Kanavu Priyan (Muhammad Yusuf) கனவுப்பிரியன் Short Story Intha Madam Illanna Santhamadam Synopsis Written by Ramachandra Vaidyanath.

சிறுகதைச் சுருக்கம் 63: கனவுப் பிரியனின் *இந்த மடம் இல்லன்னா சந்த மடம்* சிறுகதை



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

மனித முரண்களை சொல்வதில்கூட எவ்வளவு லாவகம் இவரிடம்

இந்த மடம் இல்லன்னா சந்தமடம்

கனவுப்பிரியன்

செங்கராஜ் வீடு காலையிருந்து அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.  கோழிக்கூடை பக்கத்திலிருந்து சரசரவென்று சப்தம் கேட்டு வைக்கோல் எடுக்க மாட்டுத் தொழுவம் சென்ற சரசுதான் முதலில் பாம்பைக் கண்டிருந்தாள்.  சரசு போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பாம்பை அடிக்க கட்டையைத் தூக்கிக் கொண்டு விரட்ட வர, அங்குமிங்குமாய் போக்கு காட்டி  கடைசியில் கொல்லைப் பக்கம் குளியலறையில்போய் பதுங்கிக் கொண்டது.  உள்ளே செல்ல அனைவருக்கும் பயம்.

சுற்றுவட்டாரத்தில் பாம்பு பிடிக்க யார் இருக்கிறார்கள் என்று காலையிலிருந்து ஊர் முழுக்க போன் அடித்து விசாரித்ததில் சண்முகராசு மாமா சொன்னாரென்று ஊருக்குத் தள்ளி தொலைவில் உள்ள ராஜாக்கள் பாளையம்போய் ஒருத்தரை அழைத்து வந்தார்கள்.  ஒடிசலான கருத்த தேகம்,  மேல் சட்டை தோதுபடாதென்று தவிர்த்திருந்தான்.  முறுக்கு மீசை, ஆள் பார்க்க விவசாயக்கூலிபோல இருந்தான்.  கைகளில் நரம்புகள் முறுக்கேறி வயிறு கட்டிப்பட்டிருந்தது.

“பாம்பை புடிக்கணுமா கொல்லணுமா?”

“புடிச்சி வச்சி என்ன செய்ய கொன்னுரும்.”

“அப்போ சுழுவா முடிச்சிறலாம்.  புடிக்கத்தான் சங்கடம்.  அந்த சவுக்கு கம்ப இப்படிக் குடுங்க.”

அடுத்த பத்தே நிமிடத்தில் பாம்பு செத்துக் கிடந்தது.  தெருக்கார பயல்கள் செல்போன்களில் போட்டோ பிடித்துக் கொண்டிருந்தனர்.  பாம்பை அடித்தவர் செங்கராஜ்  முன்பு பவ்யமாக கையைக் கட்டி நின்று கொண்டிருந்தார்.  செங்கராஜை சுற்றி கூட்டம் இருந்தாலும் ஊருக்குள் பெரிய மனிதர் என்பதால் மரியாதை நிமித்தம் யாரும் முதலில்  பேச்சுக் கொடுக்கவில்லை.  ஆனாலும் பாம்பை அடித்தவனைப் பற்றி அறிய எல்லோருக்கும் ஆர்வமிருந்தது.

முதலில் செங்கராஜே பேச்சைத் தொடங்கினார் “உம்மம பேரு என்னவோய்?”

“ஐயப்பன்.”

“காலையில இருந்து ரெண்டு மணி நேரமா பயந்துகிட்டு இருந்தோம்.  வந்து செத்த நேரத்துல கொன்னுட்டீரே சிலம்பம் தெரியுமோ? உம்ம கம்பு வீச்ச பார்த்தா அப்படித்தான் தெரியுது.”

“சிலம்பம், சுருள்வாய், தீப்பந்தம், துல்கால், பனையேறி, கொம்பேறி,  ஐயங்கார் வரிசை எல்லாம் தெரியும்.”

“ஐயங்கார்னு எல்லாம் ஆட்டம் இருக்கா என்ன? சரி ஏதுஞ்சாப்புடுதீரா?”

“மோர் தாங்க”

“யே சரசு, ஒரு சொம்புல மோர் கொண்டா. பாம்பு அடிச்சதுக்கு எம்புட்டுவேணும்?”

“நீங்க பாத்து ஏதுங்குடுங்க”

“வேற எங்கேயாவது வேலை பாக்குறீரா?”

“காடுவழி நாடுவழி தாங்க”

“அதுசரி, குடும்பம் புள்ள குட்டி ஏதாச்சும்..”

“இல்ல தனிக்கட்டைதான் இப்போதைக்கி.”

“பண்ணையில வேலைக்கு நிக்கீறா”

“செய்யுதேம்”. இரண்டு ஐநூறுரூபாய் நோட்டை மடித்து மடியில் திணித்த செங்கராஜ் பக்கத்தில் நின்ற மாடசாமியைப் பார்த்து “பண்ணைக்கு போறப்போ இவரையும் கூட்டிடுப் போ” என்றபடி “தங்குறதுக்கு எல்லாம் இடம் இருக்கு.  மாடசாமி காட்டுவான் சரியா” என்றபடி ஐயப்பனை பண்ணைக்கு அனுப்பி வைத்தார்.  

செங்கராஜுக்கு விவசாயம் பூர்விக தொழில் என்றாலும் அடித்து  புடித்து ஏதேதோ செய்து ஊரின் முக்கிய ஏற்றுமதியாளர் ஆகிவிட்டார்.  பெரிய வாசல் கதவுகளை கொண்ட ஒரு நீண்ட பண்ணையம்.  வாசல் அருகில் வாட்ச்மேன் அறை.  வாட்ச்மேனுக்கு துணையாய் கன்றுக்குட்டி சைசுக்கு கருப்பு நாய்கள் இரண்டு.  தூத்துக்குடி சாலைகளை நிறைத்து நிற்கும் பெரிய கண்டைனர் லாரிகள் கூட  சுலபமாக பண்ணையத்துக்குள் வட்டமடித்து திரும்பிவிடும்.  நீள அகலத்துக்கு காங்க்ரீட் தரை.  டன் கணக்கில் பல்லாரி வெங்காயம், வேப்பங்கொட்டை, துவரம்பருப்பு, சீலா கருவாடு என இன்னின்னதுதான் என்றில்லாமல் பல சரக்குகளும் காயவைக்கப் பயன்படும் சிமெண்ட் தரை அது. ஆபிஸ் ரூம், வெளியூர் வேலைக்காரர்கள் தங்க நான்கு அறைகள், வடக்குப் பக்கம் பெரிய வட்டக் கிணறு, கிணற்றை ஒட்டி இரண்டு பெரிய தொட்டிகள், சற்று தள்ளி வேப்பமரங்கள், புறா கூண்டுகள், முயல் கூண்டுகள், லவ் பேர்ட் கூண்டுகள் எனப் பண்ணையத்தில் வசதிகளுக்கு குறைவில்லை.  

பீடியை பற்ற வைத்துக் கொண்டு நிதானமாக ஒரு முறை பண்ணையை சுற்றி வந்தார் ஐயப்பன்.  இந்த பண்ணையில் புறாக்களுக்காக அடிக்கடி பாம்பு வருவதுண்டு.  ஒரு முறை பெரிய பெரிய தேக்கு மரத்தடிகளை கண்டெய்னருக்கு ஏற்றும் போது ஏழெட்டு பாம்புகள் .  அடித்து ஓய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.  இந்த தொந்தரவுகளை மனதில் வைத்துத்தான் ஐயப்பனுக்கு உடனே வேலை தந்திருந்தார்.  பண்ணையில் மொத்தம் பதினெட்டு பேர் வேலை செய்தனர்.  இப்போது ஐயப்பன் பத்தொன்பதாவது ஆள்.

பண்ணையில் அனைவருக்கும் ஒரே கேலி பொருள் குண்டு குருசாமிதான்.  என்னத்தை தின்றாலும் வெளிக்கி போகாமல் அடைத்துக் கொண்டது போல பத்து நாளைக்கு ஒரு முறைதான் மலம் கழிப்பான்.  ஐயப்பன் வந்த பத்தாவது நாள் முதல் குண்டு குருசாமி பற்றின விபரங்கள் தெரிந்ததும் ரெண்டு நாள் மருந்து சொன்னார்.  மூன்றாவதுநாள் கழிப்பறைக்குப் போகும் குருசாமியை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.  மருந்து பக்குவம் என்னவென்று  செங்கராஜே  கேட்டார்.

“இனிமா கொடுத்தேன்யா.”

“இனிமா கொடுத்தியா அது புள்ளத்தாச்சி பொம்பைளங்களுக்கு பேறுகால நேரத்துல தான தருவாங்க”

“அப்படி எல்லாம் இல்ல.  யாருக்கு வேணுமின்னாலும் கொடுக்கலாம்யா இது வேற பக்குவம்.  நிறைய பேர் வெவரம் தெரியாம சோப்பு தண்ணி கொடுத்து உடம்பை கெடுத்திடுறாங்க.  இது நல்லா புளிச்ச மோரு ஒரு அரை டம்ளர் எடுத்து ஒரு லிட்டர் தண்ணி சேர்த்து கொடுக்கணும்.  உடம்புக்கும் நல்லது யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.”

பட்சியின் வானம்: எட்டாவது அதிசயம் - கனவுப்பிரியன் (சிறுகதை)
கனவுப்பிரியன் (முஹம்மது யூசுப்)

“அது சரி, இதெல்லாம் யார்கிட்ட கத்துகிட்டீரு?’

“எங்க ஆசான் நாகர்கோயில் வர்ம வைத்தியர் சந்தன பாண்டி ஆசான்”,

“அப்போ உமக்கு வர்மம் கூட தெரியுமா?”

“பார்ப்பேன்.”

“என்னைய்யா எப்போ எதைக் கேட்டாலும் புதுசா தெரியும்னு சொல்லுறீரு.  கல்யாணம் காச்சின்னு வாழலாம்ல.”

“கல்யாணம் எல்லாம் ஆச்சி.  ஊரு ஊரா கோயில் கொடை அது இதுன்னு ஆசான் கூடசுருள் வாள் சுத்த, ஒத்த தீப்பந்தம் ரெட்ட தீப்பந்தம் எல்லாம்  சுத்த போயிருவேன்.  வீட்டுல இருக்கறதில்ல.  அதனால அவளுக்கு என் கூட வாழ விரும்பலைன்னு இன்னொருத்தன் கூட ஓடிப்போயிட்டா. அப்புறம் பெத்தவகூட கொஞ்ச நாள் இருந்தேன்.  அதுவும் போய் சேர்ந்திருச்சு” எதையோ வாழ்வில் இழந்துவிட்ட உணர்வு அந்தக் குரலில் ஒலித்தது.  

“எம்பெரிய மாமன் ஒருத்தர் முதுகுல ஏதோ பிரச்சனைன்னு சொல்லி ரொம்ப நாளா படுக்கையில் கிடக்கார்.  வர்மம் பாப்பீரா?”

அடுத்தநாள் காலையில் புல்லட்டில் ஐயப்பனை பின்னால் உட்கார வைத்து பெரிய மாமா வீட்டுக்கு அழைத்துப் போனார் செங்கராஜ்.

மாமாவுக்குப் பக்கத்தில் ட்ராக்சன் மெஷின் வைக்கப்பட்டிருந்தது.  அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்துவிட்டு முதுகுப் பக்கம் அடிப்பாகத்திலிருந்து வலி எங்கு இருக்கிறது என்று தடவிப் பார்த்தார் ஐயப்பன்

“இந்த மெஷினை இனி போடாதீங்க.  இதை போட்டு இழுக்கறப்ப எலும்புக்கு இடையில இடைவெளி வரும்.  அதுனாலே அப்போ மட்டும் வலி இருக்காது.  திரும்பவும் விட்டா எலும்புக்கு இடையில இருக்கிற சவ்வை அமுக்கும்போது வலியும் வரும் வீக்கமும் வைக்கும்” என்றார் ஐயப்பன்.

வேலையாட்கள் உதவியோடு மாமாவை கைத்தாங்கலாக பிடித்து நிப்பாட்டச் செய்து தலையை நிமிர்த்தி வலதுவிலா எலும்பை அழுத்தி இடது பக்கம் தள்ளச் சொல்லி இன்னொரு ஆள் இடது கால் மூட்டை மடக்காமல் முன்னும் பின்னும் ஆட்டச் சொல்லிக் கொண்டே ஐந்தாறு முறை இடது காலை ஆட்டும் போது சடக் என்று சத்தம்,

அவரைப் படுக்க வைத்து கடுகு எண்ணெய் வேப்ப எண்ணெயுடன் ஏதேதோ கலந்து இளஞ்சூட்டில் வாட்டி அவர் முதுகில் நீவி விட்டார்.  மாமாவின் வீட்டுக்காரம்மாவைப் பார்த்து “காய்ச்சல் வரும் இன்னைக்கு.  வரணும்.  பயந்துராதீங்க மேனி சூடுபட்டா வேலை செய்யுதுன்னு அர்த்தம் எல்லாம் சரியாக்கிறலாம்”.

  முப்பத்திரெண்டாவது நாள் பெரிய மாமா “வாங்க ஐயப்பன்” என தனி ஆளாய் எழுந்து நின்று வரவேற்றார்.

ஐயப்பனிடம் அதிகம் ஈர்க்கப்பட்டது செங்கராஜ் அண்ணாச்சியின் மகன் அருண்தான். எம்பிஏ கடைசி வருடம் படிக்கும் அவனுக்கு நாளாக நாளாக ஐயப்பன் ஒரு குருவாகவே தெரிந்தான். இரண்டு பேருமாக சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  அருண் எப்போதும் ஐயப்பன் கூடவே அலைந்து கொண்டிருந்தான்.

“எக்ஸ்போர்ட் இம்போர்ட் சமாச்சாரமெல்லாம் என்னாலப் பாக்க முடியாது.  நான் ஐயப்பன் அண்ணன் கிட்ட வர்மம் கத்துக்கப் போரேன்.  ரெண்டு பேரும் மூலிகை செண்டர் ஆரம்பிக்கப் போறோம்” என்று சாப்பிடும்போது அருண் அம்மாவிடம் சொன்ன மூன்றாவது நாள் ஐயப்பன் பண்ணையத்திலிருந்து கணக்கு முடித்து அனுப்பப்பட்டார்.  “இனி இந்தப் பக்கம் உம்மை நான் பார்க்கவே கூடாது” என்ற செங்கராஜ் நன்றிகலந்த மிரட்டலோடு ஐயப்பனை பஸ்ஸேற்றி விட்டார்.

செங்கராஜுக்கும் பணக்கார தகப்பன்களுக்கும்  எல்லாவற்றிக்கும் தலையாட்டும் பிள்ளையாய் பிறந்தால் தப்பிக்கலாம்.  மற்றபடி சுய அறிவுக்கு வேலை கொடுக்க விரும்பினால் கஷ்டம்தான்.  ஆனால் இதுபற்றி எந்த கவலையும் இல்லாமல் இது எதுமே தெரியாத நிலையில், சூரங்குடி போகும் பஸ்ஸில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து தன்னை மறந்து பின்னால் ஓடும் மரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஐயப்பன்.  அவரைப் பொறுத்தவரைக்கும் இந்த மடம் இன்லைன்னா சந்த மடம்,

@கதைசொல்லி, ஏப்ரல் – ஜூன் 2015

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *