Santhar Kanchana Seethai Novelette By Krishnamoorthy in tamil K. Nallathambi and Novelreview By Pavannan நூல் அறிமுகம்: கிருஷ்ணமூர்த்திசந்தரின் காஞ்சன சீதை குறுநாவல்

நூல் அறிமுகம்: கிருஷ்ணமூர்த்தி சந்தரின் காஞ்சன சீதை குறுநாவல்

கேள்வியும் விடையும்
பாவண்ணன்

சி.எஸ்.ஸ்ரீகண்டன் நாயர் என்னும் மலையாள எழுத்தாளர் ராமாயணக்கதையை மூன்று நாடகங்களாக எழுதினார். அந்த வரிசையில் மூன்றாவது நாடகத்தின் பெயர் காஞ்சன சீதை. அது உத்தரராமாயணக்கதையை ஆதாரமாகக் கொண்ட பகுதி. அயோத்தியின் ஆட்சிக்கட்டிலில் ஏறிய ராமன் தன் ஆட்சித்திறமையால் மக்களின் நற்பெயரைச் சம்பாதித்து சக்கரவர்த்தியாக உயர்கிறான். அப்போது வசிட்ட முனிவர் ராமனிடம் அஸ்வமேதயாகத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை சொல்கிறார். அது மனைவியோடு இணைந்து செய்யவேண்டிய யாகம் என்பதால், காட்டுக்கு சீதையை அனுப்பிவிட்டு தனிமையில் இருக்கும் நிலையில் யாகத்தை நடத்த வழியில்லை என்று ராமன் தயங்குகிறான். 

அமர்ந்த கோலத்தில் சீதையைப்போலவே தங்கத்தால் ஆன ஒரு சிற்பத்தைச் செய்து ராமனுக்கு அருகில் வைத்து, அதையே சீதையின் இருப்பாக நினைத்துக்கொள்ளலாம் என திட்டம் வகுத்துக் கொடுக்கிறார் முனிவர். அதுவே காஞ்சன சீதை. காஞ்சனம் என்றால் தங்கம். முனிவரின் ஆலோசனைக்கு இணங்கி காஞ்சன சீதையின் துணையோடு யாகத்தை நடத்தி முடிக்கிறான் ராமன். பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுபதுகளில் கலைப்பட வேட்கை ஓங்கிய காலகட்டத்தில் இயக்குநர் அரவிந்தன் அந்த நாடகத்தை அழகான திரைப்படமாக எடுத்து வெளியிட்டார்.

காஞ்சன சீதைக்கும் உண்மையான சீதைக்கும் உள்ள உறவு மிகவும் நுட்பமானது. வனவாசத்தில் ராமனின் குடிலிலிருந்து இராவணனால் கவர்ந்துசெல்லப்பட்டு அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட தருணத்திலிருந்தே அவள் தன்னைத்தானே சிலையாக மாற்றிக்கொண்டவள். தன் கற்பை நிரூபிக்க மன்னனின் கட்டளையை ஏற்று அக்கினிப்பிரவேசம் செய்தபோது மறுபடியும் சிலையானவள். கருவுற்றிருந்த நாளில் நாட்டிலிருந்து வெளியேற்றி காட்டிற்கு அனுப்பியபோது மீண்டும் சிலையானவள். வாழும் காலத்தில் சீதை என்னும் பெண்ணாக வாழ்ந்ததைவிட அவள் காஞ்சனசீதையாக வாழ்ந்த பொழுதுகளே அதிகம். அதிகாரச்சூழல் தன்னைப் பலிபீடத்தில் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொண்டபோதும், சிறிய அளவில் கூட எதிர்ப்புணர்வைக் காட்டாமல் அந்த வாழ்க்கையை சீதை மெளனமாக ஏற்றுக்கொள்கிறாள். தன்னைத்தானே தியாகம் செய்கிறாள். 

காஞ்சன சீதை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான் வாசகசாலையின் வெளியீடாக வந்திருக்கும் கன்னடக்குறுநாவலான காஞ்சன சீதையைப் புரிந்துகொள்ள முடியும் (தமிழாக்கம் : கே.நல்லதம்பி) என்பதால் இந்த நீண்ட விளக்கத்தைக் கொடுக்கவேண்டியதாயிற்று.

கன்னட எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி சந்தரின் காஞ்சன சீதை நாவலுக்கும் ராமாயணத்துக்கும் நேரிடையாக எவ்விதமான தொடர்புமில்லை. அது முழுக்கமுழுக்க இன்றைய காலகட்டத்தில் வாழும் ஒரு பெண்ணின் கதை. சிறுமியாக அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்களோடு ஆடித் திரிகிறாள். பள்ளிக்கூடம் செல்கிறாள். ஆற்றில் இறங்கிக் குளிக்கிறாள். பின்வீட்டு ராயர் சிறுவனோடு நட்பாக இருக்கிறாள். அவனோடு சண்டை போடுகிறாள். விவாதம் செய்கிறாள். அவனிடம் பிரியமாகவும் நடந்துகொள்கிறாள். கடைத்தெருவுக்குச் செல்கிறாள். குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிடுகிறாள். சந்தகவாடி குளத்தில் நீந்திக் களிக்கிற யானைக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகச் செல்லும் ராயர் குடும்பத்தோடு அவளும் செல்கிறாள். பிளிறலோடு குளத்தைவிட்டு தெருவில் ஓடி வரும் யானையிடமிருந்து ராயர் மகனுடைய உதவியோடு தப்பிக்கிறாள்.

தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே ராயர் குடும்பம் மைசூருக்குப் போய்விடுகிறது. அவன் பட்டப்படிப்பை முடித்த கையோடு நியூஜெர்சிக்குப் போய்விடுகிறான். அவனுடைய திருமணவாழ்க்கையும் அந்த ஊரிலேயே அமைந்துவிடுகிறது. அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கிறார்கள். வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பிறகு அவர்களும் திருமணம் செய்துகொண்டு வேறு இடம் தேடிச் சென்றுவிடுகிறார்கள். இவ்வளவு காலம் கூடவே இருந்த மனைவி இறந்துவிடுகிறாள்.

எழுபத்திரண்டு வயதில் தனிமை அவரை வாட்டுகிறது. திடீரென தன்னுடன் தொடக்கப்பள்ளியில் படித்த சிறுமி காஞ்சனாவின் நினைவு வருகிறது. “நான் நிச்சயமா திரும்பி வருவேன்’ என்று அந்தச் சின்ன வயதில் அவளுக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வருகிறது. அது அவருக்குள் தீராத ஒரு குற்ற உணர்ச்சியை உருவாக்குகிறது. ஒருமுறை அவளைப் பார்த்தால் நல்லது என்று மனத்துக்குத் தோன்றியதும், உடனே பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்துகொண்டு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு வந்து, பிறகு அங்கிருந்து நஞ்சன்கூட்டுக்கு வந்து சேர்கிறார். 

அவளைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவலைத் தவிர வேறொன்றும் அவர் நெஞ்சில் இல்லை. அவருடைய எண்ணத்தின் தீவிரம் அவருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்க வழியமைத்துக் கொடுக்கிறது. இரண்டுமூன்று நாள் அலைச்சலுக்குப் பிறகு அவர்கள் வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்துவிடுகிறார். காஞ்சனாவைப்பற்றிய தகவல் கூட கிடைத்துவிடுகிறது. ஆனால் அவளை எங்கும் சந்திக்க முடியவில்லை. அதுதான் பெரிய துயரம். எல்லோருக்கும் அவளைப்பற்றிய தகவல் தெரிந்திருக்கிறதே தவிர, அவளை நேரிடையாக ஒருவரும் பார்த்ததில்லை என்று சொல்கிறார்கள்.

அவை எதுவும் அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியதாக இல்லை. துண்டுதுண்டாக கிடைத்த தகவல்களை அவர் மனம் ஒருங்கிணைத்துக்கொள்கிறது. அவள் திருமணம் செய்துகொண்டு ஈரோட்டில் வாழ்ந்தாள். கணவர் இளம்வயதிலேயே மறைந்துவிட்டதால் அங்கே தொடர்ந்து வசிக்கப் பிடிக்காமல் சாமராஜநகருக்கே வந்துவிட்டாள். பெற்றோர்களும் மறைந்துவிட்டனர். பிள்ளைகள் வளர்ந்து வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள். ஏராளமாக சொத்து இருக்கிறது. ஒருவித தனிமை வாழ்க்கை வாழ்ந்தாள். யாரும் அவளைப் பார்த்ததில்லை. ஆனால் அவள்தான் சந்தகவாடியிலிருக்கும் கோவிலைப் புதுப்பித்துக் கட்டும் செலவை ஏற்றுக்கொண்டாள். பிளிகிரிரங்கன மலையிலிருக்கும் கோவிலைச் சீர்ப்படுத்தியவளும் அவளே. ஏராளமான தர்மகாரியங்களைச் செய்தாள். ஆனாலும் எங்கும் தன் பெயர் வெளிப்பட்டுவிடாதபடி பார்த்துக்கொண்டாள்.  பிளிகிரிரங்கன மலைவாழ் சிறுவர்களின் படிப்புக்கும் சீருடைக்கும் தேவையான ஏற்பாடுகளை அவள் செய்தாள். ஓய்வு நேரத்தில் அவர்களுக்குப் பாடமும் சொல்லிக்கொடுத்தாள். சுற்றுப்புறத்தூய்மை போன்ற நல்ல பழக்கவழக்கங்களையும் கற்பித்தாள். தொடர்ந்து அங்கேயே தங்கி எல்லாச் செய்திகளையும் அவர் தெரிந்துகொண்டார். ஒருவரும் தன்னை நெருங்கிவிடாதபடி ஒரு தனிமையை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காஞ்சனாவின் போக்கை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அவளைச் சந்திப்பதற்காக அவர் பிளிரங்கன மலைக்குச் செல்கிறார். காஞ்சனா அங்கே இல்லை. அந்த மலைப்பகுதியில் எங்கோ ஓரிடத்தில் தனிமையில் தியானத்தில் மூழ்கியிருப்பாள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் தேடிக்கொண்டு அங்கே செல்கிறார். ஆனால் அங்கும் காஞ்சனாவைக் காணமுடியவில்லை. கோவில் பூசாரி மலை சார்ந்த மற்றொரு பகுதிக்குச் சென்று பார்க்கும்படி சொல்கிறார். உடனே அங்கே செல்கிறார். அங்கும் அவள் இல்லை. அந்த இடத்துக்கு வரும் ஒரு சிறுவனிடமிருந்து இன்னும் கூடுதலாகச் சில தகவல்கள் கிடைக்கின்றன. அந்தச் சிறுவனே அவருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறான். 

ஒரு செண்பக மரத்தடியில் ஒரு குடிசைக்குள் ஒரு தீபத்தின் முன்னால் அவள் முதுகைக் காட்டி அமர்ந்திருக்கும் தோற்றம் தெரிகிறது. அந்த நிழல் சுவரில் படர்ந்திருந்தது. அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்துவைக்க அவருக்கு மனம் வரவில்லை. தயங்கி நின்றுவிடுகிறார். சட்டென தன் பதற்றமெல்லாம் மறைந்து மனத்தில் அமைதி நிறைவதை அவர் உணர்கிறார். ஒரே ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பி மலையிலிருந்து இறங்கத் தொடங்குகிறார். 

எழுபத்திரண்டு வயதில் நியுஜெர்சியிலிருந்து புறப்பட்டு பிளிரங்கன மலைக்கு, தன் மனத்திலிருக்கும் காஞ்சனாவைப் பார்ப்பதற்காக வந்த ராயரின் அனுபவக்குறிப்புகளைப்போல இந்தக் கதையை வடிவமைத்திருக்கிறார் சந்தர். உண்மையில் அக்குறிப்புகள் வழியாக காஞ்சனாவின் சித்திரத்தை அவர் ஒரு கோட்டோவியமாக நமக்குத் தீட்டிக் காட்டவே முயற்சி செய்கிறார். அந்தக் கோட்டோவியத்திலும் முழு உருவம் இல்லை. உருவத்தின் சாயலை மட்டுமே ஊகிக்க வைக்கிறார். எஞ்சிய கோடுகளை நம்மையே தீட்டி காஞ்சனாவின் ஓவியத்தை நிரப்பிக்கொள்ளத் தூண்டுகிறார்.

ராமாயணத்தின் சீதையைப்போலவே எதார்த்த உலகைச் சேர்ந்த காஞ்சனாவும் சூழலின் நெருக்கடிகளுக்கு இரையாகிவிட்டவள். எதையும் எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டவள். வாழ்க்கையை இழந்தவள். இன்பத்தை இழந்தவள். அந்தத் தியானத்தின் வழியாக அவள் எதை அடைய நினைக்கிறாள் என்பது சுவாரசியமான கேள்வி. இக்கதையின் முடிவில் எஞ்சியிருக்கும் இக்கேள்விக்கு சந்தர் விடையெதையும் அளிக்கவில்லை. வாசகராக நம்மையே விடையைத் தேடிக் கண்டடையும் பொறுப்பையும் உரிமையையும் கொடுத்துவிட்டு கதையை முடித்துவிடுகிறார்.

மகாபிரஸ்தானம் என்பது காவியங்களில் இடம்பெறும் சொல். அது ஒருவர் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு வழி என்பது வழிவழியாக வந்த நம்பிக்கை. தான் நம்பும் ஒன்றுக்காக தன்னைத்தானே தியாகம் செய்வது அதன் வழி. அதன் மூலமாக தன்னையே கடந்து செல்லும் ஆற்றல் ஒருவருக்குக் கிடைக்கிறது. ஒரு துளி கறை கூட எஞ்சாமல் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்கிறது. உட்கார்ந்த கிளையிலிருந்து ஒற்றைக்கணத்தில் சட்டென விண்ணிலேகும் பறவையென விடுதலை பெற்று பறந்துபோய்விடுகிறது. அது புராண காலத்துச் சீதை பின்பற்றிய வழி.

காஞ்சனாவின் தியானக்கோலம் ஒருகணம் ராயரைப் பதற்றம் கொள்ள வைத்தாலும் மறுகணமே அந்தப் பரபரப்பெல்லாம் அடங்கிவிடுகிறது. அவளுடைய மகாபிரஸ்தானத்தை அவரால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்புள்ளி வரைக்கும் ஒரு பெண் வரவேண்டுமென்றால், எவ்வளவு இழந்திருக்க வேண்டும், எவ்வளவு துயரங்களில் தோய்ந்திருக்கவேண்டும் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்கலாம். விண்ணிலேகத் தயாராக இருக்கும் பறவையின் கவனத்தை ஈர்த்து, ஒன்றுக்கும் உதவாத பழைய கதையையெல்லாம் சொல்லி பின்னோக்கி இழுக்க அவருக்கு மனம் வராமல் போயிருக்கலாம். தனக்குக் கைகூடாத ஒன்று அவளுக்காவது கைகூடி வரட்டும் என்று அமைதிகாத்துத் திரும்பியிருக்கலாம்.

இது, சந்தரின் கதை எழுப்பும் கேள்விக்கு எனக்குத் தோன்றிய விடை. இந்தப் படைப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் இப்படி ஒரு விடை பொருத்தமாகத் தோன்றலாம். சந்தர் விட்டு சென்றிருக்கும் மெளனம் என்னும் முற்றத்தில் எல்லா விடைகளுக்கும் இடமிருக்கிறது.

நூல்: காஞ்சன சீதை – குறுநாவல்
கன்னட மூலம் : கிருஷ்ணமூர்த்தி சந்தர்
தமிழில்: கே.நல்லதம்பி
வாசகசாலை பதிப்பகம்
விலை: ரூ.120
சென்னை -73

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *