கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
மனிதனின் மேன்மைகளை தொடர்ந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் அதை மிக எளிதான வரிகளிலேயே அதன் காட்சித் தன்மையை இவரது படைப்புகள் வெளிப்படுத்துகிறது.
பேக்கரியில் கூட்டம்.
“மூணுலே ஒண்ணு லைட் டீ”.
பிறகு
“உங்களுக்கு.”
“சாப்பிடறதுக்கு என்ன இருக்கு?”
“வடை, போண்டா, பஜ்ஜி, பப்ஸ், முறுக்கு, மிக்சர், கேக், பிஸ்கெட்..”
“தேங்காய் பன்னு இருக்குதா?”
“ஒண்ணு கொண்டா.”
“அண்ணா, உங்களுக்கு என்ன வேணும்?”
“பால் டீ.”
“ஒரு பால் டீ” டீ மாஸ்டரை நோக்கிக் கத்தினான் அப்பாண்டு.
“டேய், குடிக்கறதுக்கு சுடு தண்ணி கேட்டனல்ல.”
“தம்பி, தீப்பெட்டி குடுப்பா”.
“டேய்ய்ய்… டீ சொல்லி எவ்வளவு நேரமாச்சு?”
அப்பாண்டு விரைவில் களைத்துப் போனான். மூன்று மணி என்கிற போதுதான் கூட்டம் கொஞ்சம் ஓயும். அப்போதுதான் மத்தியானச் சாப்பாடே சாப்பிட முடியும். மிஷின் மாதிரி இயங்கிக் கொண்டிருப்பான்.
“அப்பாண்டு, உனக்கு என்ன வயசாச்சு?”
“பத்துங்க.”
“பள்ளிக்கூடம் போகலையா?”
“ரெண்டாம் வகுப்பு வரை படிச்சனுங்க.”
“அப்புறம்…”
“வூட்லே வேண்டாம்னுட்டாங்க.”
“யாரு?”
“அம்மாவும், அப்பாவும்.”
“உனக்குப் படிக்கணும்னு ஆசை இல்லியா?”
“இருக்குதுங்க. என்ன செய்யிறதுங்க? படிச்சிருந்தா அஞ்சாம் வகுப்பு வந்திருப்பனுங்க இங்க பாருங்க தழும்பை.” இடது கையைக் காட்டினான்.
“சூடுங்க, அப்பா பீடியில வெச்சு விட்டதுங்க. நான் பள்ளிக்கூடம் போவேன்னு ரகளை செஞ்சேன். அதனாலே சூடு வெச்சிருச்சுங்க. லாட்டரிச் சீட்டு கடையில வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க.”
“நீ ஒரே பையனா?”
“தம்பி இருக்கறானுங்க, ரெண்டாம் வகுப்பு போறானுங்க, அவனுக்கு நல்லா படிப்பு வருங்க. அவனாவது நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும்னு ஆசைங்க. அவன் படிப்புச் செலவுக்காக காசுகூட சேர்த்திட்டு வர்றனுங்க.”
அப்பாண்டுவின் நிஜப்பெயர் அப்புசாமி. இந்த பேக்கரியில் இரண்டு வருடங்களாக வேலை பார்க்கிறான். கடை ஓனரிடம் தினமும் திட்டு வாங்குகிறான். அவனுடைய அப்பா குடிக்கக் காசு கேட்கிறார். அம்மா அடிக்கடி சினிமா பார்க்க காசு கேட்பாள். கருப்பராயன் நோம்பி அன்று வாங்கின உண்டியலில் கொஞ்சம் காசு சேர்த்து வருகிறான். தம்பியின் படிப்புச் செலவிற்கு. புத்தகக் கடைக்கு டீ கொண்டு போய்த் தரும்போது காகித வாசனையை ரசிப்பான்.
திருவள்ளுவர் திடலுக்கு மந்திரி வருகிறார். கடைக்குள் கட்சி வேட்டிகளும், கட்சித் துண்டுகளும் நிறைந்திருந்தன. வெளியேயும் ஆட்கள் டீக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
“டேய் அப்பாண்டு, பார்த்துக் கவனி. கணக்கை கரெக்டா சொல்லணும் காசு குடுக்காம நழுவிக்கிட்டுப் போயிடுவாங்க” என்றார் ஓனர் காதோடு.
“பப்ஸ் கொண்டு வாப்பா.”
“ரெண்டு பால் டீ, ஒரு காபி.”
“இங்க ஒரு டீ.”
“தம்பி, நாலு டீ சொல்லு.”
டீ மாஸ்டரைப் பார்த்துக் கத்தினான் அப்பாண்டு “எட்டுல ரெண்டு பால் டீ, ஒரு காபி”
ஐந்து டீ டம்ளர்களை ஒரே கையால் கொண்டு வர முயன்றான். இன்னொரு கையில் பப்ஸ். யாருடைய கையோ தட்டிவிட்டது.
டமார். கண்ணாடி டம்ளர்கள் உடைந்தன. ஆட்கள் மேல் டீ தெறித்துச் சிதறியது.
ஓனர் ஓடி வந்தார். “உடைச்சிட்டியா? முண்டம் அறிவு கெட்ட முண்டம் உருப்படியா ஒரு வேலை செய்யத் தெரியுதா?”
கன்னத்தில் ஓங்கி இரண்டு அறை விட்டார். அப்பாண்டு கலங்கிப் போய் நின்றான்.
“ச்சே வேட்டி சட்டையெல்லாம் நாறடிச்சுட்டான். தலைவருக்கு இந்த அலங்கோலத்தோட போய் எப்படி மாலை போடறது?”
“அண்ணா, தெரியாம..”
“பேசாதடா, மூஞ்சியும் மொகரையும் பாரு. ஓங்கி ஒண்ணு விட்டன்னா தெரியும்.”
“பொறுக்குடா கண்ணாடிசி சில்லெல்லாம். எடத்தை சுத்தம் பண்ணு, மூதேவி முழிக்கறதப் பாரு.”
ஆள் ஆளுக்குத் திட்டினார்கள்.
“மளமளன்னு சுத்தம் பண்ணுடா. ஒரு வாரத்துக்கு உனக்கு பேட்டா காசு கெடையாது. டம்ளர் செலவையும் டீச்செலவையும் உன் சம்பளத்தில புடிக்கறேன். என்னடா அழுகாச்சி வேண்டிக் கெடக்குது.”
நங்கென்று ஒரு குட்டு விழுந்தது.
“என்னங்க கடையில பையனைக் காணோம்?”
“டம்ளர்களை உடைச்ச அன்னிக்குப் போனவன்தான், அன்னிக்கு அவன் அப்பகிட்டேயும் ஒதை விழுந்திருக்கு.”
“அடி தாங்காம ஓடியிருப்பான் போலிருக்கு”.
“திமிருங்க.”
“சார், என்ன வேணுங்க?”
“என்ன இருக்குது?”
“வடை, போண்டா, முறுக்கு, மிக்சர்.”
“வடை ரெண்டு குடு.”
“வேற சார்..”
“ஒரு டீ.”
“டீ ஒண்ணு” சுப்புணி டீ மாஸ்டரைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.
“பையன் யாரு?”
“இவனுங்களா, அப்பாண்டோட தம்பி.”
“அப்படியா?”
“போனவாரம்தான் வேலைக்குச் சேர்ந்தான். அப்பாண்டடைவிட நல்ல சுறுசுறுப்பு.”
சுப்புணியின் நிஜப் பெயர் சுப்பிரமணி. எப்படியோ சுப்புணி ஆகி விட்டான். அவன் வலது தொடையில் ஒரு காயம் இருக்கிறது. படிக்கிறேன் என்று ரகளை செய்தவனுக்கு அவன் அப்பா போட்ட சூடு.
“அண்ணன்கிட்ட மூணு ரூபா வாங்கிக்குங்க…”
அப்பாண்டு மாதிரியே இருந்தான்.
@(1996ம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது)
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

