சிறுவர்களின் மூளையை நரம்பு மண்டலத்தை தூண்டும் அதிநவீன ஆராய்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு சிறுவன் தப்பித்து ஓடி செல்கிறான். அப்படி சென்றவன் கோவாவை வந்தடைகிறான். அங்கே பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை பார்க்கிறான். சூர்யாவையே தொடர்கிறான். சூர்யாவுக்கும் அவனை பார்த்தால் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றி அவனுடன் பிணைப்பை உண்டு செய்கிறது. அவனுடன் பயணிக்க ஆரம்பிக்கும் போது ஒரு குழு வந்து அவனை இழுத்து செல்கிறது. அப்போது அவனை காப்பாற்ற செல்லும் போது ஃபிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. முற்பிறவியில் இந்த சிறுவன் யார் சூர்யா யார் என்ன ஆனது இவர்களுக்குள் என்ன உறவு என்று படம் நீள்கிறது.
முதலில் கதை நல்ல கதை. நல்ல கற்பனை. தரமான சொல்லி கொள்ளும் படியான கதை. திரைக்கதையும் ஓரளவு நன்றாகவே வந்திருக்கிறது. படத்தில் பிரதான கேரக்டர் சூர்யா மட்டுமே. பிறகு அந்த சிறுவனை தாண்டி வேறு யாருக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. சூர்யாவே முழு படத்தையும் தாங்கி நிற்கிறார். முழு உழைப்பையும் தந்திருக்கிறார்.
கங்குவா (Kanguva) படத்திற்காக பெருமளவு மெனக்கெட்டிருக்கிறார்கள். ஃபிளாஷ்பேக் போர்ஷன் முழுக்க வரும் தூய தமிழ் சொற்கள் ஐந்து விதமான இனம் அவர்களின் வாழ்வியல் அவர்களின் வாழ்விடம் என நிறைய உழைப்பு. ஆர்ட் டிபார்ட்மெண்ட் நல்ல உழைப்பு. அந்த தங்க காசை மாற்றி இருக்கலாம். பிரிட்டானியா பிஸ்கெட்டுக்கு தங்க முலாம் பூசியைதை போல இருந்தது. அதை தவிர்த்து பெரும்பாலும் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார்கள். வெண்காட்டில் பனிக்கு இடையே இடது வலது நேர் கூன் என்று ஒவ்வொன்றுக்கும் சொல்லி செல்வது முதல் போருக்கு முன்னர் ஆட்கள் இருக்கிறார்களா என்று கீழே மற்றும் மரத்தில் மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது குழுவாக இணைந்து செயல்படுவது என படம் முழுவதும் சொல்லி கொள்ளும்படி நிறைய விசயங்கள் உள்ளன.
முதல் அரை மணி நேரம் சம்பிரதாயம் போல மொக்கையாகவே போகிறது. அடுத்து பழைய போர்ஷன் வந்த உடன் படம் சூடு பிடிக்கிறது. அதில் கருணாஸ் இளைப்பாறலாமா என்று கேட்கும் இடம் சூர்யாவின் இன்ட்ரோ சிறுவன் ஏமாற்றும் காட்சி வெண்காட்டில் பெண்கள் சண்டையிடும் இடம் இறுதி போர் மற்றும் இறுதி காட்சியில் சிறுவன் சூர்யாவை உணர்ந்து அவனுடன் சேரும் இடம் என நிறைய காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. எனவே படமும் பெரிதாக பொறுமையை சோதிக்காமல் அடுத்து அடுத்து என நகர்ந்து விடுகிறது. இறுதியில் சிறுவன் சூர்யாவுக்கு வாள் தரும் இடம் அதற்கு அடுத்து அந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அடுத்து அடுத்து என காட்டும் இடங்களில் இருந்து படம் ஒரு நிறைவான இடத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது.
மொத்தத்தில் படம் சிறுவனுக்கும் சூர்யாவுக்குமான உறவு தான். இதில் ஒரு ஹீரோயினை வைத்து காதல் என்று காட்டியிருந்தால் க்ளீஷேவாக இருந்தாலும் இன்னும் சுலபமாக இருந்திருக்கும். அல்லது எங்காவது சிவன் ராமர் முருகர் என மதக்குறியீடு வைத்திருந்தால் அதை வைத்து ப்ரமோஷனுக்கும் நன்றாக செய்திருக்கலாம். ஆனால் அப்படி எதையுமே செய்யாமல் கதைக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அதுவே பாராட்டப்பட வேண்டியது. சிவா தனது பழைய படங்களுடன் ஒப்பிடும் போது எவ்வளவோ மீண்டு வந்திருக்கிறார். காட்சியமைப்பிலும் கதையிலும் வெகுதூரம் வந்திருக்கிறார். இவ்வளவு வெறுப்பை கொட்டுமளவு அவர் இந்த படத்தில் இல்லை.
கங்குவா (Kanguva) படத்தில் குறைகள் இருக்கிறது லாஜிக் மீறல் இருக்கிறது. ஆனால் அது எல்லாவற்றையும் தாண்டி படம் ரசிக்கும்படியாக தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பல குழுக்களின் வன்மங்களுக்கு இந்த படம் பலியாக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவால் சிவா கெட்டாரா சிவாவால் சூர்யா கெட்டாரா அல்லது ஞானவேல் ராஜா வால் இருவரும் கெட்டார்களா என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு எல்லா பக்கத்தில் இருந்தும் உச்சபட்ச வன்மம் பரப்பப்பட்டிருக்கிறது.