நூல் அறிமுகம்: கனவுகள் ஓடும் நாளங்கள் கவிதைத் தொகுப்பு – கருப்பு அன்பரசன்கனவுகள் ஓடும் நாளங்கள் 
கவிதை தொகுப்பு
ஜானு இந்து
வம்சி வெளியீடு
கவிஞர் நர்மதா அவர்களின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டின் போது பார்த்த ஞாபகம்.. அறிமுகமில்லை.. அடுத்து, பெண் என்கிற அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடக்கின்ற பொழுதும் பேசிடவில்லை.. ஆனால் நர்மதா அவர்கள் அறிமுகம் செய்கிறார். இவர், கவிஞர் ஜானு இந்து. பெங்களூரில் இருந்து வருகிறார் என்று.
அதன்பிறகு பெண் அமைப்பு ஏற்பாடு செய்த பத்ததாயம் நிகழ்வையொட்டி அவர் ஒரு பதிவிடுகிறார்.. சிறப்பு என்கிறேன்..
நீங்கள் பகிருங்கள் தோழர் என்கிறார்..
இப்படியே முகநூல் வழியாக தொடங்கியது தோழர் ஜானு இந்துவுடனான நட்பு..
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரோஜா என்கிற வார்த்தை முகநூலில் ட்ரண்டானபோது எனக்குப் பிடித்த ரோஜா பாடல்களை முகநூலில் பதிகிறேன்..
கமண்டில் உங்களுக்கு ரோஜா அவ்வளவு பிடிக்குமா என்றார்.. இல்லை எனக்கு செம்பருத்தியைத்தான் பிடிக்கும் என்றேன்.
அதன்பிறகு ஒரு நாள் அன்பரசன் தோழர்
என் கவிதைத் தொகுப்பை பெங்களூரில் கொண்டுவருகிறேன்.. நீங்களும் அவசியம் வரனும் என்கிறார்.. நிச்சயம் வருகிறேன்.. அதற்கு ஏற்கனவே நான் ஒப்புக் கொண்ட வேலைகள் ஒத்துழைக்க மறுக்கிறது.. இன்னொரு முறை வருகிறேன்.. நீங்கள் மறக்காமல் எனக்கு உங்கள் கவிதை தொகுப்பை அனுப்பிடுங்கள் என்கிறேன்.. சரி கொண்டுவருகிறேன் என்றவர் மறக்காமல் கொண்டுவந்தார் பெண் அமைப்பின் பத்தாயம் நிகழ்விற்கான ஒலிப்பதிவு ஒன்றின் போது சாலிகிராமத்திலுள்ள  ஒலிப்பதிவுக் கூடமொன்றிற்கு.  அன்பு தோழர்  இதை படிச்சிட்டு எழுதுங்க என்கிறார். சரிங்க ஜானு என்று தொகுப்பை வாங்கிட, தொடர் வேலையின் காரணமாக புத்தகம் வாசிக்கும் மன நிலை முற்றாக முறிந்த நிலையில் வலுக்கட்டாயமா எனை வாசிப்பு முயற்சியில் திணிக்க முற்பட்டேன்..
அப்போது எதிரில் நின்றது ஜானுஇந்துவின்
“கனவுகள் ஓடும் நாளங்கள்”..
பெங்களூரில் இருந்து கொண்டு வந்து கொடுத்து வாசித்து எழுதச் சொன்னவர் அதன் பிறகு இன்னும் நேரில் சந்தித்திட வாய்ப்பு கிடைக்கவில்லை…காத்திருப்போம் தோழர் ஜானு ..எங்கேயாவது திடீரென சந்திப்போம்.கொஞ்சம் சிரித்து போவோம்.
கவிஞர் ஜானு இந்துவின் மரத்தில்தான்
எத்தனை.. எத்தனை.. விதவிதமான..
வண்ணங்களிலான மலர்கள்..
கிளைகளும்.. இலைகளுமல்லவா
கண்களுகுளுமையான வண்ணச் சாயங்களை பூசி விசிறிவிடுகிறது. காட்டுப் பூக்களின் வாசங்களை மொத்தமாக அள்ளித் தெளித்துச் செல்கிறது
கோடைக்கு இதமான புங்கமரம்..
வலுமிக்க காட்டுமரம்.. ஆயிரமாயிரம் விழுதுகள் இறங்கி நிற்கும் ஆலமரம்..
இடிவிழுந்து கருகி நிற்கும் ஏதோ ஒரு மரம்..
எல்லா மரமெங்கிலும் குட்டியான, சின்னதான, பெரிசான, ரொம்ப பெரிசான
எக்கசக்க சத்தங்களை அலறல்களை..
அபயங்களை.. சோகங்களை..ஏக்கங்களை..
நேசம்ததும்பும் அழைப்புகளை உட்கார்ந்து கொண்டும்…பறந்து கொண்டும்.. உட்கார
பறக்க முற்படும் வேளைகளில் பறவைகளின் குரல்களாக..
கவிஞரின் மனசிலிருக்கும் மரம் தொட்டுத் தழுவிbவரும் காற்றெல்லாம்
கவிஞரின் தன் உணர்வு சார்ந்த பிரியம், காதல், தாபம், வலி, துரோகம், உதாசீனம், நிகாகரிப்பு, அவமானம்.., எல்லாவற்றையும் தாண்டி நீ அப்படின்னா, நான் இப்படி.., போய்கிட்டே இரு என்கிற தில்.. அஞ்சாமை.. இருப்பின் மீது தீராத வேட்கை, காதல், நேசம், அன்பு தான் உணர்ந்த, அனுபவித்த, கேள்விப்பட்ட மனித மனங்கள் சார்ந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடாக
“கனவுகள் ஓடும் நாளங்கள்” கவிதைத் தொகுப்பு.


தொகுப்புகளின் கவிதைகளனைத்தும் மனித மனங்களின்அகவுணர்வு சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. அகவுணர்வின் அனைத்தும் நாம் எல்லோரும் அப்படியே எழுதி விடுகிறோமாயென்ன..?! ஜானு  எல்லாமும் எழுதி விலாசி இருக்கிறார். தன் உணர்வு சார்ந்தமட்டுமல்லாமல் மற்றவர்களின் உணர்ச்சிக்குள் புகுந்து அவராகவே மாறி வார்த்தைகளை வசியப்படுத்துவது எல்லோராலும் முடியாது. ஆனால் ஜானுவால் முடிந்திருக்கிறது.. அதற்கான இழப்பு, ஏற்படுத்திய வலி, எதிர்கொண்ட விதம் இவைகளே அவருக்கு அப்படியொரு கூடுமாற இழுத்து போயிருக்கும்.. எத்தனித்திருக்கும். பேரன்பு தோழர்.
எல்லாமும் வரவு செலவு கணக்காகிப் போகின்ற நிஜமான சூழலில் கிடக்கட்டும்
எப்போதாவது எங்கேயாவது சந்தித்துக் கொள்ளும்நேரமதில் “பறிமாறிக் கொள்ள மிச்சமிருக்கட்டும் சில புன்னகையேனும்”. ஆனால் நிஜ உலகில் எதார்த்த வாழ்க்கையில் இன்றைக்கு புன்னகை களும் கூட முகமூடி போட்டுக் கொண்டு அல்லவா வலம் வந்து கொண்டிருக்கிறது.. மனித மனங்கள் அதையும் கடந்து இருப்பை அறிவித்துக் கொண்டிருக்கிறது.. அப்படி ஒரு இருப்பு கிடந்தால் கூட அதனையும் தாண்டி போனது போகட்டும் கொஞ்சமாய் சிரித்துக் கொள்வோமே என்கிறபோது அந்த சிரிப்பில் தெரிகிறது மனித உயிர்கள்  மீதுள்ள நேசமும்.. வலியும். ஒவ்வொருவரும் தான் கடந்து வந்த.. பார்த்து வந்த.. சிரித்து வந்த  மனிதர்களுக்குள்தான் வகைவையாய் எப்படியெல்லாம் விரவிக் கிடக்கிறார்கள் இம் மண்ணெங்கும். இருக்கட்டுமே எது நடந்தாலென்ன கொஞ்சம் சிரித்துக் கொள்வோமே என்கிற ஜானுவின் விரிந்து பரந்த ஈரமுள்ள மனதெங்கும் பூத்துக் கிடக்கும் வாசம் கொண்ட எந்த நிலையிலும் வாடி போகாத கறை ஏதுமற்ற மெல்லிய மலர்களாகவே.
“குருதியின் ருசியறிந்த நாவுகள் மட்டும் நிறுத்துவதே இல்லை இதயத்தை உடைப்பதை மட்டும்”
என்கிறபோது, இத்தகைய மனித மனங்களும் இருக்கிறது. இவர்களின் வாடிக்கையே, வேடிக்கையே  இதுதான், இந்த நாவுகளுக்கு குருதி ருசி நாளும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.. இதனை உணர்ந்து நடந்துக்கோ.. இந்த மனங்களின் நோக்கமே வேறாக இருக்கலாம் என்று சந்தித்த மனங்களின் குரூர எண்ணத்தை அப்படியே வார்த்தைகளுக்குள் சொல்லி இருக்கிறார் கவிஞர்.
நான் அன்பின் விளைநிலம்,”எனதன்பு பாரபட்சமற்றது..கையேந்தி நிற்கும்
உங்களுக்கு  அக்கனத்தில்
என்னிடம் இருபதெதுவோ
ஆட்சேபனையின்றி அளித்திடுவேன்
மற்றபடி எனது கண்ணீர்த்
துளிகளுக்காய் காத்திருக்காதீர்கள்
தகுதியற்றவர்களுக்காய் ஒரு துளியும்
சிந்த எப்போதும் தயாரில்லை நான்”.
பணத்திற்கும்.. தேவைக்கும்
பேரன்பிற்குமான உறவினை பிரித்தெழுதிய தெனாவட்டான ஜானுவை இங்கு பார்க்கமுடிகிறது.. அப்படியே தொடரட்டும் ஜானு.
தாயின் தொப்புள் கொடி சுவாசம் அறுத்து வெளியேறிய கனம் தொடங்கி காத்துக் கொண்டே இருக்கிரோம்.. அல்லது எவரையாவது காக்க வைக்க மெனக்கெடுகிறோம்..
காத்திருப்பவர் நோக்கி பயணிக்கிறோம்..  ஓடுகிறோம்.. ஓடிவருகிறோம்.. எல்லாமும் எதற்கு.? காத்திருப்பதை எதிர் கொள்ளும் அந்தபொழுது மனித மனங்களின் அழுகை, சந்தோஷம், ஆத்திரம், வேகம்அத்தனையையும் அடைந்தாலும்..
ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் மீண்டும் ஒடுகிறோம்..காத்திருக்கிறோம்.. காக்கவைக்கிறோம்.. ஏதோ ஒன்றை அடைய..எதிர்கொள்ள.. என்னவாக இருக்குமது.? நான் அப்படி இல்லை இல்லை என்று எவர்சொன்னாலும் பொய்யகிடும்..தேடுதலும், காத்திருத்லும் முடிவற்றது மூச்சு முட்டும் வரை. மனதின் தேடுதலை கண்டறிவதில் தோல்விகள் தொடர்ந்தாலும் துரோகமே ஏமாற்றமே விரட்டிக் கொண்டே வந்தாலும், தேடுதலை மனித மனங்கள் தன் கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை தேடிக் கொண்டே இருக்கும்.. தேடுதலுக்கு முற்றே கிடையாது மூச்சிருக்கும் வரை.
Janu Indhu (@Januindhu) | Twitter
“நானும் காத்திருக்கிறேன் எதற்காகவென்ற கேள்விக்குத்தான் எப்போதும் எந்தவொரு பதிலுமில்லை என்னிடம்..”உங்களிடமட்டுமில்லை ஜானு.. எவரிடமும். தெரியாமல் காத்திருப்பதும் அவரவர் மனநிலை சார்ந்து அது வலியுமாகலாம்.. மகிழ்வுமாகலாம்.. காத்திருப்போம்.
எத்தனை துரோகம்.. எவ்வளவு வலி.. எவ்வளவு உதாசீனம்.. எத்தனை அவமானம்.. குமட்டலெடுக்கும் வார்த்தைப் பிரயோகம், ஆனாலும் கூட “அன்பை யாசிக்கும் இதயமொன்று இருக்கத்தான் செய்கிறது”..
அன்பு வலியது..
அன்பு உறுதியானது..
அன்பு வழுவழுப்பானது
அன்பு மெல்லிய இழையொத்தது..
அன்பு கர்வமிக்கது
எத்தனை துரோகங்கள் குத்தீட்டியாக தொடர்ந்தாலும்
அன்பு தன்னுடைய சுவாசத்தை நிறுத்திக் கொண்டதே கிடையாது.
” நீ தினம் தினம் தீட்டும் உந்தன் கூரான நாவைவிட வலிமையானதொரு ஊசிமுனை எங்குவேண்டுமானாலும் இருக்கலாம்”..
இப்படி ஜானுவின் கவிதை தொகுப்பு முழுதும் அன்பின் நிமித்தமாகவே அனைத்தும். அன்பின் வழியாக ஒவ்வொருவரின் ஆழ்மனது நுழைந்து  ஒவ்வொரு மனிதரும் பேசத் தயங்கியதை.. பேச நினைத்ததை.. பேச மறுத்ததை பேசி  இருக்கிறார்..ஜானுவாகவும் பேசி இருக்கிறார்.. தொகுப்பை வாசிக்கும் போது உங்களை பார்க்கலாம்.. உங்களவர்களை பார்க்கலாம்.. எதிரில் இருப்பவர்கள் வந்து போவார்கள்.. கடந்து போனவர்கள் மீண்டுவருவார்கள்.. கை கோர்த்தவர்கள் வருவார்கள்.. பேசிக்கொண்டே கைகளுக்குள் கூர் தீட்டிய கத்தி வைத்திருந்தவர்கள் வருவார்கள்..
வாசியுங்கள்.. உங்கள் பிரியமானவர்களோடு போய் பேசி வாருங்கள். அழுங்கள்.. முத்தமிடுங்கள்.. அப்படியே மூர்ச்சையாகுங்கள்.
அதிருக்கட்டும் ஜானு.. உங்கள் கவிதையை நான் வாசிக்கிறேன்.. என்னால் உள்புக முடிகிறது.. அனுபவிக்க முடிகிறது.. மகிழ்ச்சியாக.. அழுகையாக.. கோவமாக..எல்லோருக்குமானதை எழுதிவிட்டு புரிந்து கொள்பவர்கள் மட்டும் எனக்கு வாசகனாக இருக்கட்டும் என்ற இருத்தலுக்குள் நுழைந்திட்டீர்களோ நீங்கள்.? எல்லோருக்கும் போய் உமது படைப்பு சென்றடையனும்..எளிமையாக்கி தர அடுத்தத்  தொகுப்பில் கொஞ்சம் யோசிக்கலாம் என்பது எனதின் வேண்டுகோள்..


அதோடு அன்பும், காதலும், துரோகமும் உதாசீனமும், நிராகரிப்பும், அவமானமும் நபர்கள் சார்ந்தது மட்டுமல்லவே.. அகவுணர்வு சார்ந்தது மட்டுமல்லவே புறச்சூழலும் உள்ளடக்கியது என்பதை உங்கள் அக உணர்வு பார்க்கத்தவறியதோ என்கிற கேள்வியும் எனக்குள்.
இன்னும் இருத்தலின் மீது வேட்கை கொண்டவர்கள் நேர்கொள்ளும் சமூக சூழல் குறித்தும் உங்கள் வார்த்தகளுக்குள் கொண்டுவாருங்கள்.. உங்கள் பறவையின் சிறகுகள் அதை நோக்கியும் பயணிக்கட்டுமே..
அன்பு வாழ்த்துக்கள் தோழர் ஜானு.
கருப்பு அன்பரசன்