நூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா



நூல்: கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர் : க.துளசிதாசன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன் ( 2012)
பக்கங்கள் : 144
விலை : ரூ 120
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kanavu-aasiriyar-4141/

தொகுப்பாசிரியர் : க.துளசிதாசன். இவர் எஸ்.ஆர்.வி. பள்ளியின் முதல்வர் , சமூக அக்கறையுடன் அரிமா சங்கத்தின் மூலம் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருபவர். களம் என்ற அமைப்பின் மூலம் திருச்சியில் பண்பாடு மற்றும் கருத்துத் தளத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

நூலைப் பற்றி ….

இந்தப் புத்தகத்தை இவ்வளவு நாட்களாக வாசிக்காமல் விட்டதற்கு முதலில் மனம் வருந்துகிறேன். ஆமாம் , ஒரு ஆசிரியராக இந்த நூலை நான் முதலிலேயே வாசித்திருக்க வேண்டும். 2012 இல் முதல் பதிப்பு வந்த இந்நூல் 2017 இல் 9 ஆம் பதிப்பு கண்டுள்ளதென்றால் இப்புத்தகத்தின் வரவேற்பைப் புரிந்து கொள்ள இதை விட ஒரு காரணம் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மனதைத் தொட்ட வேறொரு மனிதர் சம்மனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவோ பெற்றோர்களாகவோ அல்லது நண்பர்களாகவோத் தான் இருப்பார்கள் என்பதை யாருமே மறுதலிக்க இயலாது. அப்படியான வரிசையில் , இன்றைய தமிழ்ச் சமூகத்தின், ஆளுமைகளாகத் திகழும் படைப்பாளர்களில் 18 நபர்களைத் தேர்வு செய்துள்ளார் துளசிதாசன். அந்த 18 பேரின் வாழ்க்கையிலும் அவர்களது கனவு ஆசிரியர்களைத் தேடி மலைத்தேனாய் சேகரித்து கனவு ஆசிரியர் புத்தகமாக வழங்கியிருப்பது மிகச் சிறப்பு.

அசோகமித்திரன் , பிரபஞ்சன் , பொன்னீலன் , ஞாநி , ஆர் .பாலகிருஷ்ணன் , எஸ்.ராமகிருஷ்ணன் , தியோடர் பாஸ்கரன் , ச .மாடசாமி, ரத்தின நடராஜன் , ச.தமிழ்ச்செல்வன் , பிரளயன் , பாமா , ஆயிஷா நடராஜன் , டிராட்ஸ்கி மருது , த.வி.வெங்கடேஸ்வரன் , இறையன்பு , கீரனூர் ஜாகிர்ராஜா , பவா செல்லதுரை ஆகியோர் தான் அந்த 18 ஆளுமைகள். இவர்களது கட்டுரைகளைத் தொகுத்த க.துளசிதாசன் 19 ஆவது நபராக தனது கட்டுரையையும் இணைத்துள்ளார். இறுதியாக 20 ஆவது கட்டுரை ஆப்ரகாம் லிங்கன் தனது மகனுக்காக தலைமை ஆசிரியருக்கு எழுதிய கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.



கல்வி வியாபாரமாகிப் போன , போட்டி மிகுந்த இன்றைய சமூகச் சூழலில் குழந்தைகளின் ஒரே அனுசரனையான அடைக்கலம் ஆசிரியர்களது அரவணைப்பே. அப்படியான ஆசிரியர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள மிகச் சிறந்த ஒரு பற்றுக் கோலாக இப்புத்தகத்தைப் பார்க்கலாம். இன்றைய நாட்களில் நாம் அதிசயமாகப் பார்த்து வியக்கும் ஆளுமைகள் தான் மேற்சொன்னவர்கள். அவர்களது ஆளுமைத் திறனின் விதையாக இருந்த சம்பவங்கள் , பள்ளிச்
சூழல்கள் , ஆசிரியர்கள் பற்றியே ஒவ்வொரு கட்டுரையும். ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை பகரும் கட்டுரைகளை விட தங்கள் வாழ்க்கையை பாதித்த ஆசிரியர்களை அவர்களது அணுகுமுறைகளை அவர்களது கற்பித்தல் முறைகளை அவர்களது அக்கறை கலந்த அன்பைக் குறித்து பகிர்ந்துள்ள கட்டுரைகள் நம்மை நெகிழ வைக்கின்றன. மனதைக் குழைய வைத்து சிலரது பகிர்வுகள் கண்களையும் மனதையும் ஈரமாக்குகின்றன .அந்த வரிசையில் முதலில் என்னைக் கவர்ந்த ஆசிரியர் ஆயிஷா நடராஜன் தனது பெரியசாமி ஆசிரியரைப் பற்றிப் பகிர்ந்தது தான் என்பேன். கற்றலுக்கான சூழலை உருவாக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும் என அவரது சொற்களை நான் எப்போதும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் சற்றே ஆறுதல். நாம் மிக உயரத்தில் வைத்துப் பார்க்கும் ஆயிஷா நடராஜன் அவர்களது உயரத்திற்கு விதை போட்ட பெரியசாமி ஆசிரியர் மீது மிகுந்த மரியாதை கூடுகிறது.

ஐயா நான் தங்களுக்குக் கடன் பட்டவன் என்று எழுதியுள்ள பிரபஞ்சன் அவர்களது கட்டுரை இந்தியக் கல்வி முறை பிரெஞ்சுக் கல்வி முறை இரண்டிலும் ஆசிரியர்கள் எவ்வாறு மாறுபடுகின்றனர் என்பதைப் பதிவு செய்கிறது. மிக நுட்பமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது . திருநாவுக்கரசு ஆசிரியரால் நீங்கள் தேர்ந்த எழுத்தாளராக மாறியதை வாசிக்கும் போதும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் குறித்த உங்கள் வேதனையும் எனக்குப் புரிகிறது. எனக்கும் 2012 இல் கடைசி பெஞ்ச் மாணவர்கள் ஒரு முழு வகுப்பாகவேக் கிடைத்து , அவர்களை வாழ்க்கைப் பாடத்தில் தேர்ச்சி பெற வைத்த அனுபவமும் உண்டு பிரபஞ்சன் சார். 2008 இல் உங்களை சந்தித்த போது, உங்கள் கனவு ஆசிரியர் குறித்து அறிந்திருந்தால் நிச்சயமாக இது குறித்து பேசியிருப்பேன் சார்.

டில்லிக்குப் போறேன் …… கட்டுரையில்

தமிழகக் கல்வித் துறையில் உயர் பொறுப்பு வகித்த பொன்னீலன் ஐயா, தனது அனுபவத்தில் , தான் கண்ட இரண்டு வகுப்பறைகளையும் கையாண்ட ஆசிரியர்களையும் பதிவு செய்ததில், காணக் கிடைக்காத அற்புதமாக ஒன்றைப் பதிவு செய்துள்ளார். ஒரு ஆசிரியர் தனது சமூக அறிவியல் வகுப்பறைக் கற்பித்தலை எந்த வகையில் உயிரோட்டம் மிக்கதாக வைத்திருந்தார் என்பது குறித்து பரவசமாகக் கூறியுள்ளார். எனது வகுப்பறையும் எப்போதும் அப்படித்தான் இருக்கிறது என்பதை எனது ஆரம்ப கால அனுபவங்களைப் பின்னோக்கிச் சென்று அசை போட்டு இன்று வரை இப்படியான கூச்சல் மிகுந்த வகுப்பறை தான் இருந்தது , இனிமேலும் இருக்கும் என்பதை இவரிடம் நேரில் ஒரு நாள் சொல்ல வேண்டும்.

அச்சமில்லாத பள்ளிக்கூடங்கள் உருவாக வேண்டும் என்ற தியோடர் பாஸ்கரன் அவர்களது எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் , மக்களிடையே நிலவும் மத , மொழி , ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்களை மதிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது. நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன் சார் , அந்த வகையில் தான் எனது மாணவர்களை அணுகுகிறேன் என்பதை இங்குப் பதிவு செய்யக் கடமைப் பட்டுள்ளேன்.

அடுத்து , இந்திய ஆட்சிப் பணிப் பதவியில் உள்ள ஆர் பாலகிருஷ்னன் , யார் கனவு ஆசிரியர் என்பதற்கு ஒரு பட்டியல் இணைத்து நம்மை செதுக்கிக் கொள்ளச் சொல்கிறார் எனலாம் .எந்தப் பஞ்சத்தையும் தாங்கும் இந்த பாரத தேசம் நல்ல ஆசிரியர்களுக்கான பஞ்சத்தைத் தவிர என்கிறார். எவ்வளவு உண்மை இது.

எப்போதும் போல ,

பேரா சா. மாடசாமி தனது கனவு ஆசிரியர் குறித்து 3 கடிதங்களாகத் தந்து நல்ல ஆசிரியருக்கு அடிப்படை நல்ல மனிதராக இருப்பது தானே , புத்தகத்தை மட்டும் ஓர் ஆசிரியர் வாசித்தல் போதுமா மனங்களை வாசிக்க வேண்டாமா என்கிறார். அப்பா தங்கள் கடிதங்கள் மேலும் என்னை செழுமைப்படுத்திக் கொள்ள உதவுகின்றன. கலங்கிய கண்களைக் கண்டு பிடிக்கும் ஆசிரியராகவே என்றைக்கும் எனது வகுப்பறை என்னை வழிகாட்டுகிறது. உங்கள் கனவு ஆசிரியர் போல நானும் சராசரியான ஒரு ஆசிரியரே , எடுத்த காரியத்தில் சலிப்படையாமல் நகர்த்திப் போகும் பொறுமைசாலியாகவே எனது குழந்தைகளுடன் வாழ்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அப்பா.



பேரா ரத்தின நடராஜன் நீங்கள் கூறுவது போல , விரும்பாமல் வந்திருந்தாலும் எப்போதோ பணியை நேசிக்கக் கற்றுக் கொண்டேன் .நீங்கள் கூறும் கனவு ஆசிரியரது இலக்கணங்கள் அனைத்திற்கும் என்னைப் பொறுத்திக் கொண்ட ஆசிரியராகவே நான் இயங்கி வருகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

ச.தமிழ்ச்செல்வன் தோழர் , நீங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முகத்திலும் கனவு ஆசிரியரைத் தேடுகிறேன் கட்டுரையில் குறிப்பட்டது போல நிச்சயமாக உங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளும் ஆசிரியராக இல்லை என்பதை மகிழ்வுடன் வெளிப்படுத்துகிறேன். வரலாற்றுக்கும் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக பாடத்திட்டம் என்னும் மேடையில் நின்று பேசும் ஆசிரியராக என்னை உருமாற்றியே வருகிறேன் . நீங்களும் ஓரளவு அதை அறிவீர்கள் என நம்புவதால் நீங்கள் உங்களி முகத்தை வேறு பக்கம் நிச்சயமாகத் திருப்ப மாட்டீர்கள்.

பிரளயன் , நீங்கள் எழுதிய டர்ர டும்ம டர்ர டும்…. இன்னும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டே உள்ளது. பாடம் நடத்தும் போது பதின் பருவ மாணவரது தூக்கம் ஆக்டிவ் பார்டிசிபேசனா அல்லது பாஸிவ் பார்டிசிபேசனா என்ற கேள்வியும் எனக்குள் ஒலித்துக் கொண்டு தான் இருப்பதுடன் , தூங்க விடாமல் செய்கின்றன. நிகழ்கால சூழலையும் நீலகண்ட ஆசிரியரது சூழலையும் ஒப்பு நோக்கும் உங்கள் பண்பு பாராட்டத்தக்கது. நிச்சயமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள சூழல்களை சவால்களை எதிர்நோக்கும் ஆசிரியராக என்னை சீராக்கிக் கொள்ள முனைப்புடன் இயங்குகிறேன் .

இந்த டீச்சருட்ட கேட்டா அடிக்க மாட்டாங்க … என்ற தலைப்பில் பாமா டீச்சர் எழுதியுள்ள கனவு ஆசிரியர் கட்டுரை நிறைய விஷயங்களைத் தெரிவிக்கிறது. நடுநிலைப் பள்ளியில் கணக்கு ஆசிரியரே பிடிக்காமல் இருந்தாலும் பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் தந்த அன்பு வழிகாட்டலில் இன்று இவரும் ஒரு கணித பட்டதாரி ஆசிரியராக உருவாகியிருக்கும் குட்டி வரலாறு மிகவும் நெகிழ வைக்கிறது. எனது வகுப்பில் கூட கணக்கு எனக்குப் பிடிக்காது என்ற மாணவிகளை சந்தித்து அவர்கள் விரும்பும் பாடமாக மாற்றிய அனுபவம் உண்டு. உங்கள் கட்டுரையை வாசிக்கும் போது நாம் போகும் பாதை சரியானதாகவே உணர்கிறேனுங்க. ஒரு நாள் உங்களை சந்தித்து அது குறித்து பகிர ஆசைப்படுகிறேன். ஏன்னா …. நானும் உங்களைப் போலவே ஒரு கணக்கு டீச்சர் தானுங்க .

நான் பள்ளி ஆசிரியனாக இருந்தால் … ஞாநி அவர்களது கட்டுரை மிக மென்மையாக ஆசிரியர்களது கடமைகளை விளக்குகிறது. நாம் இன்று செய்து வரும் பெரும்பாலான நடைமுறைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள் சார். உங்களை நேரில் சந்தித்த நாளில் (ஒரு வேளை இக்கட்டுரையை ஏற்கனவே வாசித்து இருந்திருந்தால் ) இது பற்றி நிச்சயம் பேசியிருப்பேன். அதற்கு வாய்ப்பில்லாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கிறது.

அப்பாதான் என் கனவு ஆசிரியர் என்று எழுதியுள்ள டிராட்ஸ்கி மருது அவர்களது அனுபவம் மிக வித்யாசமானது . அப்பாக்கள் ஆதர்ஷமாக இருப்பது மிக மிக அரிது. அந்த வகையில் நீங்கள் நல் அதிர்ஷ்டம் பெற்றவர்.

உலகம் ஒரு மிகப்பெரிய வகுப்பறை என்ற தலைப்பில் , எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிய கனவு ஆசிரியர் கட்டுரையின் பொருண்மைகள் ஆசிரியர்களை தோற்றுப் போகாமல் இருக்க வழிகாட்டுகிறது. நீங்கள் கூறும் வகுப்பறை போலத்தான் எப்போதும் எனது வகுப்பதை இரு வழிச் சாலையாகத் தான் இருக்கிறது. மாணவர்களை சமூக மனிதனாக மாற்றுவதற்கான முயற்சி தான் பரிசோதனை முயற்சியாக செய்து வருகிறேன் என்பதை நிறைவுடன் உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன் சார் .



காதலைத் தூண்டி விட்ட எனது கணித ஆசிரியர் என்று த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய கட்டுரையில் n (n + 1 ) /2 இன் கதை வழிக் கற்பித்தலை யாராலும் நேசிக்காமல் இருக்க முடியாது. அந்த வழியில் சங்கரன் ஆசிரியரது மாணவருடனான வாழ்க்கையை த .வி பதிவு செய்திருப்பது மிகச் செறிவான அனுபவம். ரவீந்திரநாத் தாகூரின் கனவு ஆசிரியர் குறித்த கருத்தை வலியுறுத்தும் பண்பு தான் சங்கரன் ஆசிரியர் ஆகவே இவரையும் நாம் கொண்டாடுகிறோம் .

இந்திய ஆட்சிப் பணியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் இறையன்பு அவர்களது எனது இலட்சிய ஆசிரியருக்கு என்ற கட்டுரையை வாசிக்கும் போது படிப்படியான வடிகட்டுதல் நிகழ்கிறது. ஆசிரியர்களை நிறைய நிறைய வழிகளில் சரி செய்து கொள்ள வழிகாட்டியுள்ளார். மாணவர்கள் ஆசிரியர்கள் மீது மகத்தான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் .அவர்கள் ஆகாயத்திற்கடியில் உள்ள அனைத்தையும் ஆசிரியர்கள் அறிந்து வைத்திருப்பார்கள் என்று ஆழமாக எண்ணுவதை நாம் பாழ்படுத்தாமல் நம்பிக்கையூட்ட முயல்கிறோம் சார். ஏனெனில் நீங்கள் கூறியபடி ஆசிரியர்கள் ஒரு கேள்வியை விருப்புரிமையில் (Choice ) விட முடியாது.

கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள நீங்களும் ஒரு மருதமுத்து அய்யாவாக விரும்புகிறேன் கட்டுரை உளவியல் பார்வையில் குழந்தைகளது பல்வேறு சிக்கல்களைப் புரிய வைக்கும் ஆழமான கட்டுரை . மருதமுத்து அய்யாவின் வழியில் நாமும் ஆசிரியராக வாழ்ந்தால் நூற்றுக்கணக்காள ஜாகிர்களை உருவாக்க இயலும் என்பதை நிச்சயமாக உள்வாங்கிக் கொள்கிறேன் சார்.

தன் அப்பாவை ஆசிரியராகப் பார்த்த பவா செல்லதுரை ஆசிரியர்களில் பெரும்பாலான தகுதியற்றவர்களையே தனது வாழ்க்கையில் கடந்து வந்ததன் கசப்பு ரொம்ப எட்டிக்காயாக இருக்கு. ஒரே ஒரு ஆசிரியரை கொஞ்சமாக நேர்மறையாக நினைவுகூர்தல் சற்றே நம்பிக்கை தருகிறது . இப்போதுள்ள கல்விச் சூழலில் ஆசிரியர்கள் இவ்வளவு மோசமில்லைங்க , அதை என்னால உறுதியா சொல்ல முடியும்.

இந்நூலின் தொகுப்பாசிரியர் ஒரு சிறிய நூலின் முனையைப் பிடித்துக் கொண்டு என்று பள்ளி -சமூகம் – ஆசிரியர் – மாணவர்களை மையப்படுத்தி எழுதியுள்ள கட்டுரை , ஒரு ஆசிரியர் எதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள , தேடல் மிக்க மனிதராகத் தன்னை தகவமைக்க வேண்டும் , எவ்வாறு மாணவரை அணுக வேண்டும் , இப்புத்தகத்தின் தேவை என்ன என்பதற்கான புரிதல்களை நம்முடன் Uகிர்கிறார்.

ஆப்ரஹாம் லிங்கன் தனது மகனின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் குறித்து நாமறிந்துள்ளோம் . அதுவே இறுதியாக இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆசிரியரும் திரும்பத் திரும்ப வாசித்து நம்மை நாம் திருத்திக் கொள்ள , வளர்த்துக் கொள்ள மாணவர் விரும்பும் ஆசிரியராக உருவாக உகந்த மிகச் சிறந்த கட்டுரைத் தொகுப்பு. கல்வியியல் கல்லூரிகள் இந்நூல் வாசிப்பைக் கட்டாயமாக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களோடு உரையாட இந் நூலை அவசியம் வாசிப்பதும் , தலைமை ஆசிரியர்கள் தங்கள் ஆசிரியர்களை வழிகாட்ட கட்டாயமாக இதை வாசிப்பதும் வேண்டும்.

படித்து முடித்த பிறகு மனம் மிக பாரமாக இருப்பது போல உணர்கிறேன். எத்தனை அரிய பணி நமக்கு வாய்த்திருக்கிறது. கடந்த 20 வருடங்களில் எனது மாணவச் செல்லங்களுக்கு நான் செய்த தவறுகள் தேடி மனம் பதைக்கிறது. எனக்கான நாட்கள் எனது மாணவரிடத்தில் எப்படி இருக்கும் என்பதும் நினைவில் தங்குகிறது. மனம் பிசைந்து நெகிழும் தன்மையை ஆசிரியர்களிடத்தில் உருவாக்கும் நூல்.

உமா