புதிய சிறுகதை தொடர்: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்



கட்டி ரஸ்னா

அம்மையப்பன் கடையின் கூட்டத்தில் அடித்துப் பிடித்து பனங்கிழங்கும், மக்காச் சோளத்தையும் வாங்கிக் கொண்டு ஐந்து ரூபாய்க் காசை அம்மையப்பனிடம் நீட்டி மீதி சில்லறை ஒரு ரூபாய் வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு, வாங்கிய பண்டம் கூட்டத்தில் சிக்காமல் குனிந்தவாறே வெளியேறினான் சீனிச்சாமி.

அம்மையப்பன் கடை தின்பண்டங்கள், நோட்டுப் புத்தகம் , பேனா, பென்சில் என பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பொருட்களுடன் அந்த ஊரின் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் கடை. காலை 11 மணி இரண்டாவது பீரியட் மணி அடித்ததும் பூவைத் தேடி வரும் தேனிக்கூட்டம் போல எல்லா வகுப்பிலிருந்தும் அம்மையப்பனின் கடையைத் தேடி வரும் கூட்டத்தை சமாளிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை. அவித்த மக்காச் சோளம், பனங்கிழங்கு, தர்பூசணி, கொய்யாக்காய், சமோசா, கருப்பட்டி மிட்டாய் என ஒவ்வொரு பண்டத்திற்கெனவும் தனி ரசிகர் படை அப்பள்ளியிலுண்டு.

போராடி வாங்கிய பண்டங்களை, வேண்டா வெறுப்பாய் கடையின் அருகில் கவட்டை மரத்தின் கீழ் நின்றிருந்த சக்தியிடமும் அருணிடமும் கொடுத்தான் சீனிச்சாமி.

“டேய்! யாருக்கு வேணும் உன் மக்காச்சோளம்? இதை எங்க மாமன் காட்டுலயே புடுங்கித் திண்ணுக்க மாட்டேனா? எனக்கு ரஸ்னா தான் வேணும். போய் வாங்கிட்டு வா… கட்டி ரஸ்னா” என்றான் சக்தி.

“மாப்புள! இன்னிக்கு எங்கப்பா நாலு ரூவா தான்டா குடுத்தாரு. இருந்த காசுக்கு வாங்கிட்டேன்..”

“ஓ! உங்கப்பா நாலு ரூவா குடுத்தார், அப்போ பையில போட்டு வச்சிருக்குற ஒரு ரூவா, போன பீரியட் டெஸ்ட் ல நீ எடுத்த முட்டைக்கு சூவாலஜி சார் பரிசா குடுத்தாரா?” என்றவாறு தலையில் ஒரு தட்டு தட்டி சீனிச்சாமி மேல்சோப்பிலிருந்த ஒரு ரூபாய்க் காசைக் கையிலெடுத்து கடையை நோக்கிச் சென்று கட்டி ரஸ்னா வாங்கி உறிந்து கொண்டே வந்தான் சக்தி.

“இந்த கட்டி ரஸ்னாவை வாங்கி சின்னதா ஓட்ட போட்டு, வாயில வச்சு, பல்லு கூசுற வரைக்கும் உறிஞ்சுறப்போ என்னா டேஸ்ட்… அத விட்டுட்டு மக்காச்சோளம் வாங்கியாரான், மக்காச்சோளம்…”

“லேய் சத்தி! தெனம் கட்டி ரஸ்னா தின்னா தொண்டைல வால் வளருமாம் டா… அப்புறம் உன் வாய்ஸ் நம்ம சூவலாஜி சார் வாய்ஸ் மாதிரி தான் ஆகப் போகுது பாரு…”

“ம்ம் ஆமா! கட்டி ரஸ்னா தின்னா வால் வளரும், கொடிக்கா கொட்டைய முழுங்கிட்டா வயித்துல மரம் மொளைக்கும். வந்து சேந்துருக்குது பாரு நமக்குன்னு… புதன் கிழமையும் சனிக்கிழமையும் இவன் பஞ்சப்பாட்ட கேட்டுட்டேதான் திங்க வேண்டியிருக்கு. வந்து தொலை, க்ளாஸ்க்கு போலாம்” என்றான் அருண்.



பதுக்கிய துட்டு பறிபோன சோகத்தோடு, கட்டி ரஸ்னாவை ஏக்கத்தோடு பார்த்தவாறே அவர்களைப் பின் தொடர்ந்தான் சீனி.

இவர்கள் மூவரும் பத்தாவது முடித்து பதினொன்றாவது வகுப்பிற்கு மாறியிருந்தனர். ஆனால் இவர்கள் மூவரில் தினம் ஒருவர் பண்டம் வாங்கித்தர வேண்டும் எனும் வழக்கத்திலிருந்து இன்னும் மாறவில்லை.

நண்பர்கள் மூவரும் வகுப்பை நெருங்குகையில் அகல்யாவும் குமரேசனும் வகுப்பறையின் பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அகல்யா குமரேசன் கையில் ஒரு காகிதத்தை தந்துவிட்டுப் போய் அவளிடத்தில் அமர்ந்து கொண்டாள். குமரேசனும் எதுவும் சொல்லாமல் அவனது பெஞ்சை நோக்கி நடந்தான்.

இதை தூரத்திலிருந்தே பார்த்தவாறு, “நம்ம க்ளாஸ் லீடர் குமரேசன்தான்டா மாப்ள வாழ்றான். பாரு நம்மளும் அகல்யா வீட்டுப்பக்கம் இருந்துதான் வாரோம். என்னிக்காவது நம்மள நிமிந்து பாத்திருக்குமா அந்த புள்ள? ஆனா, குமரேசன லவ் பண்ணுது… எல்லாம் நேரம்.” என்று புலம்பித் தீர்த்தான் சீனி.

“யாரு அகல்யா வந்து உன்கிட்ட சொன்னாளா அவன லவ் பண்றேன்னு?” என்றான் அருண்

“அகல்யா சொல்லல. குமரேசன் சொன்னான். நம்ம பள்ளிகூடத்திலே முக்காவாசி பயலுகளுக்கு இந்த விசயம் தெரியும். அவகிட்ட யாரும் வம்பு பண்ண வேண்டாம்னு குமரேசன்தான் சொல்லியிருக்கான்”

“ஓஓஓ…..”

“பின்னே! குமரேசனுக்கு என்னடா குறை? ஆளு ஹீரோ மாதிரி இருக்கான், பத்தாவதுல ஸ்கூல் பர்ஸ்ட், அவுங்கய்யா சொந்தமா தீப்பெட்டி ஆபீஸ் வச்சு நடத்துறாரு. எந்தப் பொண்ணு அவன வேணாம்னு சொல்லும்? அதுவும் அகல்யா அழகுக்கும் குணத்துக்கும் இப்பிடி வசதியான வீட்டுக்கு தான் வாக்கப்பட்டு போகும்னு எங்கம்மா கூட அடிக்கடி சொல்லிட்ருக்கும்”

“அதுவும் சரிதான்”

ஏற்கனவே கடுப்பிலிருந்த சக்தி, சீனியும் அருணும் பேசிக் கொண்டதைக் கேட்டு மேலும் கடுப்பாகி கையிலிருந்த கட்டி ரஸ்னா பாக்கெட்டை தூக்கியெறிந்து, வகுப்பினுள் நுழைந்தான்

“அட வாருகலே! அத ஏன்டா தூக்கிப்போட்ட, என்கிட்ட குடுத்தா பெல் அடிக்கும்தண்டியும் உறிஞ்சிட்டிருப்பேனே” என்றவாறு கீழே விழுந்த பாக்கெட்டைத் துழாவினான்.

உள்ளே நுழைந்த சக்தியோ குமரேசனை முறைத்தவாறு தன் பெஞ்சை நோக்கி நடந்தான். ஆனால் குமரேசனோ முனியறைந்தது போல் முகமெல்லாம் வியர்க்க தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். வகுப்பறையும் வழக்கத்திற்கு மாறாக மயான அமைதி நிறைந்திருந்தது. விவரமறியாத சக்தி, தன் தோழி சுகன்யாவை அழைத்து வினவினான். அதற்குள் அருணும் சீனியும் வந்து அமர்ந்து அதே கேள்வியைக் கேட்டனர்.

இரண்டு நிமிடம் முன்பு அங்கு நடந்த உரையாடலை மூவரிடமும் தன் வழக்கமானபாணியில் அவரவர்களது தொனியிலேயே பேசிக்காட்டத் தொடங்கினாள் சுகன்யா.



“ஏய் குமரேசன்! கொஞ்சம் பின்னாடி வா”

“ம்.. சொல்லு அகல்யா”

“இது என்ன லெட்டர்?”

“…..”

“இதைத்தான் நானும் இவ்ளோ நாள் எதிர்பார்த்தேன். ஆனா இன்னிக்குனு பாத்து புது செருப்பா போட்புட்டு வந்துட்டேன். இல்ல உன் மேல இருந்த கோவத்துக்கு கன்னம் பழுத்திருக்கும். நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொன்னேனா? பள்ளிக்கூடமெல்லாம் சொல்லி வச்சிருக்க?”

“நான் அப்பிடிலாம் யாருகிட்டயும் சொல்லல அகல்யா”

“பொய் பேசாத… கிளாஸ் டெஸ்க்ல லாம் ரெண்டு பேரோட பேர் எழுதி ஹார்ட் போட்டு வச்சிருக்கு, போகும் போதும் வரும் போதும் பயலுக உன் பேர் சொல்லி கத்துறானுக.. இதுக்குலாம் என்ன அர்த்தம்?

“எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது அகல்யா, நான் யார்ட்டயுமே அப்பிடி சொல்லவேயில்ல”

“அப்புறம்? இந்த லெட்டரும் நீ எழுதல, வேற எவனோ எழுதி என் டெஸ்க் ல வச்சிட்டான் அப்பிடி தான?”

“அது….”

“நானும் விசாரிச்சேன், யாரும் என்ன பாக்க கூடாது, என் கூட பேச கூடாது, நம்ம ரெண்டு பெரும் லவ் பண்றோம்னுலாம் சொல்லி வச்சிருக்கிறியாமே? யார் உனக்கு அவ்ளோ உரிமை குடுத்தது?

“என்ன? நீ நல்ல கலரு, நல்லா படிக்கிற, உன் வசதியெல்லாம் பாத்து உடனே பின்னாடி வந்திருவேனு நெனச்சியோ? அதெல்லாம் வேற யார்ட்டயாவது வச்சுக்கோ. என்கிட்ட வச்சுகிட்ட அவ்ளோதான்… ஒரு பொம்பள பிள்ளை பேர கெடுக்குறோமென்ற நெனப்பு கொஞ்சமாது இருந்தா இப்டி பண்ணிருப்பியா? உன் வீடு பொண்ணுங்கள பத்தி இப்படி யாராவது பேசிருந்தாலும் இப்டி தான் புல்லறியாம கேட்டுட்டு இருப்பியா? இந்த லட்சணத்துல லவ் பண்ணுறானாம், மண்ணாங்கட்டி லவ்… இப்புடி இன்னொரு தடவ இது மாதிரி யாரிட்டயாவது சொல்லிட்டிருந்தன்னு தெரிஞ்சது வாய்ட்ட பேச மாட்டேன். இப்போ கெளம்பு..”

“*”

“ஒரு நிமிஷம்… இந்த லெட்டர் என் கையிலிருந்தா, எனக்கிருக்கும் கோபத்துக்கு ஒண்ணு ஹெச்எம் கிட்ட குடுத்து உன் டிசிய கிழிக்க வச்சிருவேன் இல்ல எங்கப்பா கிட்ட காட்டி வெட்டு குத்துன்னு பிரச்சனை ஆகிடும். அதனால இந்தக் கருமத்தை நீயே எடுத்திட்டு போ. லவ்லெட்டர் எழுதுற மூஞ்சுகள பாரு” என்று கூறியவாறு லெட்டரை அவன் கையில் தந்துவிட்டுப் போனதாக முழுக்கதையையும் சொல்லி முடித்தாள் சுகன்யா.

“இவ்வளவு நேரம் காரணமில்லாம மூஞ்ச தொங்கப்போட்டுட்டு இருந்தவன் வாயெல்லாம் பல்லா தெரியுதே என்ன விசயம்?” சக்தியிடம் வினவினான் சீனி.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… காசு தாரேன் போய் ஒரு ரஸ்னா பாக்கெட் வாங்கி வரியா? கட்டி ரஸ்னா..” என்றவாறு மீண்டும் இளித்தான் சக்தி.

**************