சிறுகதை தொடர் 2: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்நட்பதிகாரம் 

“சிவா!” என்று கத்தியபடியே அவனருகிலிருந்தோரெல்லாம் விலகிக் கொள்ள, கையைத் தலை மேல் தூக்கிக் கும்பிடு போட்ட தொனியில் அண்ணாந்து பார்த்தவாறு, மெது மெதுவாக பின்னோக்கி நகர்ந்து சரியான இடத்தில் நிற்கவும் ‘சொத்’ என கையில் விழுந்தது அந்த மக்காச் சோளக் கொட்டை. சிவா அந்தக் கேட்சை லாவகமாக பிடித்தவுடன் அந்த குழுவிலிருந்த நால்வரும் “ஹோய்ய்ய்ய்….” என்று ஆர்ப்பரித்தனர்.

அம்மையப்பன் கேன்டீனில் அவித்த மக்காச் சோளத்தை 3 இன்ச் அளவிற்கு நறுக்கி, பீஸ் 1ரூ க்கு விற்பது அம்மையப்பன் வழக்கம். வேக வைக்கும் பொழுது சோளக்கொட்டையும் நீரில் நன்கு ஊறியிருக்கும். மக்காச்சோளத்தை தின்று முடிந்ததும், அந்த ஈரச் சோளக் கொட்டையைக் கொண்டு ஹைட் கேட்ச் போட்டு விளையாடுவதும் (இரு அணிகளாக பிரிந்து, ஒரு அணி உயர எறியும் பந்து/சோளகொட்டயை எதிரணியினர் கேட்ச் பிடிக்க வேண்டும்), அதே கொட்டை காய்ந்து லேசானபின் அதை வைத்து எறிபந்து விளையாடுவதும் நம் மாணவர்களின் வழக்கம். வெறும் 1ரூ க்கு ஆரோக்கியமான பண்டமும், அருமையான பொழுதுபோக்கும் கிடைப்பது அந்நாளில் மிகப் பெரிய விசயமாக தோன்றியதே இல்லை.

அடுத்தது சரியாக கேட்ச் பிடித்த சிவாவின் முறை. வென்ற உத்வேகத்துடன் கீழே குனிந்து வலது கையில் மண்ணைத் தொட்டவாறு, தலையை மட்டும் உயர்த்தி கிட்டத்தட்ட அர்த்த சந்திராசன நிலையிலிருந்து தன் மொத்த ஆற்றலையும் ஒருங்கே திரட்டி, வானை நோக்கி “ம்ம்ம்ம்ஹூக்கும்” என்று ஒரு எறி எறிந்தான் சிவா.

சோளக் கொட்டை கையை விட்டு வெளியேறியதும், எதிரணியின் நால்வரும் வானைப் பார்த்து ஆயத்தமானார்கள். பிசிக்ஸ் சார் கூறுவது போல் சிவாவின் மேல்நோக்கு விசையும் புவியீர்ப்பு விசையும் சமமான அந்தப் புள்ளியில் நின்று யாரைத் தேர்ந்தெடுக்கலாமென ஒரு வினாடி யோசித்த சோளக் கொட்டைக்கு உதவுவதைப் போல, எதிரணியின் நால்வரில் மூவர் “சீனி! உனக்குதான்” என்றவாறு கத்தியபடியே சீனிச்சாமிக்கு வழிவிட்டு நகர்ந்து கொண்டனர். உச்சி உயரத்தில் அந்த ஒரு விநாடி ஓய்வுக்குப் பின் மேலேறிய அதே வேகத்தில் சீனியை நோக்கி வந்தது அந்த மக்காச் சோளக் கொட்டை.

சீனியோ வானைப் பார்த்து இரு கைகளையும் விரித்தவாறு முன்னும் பின்னும் வலதும் இடதுமென நடனமாடியபடியே விரித்த கையை சேர்ப்பதற்குள் ‘சொத்’ என அவன் நெற்றியைப் பதம் பார்த்தது அந்தக் கொட்டை. “ஆஆஆ…” வென அலறி நெற்றியைத் தேய்த்துக் கொண்டே கண்ணைத் திறந்தவனை, முறைத்தவாறு நின்றிருந்தனர் மற்ற மூவரும். அவர்கள் ஆரம்பிக்கும் முன் சீனியே ஆரம்பித்தான்.

“மாப்ள! அந்த சிவாப் பய வேணும்னே என் தலையில குறி வச்சு எறியுதான் டா”

“எடு செருப்ப.. வந்ததுல இருந்து ஒரு கேட்ச் கூட புடிக்கல, அடுத்தவன் புடிக்கிறப்போவும் பெரிய புடுங்கி மாதிரி குறுக்க போய் விழுந்துட்டு, குறி வச்சு எறியுதான் மயிரு வச்சு எறியுதான்னு கத சொல்லிக்கிட்டிருக்க” என கழுவி ஊற்றினான் சக்தி.

“லேய் நெசமாதான்டா… அதும் என்னா வேகம் தெரியுமா? பத்தாவது பப்ளிக் எக்ஸாம்ல நான் அவனுக்கு காட்டலனு இன்னும் என்மேல பழி வச்சிட்டு பண்ணுதான்டா”

“அஞ்சு பாடத்துலயும் 35,36 னு பார்டர்லயே படுத்து கெடந்த உன்கிட்ட வந்து அவன் காட்டுனு கேட்டானா?” என்றான் அருண்

“லேய் என்னடா அருணு நீயும்? போன வருசம் அட்டென்டன்ஸ்ல கூட அவனுக்கடுத்து என் பேரு தான். அப்புறம் என்கிட்ட கேக்காம?? நான் சொல்லிக் குடுக்காததாலதான் பெயிலாகி அட்டெம்ட் அடிச்சு, இப்போ தெர்டு க்ரூப்ல சேந்திருக்கான்”

“அடங்கப்பா… முடியலடா…”

“நீ வேணா பாரு சாயங்காலத்துக்குள்ள அவன் சைக்கிள் ல வால்ட்யூப்ப புடுங்கி விடுதேன். தள்ளிக் கிட்டே போட்டும் 2 கிலோமீட்டர்”

“போய் புடுங்கு அதுக்குதான் ஆவ.. இன்னிக்கு என் கிட்ட கட்டி ரஸ்னா கேட்டு கேன்டீன் பக்கம் வந்தா, ஈரக் கொட்டையாலயே எறி படுவ..” என விரட்டினான் சக்தி.

அதற்கும் பெல் அடிப்பதற்கும் சரியாக இருந்தது. கேட்ச் கோட்டை விட்ட கதையைச் சொல்லி சீனிச்சாமியைக் கலாய்த்தவாறே வகுப்பை அடைந்தனர். நுழையும் போதே இரண்டாவது பெஞ்ச்சில் அகல்யாவினருகில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்த சுகன்யா, இவர்களைப் பார்த்ததும் முறைத்தவாறு தலையைத் திருப்பிக் கொண்டாள். என்னவெனப் புரியாமல் கடைசி பெஞ்சிற்கு சென்று அமர்ந்தனர்.அப்போது திரும்பிய சுகன்யாவை அழைத்து என்னவென வினவினான் அருண். முதலில் ஒன்றுமில்லை என தலையாட்டித் திரும்பிக் கொண்டவள், பின் அவளாகவே எழுந்து பின்னால் வந்து, “தேர்டு க்ரூப் பயலுக கூட உங்களுக்கென்ன விளையாட்டு?” என்று கேட்டாள்

“ஏன் தேர்டு க்ரூப் பசங்கள எல்லாம் பள்ளிக் கூடத்தில இருந்து தள்ளியா வச்சிருக்காங்க? போன வருசம் வரைக்கும் எங்க கூட படிச்ச பயலுக. சொல்லப் போனா உங்க லீடர் குமரேசன விட நல்ல பயலுகதான்” என்றான் சக்தி.

“வாயில ஏதாவது வந்திட போகுது. நல்ல பயலுகளாம். போகும் போதும் வரும் போதும் கிண்டல் பண்ணி சிரிக்குறாங்க, ஸ்டாப் ரூம் போணும்னா கூட பயந்து சுத்திதான் போக வேண்டியிருக்கு.”

“ஏன் யாரு கிண்டல் பண்ணினது? இவ்ளோ நாளா எதும் சொல்லல?” என்றான் அருண்.

“உங்க கூட விளையாடிட்டு இருந்தானே சிவா, அவன்தான்”

“ம்ம்… உன்கிட்ட அவன் பிரச்சனை பண்ணினா அவன குறை சொல்லு, ஒட்டு மொத்தமா அந்த பசங்கனு எல்லாரயும் சொல்லாத” என்றான் சக்தி.

“என்கிட்ட கூட இப்போ அந்த பயதான் பிரச்சனை பண்ணினான் சுகன்யா. இந்த சத்திதான் என் கைய கட்டி போட்டுட்டான். இல்லனா, இந்நேரம….” தன் ஆதங்கத்தில் புலம்பினான் சீனி.

“உடனே ஹெச் எம் கிட்ட சொல்லலாம். டிசிய கிழிச்சு கையில குடுத்தாதான் புத்தி வரும்.” என்றான் அருண்

“அதெல்லாம் வேணாம்! அங்க சொல்லி டிசிய கிழிச்சிட்டா, வெளியில வச்சு பிரச்சனை பண்ணினா என்ன பண்ணுவ?” என்றான் சக்தி

உடனே சீனி “அப்போ நாமளே போய் சண்டய போட்டுடுவோம்”

“எதுக்கு அவன் உன் கைய பிடிச்சாடா இழுத்தான்? அவளதான கிண்டல் பண்ணினான்?”

“அதுக்காக பொம்பள பிள்ளயா போய் சண்ட போட முடியும?”

“ஏன் போட்டா என்ன? இன்னொரு தடவ இவன் இல்ல, எவன் கிண்டல் பண்ணினாலும் அந்த எடத்துலயே செருப்ப கழட்டி அடி. அப்படி பண்ணினாதான் அடுத்து அவன் வேற எந்த பொண்ணுட்டயும் அப்படி நடந்துக்க மாட்டான். அவன் மட்டுமில்ல வேறெந்த பயனும் உன்கிட்ட வரவும் மாட்டான். பிரச்சனை வருமோனுலாம் பயப்படாத. அப்படி வந்தா அப்போ நாங்க வந்து நிப்போம்.”

“அதுக்காக நான் எப்படிடா?”

“என்ன நான் எப்படிடா? பசிச்சா மட்டும் சட்டி சோறு திங்கறேல்ல, கோவம் வந்தா காட்ட தெரியாதோ? நான் ஒன்னும் உன்ன போய் வம்புச் சண்ட போட சொல்லல. இன்னொருக்க பிரச்சனை வந்தா அது திரும்ப வராம இருக்க பண்ண வேண்டியத பண்ணுனு சொல்றேன். போ.. போய் உக்காரு. மீச பீரியட்,. வந்திட போறாரு”

“ம்ம்ம்…” எனத் தலையசைத்தவாறே, தைரியம் வந்தவளைப் போல, இடத்தில் சென்று அமர்ந்தாள்.

“என்னடீ? என்ன சொல்றாரு உன் ப்ரண்ட்? இன்னிக்கு ஏதும் ஆக்சன் ப்ளாக் இருக்குமா?” என கிண்டலாக விசாரித்தாள் அகல்யா.

“அட போடி. எனக்காக சண்ட போட வரேனு சொன்ன பசங்களயும் தடுத்து, உன்னதான கிண்டல் பண்ணினான்? நீயே போய் சண்ட போடுனு சொல்லுறான்டீ. அதும் அந்த குண்டன நான் செருப்பால அடிக்கவாம். அதுக்கப்புறம் வாரத அவன் பாத்துப்பானாம். இவன்கிட்ட போய் சொன்னதுக்கு…”

“ஒரு விதத்துல அதும் சரிதான்டீ. பள்ளிகூடத்துக்குள்ளயே நம்ம பிரச்சனைக்கு இன்னொருத்தர் வந்துதான் ஹெல்ப் பண்ணணும்னா, வெளியில ஹெல்ப்க்கு யாரும் இல்லாதப்போ பிரச்சனை வந்தா எப்படி சமாளிப்போம்?”

“அதுக்குனு ஆம்பள பயலை செருப்பால அடிக்க முடியுமா?? என்னால முடியாதுபா, எனக்கு பயமா இருக்கு.”

“அவன் சொன்னதை ஏன் அப்டி எடுத்துக்குற? அவன் அப்புடி நெனச்சு சொல்லியிருக்க மாட்டான். பொருக்கி பயலுக்கெதிரா உன்னோட தைரியத்தை காட்டுறதுக்கு அவன செருப்பால அடிக்க தேவை இல்ல, நாம பாக்குற பார்வையிலேயே நம்ம தைரியத்தை காட்டிறலாம்”

“ஓஹ் என் ப்ரண்ட் என் கிட்ட சொல்ற விசயத்தோட உள்ளர்த்தம்லாம் உனக்கு புரியுதோ? இவ்ளோ தெளிவா ட்ரான்ஸ்லேட் பண்ணுறியே டி…”

“நான் ஒண்ணும் ட்ரான்ஸ்லேட்லாம் பண்ணல. எனக்கு தோணுறத சொல்றேன். சரி விடு. இனிமேல் அந்த பொருக்கி கிண்டல் பண்ணட்டும், உன் ப்ரண்ட் சொன்னத நான் செய்றேன்” என்றாள் அகல்யா.

மறுபுறம் கடைசி பெஞ்சிலிருந்து சுகன்யா கிளம்பியதும், “ஏன்டா, பொம்பள புள்ள பிரச்சனைனு சொல்லுது, போய் என்னனு விசாரிக்காம நீயே போய் சண்ட போட்டுக்கோனு சொல்லி முடுக்கி விடுத?” என்றான் சீனிச்சாமி.

“செருப்பால அடினா ஒடனே செருப்பலையா அடிச்சிட போறா? முதல்ல அவனுக்கு பயப்படாம நின்னு தைரியமா ஒருக்க மொறைக்கட்டும். அவன் தப்பு பண்ணுதான்னு இவ அங்குட்டு போக பயக்கா… எவ்ளோ நாளைக்கு இப்டி பயந்து ஓடிட்ருப்பா? ”

“அதுக்கு பயந்துட்டு தானடா நம்மட்ட வந்து சொல்லுதா…”

“ம். இன்னிக்கு பிரச்சனைக்கு நீ போய் ஹெல்ப் பண்ணிடுவ, நாளைக்கு போற வார இடத்துல வார பிரச்சனைக்குலாம் பொம்பள பிள்ள இன்னொருத்தர தேடிக்கிட்டே இருக்க முடியுமா?”

“அதுக்குனு?”

“தெரிஞ்ச பயலுக, வாத்தியாருங்கனு இத்தன பேரு இருக்குற இந்த பள்ளிக்கூடத்துக்குள்ளயே அவளால தைரியமா இருக்க முடியலன்னா, வெளியில வார பிரச்சனையெல்லாம் எப்புடி சமாளிப்பா?”

“அதுக்காக நம்ம இருக்கும் போதும் அவளே பாத்துக்கட்டும்னு வேடிக்க பாத்திட்டு இருக்க சொல்லுதியா?” என்றான் அருண்.“இன்னொருக்க அவன் பிரச்சனை பண்ணினா அவ பாத்துக்கட்டும். ஆனா பிரச்சனை பண்ணாம நாம பாத்துக்கலாம்” என்று கூறி கண்ணடித்தான் சக்தி

“அங்க என்னய மக்காச் சோளக் கொட்டய கொண்டி எறியும் போது வேடிக்க பாத்துட்டு, என்னயும் எதும் பண்ணவிடாம கூட்டியாந்துட்டு, இங்க பொம்பள பிள்ளைக்கு ஒன்னுன்னதும் ப்ளான் போட்டு பெர்பார்ம் பண்ண பாக்குரீங்களா?”

“ஆஆஆஆ .. அடேய்ய்ய்ய்….”

“நீங்க ஒன்னும் ப்ளான் போட வேண்டாம். இங்க பாத்தீங்களா? நானே ப்ளான் போட்டு அந்த சிவா சைக்கிள்ல காத்த புடுங்கி வால்டியூப்ப தூக்கிட்டேன்.”

“லேய் சக்தி! ப்ளான் அப்புறமா போட்டுக்கலாம், இப்போ இவன நாலு போடு போடலாமா?” என்று கூறிக் கொண்டே சீனிச்சாமியைப் பொளந்தனர்.

அன்றிலிருந்து 4,5 நாள் சிவா பள்ளிக்கே வரவில்லை. மறுநாள் சுகன்யா ஸ்டாப் ரூம் செல்கையில் அகல்யாவும் உடன் சென்றாள்.

“ஏய் அகலு! எதுக்க மூஞ்சில கர்ச்சீப் கட்டிட்டு வாரது அந்த சிவாவானு பாரு. எனக்கு பயமா இருக்குடி”

“அவனை மாதிரி தான் இருக்கு. நீ பேசாம வா. இன்னிக்கு என்ன நடந்தாலும் நான் பாத்துக்கறேன்”

அது சிவாவேதான். இருவரையும் ஆத்திரத்தோடு முறைத்தவாறே எதிரில் நடந்து வந்தான். உதட்டிலிருந்த காயத்தை மறைத்து கர்சீப் கட்டியிருந்தவன், நெற்றியில் ஒட்டப்பட்டிருந்த பாண்டெஜை மறைக்க மறந்துவிட்டான் போலும் .

ஆத்திரத்தோடு வந்தவன், இவர்களை நெருங்கவும் திடீரென தலையைக் குனிந்தவாறே கடந்து சென்றான். சிவாவின் முகபாவனை மாற்றங்களைக் கண்ட அகல்யா பின்னால் திரும்பி பார்த்தாள்.

அவர்கள் பின்னால் சக்தி நின்று கொண்டு சிவாவை முறைத்தபடி நின்றான். 4 நாட்களுக்கு முன் அவர்களுக்கிடையில் நடந்த சம்பவத்தை ஓரளவிற்கு புரிந்து கொண்ட அகல்யா தன் புருவத்தை உயர்த்தி சக்தியை குறும்பாக முறைத்தாள்.

சக்தியோ, சிவா அவர்களைக் கடந்து போனதும் அகல்யா தன்னை முறைப்பதைப் பார்த்து இளித்தவாறு “லேய் சீனி! ரஸ்னா வேணுமேடா.. ! கட்டி ரஸ்னா.!!!

*****
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
******

தொடரும்தொடர் 1: 

புதிய சிறுகதை தொடர்: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்