Kanave Short Story by Kumaraguru. குமரகுருவின் கனவே! குறுங்கதை




கொல்வதற்கு முதல் நாளிரவில் உறக்கத்தைத் தள்ளி வைக்க முடியவில்லை. உறங்காமல் இருக்கலாம். உறங்காமல் வாழத்தான் முடியாது.

நாளைப் பரபரப்பான நாள். மன்றாடிப் பெற்ற வாய்ப்பைத் தவற விடவே கூடாது. இந்த கொலையைச் செய்து முடித்தால் எப்படியும் இன்னும் பல கொலைகளுக்கான ஆர்டர்கள் வந்து குவியும். அதன்பின் இன்னும் இன்னும்…

துண்டிக்கப்பட்ட தலையுடன் நடந்து வருபவர்களைச் சுற்றிலும் விரல்கள் நறுக்கப்பட்டவர்கள் கண்ணில்லாதவர்கள் கால்களின்றி நகர்ந்து வருபவர்கள் என்று எல்லோரும் அவனை நோக்கியே வருகிறார்கள்!

சின்னஞ்சிறு உலகில் கையேந்துபவர்களின் கூட்டத்தின் நடுவே, கையேந்தியவர்களின் முகம் பார்த்து புன்னகைத்து கொண்டே பணம் ஈயும் மனிதனைப் போலக் கொல்வதற்காகக் காத்திருக்கிறான் அவன்..

தரையெல்லாம் ரத்தத்தினாலான கம்பளம் விரிக்கப்பட்டு, மிகப்பெரிய கடலுக்குள் சிறிய கல் போல் தொப்பென்று விழுந்ததும் வெளிவரும் இரண்டு குமிழிகளைப் போல மேல் நோக்கி செல்லவியலாமல் கீழ் நோக்கி செல்லும் வேகத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு வாழ்வதைப் போலொரு கனவு! கண் விழித்தால் நீலக்கடல் சிவந்து கொப்பளிக்கும் குருதிக் குழம்பாய் அவனைச் சுற்றிலும்-அவனால் மூச்சு விட இயலவில்லை!!

வியர்க்கத் துவங்கிவிட்டது! சாதாரண முத்து வியர்வையல்ல… கண்ணாடியில் ஒழுகும் மழையைப் போல ஒழுகத்துவங்கி முகமெல்லாம் நனைந்து… முதுகெல்லாம் நனைந்து… பனியன் நனைந்து… சட்டென்று எழுந்து அமர முயன்றான்… எதிரிலிருந்த கண்ணாடியை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. அந்த கண்ணாடியும் இவனைப் பார்த்ததில்லையே என்றெண்ணிய போதுதான் அவனுக்கு அங்கே எதோ தவறாக நிகழ்ந்து கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது…

அங்கிருந்து ஓடத் துவங்கினான்… தப்பித் தப்பியோடுகிறான்… தப்பித் தப்பியோடுகிறான்… அந்தக் கண்ணாடியிலிருந்து அவன் பிம்பமும் அவனைத் துரத்தி கொண்டு அல்லாமல்… அவனோடே ஓடத் துவங்கியது… இவன் ஓட அவன் ஓட…. முடியாத துரத்தல்!!

வியர்வையைத் துடைத்துக் கொண்டு, திடீரென்று ஓட்டத்தை நிறுத்தியவன் மீது கண்ணாடி இடித்த வேகத்தில் சுக்கு சுக்காய் தெறித்தது. தெறித்த கண்ணாடி சில்லுகள் எல்லாம் எழுந்து நின்று கொண்டன… அவன் ஓடத் துவங்கினான்… அவனை அவன் போன்றவர்கள் துரத்தத் துவங்கினார்கள்…

இப்போது அவன் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியிருக்கும் எனக்குள்ளிருந்தொரு கண்ணாடி கனவு எழுதிக் கொண்டிருப்பதைப் போல… கனவே!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *