Kanavugal Meipadattum Book By Ramadevi Rathinasami Bookreview By Kamalalayan நூல் அறிமுகம்: ரமாதேவி ரத்தினசாமியின் கனவுகள் மெய்ப்படட்டும் - கமலாலயன்

நூல் அறிமுகம்: ரமாதேவி ரத்தினசாமியின் கனவுகள் மெய்ப்படட்டும் – கமலாலயன்




“வரலாறு நெடுக, பெயரற்றவர் ஒரு பெண்ணே” [Throughout History, anonymous was a woman] என்ற மேற்கோள், இப்புத்தகத்தின் அணிந்துரையில் காணப்படுகிறது. எழுதியிருப்பவர், வரலாற்று ஆய்வாளரான நிவேதிதா லூயிஸ்.

“பெண்கள் எழுதவும் தொடங்கிவிட்டார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரியது. அப்படி என்ன எழுதி விட்டார்கள்? அவர்களைப் பற்றி அவர்களே எழுதுகிறார்கள். அதுதான் மகிழ்ச்சிக்குரியது.” வாழ்த்துரையில் தோழர் க. பாலபாரதி இவ்வாறு எழுதியிருக்கிறார். மேனாள் சட்டமன்ற உறுப்பினராகப் புகழ் பெற்ற பாலபாரதி, ஒரு சிறந்த கவிதாயினியும் கூட. அவர் இப்புத்தகம் எதைப் பற்றியது என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது கவனத்துக்குரியது: “பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற பல கட்டுரைகள், வடிவமைப்பில் அழகோடும், நேர்த்தியோடும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன… இந்நூலின் ஆசிரியர் ரமாதேவி, ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க அமைப்பில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் என்பதைக் கூடுதல் சிறப்பம்சமாகப் பார்க்கிறேன்…”

கனவுகள் அதிலும் குறிப்பாக நல்ல கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றே நாமனைவரும் விரும்புகிறோம். வெறும் விருப்பம் மட்டும் போதுமானதாயிருப்பதில்லை; அது நிறைவேற கடுமையான முயற்சிகள் தேவைப்படுகின்றன. பெண்கள் எப்படியெல்லாம் வரலாற்றில் தமது சாதாரண விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குக்கூட போராடியிருக்கிறார்கள் என்பதை இந்நூலின் கட்டுரைகள் அழுத்தமாக விவரிக்கின்றன.

“வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட பெயர்கள் பெண்களுடையவை. பெண்கள் நடந்து வந்த தடங்கள் கவனமாக நீக்கப்பட்டன. பெண்களுக்கென தனி வரலாறு பதிவு செய்யப்படவே இல்லை” – என்று ரமாதேவி ஓர் இடத்தில் எழுதிச் செல்லுகிறார். இதை மேற்கோள் காட்டுகிற நிவேதிதா லூயிஸ், பண்டைய எகிப்து நாகரிகத்தின் இரண்டாவது பெண் ஃபாரோவாக ஆட்சி செய்திருந்த ஹஷப்சுட்டின் வரலாற்றை எடுத்துக்காட்டாக கூறுகிறார். அவள் மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட அரசி. அவள் இறந்த சில வருடங்களிலேயே அவளுடைய சிலைகளுக்கு தாடியும் மீசையும் வரையப்பட்டு அவள்   அவனாக மாற்றப்பட்டாளாம்! 5000 ஆண்டுகள் கழித்து, அகஸ்டா மாரியட் என்ற ஆய்வாளர், சமூகம் மறந்த ஹஷப்சுட்டை, அவளுடைய வரலாற்றை மீட்டெடுத்து, உலகின் முன் கொண்டு வந்திருக்கிறார்!

ஆசிரியர் ரமாதேவி, தன் ‘மனத்திலிருந்து…’ ஒரு விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார். தன்னை வளர்த்தெடுத்து, தன்னம்பிக்கையூட்டிய ‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ எனும் பேரியக்கத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். “சிறு வட்டத்திற்குள் இருந்த என்னைக் , கைப்பற்றி அழைத்து வந்து, இப் பெரு உலகை, உலகெங்கும் வாழும் பெண்களை, அவர்களின் கடினமான வாழ்வியல் சூழலை அறிந்துகொள்ள” வைத்தது ஆசிரியர் இயக்கமே என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் ரமாதேவி.

நூலில் 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கனவுகள் மெய்ப்படட்டும், மனைவியின் கனவுகளைக் கேட்டுப் பாருங்கள், சமையலறை ஒரு சிறை, இது என்ன சமூக நீதி, No Means No, சுயம் தொலைக்கும் அம்மாக்கள், ஆணின் சர்வரோக நிவாரணி, ஓ… ரெண்டாங் கல்யாணமா?, உழைப்பாளர் சிலையில் பெண் எங்கே?, அவனால் முடியுமெனில், அவளால் ஏன் முடியாது?, வீடு என்னும் வன்முறைக் களம், பெண்ணுக்கு வேண்டும் பேச்சுரிமை, கற்பைப் பொதுவில் வைப்போம், வரதட்சணையும் சீர்வரிசையும், இலட்சுமண ரேகைகள், பெண் என்னும் பேராற்றல் – ஆகியவை.

கட்டுரைகளின் தலைப்புகளே அவற்றின் உள்ளடக்கத்தையும் பளிச்செனப் புலப்படுத்திவிடக்கூடியவை. தான் முன் வைக்கும் கருத்துகளை நிறுவுவதற்குரிய தரவுகளையும், எடுத்துக்காட்டுகளையும், மேற்கோள்களையும் தேவையான இடங்களில் தந்திருக்கிறார். புள்ளி விவரங்களும் இடம்பெற்று இவர் கூறும் கருத்துகளின் உண்மைத்தன்மைக்கு சான்றளிக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பின்வரும் விவரங்களைக் காணலாம்:

“இந்தியக் குழந்தைகளுள் 53% குழநதைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்கள். இங்கு நடைபெறும் திருமணங்களுள் 45% திருமணங்கள் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகழ்கின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 7.14 கோடி பெண்கள் தனித்து வாழ்வதாகத் தரவுகள் கூறுகின்றன.”

சங்கப் பாடல்கள், தொல்காப்பியம் உள்ளிட்ட மரபுவழி இலக்கியங்களையும் எடுத்துக்காட்டுகளாக மேற்கோள் இடுகிறார். சினிமா வசனங்களை, வடிவேலு நகைச்சுவைகளையும் பயன்படுத்துவதன் மூலம், வாசிக்கும் வாசகரின் மனதில் எளிமையாகப் பதியச் செய்கிறார்.

ஆசிரியராகவும், தொழிற்சங்க நிர்வாகியாகவும் ஏராளமான அனுபவங்கள் பெற்றிருக்கிறார் என்பதை கட்டுரைகள் விவரிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர்- இப்படியான பொறுப்புகளையும் வகிப்பதால் பல்வேறு நாடுகளிலும் ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப் போன்ற பன்னாட்டு அமைப்புகள் நடத்தும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். இவ்வாறான பன்முகத் தன்மைகளின் அடித்தளம் ஆழமானது. சிறுவயது முதலே, இவர் விரும்பியதைப் படிக்கவும், இயங்கவும் பெருவெளி அமைத்துத் தந்திருக்கிறார் இவருடைய அன்னையார் மாலதி. “என் அம்மாவெனும் சிநேகிதிக்கு இந்நூலை சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்கிறார் ரமாதேவி.

மகளை வளர்த்து ஆளாக்குகிற, ஒரு தாயின் பங்கு எப்படியிருக்க வேண்டும் என்பது இது ஒரு சான்றாகலாம்…!

‘எத்தனையெத்தனை இயற்கைப் பேரழிவுகள் புரட்டி எடுத்து அழிவுக்குள்ளாக்கிய போதும், பூமி தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. அதுபோலவே எத்தனை துயர்கள் வந்தாலும், குடும்பம் – சமூகம் – அரசியல் – பொருளாதாரம் – எல்லாமும் சூறாவளியாய்ச் சுழற்றி வீசினாலும்கூட, மன வலிமை என்ற ஒற்றை அஸ்திரம் தாங்கி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க வாழ்வைத் தன் வசப்படுத்தி விடுகிறார் பெண்’ – என்று நிறுவுகிறார் ஆசிரியர். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற கனவுகளை நனவாக்க அவள் நடத்தும் போராட்டத்தை, இக்கட்டுரைகள் பல்வேறு கோணங்களில் எடுத்துரைக்கின்றன.

“தினம் தினம் உன் கனவு நோக்கிப் பற. பறக்க முடியாவிட்டால் ஓடு. ஓட முடியாவிட்டால் நட. நடக்கவும் இயலாவிட்டால் ஊர்ந்தாகிலும் செல்” என்ற சீனப் பழமொழியைப் பொருத்தமாக மேற்கோள் காட்டியுள்ளார்.

“பெண்கள் ஒரு துறையில் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்பட்டால், வழக்கமான ‘பெண் வாழ்க்கை’யைத் தியாகம் செய்தால்தான் முடியும். ஆண் தன் இலக்கு நோக்கி முன்னேறும்போது, ஒட்டுமொத்த குடும்பமும் கை கொடுக்கிறது; ஆனால் பெண் உயரே பறக்க ஆசைப்பட்டால்…?” – இக்கேள்விக்கான விடையை ஆசிரியர் தந்திருக்கிறார்; வலி மிகுந்த வரிகளில் அதை வாசிக்கும்போதுதான் அவற்றின் ஆழத்தை உணர முடியும். சற்றே நேரம் ஒதுக்கி அவரவர் வீட்டில் மனைவியரின் கனவுகளை கேட்டுப் பாருங்கள் என்கிறார் ரமாதேவி.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) எழுதியவற்றுள் மிகவும் புகழ் பெற்ற கதை. ‘சமையலறை ஒரு சிறை’ என்ற கட்டுரையின் மூலம், மேற்கண்ட கதையை உயிர்ப்புடன் அறிமுகம் செய்கிறார்.

“விதவிதமாய்ச் சமைத்தாலும் தனக்கான உணவை அவள் ஒருபோதும் நிதானமாய் ருசித்ததில்லை ; அவளது கோபங்களும், புலம்பல்களும், கண்ணீர்களும் சமையலறைச் சுவர்கள் மட்டுமே அறிந்திருப்பவை. அவள் கனவுகள் கடுகுகளைப் போல வெடித்து, பின் கருகிப்போய் விடுகின்றன. அம்பையின் சிறுகதை நாயகியின் கையை முகர்ந்து பார்த்து மருமகள் வியக்கிறாள்: “இந்தக் கையில்தான் எத்தனை நூற்றாண்டு கால சமையல் மணம்?” – ஆம்; மூவாயிரம் ஆண்டுகளாய் அடுக்களையில் பூட்டி வைத்துள்ள கனவுகள் மட்டுமே அவளிடம்…” – அவர்கள் பூட்டி வைத்திருக்கும் கனவுகளைத் திறக்கவல்ல சாவி ஆண்களாகிய நம்மிடம்தான் என்கிறார் கட்டுரையாளர்.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழும்: “எனில், ஆணின் உதவியிருந்தால்தான் பெண்ணின் கனவுகள் நனவாகுமா?” – இதற்கு மற்றொரு கட்டுரையில் மறுமொழி கிடைக்கிறது: “அன்று தாய்வழிச் சமூகத்தில் காடுகளை அளந்த பாதங்கள் இன்று உலகையே அளக்க விரும்பும்போது, மலை போல் வரும் தடைகளை இடது கையால் தூக்கி எறிந்து, தன் கனவுகளில் கால் பதிக்க அவளால் முடியும். ஆனால் விட்டுக்கொடுத்தலே பெண்ணிற்கான அறம் என போதிக்கப்பட்டிருப்பதால், தன் கனவுகளை விட்டுக்கொடுத்து தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கட்டுண்டு கிடப்பவள் வேறு யாரோ அல்ல. உங்களின் அம்மா, மனைவி, சகோதரி, மகள் – யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்…”

‘No Means No’ – கட்டுரை இன்று பொதுவெளியில் அநேகமாக தினமும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் தொடர்பானது: பள்ளிக் குழந்தைகளாக ஆசிரியர்களை நம்பி பள்ளிகளுக்குப் போகிற பெண்கள் – சின்னஞ்சிறுமிகள் – சில ஆசிரியர்களாலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு அவல நிலைக்குள்ளாகி வரும் சூழல் பற்றிய சிந்தனைகள் நிரம்பியது. பெண்களைத் தாயாக, பூமியாக, தெய்வமாக கொண்டாடும் தேசம் இது என்று பீற்றிக்கொள்வதில் குறைச்சலில்லை. ஆனால், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது போதாதென்று, மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்யப்படவும் விதிக்கப்பட்டுள்ள அபலைக் குழந்தைகளுக்கு ஏது நீதி?

குழந்தைத் திருமணங்கள் குறித்த கட்டுரை நம் நெஞ்சங்களில் கூரிய ஈட்டியெனப் பாயும் பல அதிர்ச்சிகரமான உண்மைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறது: ‘பெங்களூரில், 15 வயதே நிரம்பிய தன் பேத்திக்கு திருமணம் செய்ய மகன் முயல்வதை எதிர்த்தார் என்பதற்காக, தந்தையென்றும் பாராமல் மகனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருக்கிறான்!; ‘உலக அளவில் மூன்று விநாடிகளுக்கொருமுறை ‘குழந்தைத் திருமணம்’ ஒன்று நடைபெறுகிறது. அவற்றில், மூன்றில் ஒரு திருமணம் நம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த விஷயத்தில், உலக நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது! இம்மாதிரியான பல செய்திகள், ஆதாரங்களுடன் அணிவகுத்துத் தொடர்கின்றன…

பாலியல் கொடுமைகள் நடக்கும் போதெல்லாம், “பெண்கள்தாம் கவனமாக இருக்க வேண்டும்; அகால நேரங்களில் இவர்கள் ஏன் தனியாகப் போனார்கள்? கண்களைக் கவரும்படியான கவர்ச்சிகரமான உடைகளுடன் அடக்கமில்லாமல் பொது இடங்களில் திரிந்தால், இப்படித்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்…” என்று பாதிக்கப்பட்ட பெண்களையே பொறுப்பாளிகளாக்கி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாகவே ஒட்டு மொத்த சமூகத்தின் அணுகுமுறையும் இருக்கிறது. அரசு, நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் – எல்லாத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டோரைக் குற்றம் சாட்டியே விரல்கள் நீள்கின்றன… இந்த அணுகுமுறை மாறினால் ஒழிய, ஆண்களின் நடத்தையும் மாறாது என்று சுட்டிக்காட்டுகிறார் ரமாதேவி: 

“ஆண் குழந்தைகளின் சிறகுகளைத் தடவிக்கொடுத்து, அழகு பார்த்து, ஊட்டமளித்து வளர்க்கும் அம்மாக்கள், பெண் குழந்தைகளுக்கு சிறகுகள் வளர அனுமதிப்பதேயில்லை. இந்நிலை மாற வேண்டும்…” “பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியவுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரம் அறிவுரைகள் கூறும் நாம், அதே வயதுடைய ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை சக மனுஷிகளாய் நேசிக்கக் கற்றுத் தருவோம். அவர்களது உணர்வுகளை நேர்படுத்துவோம். வீரம் மட்டுமே ஆணுக்கான அழகல்ல; ஒழுக்கமும் ஆண்மையே என்பதை உணர வைப்போம்” 

– சமூகத்தின் பொதுப்புத்தியும், அணுகுமுறையும் இந்த விஷயத்தில் அடியோடு மாறினால் ஒழிய பெண்களைப் பற்றிய ஆண்களின் கண்ணோட்டம் மாறாது. ரமாதேவியின் இந்த நூல் அளவில் சிறியது. ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் கூர்வாளாகத் திகழ்கிறது. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், ‘உயிருடன் இருப்பதே வாழ்க்கை’ என நாம் நிறைவடைந்து நின்று விடுகிறோம். மாறாக, “உயிர்ப்புடன் இருப்பதே வாழ்வின் அடையாளம்” என்று நிறுவுகிறது இந்த நூல்.

“ஒவ்வொரு கட்டுரையின் நிறைவிலும் ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ என்ற சொற்றொடருடன் முடிக்கிறார், ரமாதேவி. வாசித்து முடித்ததும் உங்கள் மனதில் ‘ஆமென்’ – அப்படியே ஆகட்டும் என்ற சொற்கள் தோன்றுமானால், அது இந்த நூலின், ஆசிரியரின் வெற்றி” என்று நிவேதிதா லூயில் அணிந்துரைத்துள்ளார். ‘ஆமென்!’

நூல்: கனவுகள் மெய்ப்படட்டும்
வெளியீடு: சுவடு பதிப்பகம்,
மு.ப. 2021 – 11.104;
ரூ.100/-
எண்: 142, வேளச்சேரி, முதன்மைச் சாலை, பூண்டி பஜார், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600 059.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *