தொடர் 2: தான் – கந்தர்வன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

வாஞ்சைமிகு மனிதர்களை தமிழ்க்கதைப் பரப்புக்குள் கை பிடித்து அழைத்து வந்த படைப்பு முன்னோடி கந்தர்வனின் கதைகளில் சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் பலமாய் அமைந்துள்ளது. நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்.

கிருஷ்ணனைப் பார்த்தால் மூவாயிரம் சம்பளம் வாங்குகிறான் என்று சொல்ல முடியாது.  இரண்டு பேண்ட் ஜிப்பாக்களைத்தான் மாற்றி மாற்றி துவைத்து போட்டுக் கொள்கிறான்.  கதர்க்கடையில் வாங்கும் கட்டை விரல் மட்டும் நுழையும் செருப்புகள்.

வீட்டில் சரியாக இரண்டாயிரத்தைக் கொடுத்து விடுவான்.  கல்யாணம் செய்து கொள்வதில்லை என்று வைராக்கியம்.  வால்ட்டேரிலிருந்து ஜேகே வரை தலை நிறையத் தத்துவங்கள்.  வீடு நிறையப் புத்தகங்கள்.  அவனிடம் ஒரே ஆடம்பரம் இந்தச் சின்ன மொபெட்தான்.

நாலு மைலுக்கப்பால் அரசப்பட்டி கிராமத்திற்கு வாரம் மூன்று நாள் போய் முதியோர் கல்வி எடுப்பான்.  அரிக்கேன் லைட்டிலிருந்து புத்தகம் சிலேட்டெல்லாம் இவன் செலவுதான். நாலைந்து அறிவாளிகள் பத்திரிக்கைகளும் புதிய புதிய கனமான புத்தகங்களும் வாங்கி இலவசமாய் கொண்டு போடுவான்.  இரண்டு ஏழைப் பையன்களை தேடிக் கண்ட பிடித்து ஹாஸ்டல் செலவை ஏற்றுக் கொண்டான்.

இதில் நூறு பங்கு பொது லட்சியத்தோடு இவன் தேடிப்பார்த்தும் ஒருவனும் அகப்படவில்லை.  அவனவனுக்கும் உள்ள லட்சியம் அவனவனுடைய தலைக்கு கிரீடம் வர வேண்டுமென்பதுதான்.  வார்த்தைகள் அர்த்தம் மாறி அலைகின்றன.  ஆசைகளை லட்சியம் என்கிறார்கள்.

கணேஷ் கண்ணெதிரே ஒரு விபத்து.  உறவினரைப் பார்க்க இளம் மனைவியுடன் வந்தவன் மாடியிலிருந்து தவறி தலை குப்புற விழுந்து விட்டான்.  பெருத்த அடியேதும் இல்லை.  இருந்தாலும் மருத்துவர் தஞ்சாவூர் சென்ற பெரிய ஆஸ்பத்திரியில் காண்பிக்க வேண்டுமென்பதால் தம்பதிகளையும் அப்பெண்ணிண் தம்பியையும் அழைத்துக் கொண்டு டாக்சியொன்றில் தஞ்சாவூர் செல்கிறான்.

”விழுந்தவன் யார் அவன் நல்லவனா கெட்டவனா? அவன் முழுக் குடும்ப வரலாறு என்ன ஒன்றுந் தெரியாது என்றாலும் நாயாய் அலைகிறேன்.  நான் பார்த்த ஒருவனுக்குக்கூட இந்த குணமில்லை. இதோ இந்த டிரைவர் உள்பட . இவன் ஆஸ்பத்திரி வாசலுக்குப் போனதும் ஊர் முழுக்கச் சுற்றியதற்கு பணம் கேட்பான்.  அதுவும் கூடவே கேட்பான்” என்று நினைத்துக் கொள்கிறான்.

ரத்தம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன பிறகு இவன் அவள்  அவளின் தம்பி ஆகியோர் கொடுக்கின்றனர்.

ஸ்ட்ரெச்சர் தூக்குகிறவன், வார்டு கூட்டுகிறவன், ஊசி போட்டவள், நின்றவன், போனவன், வந்தவனெல்லாம் காசு கேட்டார்கள்.  ஒரு வழியாக அவனை ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனார்கள்.  இந்த ஆஸ்பத்திரி வாசனையைத் தாண்டிக் காற்றாட கொஞ்சம் போய் நடக்க வேண்டும் போலிருந்தது.

“சாத்துக்குடி ஜூஸ்” என்றான்

“இருங்க, டேய் பையா ஓடிப் போய் ஒரு டஜன் சாத்துக்குடி வாங்கிட்டு வாடா” ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பையனை அனுப்பினார்.

குளிரக் குளிரக் குடித்தான்.  லேசாய்த் தெம்பு வருவது போலிருந்தது.  தன்னைப் பற்றிய பெருமிதத்தில் பறக்க வேண்டும் போலிருந்தது.  முழங்கையைப் பிரித்து ஊசி குத்திய இடத்தை தன்னையறியாமல் பார்த்தான்.  பையைத் திறந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்டினான்.  இவன் முழங்கையை விரித்துப் பார்த்ததைக் கூர்மையாய் நோக்கி விட்டுக் கடைக்காரர் கேட்டார்.

“ரத்தங் குடுத்தீங்களா?”

“ஆமா”

“ரத்தங் கொடுத்தவங்க கிட்ட நான் ஜூஸுக்கு காசு வாங்கறதில்ல,  வச்சுக்கோங்க”