத்யேக வடிவமைப்பில்
அவர்களுக்கான ஆடைகளென்று
எந்த விளம்பரமும் காட்டியதில்லை…
நீரற்றுக் கிடக்கும்
நிலவெடிப்பினைப் போல்
பாதத் தளமெங்கும்
கீற்றுப் பள்ள அடையாளங்கள்
பொருந்திப் போவதில்லையோ
செருப்புகளுக்கும் செறுக்குகளுக்கும்…?
உப்புக் கரி விசாரிப்பெல்லாம்
உதட்டுச் சாயம் பூசியோருக்கே
வெற்றிலைக் கறைச் சீமாட்டிகளை
தப்பித் தவறியும் காண்பிப்பதில்லையே…
இழுத்துச் செருகிய சேலையே
வைக்கப்போருக்குச் சும்மாடு
பரசித் தொடர ஒய்யாரமாய்
இவளின் உடுப்பு ஆகாதே..
இருத்தலும் வாழ்தலும்
இவர்களாலன்றோ..
இல்லவேயில்லை
விவசாயத்திற்கென்றே விளம்பரம்…!
****************************** ******
**துறவறத் தேடல்**
தோள்பட்டையின்
தொங்கு பையில்தான்-அவர்களின்
மொத்த உடைமைகளும்…
வேறென்ன இருக்கக்கூடுமதில்
கசங்கிப் போன துணியும்
கையேந்தவொரு திருவோடும் தவிர…
ஓரிருநாள் பழக்கத்திலே
நட்பொன்றைத் தேர்த்தி
கற்றுக் கொள்ளக்கூடும்
மதியாமை மடிசேர்வதை…
இல்லறம் இனித்த நாட்களில்
அலட்சியமாய்க் கடந்த சென்ற
யாசக வீதியில்தான்
யாசித்துப் பழகுகிறான் அவன்…
துறவறம் பூணுவதெல்லாம்
விருப்பத்தின் பேரிலல்ல…
சரிவரப் பெற்றிடாத
அன்புங்கூட காரணமாகலாம் சிலநேரம்…!
*****************************
எண்ணக் கூடாரத்தில்
எத்தனையோ நினைவுகள்
குமிழ்ந்தும் அமிழ்ந்தும்
திரிந்த வண்ணமுமாய்….
மறதிப் புழுதி சேருமுன்னே
துடைத்து எடுத்து
எழுத்துச் சட்டமிடத் தயாராகிறது
தவிக்கும் மனம்…
காலத்துக்கும்
அழியா உத்திரவாதம்
சில கவிதைகளுக்கும்
உண்டென்பது
எங்கோப் படித்த ஞாபகம்…!
****************************** ******

கனகாபாலன்