விளாதீமிர் கொரலென்கோ எழுதிய கண் தெரியாத இசைஞன் - நூல் அறிமுகம்| Vladimir Korolenko - Kann Theriyatha Isaignan - bookreview - https://bookday.in/

கண் தெரியாத இசைஞன் – நூல் அறிமுகம்

கண் தெரியாத இசைஞன் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல் : கண் தெரியாத இசைஞன்

ஆசிரியர் : விளாதீமிர் கொரலென்கோ

மொழிபெயர்ப்பு : இரா.கிருஷ்ணையா

பக்கம்  : 270

விலை :  240

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

நூலைப் பெற : thamizhbooks.com 

உலகம் கருணைமிக்கது என்கிறார்கள். அந்த கருணைமிக்க உலகிலிருந்து தான் கண்கள் தெரியாத பார்வையற்றவர்களும் பிறக்கின்றார்கள். இயற்கையின் கோர முகங்களில் இதுவும் ஒன்று. பிரபஞ்சம் காண முடியாத கணக்கற்ற புதிர்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பார்வையற்றவர்கள் பெரும்பாலும் பாடகர்களாக இசைக்கலைஞர்களாக இருக்கின்றனர். மிகுந்த கூருணர்ச்சி கொண்டவர்களாக இருப்பது ஆச்சர்யம் கொள்ளத் தக்கதாக இருக்கின்றது. ஒரு சின்ன சப்தத்திற்கும் அவர்களது புலன்கள் விழிப்படைகின்றன. விழியற்றோரின் அரிய நுண்ணறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. இசை மேதை பீதோவன் காது கேளாதவர் என்று கேள்விப்பட்டதுண்டு. 130 வருடங்களுக்கு முன் நாவலாசிரியர் பார்வையற்றவர்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து கண் தெரியாத இசைஞன் எனும் அற்புதமான நாவலாக நமக்கு தந்துள்ளார்.

கண் தெரியாமல் பிறக்கும் குழந்தை பியோத்தர். அவனை வளர்க்கும் தாய் ஆன்னா . பாதுகாத்து வழிகாட்டும் மாமன் மக்சீம். குதிரை லாயத்தின் புல்லாங்குழல் இசைக் கலைஞன். பியோத்தர் வளர வளர அவனை நேசிக்கும் காதலி இவலீனா .

இவர்களிடையே நடக்கும் உணர்வு மிகுந்த உரையாடல்கள். இயற்கையை கூர்ந்து கவனிக்கும் பியோத்தர் ஒவ்வொரு ஒலிகளையும் உள்வாங்குகிறான். புல்லாங் குழலில் மயங்கும் சிறுவனை மீட்டெடுக்க பியானோவில் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றாள் தாய் ஆன்னா . இயற்கையிடமும் அன்னையிடமும் கற்றுக் கொண்ட ஒலிகளை பரீட்சித்து பார்க்கின்றான் பியோத்தர்.அவனது இசையில் எல்லோரும் மெய்மறக்கின்றனர். ஆனாலும் தாழ்வு மனப்பான்மையில் எந்நேரமும் மனம் குமைகின்றான். அவனை அச்சூழலில் இருந்து மீட்டெடுப்பதற்காக தாய்மாமன் மக்சீம் தனிக் கவனம் செலுத்துகிறான்.

வெளி உலக அனுபவத்திற்காக பார்வையற்ற பிச்சைக்காரர்கள் உடன் வசித்து வறுமையின் அனுபவங்களை பெறுகிறான். இசைஞனாக மாறிய பின் மிகுந்த தயக்கத்திற்கு பின் காதலியை மணக்கின்றான். அவர்களுக்கு பார்வையுடைய குழந்தையொன்று பிறப்பதாக கதை முடிகிறது.

கதை நெடுக ஏகப்பட்ட இயற்கை சார்ந்த வருணனைகள் உவமைகள் இடம்பெறுகின்றன. காலத்தின் பழைய நெடி எழுத்திலும் தொடர்வதால் வாசிப்பதில் ஆர்வக் குறைவும் ஆயாசமும் எழுகின்றது. மொழிபெயர்ப்பாளர் காலத்திற்கேற்ப மொழி நடையில் கவனம் செலுத்தி வாசிப்பை சுவாரசியப்படுத்தி இருக்க வேண்டும்.

பியோத்தர் அப்பாவை பற்றிய தகவல்கள் ஓரிரு வரிகளில் கடந்து விடுவது ஏமாற்றமளிக்கிறது. தந்தையின் இடத்தை தாய்மாமன் நிரப்புவது கதையில் நெருடுகிறது. செல்வச் செழிப்பு மிக்கவர்க்கும் ஏழைகளுக்குமான வர்க்கபேத நிலை ஊனத்திலும் கூட விரவி நிற்பது உணர முடிகிறது. அகம்புறம் என்ற இரு நிலையில் அகவயமான உணர்வு நிலைகளை இந்நாவல் அதிகம் பிரதிபலிக்கின்றது. புறம் சார்ந்த நிலையென்பது பொருளாதாரம் தானே கதையின் மூல ஆசிரியர் விளாதிமிர்க்கும் மொழி பெயர்ப்பாளர் கிருஷ்ணையா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

செ. தமிழ்ராஜ்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *