விளாதிமிர் கொரலேன்கோ (Vladimir Korolenko) 1855 இல் எழிதிய கண் தெரியாத இசைஞன் (Kann Theriyatha Isaignan) - நூல் அறிமுகம் - https://bookday.in/

கண் தெரியாத இசைஞன் (Kann Theriyatha Isaignan) – நூல் அறிமுகம்

விளாதிமிர் கொரலேன்கோ (Vladimir Korolenko) 1855 இல் எழிதிய கண் தெரியாத இசைஞன் (Kann Theriyatha Isaignan).

கண் தெரியாத இசைஞன் என்பதற்கு பதிலாக கண் தெரியாத இளைஞனின் தாய் என்று வைத்திருக்கலாம். குழந்தைக்கு கண் தெரியவில்லை என்பதை மருத்துவர் வந்து சோதிக்கும் முன்பே உணர்ந்து விடுகிறாள். குழந்தை பிறந்ததிலிருந்து, என்றுமே அந்தக் குழந்தைக்கு கண் தெரியாத குறையே தெரியக்கூடாது, தனக்கு கண் தெரியவில்லையே என்று தன் குழந்தை ஒரு நாளும் வருந்தி விடக் கூடாதே என ஒவ்வொரு நாளையும், பொழுதையும், நொடியும் தன் குழந்தைக்காக செதுக்குகிறாள்.

பல நேரங்களில் அவளையும் அவள் மனதையும் எழுத்தாளர் நமக்கு காட்ட வில்லை ஆனாலும் அந்தத் தாயின் மனதை அது படும் துயரை நம்மால் உணர முடிகிறது.

அத்தியாயத்துக்கு அத்தியாயம் பருவங்கள் மாறுகின்றன காலம் வேகமாக ஓடுகின்றன.

70 கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு கிராமத்துக்கு செல்கின்றனர் அங்கே உள்ள மாதா கோயிலில் எகோரி, ரோமன் என்கிற கண் தெரியாத இரண்டு இளைஞர்களை சந்திக்கிறான் பியோத்தர்.

அவர்களை சந்தித்த பிறகு கண் தெரியாத இளைஞனான பியோத்தரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அவன் மனநிலையை மாற்றுவதற்கு மக்சிம் மாமா முயல்கிறார். பியோத்தர் வாதம் செய்கிறான்.

“கண் தெரியாது என்ற நினைவைத் தவிர வேற எதுவும் தோன்றுவதில்லை” என்கிறான்.

“கண் உள்ளவர்கள் உன்னை விட 100 மடங்கு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார் மக்சிம் மாமா.

“ஒரு பிச்சைக்காரிடம் இருக்கும் மகிழ்ச்சி கூட தன்னிடம் இல்லை” என்கிறான்.

அவனுக்கு அவன் நிலை தெரியவில்லை அவனுக்கு வேறொரு வழியில் மக்சிம் மாமா வாழ்க்கையை புரிய வைக்கிறார். மறுபடியும் கண் தெரியாத ஒரு பிச்சைக்காரக் கூட்டத்தை சந்திக்க வைக்கிறார். குளிரில் அவர்கள் வாடுவதையும் தங்குவதற்கு சரியான இடமில்லாமல் அலைவதையும் பிச்சையிடும் பொருளை பங்கிடுவதில் அவர்களுக்குள் அடித்துக் கொள்வதையும் காதால் கேட்கிறான். செல்வச் செழிப்பில் வளர்ந்த அவனால் அந்த இடத்தில் நிற்கக் கூட முடியவில்லை. அந்த பிச்சைக்காரர்களின் கூச்சல், சத்தம், சண்டையை காதால் கேட்க பிடிக்காதவனாய் உடனே அந்த இடத்தை விட்டு போய்விட துடிக்கிறான். அந்த இடத்திலிருந்து ஓரளவு வாழ்க்கையை புரிந்து கொள்கிறான்.

அந்த பிச்சைக்காரர்களை மக்சிம் மாமா எங்கே சந்திக்க வைக்கிறார் என்றால், அருகிலே ஒரு கிராமம் அங்கே கத்தோலிக்க திருஉருவப் படம் ஒன்று இருக்கிறது அது மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது குறிப்பிட்ட அந்த விழா நாளன்று அங்கே சென்று அந்தப் படத்தை தரிசித்தால் 20 நாள் செய்த பாவம் மன்னிக்கப்படுவதாக பல ஊர்களில் இருந்து மக்கள் குவிக்கிறார்கள் அதுவும் எந்த பாவச் செயலாக இருந்தாலும். 1855 லேயே ரஷ்யாவில் அதாவது இன்றைய உக்ரைன்.

உலகில் மனிதர்கள் எங்கெங்கே இருந்தாலும் எல்லோரும் ஒன்று போலவே இருக்கிறார்கள். இதைப் படிக்கையில் நம்ம ஊரில் வேப்பம்பரத்தில் பால் வடிகிறது, பிள்ளையார் பால்குடிக்கிறார், அந்த கோயிலுக்கு போனால் நோய்கள் தீர்க்கிறது, இந்தக் கோயிலுக்கு போனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகிறது, இந்த கடவுளை வணங்கினால் நன்றாக படிப்பு வரும் நல்லதொரு வேலை கிடைக்கும். இன்னொரு சாமி இருக்கு அந்த சாமியிடம் போனால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். இந்தக் காலத்தில் தான் இப்படி மூடநம்பிக்கையால் கெட்டு அழிகிறார்கள் என்றால் இருநூறு வருடங்களுக்கு முன்பும் எங்கோ ஒரு நிலத்தில் வாழ்கின்ற மனிதர்களும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் இந்த நூல் வாசிக்கையில் எனக்கு வியப்பு ஏற்படுகிறது.

அந்தச் சிறுமி இவெலினா கண் தெரியாத சிறுவன் பியோத்தரை சந்திக்கின்ற அந்த தருணம் மிக அற்புதமானது நாவலில் அந்த இடத்திலிருந்து தான் கதையே தொடங்குவது போல் எனக்குத் தோன்றுகிறது. அந்தச் சிறுவனுக்கு கண் தெரியாது என்று இவெலினா தெரிந்து கொண்டு துடிக்கிற துடிப்பு நம்மையும் உலுப்புகிறது நம் கண்ணீலும் நீர் சுரக்கிறது.

பொதுவாக மனிதர்களின் மனதில் அவர்களின் எண்ண ஓட்டம் என்ன என்பதை அவர்கள் முகமே கண்ணாடி போல் காட்டிவிடும் பிறகு நம்மை காண்பதை கண்டால் நாம் நம்முடைய முக பாவத்தை சரி செய்து கொள்வோம் சோகத்தை அழுகையை மூடி மறைத்துக் கொள்வோம் ஆனால் கண் தெரியாதவர்களால் அது முடியாமல் போகிறது. யார் யாரெல்லாம் நம்மை பார்க்கிறார்கள் என்பது கண் தெரியாதவர்களுக்கு தெரிந்தால் தானே அவர்கள் முகபாவனையை மாற்றிக்கொள்ள இயலும் அந்த இடத்தை நாவல் ஆசிரியர் மிகச் சிறப்பாக இவ்வாறு பதிவு செய்கிறார்.

பூட்டி வைக்கப்படாமல் மறந்து போய் முன் அறையில் விட்டுச் செல்லப்பட்ட நாற்குறிப்பைப் போல பியோத்தரின் முகத்தை சிரமமின்றி படித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

பியோத்தருக்கு திருமணம் ஆகிறது குழந்தையும் பிறக்கிறது பிறந்த குழந்தை தன்னை போல் கண் தெரியாத குருடாக பிறந்ததோ என அஞ்சி கவலையுறுகிறான். ஆனால், குழந்தையை சோதித்த மருத்துவர், அதற்கு கண் நன்றாக இருக்கிறது என்று சொன்னதுமே பியோத்தர் தனக்கு கண் தெரிந்ததாக உணர்கிறான். வானம் சூரியன் அம்மா,காதலி மக்சிம் மாமா அனைவரையும் ஒரு கணம் பார்த்ததாகச் சொல்கிறான். குழந்தைக்கு கண் நன்றாக தெரிகிறது என்ற செய்தி அவன் காதில் விழுந்த அந்த ஒரு நொடி அவனுக்கே கண் தெரிந்ததாக உணர்கிறான் .

என்று நாவலாசிரியர் சொல்லுகின்ற இடம் மிகச் சிறப்பு. கண் தெரியாத பியோத்தரின் மகனுக்கு கண் தெரிகின்றது என்று கேட்டதும் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறானோ அதேபோல சீமாட்டி மிகை லெவ்ன்னா, இந்நாவலின் தொடக்கத்தில் தனக்குப் பிறந்த குழந்தைக்கு கண் தெரியவில்லை என்ற செய்தியை மருத்துவர் சொன்னபோது அந்த இளம் தாய், “எனக்குத் தெரியும்” என்று மௌனமாக ஏற்றுக் கொள்கிறாள். காரணம், குழந்தை பிறந்து மயக்கம் தெளியாத நிலையிலேயே குழந்தையின் அழுகையை இனம் பிரித்துப் பார்க்கிறது தாய்மை. குழந்தையின் அழுகையில் ஏதோ ஒரு சோகம் ஏதோ ஒரு ரணம் இருப்பதை தாய்மை உணர்ந்து விடுவதை நூலாசிரியர் மிகச் சிறப்பாக ஆரம்பத்திலேயே அழகாக சொல்லி விடுகிறார்.

காட்சிகளாய், உரையாடல்களாய் இல்லாமல் நாவல் உணர்வுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது.

மொழிபெயர்ப்பு நாவல்களில் பெயர்களை ஞாபகம் வைத்து இருப்பதே கடினம் இதில் பெயரை மாற்றி மாற்றி சொன்னால் வாசகர் வாசிப்பது கடினமல்லவா.
கண் தெரியாத அந்த பியோத்தரின் இளம் தாயை, அவள்,இளம் தாய் என்றுதான் பல இடங்களில் சொல்லுகிறார் சில இடங்களில் தான் அந்த இளம் தாயின் பெயரைச் சொல்லுகிறார். அறிமுகப்படுத்தும் போதே கதாபாத்திரத்தின் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

குழந்தையின் தந்தை ஒரு நிலக்கிழார் என்று அறிமுகம் செய்கிறார் பெயரைச் சொல்லவில்லை, அதுபோல் குழந்தையின் தாயையும், இளம் தாய் என்றே சொல்கிறார். கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகையிலேயே பெயரையும் சொல்லி இருக்கலாம். முதல் அத்தியாயத்தில், (அத்தியாயம் வேறு வழக்கத்துக்கு மாறாக உள்ளது ஒரு அத்தியாயத்தை 10 பாகங்களாக பிரித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது அது தேவையும் இல்லை படிக்கும் போது போது அத்தியாயம் குழப்பம் இருக்கிறது)

முதல் அத்தியாயத்தில் 28 ஆம் பக்கத்தில் தான் மக்சிம் மாமா முதல் முறையாக “ஆன்னா” என்ற பெயரை உச்சரிக்கிறார். சரி அந்த இளம் தாயின் பெயர் ஆன்னா என்று புரிந்துகொண்டு மேற்கொண்டு படித்துச் செல்கையில், இரண்டாம் அத்தியாயம் 60 ஆம் பக்கத்தில் தான் சீமாட்டி ‘பொப்பல்ஸ் காயா’ என்று சொல்லப்படுகிறாள். இப்போது நமக்கு ஒரு குழப்பம் வருகிறது யார் அந்த ‘பொப்பேல்ஸ் காயா’ சீமாட்டி என்று சொல்வதால் அது அந்த இளம் தாயாகத்தான் இருப்பாள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்து கண்யமிக்க சீயத்சேன்கோ குடும்பத்தில் சீமாட்டி பொப்பேல்காயாவுக்கு பயங்கரவாத சகோதரன் எப்படி தோன்ற முடிந்தது.
சீமாட்டி பொப்பேல்ஸ்காயாவால் எதிர்த்து நிற்பது சத்தியமான காரியமல்ல.

இயோஹிம் பெயரைக் கூட எடுத்த உடனே சொல்லி விடுகிறார் பக்கத்து வீட்டு மரியாவுக்கு மனதை பறி கொடுத்தவன். மரியாவின் பெயர் கூட பல இடத்தில் வந்து விடுகிறது.

63 ஆம் பக்கத்தில் பள்ளி படிப்பு முடிந்த பின் யுவதி ஆன்னாயத்சேங்கோவுக்கு தொடர்ந்து பியானோ வாசிக்க வேண்டும் என ஆசை கிஞ்சித்தும் இல்லாமல் போனது.

அதே அத்தியாயம் முடிவில் சீமாட்டி பொப்பேல்காயா பியானோ வாங்கும்படி தன் கணவனை கேட்டுக் கொண்டாள்.

அடுத்து 66 ஆம் பக்கத்தில் எளிய கிராமப்புறத்து குழலின் மீது வெற்றி கொண்டாட இப்பொழுது ஆன்னாமிகைலொவ்னா தயாராய் இருந்தாள்.அவளுடைய பியானோ வியன்னாவிலிருந்து தருவிக்கப்பட்டது.

இந்த கடினமான இசை படப்பை சிறப்பாக வாசித்துக் காட்டினாள் ஆன்னா மிகைலொவ்னா.

பக்கம் 67. மற்றும் சீமாட்டி பொப்பேல்ஸ்காயாவால் இயோஹிமை எதிர்த்து நிற்பது சாத்தியமான காரியமாய் இல்லை.
68 ஆம் பக்கத்தில் மக்சிம் மாமா தன் கவைக் கோலால் தரையில் தட்டினான் உடனே திரும்பிப் பார்த்த மிகை லொவ்னா.

அடுத்து 69 ஆம் பக்கத்தில் பாவம் தாய் இத் தோல்வியால் கண்ணீர் வடிக்க வேண்டியதாயிற்று அவமானம் தாங்காது கண்ணீர் வடித்தாள் மதிப்புக்குரிய சீமாட்டி பொப்பேல்காயா.

70 ஆம் பக்கத்திலும் சீமாட்டி பொப்பேல்ஸ்யா
109 ஆம் பக்கத்தில் நூலாசிரியரே ஆன்னாமிகைலொவ்னா என்று அழைக்கிறார்.

167 ஆம் பக்கத்திலும் ஆன்னாமிகைலொவ்னா இன்று அழைக்கப்படுகிறாள்.

181 ஆம் பக்கத்தில் ஆன்னாமிகைலொவ்னாவுக்கு திரும்பவும் தான் இளமை பெற்று விட்டதாக தோன்றியது. அதே பக்கத்தில் 15 ஆம் வரியில். சீரான முறையில் நரைத்த கண்ணுக்கு இனிய மழுமுழுப்புத் தோற்றமளித்த சீமான் பொப்பேல்கிய். என்று சொல்கிறார் அப்படி என்றால் பொப்பேல்கிய் என்பது கண் தெரியாதவனின் தந்தை என்று ஆகிறது. ஒருவேளை அந்த நாட்டில் திருமணமான பிறகு கணவன் பெயரை சூடிக் கொள்வதாக இருந்தாலும் கதை ஆசிரியர் சொல்லி இருக்க வேண்டும்.

அல்லது மொழிபெயர்ப்பாளர் சொல்லி இருக்க வேண்டும். அல்லது மொழிபெயர்ப்பாளரே ஒரே பெயராக கூட வைத்திருந்திருக்கலாம். வேற்று மொழி பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பதே கடினம் என்கிற போது. இப்படி பெயர் வேறு குழப்பமாக இருந்தால் நாவலை எப்படி ரசிக்க முடியும். நாவலை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது.

ஆனாலும் இந்த நாவல் 1855 ல் பிறந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் இந்த நாவலைத் தொடும் போது 1855ிலும் உக்கரனில் தெற்கே உள்ள ஒரு கிராமத்திலும். காலப் பயணம் செய்து திரும்பிய திருப்த்தி கிடக்கிறது.

இந்நூலை வாசிக்க எனக்கு வழங்கிய தோழமைகளுக்கு நன்றி

நூலறிமுகம் எழுதியவர்:

எழுத்தாளர் பொன் விக்ரம்
[email protected]



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *