நேர்கோட்டு வார்த்தைகள்
பிடிக்காது கவிஞனுக்கு.
பள்ளத்தாக்கொன்றின் அடியாழ கூர் முனையில் இருந்து தொடங்கி,
சமவெளியில் தவழ்ந்தெழுந்து, கால்களிரண்டின் கட்டைவிரலை பூமிக்குள் ஆழப் பதிந்து, எகிறி
வானத்தைப் பிளந்து பால்வெளிக்குள் நுழைந்து.. மிதந்து.. நூறு நூறு சிறகுகளை முளைக்க வைத்து,
அழகான திமிரோடு பறந்தலைந்து,
காட்டு ரோசா செடியின் துளிரிலை மீது பாதம் நோகாமல் அமரும்
வண்ணத்துப் பூச்சியின் வடிவோடு
வார்த்தைகளில் கந்தகக் கரைசலையும்
அமுதத்தின் முதல் மிடறையும் சரிவிகிதத்தில் கலந்து வாசகனை
நித்தம் நித்தம் கொலை செய்யும் பேரன்பு மிகுந்த கொலைகாரனாகவே இருப்பார்கள் கவிஞர்கள்.

அழகான கொலைகாரர்கள் வாசிப்பவர்களின் இருதயத்தின்
அடிப்புறத்தில் அமர்ந்து குதியாட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மனங்களை சமன் குலைக்க செய்வார்கள். தடை உடைப்பார்கள்.. மீறுவார்கள். நூல் பிடித்த கோட்டினை அவர்கள் மனம் ஒரு நாளும் ஏற்காது.
புது விதியினை புது ஒழுக்கத்தை உலகுக்கு ஓங்கிச் செல்வார்கள்.
இப்படியானவர்களைத்தான் கவிஞர் என என் மனது..எண்ணம்.. அதன் இஷ்டப்படி வடிவற்ற வடிவாக வரைந்து வைத்துக் கொண்டிருக்கிறது எனக்குள்.

காணாமல் போன ஆண்டுகளுக்குள் நுழைந்த கவிஞன்
கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் புகுந்து மனசின் கனவுகளையும் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார். நம்பிக்கைகளை வார்த்தைகளுக்குள் நிரப்பிக் கொண்டு துரோகங்களுக்கு அடி கொடுக்கிறார்.
இருப்பின் அவசியத்தை உணர வைத்து
பறத்தலும் தேடலும் தேவை என்பதை கவிதைக்குள் நிறுத்தி இருக்கிறார்.

ஆணவத்தையும் அகங்காரத்தையும்
துரோகத்தையும்
உடன் இருந்துவரோடு அறிந்தவுடன்
என்னை_விடு என்கிற கவிதையில்

கடந்தகால கசறுகளை
கசக்கிப் பிழிந்து
உள்ளத்தை அமுக்கிப் பிழிந்து ஊத்தைகளை
உடுப்பை கழுவுவது போல்
கழுவி

உலரப் போட்டேன்
உள்ளத்தை
உணர்வெனும் கொடியில்
கனமழை வந்து
மீண்டும் அதைக் கழுவ
கண்ணீர் உகுத்தேன்
நன்றி உணர்வோடு

உள்ளத்தில் ஊத்தைகள்
மீண்டும் படாமல்
ஓரத்தில் நடக்கின்றேன்
அங்கு திரும்பி
இங்கு திரும்பி

மூச்சை கவனமாய் விடுகிறேன்
பேச்சை கவனமாய்
நாக்கை கட்டி
இன்னும் நான்
ஓரமாய் நடக்கின்றேன்

நீ கேலி செய்கிறாய்
நீ துள்ளித்துள்ளி
நிமிர்ந்து நடக்கிறாய்
ஏளனமாய் சிரிக்கிறாய்

என்னை விடு
இன்னும் கொஞ்சம்
இந்த ஓரத்தில்
இன்னும் நான் நடக்க

பழைய காலத்திற்குள் புகுந்து
மனதை இளமையாக்கும் உற்சாகமாக்கும் வித்தையை கவிஞர் காலத்தை_எட்டிப்பிடி என்கிற கவிதையில்.

எல்லை கோடுகளுக்கான போர் மண்ணுக்கான போர்
மனித நிலைகள் அனைத்திலுமே
மதத்துக்கான போர்
சாதிக்கான போர்
கௌரவத்துக்கான போர்
போர் அனைத்திலும்…

சுட்டால்
அல்லது வெட்டினால்
குத்திக் குதறினால்
சில்லென்று பாயும் சிவத்த நீர்

நெஞ்சு சிலிர்க்கிறது
உனக்கும் சிவப்பு
எனக்கும் சிவப்பு
சில்லென்று சிவத்த நீர்
என்னை போல் தான் உனக்கும்
ஒரு துடிப்பு
ஒரு படபடப்பு
மூக்கினால் காற்றை வாங்கி
காற்றை விற்றல்

முடிவில்
உன்னை போல் தான் நான்
என்னை போல் தான் நீயும்
ஒரு மண்ணாங்கட்டியாய் கரைதல்

அழகை கொண்டாட வேண்டிய
இந்த மண்ணில்,
இயற்கையை நேசிக்க வேண்டிய
இந்த மண்ணில்
கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டிய
இந்த மண்ணில்
இதற்கா நாம் இருவரும் என்று கேள்வி எழுப்பாமல்
மண்ணாங்கட்டியாய் கரைந்து இருக்கிறார் கவிஞர்.

தலையை சொரிவதை விட்டுவிடு
தலை புழுத்தால் பேன் பாரு
என்று
மண்புழுவுக்கும் மனித புழுவுக்கும்
இனி அஞ்சத் தேவையில்லை
என
அஞ்சுபவர்களிடமும் கெஞ்சுபவர்களிடமும்
மேலாண்மைகோடுகள் என்கிற கவிதையில்

மெல்ல நினை
இருள் விலக நீ கேள்
இதய ஒளி எங்கும் பரவி நீயாகி
கவலை விடு
கால்நீட்டி போடு
என உத்தரவிடுகிறார் கவிஞர்.

#வாசற்படி
என்கிற கவிதையில்
உங்களின் ராசாத்தியையும் ராசாவையும் பார்க்கலாம்.

நான் சிறு புள்ளி
சிறு புள்ளியே
அசைவேன் அசைவேன்
நான் ஓர் அகிலமே
எனை நசுக்க முயலும் போதில்
முள்ளாய் மாறி குத்துவேன்
முறிந்த போதிலும்

அதிகாரத்திற்கு எதிராக கவிதை பாடி இருக்கிறார் கவிஞர்
எளியவர்களின் குரலாக இருந்து.

துளிர் என்ற கவிதையில்
முளைக்கும் போதே கிள்ளி அழித்த எதிராளிகளுக்கு
எதிராக நெஞ்சை நிமிர்த்தி
இன்னும் ஒரு முகமாய் துளித்து இருக்கிறார் கவிஞர் தன்னுடைய தொகுப்பின் முதல் கவிதையில்

நன்றி மறந்தவர்களுக்கு எதிராக
முகம் முழுவதும் நனைய
“ஒரு தரம் காறி துப்ப”
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதனை
இப்படி_செய்துபார் கவிதைக்குள் நம்மை செய்யச் சொல்லி இருப்பார் கவிஞர்.

கவித்துவமும் படிமங்களும் எளிய
வாசகனும் உணர்ந்து கொள்ளும்படி தன் கவிதைகளில் கொடுத்திருக்கிறார் கவிஞர்.
அறிவார்ந்த தளத்தில் மாய உலகத்தில் சஞ்சரிக்கக் கூடியவர்கள்தான் கவிஞர்கள் என்பதற்கு நேர் எதிராக கவிதைகள்.

அன்பு வாழ்த்துக்கள்
கவிஞர் எச்.எம்.பாறூக் அவர்களுக்கு.

தாயதி பதிப்பகத்தின் பனிரெண்டாவது வெளியீடு இது. மிகச் சிறந்த முறையில் கவிதைகளுக்கான மரியாதையோடு உள்பக்கங்களை வடிவமைத்து வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் பதிப்பகத்தார்.

அர்த்தம் மிகுந்த அட்டைப்படத்தோடு அழகாக வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார் றாஷ்மி.

இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.

நூல் : காணாமல் போன சில ஆண்டுகள் (கவிதை தொகுப்பு )
ஆசிரியர் : எச்.எம்.பாறூக்
விலை : இந்தியாவில் ரூபாய் 120 இலங்கையில் ரூபாய் 370
வெளியீடு : தாயதி வெளியீடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

– கருப்பு அன்பரசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *