இதுவரை மூன்று பாதிப்புகளை இந்நூல் கண்டுள்ளது. நூலில் 31கதைகள் கொண்டது.
நூலாசிரியர் பற்றி எழுத்தாளர் வசுமித்ர சொன்னதை அப்படியே தருகிறேன்.
“எந்தக்காரியத்திலும் ஆவேசமில்லை, தருவதற்கு எதுவும் பிரச்னையில்லை, நிம்மதியின் மௌனத்தை வேடிக்கைபார்க்க எந்த தொந்தரவுமில்லை, எழுத்தாளன் என்பதற்கு இவரிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க வேறென்ன தேவைப்படுகிறது.
எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுவேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துக்கள் இவருடையது. கதைகளை வாசித்து முடித்ததும் வாசகமனதின் மெல்லிய புன்னகையின் மேல் காட்டப்படுகிறது இவரது பிரியம் “
இத்தொகுப்பில் முப்பத்தியொரு கதைகள் உள்ளன. ஏறக்குறைய அனைத்தும் வெகுஜன பத்திரிகையில் வெளிவந்தவை.
கனகதுர்கா என்றகதையில் கதைசொல்லியாக வரும் ஒரு மெடிக்கல் ரெப். என்னதான் ஆலன்சாலி, லூயி பிலிப் போட்டு நாகரிகத்தின் உச்சத்தைத் தூக்கிப்பிடிக்க முயற்சித்தாலும் மனதில் எளிய வெள்ளேந்தியான மனதுடையவனாக உள்ளான். அதுதான் அவனின் பிரச்னையே. மனநல மருத்துவமனையில் சந்திக்க நேரிடும் கனகதுர்காவின் கண்கள் பொய்சொல்லது என்று எண்ணி அவளின் வேண்டுகோளை ஏற்று ஒரு துப்பறியும் நிபுணனாக மாறி, எந்த துப்பும் கிடைக்காமல், மீண்டும் ஒருமுறை மனநல மருத்துவமனையில் சந்திக்க இப்போது அவள் ராஜலட்சுமியாக மாறி மீண்டும் அதே வேண்டுகோளை வைக்கிறாள். அவள் சொன்ன விலாசத்தில் அவளைப்பற்றி தெரிந்து கொள்ள நாமும் கதைசொல்லியுடன் பயணிக்கிறோம். அந்தக்கண்களைப் பார்த்தால் ஒரு பைத்தியத்தின் கண்கள் போல இல்லை.

உதயாவிற்கு திலகா சொன்ன கதை என்ற கதையில் திலகா தாய், உதயா மகள். அப்போதுதான் காதல் வயப்பட்ட உதயவிடம் திலகா தன்னுடைய காதல் கதைகளைக் கூறுகிறாள். தனக்கு நேர்ந்த மூன்று காதல்களையும் கூறுகிறாள், பள்ளிப்பருவத்தில் மாமன் மகனால் தான் காதலிக்கப்பட்டதையும், கல்லூரி வந்த பின் வந்த இரண்டு காதல்களையும் கூறுகிறாள், இறுக்கமாக இருந்த மகள் இயல்பு நிலைக்கு வந்து புரிதல் உடையவளாக மாறுகிறாள். இக்கதையில், “காதலை சினிமாவோடும், கதையோடும், பாடலொடும் சம்பந்தப்படுத்திக் கொள்கிறவர்கள் நாம். அனுபவங்களிலும் வாழ்விலும் எதிர்கொள்ள சிரமப்படுகிற சமூகம் நம்முடையது. காலையில் எழுந்தால், செய்தித்தாள்கள், டிவி, சினிமா ஆகியவையெல்லாம் காதலைக் கால்பந்துப்போலாக்கி எட்டு திசைகளிலும் மேல்கீழாகவும் நம்மை நோக்கி உதைக்கின்றன “
கண்ணாடியைக் கண்டடைதல் என்ற கதை வரும் ஆனந்தன்கள் நிஜ வாழ்க்கையில் நிறைய பார்த்திருப்போம். எப்போதும் தாழ்வுமனப்பான்மையுடன் உலகத்தில் எது நடந்தாலும் அது நம்மை முன்னிட்டே நடக்கிறது என்று எண்ணி தம்மை ஒரு பரிதாபப்பட்ட ஜென்மமாக நினைத்துக்கொண்டு, சதா சந்தோசத்தை தொலைப்பவர்கள். அவர்களின் பிரதிநிதிதான் ஆனந்தன். அந்த ஆனந்தனுக்கு திருமணம் நடக்கிறது, அவனுடைய மனைவியும் அவனைப்போன்ற ராசியுடையவளாக வந்து சேருவாள். என்ன கொடுமை பாருங்க, முழுதாக அனுபவிக்க இக்கதையைப் படித்தால் மட்டுமே முடியும்.
முதல்விபத்து என்ற சிறுகதை. சின்னையன் பாத்திரம் எல்லா கிராமங்களிலும் உண்டு. வீட்டிலுள்ள பெண்களிடம் தன்னை ஒரு மேதாவிபோல கட்டிக்கொள்ளும் ஒரு நபர் சின்னையன். அனைத்து துறை வல்லுனராக இருப்பான். அவன் சொல்லுவது மாதிரி வைத்தியம் பண்ணினால், அது சரியாகுதோ இல்லையோ தன் வாய்சவடாலால் பெண்களை எளிதில் நம்பவைத்துவிடுவான். இறுதியில் அவனின் ஆடு காரணமாகவே திண்ணையில் கால்முறிவுடன் கிடக்கிறான். எதற்கும் ஒரு காரணம் கூறி எளிதில் நியாயப்படுத்திவிடும் சின்னையன்கள் எப்போதும் உண்டு.

மகன் என்ற கதையில் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களின் ஞாபகசக்தி, இப்போதுள்ள தலைமுறையினரிடம் இல்லை என்பதை அருமையாகச் சொல்கிறார். இப்போது உள்ள தலைமுறையினருக்கு ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனதற்கானக் காரணம் அலைபேசிகளே. தனக்கு வேண்டிய அனைத்து தகவல்களும் அந்த செல் போனில் பதிந்துவைத்து கொள்கின்றனர், அந்த செல் போன் தொலையும்போது இவர்களின் நிலைமை பரிதாபமான நிலைக்குச் சென்றுவிடுவதையும் இக்கதை கூறுகிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்களின் நினைவுத்திறன் ஆச்சர்யப்படும்படி இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்ததை, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைக்கூட நினைவு படுத்திக்கூறியதற்கு நானே சாட்சியாக உள்ளேன். மிகச்சாதாரணமாக நந்தன வருஷம் புரட்டாசி மாசம் ஒன்பதாம் தேதி நீ பிறந்த, அன்றுதான் இந்த கட்டிடம் கட்ட அடிக்கல் நாடினார்கள் என்று சொல்லி என்னை ஆச்சர்யப்படுத்தியவர்களும் உண்டு. அதை நினைக்கும்போது அறிவியல் வளர்ச்சி சிலவற்றை எளிதாக்கியுள்ளது தெளிவாகிறது.
மின்னு என்ற கதையில் போக்குவரத்து தடையற்பட்டதால் இடைவழியில் சந்தித்து ஒருநாள், அறிமுகமில்லாத கிராமத்தில் தங்கும் மின்னு என்ற மினர்வா வும், உடன்சென்று அவளுடன் தங்கிய சக்திவேலுவும் கதை மாந்தர்கள். நிஜமான அன்புக்கு எங்கும் மின்னு, அந்த அன்பை தற்செயலாக சக்திவேலுவிடம் பெறுகிறாள், ஒரே நாளில் மனதால் நெருங்கிய பின்பு சக்திவேலுவின் அன்பை மனதில் வைத்துக்கொண்டு, வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை மனதில் இருத்தி மின்னு பிரிந்த பின்னர் வரும் கடிதம் படித்த சக்திவேலுவின் கண்களில் கண்ணீர், நமக்கும் அது கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் மின்னு அறிவாளி.
போடிநாயக்கனூர் பாசஞ்சரும் ஒரு காதல் கதைதான். அது ஒரு தீவிரவாதியின் காதல். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று தன் காதலியை குத்தியதால், திருமணம் நின்று போய் இருந்தவளை சிறையில் இருந்து திரும்பிய அவன் திருமணம் முடிக்கிறான், திருமணம் முடித்தபின்னர், இவனுடைய கத்திக்குத்தினால் வயிற்று பகுதி பாதிக்கப்பட்டவள் கர்ப்பம் ஆனதால், குழந்தைப்பேற்றில் இறந்துபோகிறாள். அதை நினைத்து கத்தும் அந்த தீவிரவாதியை மறக்கமுடியவில்லை.
தந்தைமார் தனயன்மார் கதையில் சிறிது காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த அனைத்து ஏமாறறுவேலையையும் காணலாம். ரூபாய் இரட்டிப்பு, நகரத்தினக்கல், போலீஸ் வேடம் போட்டு ஏமாற்றுதல் என்று எல்லா தகிடுதத்தங்களும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கூறுகிறார்.
ஏழுநாள் சூரியன் ஏழுநாள் சந்திரன் என்ற கதை, இயக்குனர் சுசீந்திரனால் திரைப்படமாக்கப்பட்டு வெற்றியடைந்த அழகர்சாமியின் குதிரை என்ற குறுநாவலும் இத்தொகுப்பில்தான் உள்ளன. கதைகள் படித்து முடிக்கும்போது சின்னபுன்னகையோ, அல்லது சின்ன மனநெகிழ்வோ இக்கதைகள் நிச்சயமாக நமக்கு அளிக்கின்றன.
கிராமங்களில் இருக்கும் நேசம், கோபம், இயலாமை, மகிழ்ச்சி, துன்பம் மூடநம்பிக்கை, வர்க்க பேதங்கள், ஆதுரம், மனிதாபிமானம் என்ற எல்லாம் இக்கதைகளில் எழுத்தாகியுள்ளது.
அன்புடன் – பெ. அந்தோணிராஜ்
தேனி.
நூல் – கனகதுர்கா (சிறுகதைகள் )
ஆசிரியர் – பாஸ்கர் சக்தி
பதிப்பகம் – வம்சி

