“நெடுஞ்சாலை” நாவல் – நூல் அறிமுகம்
பொதுத்துறைப் போக்குவரத்தின் யதார்த்தப் பயணம்
தேசியமயமாக்கப்பட்டு 53 ஆண்டுகளைக் கடந்தும், மாறி மாறி வரும் ஆட்சியாளர்களின் கொள்கைகளாலும், சமூக நல்லவர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் கல்லெறி, தீவைப்பு போன்ற வன்முறைகளாலும் இலக்காவதைக் கடந்து, பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக இன்னும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) வாழ்வியலை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது.
பெயரில் ‘அரசு’ இருந்தாலும், கம்பெனிச் சட்டத்தில் பதிவு பெற்றதால் அரசாகவும் இல்லாமல், தனியாராகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் அல்லாடும் பொதுத்துறை நிறுவனங்களின் அவல நிலையை ஆசிரியர் துல்லியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, உதிரிபாகங்களுக்குக்கூட நிதி ஒதுக்கீடு இல்லாமல், இருப்பையே தட்டித் தட்டி சரிசெய்து சமாளிக்கும் பராமரிப்புப் பணியாளர்களின் நெருக்கடி நிலையோடு, 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயணிகள் கட்டண மாற்றம் நிகழ்கிறது, ஆனால் அதற்குள் உதிரிபாகங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுகிறது என்ற பொருளாதாரச் பொருளாதார சவால் இதன் முன்பாக உள்ளது.
நடுநாட்டு மொழியில் எதார்த்தச் சித்திரம்
நூலாசிரியர் கண்மணி குணசேகரன், தானே ஒரு சகோதர போக்குவரத்துக் கழகத்தில் பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றுபவர் என்பதால், அந்தத் துறையின் பணியாளர்கள், அவர்களின் பணியிடம் மற்றும் பேருந்துகள் இயங்கும் நெடுஞ்சாலைகளில் அன்றாடம் நிகழும் யதார்த்த நிகழ்வுகளை நடுநாட்டு கிராமத்து மொழியில் மிக அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.
2008-ல் முதல் பதிப்பும் தற்போத 3 வது பதிப்பையும் கண்டுள்ள இந்நாவல், அதற்கு முந்தைய காலகட்டத்தின் சூழலை முன்னிறுத்தி எழுதப்பட்டிருந்தாலும், இன்றும்கூடப் பொதுத்துறைப் போக்குவரத்துக் கழகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளுடன் ஒத்துப் போவதுதான் கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

பின்வருவன போன்ற கதையில் அவ்வப்போது வரும் உரையாடல்கள் எதார்த்தத்தை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன:
AE, ஓட்டுநர் ஏழைமுத்துவிடம்: “யோவ், என்னாய்யா ரூட் போர்ட் சாஞ்சு கெடக்குது அப்டியே வர்ற… பாத்து ஓட்டு டீசல் அதிகம் புடிக்காமப் பாத்துக்க…” என அதிகாரத் தொனியோடு அக்கறையையும் காட்டுவது.
கண்ட்ரோலர்: ஆள் பற்றாக்குறையால், “முப்பத்தாறு ஆளுங்கட்சிக்காரரு வண்டி போஸ்டிங் வேணுமின்னு மினிஸ்டருகிட்ட சொல்லி போன் பண்ண னாரு ஆனா வேலைக்கு வர்றது மட்டும் இல்ல” என்று புலம்புவது.
ஓட்டுநர் தனம் vs. ஏழைமுத்து: பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்துகளுடன் (தனம்) ஓடும் நேரம் குறித்து ஏற்படும் கடுமையான வாக்குவாதங்கள்.
பிரேக்டவுன் தகவல்: இரவில், நெடுஞ்சாலை ஓரத்தில் நிற்கும் பேருந்துக்குத் தேவையான உதிரி பாகத்தை எடுத்துச் செல்லும் பராமரிப்புப் பணியாளரின் நிஜ வாழ்க்கைச் சவால்.
மண், வாழ்வியல் மற்றும் இலக்கியப் பரிமாணம்
நாவல் முழுக்கத் தொழில்முறைச் சவால்கள் நிறைந்திருந்தாலும், ஆசிரியர் விவசாயத்தை, மண்ணை ரசிக்கும் ஒருவராக இருப்பதால், கதையின் போக்கில் விஷக்கடிக்கு எளிமையான ஒரு மருத்துவத்தை (‘பொறிச்சித் தழை’) சொல்லிச் செல்கிற பாங்கும், இயற்கை குறித்த இவரது அறிவையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது.
மேலும், “மிகச் சுருக்கமான வரிகளில் இயற்கையை, எழிலை, விவசாயத்தை, விதை முளைப்பை, அறுவடையை, சிருங்காரத்தை, வாழ்வியலை கவிதைகளாகச் சொல்லும் போது கண்மணி குணசேகரனின் எழுத்தில் அழகு தமிழ் மின்னும்” என்பது அவரது பன்முகத் திறமையையும், மொழியழகையும் சொல்வதாக அமைகிறது. நாவலின் முடிவில், இரவு நேரத்தில் உதிரி பாகத்துக்காக நெடுஞ்சாலையில் காத்திருக்கும் ஓட்டுனரின் நிம்மதிப் பெருமூச்சுடன் கதை நிறைவு பெறுகிறது.
2008ல் வெளியானாலும், இன்றுவரை அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலையோடு ஒத்துப்போகும் ‘நெடுஞ்சாலை’, ஒரு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் பகுதியாகச் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் அதன் இலக்கிய மற்றும் சமூக முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளது. இது, சாலைகளில் ஓடும் பேருந்துகளின் கதையல்ல, தமிழ்நாட்டின் எளிய உழைக்கும் வர்க்கத்தின் ஆத்மாவின் கதை. நண்பர் சகோதர போக்குவரத்துக் கழக பராமரிப்பு பணியாளர், எழுத்தாளர், கவிஞர் திரு கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துக்கள். ஓய்விற்குப் பின்னும் இலக்கிய உலகில் மேலும் பல சிறந்த புதினங்களை அவர் தர வேண்டும்
நூலின் விவரங்கள்:
புத்தகம்: “நெடுஞ்சாலை” நாவல்
ஆசிரியர்: கண்மணி குணசேகரன்
பதிப்பகம்: தமிழினி
விலை: ரூ.420/-
எழுதியவர் :
✍🏻 – சம்பத் ஸ்ரீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
