சிறுகதை: *கணநேர ரோசம்* – பா. அசோக்குமார்

சிறுகதை: *கணநேர ரோசம்* – பா. அசோக்குமார்சிந்தும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக ஓடி வந்தான் கந்தன். தெருவின் ஒருபுறத்தில் மட்டுமே இருந்த வீடுகளின் வாசலிருந்து அவ்வப்போது பளிச்சிட்ட விளக்கொளி வாயிலாக கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். எட்டு இன்னும் ஆகவில்லை என்று தெரிந்ததும் அகமகிழ்ந்து எட்டுகளை எட்ட எட்ட வைத்து விரைவாக நடந்தான்.

அதுவரை இருந்த சிறிது வெளிச்சமும் அடங்கி இருள்கவிய தொடங்கிய வேளையில் நாற்றம் கமழத் தொடங்கியது. மூக்கைப் பொத்தி உறிஞ்ச, கண்ணீருடன் கூடிய மூக்குச்சளியைச் சிந்தி காறித் துப்பினான் மகளிர் கழிப்பறையைக் கடந்தவாறே.

திடீரென்று வந்த ஞானோதயமாய் சட்டை மற்றும் பேண்ட் பைகளில் கைவிட்டு எவ்வளவு பணமிருக்கு என்று பார்த்தான். இரண்டு பத்து ரூபாய்களும் மூன்று ஒரு ரூபாய்களும் இருந்தன. “மூணு.., ஏழு.., ஆறு… பதினாறு… ம்… போய்டலாம்” என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.

பேருந்து நிறுத்தத்தை நெருங்குவதற்கு முன்னரே வந்து நின்ற தேனி செல்லும் தனியார் பேருந்தைக் கண்டதும் ஓடோடி வந்து ஏறினான் கந்தன். கடைசி சீட்டில் இடம் கிடைக்க அமர்ந்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டே பலவாறு சிந்திக்கத் தொடங்கினான்.

” இந்த பஸ்ஸூ எப்ப தேனி போகும்ணு வேற தெரியல…. எட்டம்பது பஸ்ஸ பிடிச்சுடுவேனா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தபோது , கண்டெக்டர் வரவும் பத்து ரூபாயைக் கொடுத்து “தேனி ஒன்னுண்ணே” என்றான்.” இன்னும் மூணு ரூபா குடு”

“சில்லர இல்லண்ணே”

“டேய், ஓன்ட சில்லர கேட்கலடா… டிக்கெட்டு காசு டா”

உடனே, இன்னொரு பத்து ரூபாயை எடுத்து நீட்டினான் கந்தன். ” சில்லரயாக் குடு” என்று கத்தினான் கண்டெக்டர். சட்டைப்பையில் தேடி இருந்த மூன்று ஒரு ரூபாய் நாணயங்களைக் கொடுத்து டிக்கெட் வாங்கினான். கண்ணீர் முட்டிக் கொண்டே இருந்தது. “இனி அந்த பஸ்ஸிலும் சில்லரை கேட்டு திட்டு வாங்கணுமோ” என்று சிந்தித்தவன் ” தேனி எப்ப போகும்னு கண்டெக்டரிடம் கேட்டுரக்கலாம்… எங்க இந்தண்ணே இப்படி கோவிக்குதே” என்று நினைத்தவன் குச்சனூர் கோவிலை பஸ்ஸிலிருந்தவாறே எட்டிப் பார்த்து சாமி கும்பிட்டான்.

“சின்னமனூருக்கு மூணு ரூவா… சின்னமனூர் டூ தேனி ஏழு ரூவா தானே… இந்த பஸ்ஸில் மட்டும் பதிமூனு ரூவா… சுத்தி போவானோ? எட்டம்பது பஸ்ஸ பிடிக்குற மாதிரி போனா சரி” என்று முணங்கினான். இப்பொழுது தான் பஸ்ஸில் ஓடிய ” அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்” பாடலைக் கேட்டு கொஞ்சம் விசும்பலுடன் அழத் தொடங்கினான்.

அவனது ஞாபகங்களும் பின்னோக்கி ஓடத் தொடங்கின. “எங்கப்பா மட்டும் செத்து போகாம இருந்தா, இவங்ககிட்டெல்லாம் திட்டு வாங்க மாட்டேன்ல” என்று பொருமியவனுக்கு சற்றுமுன் நிகழ்ந்த சம்பவங்கள் மனக்கண்முன் நிழலாடின.

எப்பொழுதும் வீட்டிற்கு போனால், அக்கறையாக பேசும் அவனது பெரிய அத்தை லட்சுமி இன்று முகங்கொடுத்து பேசவில்லை. டீ போட்டுக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்த வயக்காட்டு வேலைக்கு வரும் பாட்டியம்மாளிடம்தான் பேசிக் கொண்டிருந்தாள். அந்த பாட்டியம்மா அவனிடம் அவனது அம்மா, தங்கை பற்றி நலம் விசாரித்தார்.

அந்த பாட்டி போனபிறகு , இவன் லட்சுமியிடம், ” மாமாவுக்கு உடம்பு பரவாயில்லையா அத்த… போனவாரம் சின்னமனூர் போனப்ப சின்ன அத்தை தான் சொன்னாங்க” என்றான்.

” அதான் ரெம்ப அக்கறையா பாக்க வந்துட்டியாக்கும்? மனுஷன் சாகக்கிடந்தார்டா… பத்து, பண்ணண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏத்துனோம்..தெரியுமாடா?” என்று அரற்றினாள்.

இதுநாள் வரை அவன் , லட்சமி இப்படி பேசி பார்த்ததேயில்லை. ரொம்ப மெதுவாக, “சின்ன மாமா தான் ஆஸ்பித்திரிக்கு கூட்டிக்கிணு போய் பார்த்ததா சொன்னாருத்தே” என்றான்.

” மாச மாசம் காசு வாங்க மட்டும் கரெக்ட்டா வர தெரியுதுல..முடியாதவங்கள பாக்கணுமினு தெரியாதா?”

“இல்லத்தே.. போனவாரம் சின்ன அத்தையிடம் பணம் வாங்க போயிட்டேன் அத்த.. அதான்..வரலத்தே”

“ஒனக்கு காசு தானே முக்கியம். இப்பவும் காசு வாங்கத்தான் வந்திருப்ப?”

“அப்படியெல்லாம் இல்லத்தே…” என்று கந்தன் வாயை மென்று முழுங்கிக் கொண்டிருக்கும் போது, ‘கிரீச்’, ‘கிரீச்’ என்று சத்தம் வாசலில் கேட்டது‌.

கந்தன் எழுந்து வாசலை எட்டிப் பார்த்தபொழுது, அவனது மாமா செல்வம், கேட்டைத் திறந்து வீட்டினுள் வந்து கொண்டிருந்தார். வீட்டின் உள்ளறையில் இருந்தவன், முன்பக்க அறைக்கு வந்து, ” வாங்க மாமா” என்றழைத்தான். “எப்படா வந்த?” என்று கேட்டுக் கொண்டே, குளியலறைக்குள் நுழைத்தார் செல்வம்‌.கந்தன் மீண்டும் உள்ளறைக்குள் வந்து அமர்ந்தான்.
அதற்குள் லட்சுமி அடுப்படிக்குச் சென்று பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

கை, கால், முகம் கழுவிட்டு துண்டால் முகம் துடைத்துக் கொண்டே வந்த செல்வம், “அப்பறம், காலேஜ் எல்லாம் எப்படி போகுது?” என்று கேட்டார்.

“நல்லாருக்குங்க மாமா.. உங்க உடம்புக்கு இப்ப பரவாலையா, மாமா?”

“எனக்கென்னடா.. நல்லாத்தானே இருக்கேன், கெளுறு கணக்கா” என்று பல்லு தெரிய சிரித்துக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தார். அதற்குள் லட்சுமி பாலைக் கொண்டு வந்து தர வாங்கிக் குடித்துக் கொண்டே, “டீ கொடுத்தியா அவனுக்கு?” என்றார்.

அத்தை அடுப்படியில் இருந்து பதில் சொல்லும்முன் இவன் முந்திக் கொண்டு, ” அத்த வந்தவுடனே கொடுத்துட்டாங்க மாமா.. குடிச்சுட்டேன் மாமா” என்றான்.

“உங்கள பாக்க போனவாரம் வர முடியல மாமா”

“அது கிடக்கட்டும்.. எப்ப படிப்பு முடியும்?”

“இன்னும் மூணு மாசமிருக்குங்க மாமா”

“சரி.இருந்து சாப்பிட்டு போ” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் இரண்டு வீடு தள்ளி உள்ள அவரது பர்சனிச்சர் கடைக்குச் சென்றார்.

சமையற்கட்டில் இருந்த அத்தையிடம் சென்று, ” செந்தில் மச்சான் எப்ப வரார் அத்த?” என்றான் கந்தன்.

“தெரியல”

என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பித் தத்தளித்தான் கந்தன்.

” இல்ல அத்தே… அதுக்கு மொதவாரம் தான் இங்க வந்திருந்தேன் அத்தே… ” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ” சரி..சரி..போதும். போய் கைய கழுவிட்டு உட்கார்..சாப்பிடலாம்” என்றாள் லட்சுமி.

” இல்லத்தே.. இப்ப தானே டீ குடுச்சேன் அத்தே. தேனில எட்டம்பதுக்கு பஸ்ஸூ‌. அத பிடிக்கணும் அத்தே. லேட்டாயிடும். நான் கிளம்பறேன் அத்தே”

“சாப்பிட்டுட்டு அடுத்த வண்டியில போலாமிலடா”

“இல்லத்தே.. நான் போய்ட்டு வரேன் அத்தே” என்று கூறிக் கொண்டே தனது ஒருவார அழுக்குத் துணிகள் நிறைந்த பையை தோளில் மாட்டிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான் கந்தன்.

பர்னிச்சர் கடையை எட்டிப் பார்த்தான். மாமா யாரிடமோ வியாபாரம் செய்வது தெரிந்தது. இவனைப் பார்த்தவுடன், “போயிட்டு வரேன்ங்க மாமா” என்றான்.

“ம்ம்ம்” என்ற தலையசைத்த செல்வத்தைப் பார்த்தபடியே நடக்க ஆரம்பித்தவன் கண்களில் கண்ணீர் துளிர்க்கத் தொடங்கியது‌.

இப்பொழுது அந்தப்பையைத் தடவிப் பார்த்துக் கொண்டே, “ரெண்டு வருஷ முன்னாடி இந்த பேக்க தந்ததும் அவங்க தானே” என்று எண்ணி ஆறுதல் அடைந்தான்.

கந்தனின் அப்பா இறந்த பிறகு, அவனுக்கு ஆசிரியப் பட்டயப் படிப்பு படிக்க உத்தமபாளையத்தில் இடம் கிடைத்தது. அவனது மூன்று தாய்மாமாக்களும் தான் பெரிய மனது பண்ணி அவனைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.இடம் செலவில்லாமல் கிடைத்தாலும் விடுதிக் கட்டணம், கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் செய்வதற்கு பொருட்கள் வாங்கும் செலவு, வாரவாரம் அவனது வீட்டிற்கு போக வர ஆகும் செலவு என எல்லாவற்றையும் அவனது மாமாக்கள் தான் பார்த்துக் கொண்டனர்.

‘வாரமொரு வீடு’ என முறை வைத்து பணம் வாங்கிச் செல்வதே கந்தனின் வழக்கம்‌. அவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்தும் வருகிறான். “மூன்று பேரிடமும் சமமாக வாங்க வேண்டும்” என்று ஒருமுறை நடு அத்தை கூறியதில் இருந்து அதனையும் சரியாகப் பின்பற்றி வந்தான் கந்தன்.

“இன்றைய இந்த சங்கடத்திற்கு அதுவும் ஒரு காரணமோ?போனவாரம் சின்னத்தை சொன்னபோதே கெளம்பி போய் பெரிய மாமாவை பாத்திருக்கணும்… அடுத்த வாரம் போய்க்கலாம்னு அசால்ட்டா நினைத்தது எவ்வளவு வம்பா போச்சு…” என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

” மாமாவுக்கு முடியாம போயி, இன்னைக்கோட இருபது நாளு இருக்குமில… போனவாரமே சின்னமனூருல இருந்து ஊருக்கு போகாம நேரா போய் மாமாவ பாத்துட்டு அங்கேயே ராத்திரி தங்கிட்டு காலைல கிளம்பி வந்திருக்கணும்… விட்டாச்சு. இப்ப பொலம்பி என்ன பண்ண?” என்று பிதற்றியவன் மணியைப் பார்த்தான். மணி எட்டைம்பது ஆகிவிட்டது. பஸ் தேனி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது.

இறங்கி அவசர அவசரமாக மயிலாடும்பாறை டவுன் பஸ்ஸைத் தேடினான். ” அச்சச்சோ… பஸ்ஸூ போய்விட்டதே” என்று வருந்தினான். இனி அவன் ஊருக்குச் செல்ல இரண்டு பேருந்துகள் இருந்தன. ஆனால், அதில் செல்வதற்கு அவனிடம் பணமில்லை. பதினான்கு ரூபாய் டிக்கெட்டிற்கு அவனிடம் இருப்பதோ பத்தே ரூபாய்.

“என்ன செய்யலாம்? யாரிட்டாயாச்சும் கேட்கலாமுனு பாத்த நம்மூர் ஆட்களையே காணலயே.. எல்லோரும் டவுன் பஸ்ஸிலேயே போயிருப்பாங்களே” என்று பரிதவித்தான்.

ஒன்பது இருபது மணிக்கு கிளம்பும் டிஏடி பஸ் வந்து நின்றது. ” பஸ் கண்டக்டரிடம் போயி, ‘ அண்ணே என்னிடம் பத்து ரூவா தான் இருக்கு.. டிக்கெட் கொடுங்க.. ஊர்ல போய் இறங்கியவுடன் பஸ் ஸ்டாண்ட் கடையில வாங்கித் தரேன்னே’ என்று சொல்லலாமா” என்று யோசித்தவன், ” தங்கம் மாமா கடையில வாங்கிக் கொடுத்துடலாம்.. அவரு இல்லைனு சொல்லமாட்டாரு…” என்று சமாதானம் அடைந்தான்.

தங்கம் அவனுக்கு உறவெல்லாம் கிடையாது. கந்தனின் அப்பா இருந்தபோதிருந்தே மாமா, மச்சான் உறவு வைத்து பழகிய வழக்கம். அவ்வளவுதான். ஆனாலும் ஏனோ அவரை நம்பினான்.

“கண்டெக்டர் அண்ணே ஒத்துக் கொள்வாரா.. இல்ல அந்த கண்டெக்டர் போல் சில்லரைக்குத் திட்டுவாரோ?” என்று நினைத்தப்படி சாப்பிடச் சென்ற டிரைவர், கண்டெக்டர் வரும் வழியைப் பார்த்தபடி பஸ்ஸில் ஏறாமலே நின்றிருந்தான்.

அப்பொழுது அவனது ஊர் வழியாகச் செல்லும் முத்தாலம்பாறை பஸ் வந்து நின்றது. “இதுவும் கவர்மெண்ட் பஸ் தானே. ஆனா,இதுல மட்டும் ஏன் டிக்கெட் பதினான்கு ரூவா” என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அவனது ஊரைச் சேர்ந்த ராஜனைப் பார்த்தான்.

ராஜன் அவனுக்கு நான்கு வருடங்கள் மூத்தவன். ஒரு உரக்கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தான். ஓரளவு கொஞ்சம் பழக்கமிருந்தது. ராஜன் முத்தாலம்பாறை பஸ்ஸின் படிகளில் ஏற எத்தனித்தப் போது, ” ராஜா அண்ணே” என்று கூப்பிட்டான் கந்தன்.” என்ன கந்தா… வா… ஏறு.. போகலாம்”

” அண்ணே.. ஒரு நிமிஷம் ”

” என்ன கந்தா, இன்னைக்கு என்ன லேட்டாயிடுச்சு போல…”

” ஆமாண்ணே… எப்பவுமே டவுன் பஸ்ஸிலே போயிடுவேன்னே… இன்னைக்கு போயிடுச்சுண்ணே” என்று சொல்லி அமைதியானான்.

ராஜனும் எதுவும் பேசாமல் கந்தன் அருகில் வந்தான்…

” அண்ணே…டவுன் பஸ்ஸுக்கு தான் காசு வச்சுருந்தேன்னே… பஸ்ஸுக்கு மீத காசு கொடுத்தீங்கனா… காலைல கடைக்கு வந்து தந்துடுறேன்னே…” என்று தட்டு தடுமாறிக் கூறினான்.

” சரி..வா..ஏறு” என்று கந்தன் வெறெதும் பேச வாய்ப்பளிக்காமல் பஸ்ஸில் ஏறி படிகளை ஒட்டியிருந்த முதல் சீட்டின் ஓரத்தில் அமர்ந்தான் ராஜன்.
பின்னால் ஏறிய கந்தன் இரண்டு சீட்டுகள் தள்ளி காலியாகயிருந்த சீட்டில் அமர்ந்தான்.

காலையில் எழுந்தவுடன் அம்மாவிடம் காசு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணினான். நடந்ததை எதையும் அம்மாவிடம் சொல்லவேக் கூடாது என்றும் தீர்மானித்துக் கொண்டான்.

” ரோசப்பட்டு அத்தையிடம் பணம் வாங்காமல் வேற வந்துட்டோம்.. அடுத்த வாரம் மெஸ் பீஸ் வேற கட்டணுமே” என்று தனக்குள் முணங்க ஆரம்பித்தான்.

“கந்தா, உனக்கும் டிக்கெட் எடுத்துட்டேன்” என்று முன்னாலிருந்து ராஜன் கத்த, சுயம் வந்தவனாய் அவசரமாக எழுந்தோடி, பத்து ரூபாய் தாளை ராஜனிடன் நீட்டினான் கந்தன்.

” வை..வை.. பாத்துக்கலாம். காலைல எல்லாம் ஒண்ணும் கொண்டு வந்து தர வேண்டாம்” என்றான் ராஜன்.

தயங்கியபடியே நிற்பதைக் கண்ட ராஜன், “போ. கந்தா.. உட்காரு. பஸ்ஸு கிளம்ப போகுது” என்று கூறிவிட்டு கண்ணை மூடித் தூங்க ஆயத்தமானான்.

என்ன செய்வதென்று எதுவும் தெரியாமல், என்ன செய்ய போகிறோம் என்பதும் புரியாமல் எதிர்காலத்தை மறந்து பசி மயக்கத்தில் கண்ணீர் மல்க உறங்கத் தொடங்கினான் கந்தன்.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.


Show 2 Comments

2 Comments

  1. Manish

    அருமையான கதை தடை… நானே பயணம் செய்தது போல உணர்வு…

  2. பாரதிசந்திரன்

    உறவுகளின் உண்மைத்தனமை இப்படித்தான் வெளிப்படும். ஆனால் உறவற்ற யாரோ எவரோ உள் அர்த்தமின்றி உதவுவர். உலகம் இவ்வளவு தான் என அழகாகக் கூறப்பட்டுள்ளது. அருமையான் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *