Kannada Famous Poet, Dalit Activist Siddalingaiah Tribute Article by Kamalalayan. Book Day Website is Branch of Bharathi Puthakalayam

அஞ்சலி: பாறைகளின் மேல் மலர்ந்த மொக்கு – சித்தலிங்கையா நினைவுகளும் கனவுகளும்…



சித்தலிங்கையா மறைந்து விட்டார். எல்லா மனிதர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்கவே முடியாத ஒரு நிலை. எனவே, இவரும் மறைந்தது ஒரு வகையில் மனித வாழ்வின் அவலங்களுள் ஒன்று; ஆனால், தவிர்க்க இயலா அவலம். பிரச்சினை என்னவெனில், இந்த மரணம் இயற்கையானதல்ல என்பதுதான். கொரானா என்ற தீனுண்மியின் கோரத்தாண்டவத்தின் விளைவு இது. எவ்வளவு கவனமாக இருந்தாலும் கூட, எங்கேயோ ஒரு கணம் நாம் தவறி விட்டாலும் இந்த விளைவு நேர்ந்து விடும் போலும்… ஒரு மாத காலம் மருத்துவமனையில் கவிஞர் நடத்திய உயிர்ப்போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரின் கவிதைகளின் தொகுப்புக்கு ‘அணி திரட்டிய கவிதைகள்’ என்ற தலைப்பில் பாவண்ணன் அவர்கள் ஒரு செறிவுமிகுந்த முன்னுரையை எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையில், முதல் மூன்று பக்கங்களில், கன்னட மொழி இலக்கிய உலகம் கடந்து வந்த பாதை பற்றிய ஒரு நெடிய வரலாற்றுக்குறிப்புகளையே அவர் தொகுத்துத் தந்திருக்கிறார். காரணம் ? அவரே சொல்லியிருக்கிறார்: “ சித்தலிங்கையா என்னும் கவிஞரின் உதயத்தையொட்டிய சமூகச் சூழலைப் புரிந்து கொள்ள மேற்கண்ட குறிப்புகள் உதவும். அவர் ஈடுபட்ட போராட்டங்களைப் புரிந்து கொள்ளாமல், அவருடைய கவிதைகளையோ, கவிதைகளில் இயங்க்கூடிய அழகியலையோ புரிந்துகொள்ள முடியாது…”

இது எவ்வளவு சரியான கணிப்பு என்பதைப் புரிந்து கொள்வதற்கு, சித்தலிங்கையாவின் கவிதைகளைப்படிப்பது அவசியம். தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் படிப்பதால், அந்தக்கவி மனதின் குமுறல்களை நாம் அதே ஆழத்துடனும், அழுத்தத்துடனும் புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், சித்தலிங்கையாவைப் புரிந்துகொள்வதற்கான இரண்டு புத்தகங்களை, பாவண்ணன் அவர்களே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். கன்னட மொழியின் மகத்தான படைப்பாளிகள் பலரை, தமிழில் எழுதிய நமது முன்னோடிப் படைப்பாளிகளைப்போலவே நெருக்கமாக உணர்ந்து புரிந்து படிக்கவும் பாவண்ணனின் மொழிபெயர்ப்புகளே துணை நிற்கின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல; சுமார் இருபதுக்கு மேற்பட்ட கன்னட மொழிப் படைப்பிலக்கிய நூல்களை பாவண்ணன் தமிழில் மூல நூல்களைப்போன்ற தெளிந்த, எளிய நடையில் நமக்குத் தந்திருக்கிறார். அந்தப்படைப்பாளிகளின் பெயர்களையும், அந்தப்புத்தகங்களின் தலைப்புகளையும் குறிப்பிட்டாலே இந்தக்கட்டுரையின் பெரும்பகுதி நிறைவடைந்துவிடும். எனவே, நான் இங்கு சித்தலிங்கையாவின் நூலை மட்டும் இப்போதைக்கு எடுத்துக்கொள்கிறேன்.



ஊரும் சேரியும், வாழ்வின் தடங்கள் இந்த இரு நூல்களும் சித்தலிங்கையாவின் தன் வரலாற்று நூல்கள். இரண்டையும் தமிழில் தந்தவர் பாவண்ணன். அவரின் பார்வையில், சித்தலிங்கையா என்ற கவிஞரின் இடம் எது ? ‘அணி திரட்டிய கவிதைகள்’ கட்டுரையைத் துணைக்கு அழைக்கிறேன்:

“செறிவு, சுருக்கமான சொற்கள், குறியீடுகள், படிமங்கள்-எனப்படும் பொதுவான கவிதை அழகியல் கூறுகள் எவையுமே சித்தலிங்கையாவின் கவிதைகளில் இல்லை. அவை தமக்கேயுரிய வேறோர் அழகியலை அடிப்படையாகக் கொண்டவை. தமக்கு முன்னாலிருக்கிற கூட்டத்தை நோக்கி உணர்ச்சிகரமான குரலில் பேசும் தன்மை கொண்டவை அவரது கவிதைகள்…”

“அதனால், பெரு முழக்கத்துக்கே உரிய ஓங்கிய குரல், உரையாடும் தன்மை, அழுத்தம் திருத்தமான கட்டளைகள், சவுக்கடி தரும் கருத்துகள், வெளிப்படையான எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றால் அவருடைய கவிதைகள் நிரம்பியுள்ளன…”

பாவண்ணனின் இந்தக்கணிப்புக்கு சித்தலிங்கையாவின் ஓர் அனுபவக் குறிப்பையே நாம் சான்றாகக் கொள்ள முடியும். பின்வரும் மேற்கோள், அவருடைய வாழ்வின் தடங்கள் என்ற சுயசரிதை நூலிலிருந்து எடுக்கப்பட்டது “ ஒரு சொல் கவிதையை ‘பிடிடா, அடிடா’ என்ற வரியுடன் கவியரங்கத்தில் படிக்கத் தொடங்கினேன்… கவியரங்கத்தின் பார்வையாளர்களில் பலர் பக்தர்கள். வயதான ஆண்களும் பெண்களுமாகப் பலர் கூடியிருந்தார்கள். இப்படிப்பட்ட அவையினர் முன்னிலையில் நான் எந்தச் சமயத்திலும் கவிதை படித்ததில்லை. நாத்திகனான நான் கடவுள் மரபுக்கு இசைவான கருக்களையுடைய கவிதைகளை எழுதுவதற்கான வாய்ப்பே இல்லை. எழுதியிருந்தாலும் பகடி செய்வது போன்ற பாணியில்தான் இருக்கும். வேறு வழியில்லாமல் நான் அந்த அரங்கத்தில் ‘புடிங்கடா, அடிங்கடா’ என்ற என்னுடைய கவிதையை ஆக்ரோஷத்துடன் படிக்கத் தொடங்கினேன். இப்படிப்பட்ட ஆக்ரோஷமான உள்ளடக்கத்தை உடைய கவிதைகளைப் பக்தர்களால் நிறைந்திருந்த பார்வையாளர்கள் கூட்டம் இதற்கு முன்பு எப்போதும் கேட்டிருக்க மாட்டார்கள்…”

இந்தக்கவிதை வாசிப்பின் விளைவு ? “ சிலர் அப்படியே திகைத்து உறைந்து விட்டார்கள்.அவர்களுடைய முகங்களில் அச்சம் நிறைந்திருந்தது… நான் கவிதையைப் படித்து முடித்தேன்… இதை மிகுந்த உரத்த குரலில் பாடிய என்னைப்பற்றி, ( நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சித்தலிங்கையாவை அழைத்து அங்கே கவிதை வாசிக்கச்செய்தவரான) கெங்கல் ஹனுமந்தையா என்ற பெரியவர் எப்படிப்பட்ட கருத்தைச்சொல்லக்கூடுமோ என்பதை நினைத்துத் தயக்கமெழுந்தது. நான் உட்கார்ந்தும் என்னருகில் வந்த கெங்கல், தன் இரு கைகளையும் நீட்டி என்னை இறுக்கித் தழுவிக்கொண்டார். ‘இது வலியை அனுபவிப்பவர்களின் கவிதை’ என என் கவிதையைப்பற்றிப் பாராட்டினார். இன்னொருமுறை மாலை அணிவித்து எனக்கு ஆசி வழங்கினார்…”



இது ஓர் எடுத்துக்காட்டுதான். சி.ஜி. கிருஷ்ணசாமி என்ற நாடக இயக்குநர், உருவாக்கி இயக்கிய, சாதிக்கொடுமையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட மக்களின் கதையைக்கூறும் ’பெல்ச்சி’ நாடகத்திற்காகச் சித்தலிங்கையா எழுதிய ஒரு பாடல் வரி இது: “பெரிய கவுடரு வாசலிலே எங்க எலும்புகளால் ஆன தோரணம்..” கவிதையைப் பாடலாகவும், பாடலைக் கவிதையாகவும் உருமாற்றும் இரசவாதத்தைச் செய்தவர் சித்தலிங்கையா. இவருடைய ஒரு பாடல்: ”எல்லிகெ பந்து ? யாரிகெ பந்து ?” நாற்பத்தி ஏழாம் ஆண்டில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்ததாக நம்புகிறோம். ஆனால், அந்தச்சுதந்திரம் யாருக்கு வந்தது, எங்கே வந்தது என்பது கவிஞரின் கேள்வி.

இந்த கேள்வியும், இன்னும் இதைப்போன்ற பல கேள்விகளும் சாதியப்படி மெனிலைச்சமூகத்தை நோக்கிய சவுக்கடிகளாக சித்தலிங்கையாவின் கவியுள்ளத்திலிருந்து எழுந்து சுழன்றுள்ளன. பாவண்ணன் கூறுகிறார்: “சித்தலிங்கையாவின் கவிதைகள் உண்மையாகவே பெருந்திரளாகத் திரண்டு நின்ற கூட்டத்தை நோக்கி நேரடியாகவே முழங்கப்பட்டவை. அதனாலேயே உயிர் நிறைந்தவை. தம்மை நோக்கிச் சொல்லபட்ட அம்முழக்கங்களை உள்வாங்கிக் கொண்ட அக்கூட்டம் வேறு சில இடங்களில் வேறு கூட்டங்களை நோக்கி அவற்றை முழங்கியது. பிறகு வீடு, தெரு, கல்லூரி, சந்து முனைகள், பேருந்து நிலையங்கள், தேநீர்க்கடைகள் என நான்குபேர் கூடுகிற ஒவ்வோர் இடத்திலும் மாறி மாறி அவை முழங்கிக்கொண்டே இருந்தன….”

ஆம்; ஊர்வலங்கள் தோறும் அவை முழங்கப்பட்டன. ஒலி நாடாக்களில் அவை ஒலித்துப்பரவின. கூட்டங்கள், நாடக நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் என எல்லா வகையான மக்கள் கூட்டங்களிலும் முதன்மை நிகழ்ச்சிகள் தொடங்கு முன் குறைந்தது ஒரு மணி நேரம் வரை அவை பாடப்பட்டிருக்கின்றன. ”நாட்டுப்புறப்பாடல்களுக்கே உரிய, மீண்டும் மீண்டும் சொல்லி அழுத்தம் கூட்டுகிற அழகையும் அவற்றில் கண்டுபிடிக்க முடிகிறது. நாட்டார் பாடல்கள் அனைத்துமே ஒருவகையில் மக்கள் கண்டறிந்த ஆதி கவி வடிவம். அந்த ஆதி வடிவத்தின் சாயலும், நீட்சியும் சித்தலிங்கையாவின் கவிதைகளில் உள்ளன…” என்கிறார் பாவண்ணன்.

ஊரும் சேரியும், வாழ்வின் தடங்கள்- இரண்டையும் படிப்பவர்கள், இவை மரபான வடிவில்,காலவரிசைப்படியோ அல்லது பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்லிக்கொண்டு போகும் கதை சொல்லி நூல்களோ அல்ல என்பதை உணரமுடியும். சித்தலிங்கையாவின் நினைவுகள் மனம் போன போக்கில் துண்டு துண்டாகச் சிதறல்களாகக் கொட்டிக்கிடக்கும் மன வெளிப்பதிவுகளே இவை. ஆனால், பிரதிகளை மனம் ஒன்றி வாசிக்கும் போது, இந்தக் குறிப்புகள் அனைத்தின் ஊடாகவும் நிரம்பித்ததும்பும் அடக்கமாட்டாத அவலக்குரலை, அதன் வலியை, அது பட்ட அவமானங்களை, சாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகப்பின்னணியிலிருந்து மேலெழுந்து வந்த ஒரு கவிஞனின் ஆன்மாவின் அலறலை, ஆவேசத்தை, கொந்தளிப்பை அப்படியே அணுப்பிசகாமல் உணர முடியும்.

தனது குட்டையான, கருத்த உருவம் காரணமாக, ஓர் ஆசிரியர் என தன்னுடைய மாணவர்களாலோ,அல்லது புதிதாக அறிமுகம் ஆகும் பிறராலோ இனங்காணப்படக்கூட முடியாத ஓர் ஆளுமையாக இருக்கிறார் சித்தலிங்கையா. நல்ல ஆடைகளை, பொருத்தமாக அணிவதில் அக்கறையற்றவராயிருக்கிறார். தேவராஜ் அர்ஸ், ஹனுமந்தையா, பசவலிங்கப்பா போன்ற கர்நாடக மாநிலத்தின் முதல்வர்கள்,அமைச்சர் போன்ற அரசியல்வாதிகள் இவரின் கவிதைகளை, பாடல்களைப் படித்துப் பரவசம் அடைகின்றனர். சட்டமன்றத்தில், இவருடைய பாடலான “ அந்தக் குன்றினிலே வெண்ணிலவில் திரிந்தலைய வேண்டாம்…” என்ற கவிதையை முதன்முறையாக இசையமைத்துப் பாடுகிறார் மருத்துவர் எல். ஹனுமந்தையா. அப்பஹெரெ திம்மராஜூ, பானந்தூரு கெம்பையா, ஜனார்த்தனன் ( ஜன்னி ) –ஆகிய மூன்று புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கர்நாடக மானிலத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சித்தலிங்கையாவின் பாடல்களைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றனர்.



ஆகஸ்ட் பதினைந்தாம் நாளன்று, இவருடைய “ யாருக்கு வந்தது, எங்கே வந்தது சுதந்திரம் ?” என்ற பாடலைப்பாடி முழக்கமிடும் அப்பஹெரெ திம்மராஜூவை, போலீசார் கைது செய்கின்றனர். காவல் நிலையத்தில், “ இன்னும் னெறையப்பாட்டு இருக்கு, கேளுங்க..” என்று பாடுகிறார் திம்மராஜூ. கேட்டு மெய் மறந்து போகும் காவலர்கள், இவருக்கு நல்ல டிஃபன், காப்பி வாங்கிக்கொடுத்து ராஜ உபசாரத்துடன் போக்குவரத்துச் செலவுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்கள். சித்தலிங்கையாவின் பாடல்களின் வெற்றியா, அல்லது ஓர் இசைக்கலைஞன் அவற்றைத் தன் இசை வல்லமையின் ஊடிழையாகப் பொங்கி வெளிப்படும் மானிட விடுதலை கோரி ஒலிக்கும் போர் முழக்கங்களாக மாற்றியதன் வெற்றியா, என்ன இது ?.

ஜெர்மன் நாடக ஆசிரியரும்,கவிஞரும், மார்க்சியச்சிந்தனையாளருமான பெர்டோல்ட் பிரக்ட் எழுதிய ‘தாய்’ நாடகத்திற்கும், மற்றொரு ஜெர்மன் நாடகத்திற்கும் அவற்றின் கன்னட மொழிபெயர்ப்பு வடிவப்பிரதிகளுக்குப் பாடல்களை எழுதுகிறார். கர்நாடக மக்களின் நாட்டார் வழக்காற்றியல் பாடல்களை, கதைகளை, குறிப்பாக நாட்டுப்புற தெய்வங்களைப் பற்றிய தொன்மக்கதைகளைத் திரட்டுகிறார். அவற்றை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுகிறார். அப்படியான தேடலின் போது, வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய ஓர் ஆளுமையைப் பற்றி அறிந்து அவரைப்பற்றி எழுதுகிறார். பெல்காம் மாவட்டத்தில், காகவாட என்ற கிராமத்தில் 1920-25-ஆம் ஆண்டுகளிலேயே ’தீண்டப்படாதோர் நாடகக்கம்பெனி’ என்ற குழுவை அமைத்து தேவதாசி முறைக்கு எதிரான ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார் இங்க்ளெதேவோ என்ற கலைஞர். முதலில், அந்த நாடகம் தங்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரானது என்று கருதும் தேவதாசிகள், அதை எதிர்த்து நாடகம் அரங்கேறும் இடங்களில் கற்களை வீசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த நாடகத்தை அண்ணல் அம்பேத்கர் பார்வையிட்டுப் பாராட்டியிருக்கிறார். அவருடைய நாடகக்குழுவில் ஒரு நடிகராகப் பங்கேற்றிருந்த ரத்னப்பா சூர்ய வம்ஷியையும், இங்க்ளெதேவோவின் மனைவியையும் தனது ஆய்வுப்பயணத்தின் போது சந்தித்து நேர்காணல் மூலம் மேற்கண்ட விவரங்களைத் திரட்டி, ‘வாழ்வின் தடங்கள்’ நூலில் ஒரு குறிப்பாகத் தந்திருக்கிறார் சித்தலிங்கையா.

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டிலும், நாமக்கல் கலை இலக்கிய முகாமிலும் பங்கேற்ற நினைவுகளைப் பதிவு செய்கிறார். மராட்டிய மாநிலத்திலிருந்து தயா பவார், அர்ஜுன் டாங்ளே, கோதாவரி பாருலேகர், கேரளத்தின் மகத்தான இலக்கிய ஆளுமையும், மார்க்சிய அறிஞருமான பி.கோவிந்த பிள்ளை, கன்னட மொழியில் கேரளத்துக் கையூர் தியாகிகளின் அழியாத நினைவுகளை நாவலாக எழுதி ’நினைவுகள் அழிவதில்லை’ என நிறுவிய நிரஞ்சனா, கர்நாடக மாநிலத்தின் பல முக்கிய கலை இலக்கிய ஆளுமைகள், குறிப்பாக தேவனூரு மகாதேவ போன்றோரைப்பற்றியும் வாழ்வின் தடங்கள் நூலில் எழுதுகிறார் கவிஞர்.

வீட்டினுள் போதிய இடமில்லாமல் தெருவிலேயே சூரிய ஒளி சுட்டெரிக்கத் தொடங்கும் வரை தூங்கிய அனுபவங்களை துயர்ச்சாயல் துளியுமின்றிச் சொல்ல இவரால் முடிகிறது. தலித் இலக்கியங்களின் மீது, ஆளுமைகளின் மீது ஆதிக்க சக்திகள் தாக்குதல் தொடுக்கும்போது மாநிலம் தழுவிய ‘தலித் சங்கர்ஷ் சமிதி’ அமைப்பின் மூலம் புரட்சிகரக் கலை இலக்கிய மாநாடுகளை நடத்திய போராட்ட அனுபவங்களையும் நகைச்சுவை ததும்ப எழுத இவரால் முடிகிறது. தான் தலித் என்ற காரணத்தாலேயே ஒரு வீட்டில் வாடகைக்குக் குடிபோக முடியாமல் இவர் திருப்பி அனுப்பப்படுகிறார். மற்றோர் இடத்தில் அதைப்பொருட்படுத்தாமல் இவருக்குக் குறைந்த வாடகையில் வீடு தரும் ஒருவரையும் சந்திக்கிறார். மிகவும் புகழ்பெற்ற,முதல்வர் பதவியில் இருக்கும் ஆளுமைகளையும் சந்திக்கிறார். தேவனூரு மகாதேவ, நிரஞ்சனா, கோவிந்த பிள்ளை உள்ளிட்ட மாபெரும் இலக்கிய ஆளுமைகளாலும் கொண்டாடப்படுகிறார். வாங்கிய கடனைத்திருப்பிக்கட்ட முடியாமல் தனது நான்கு வயதுக்குழந்தையையே கடனுக்கு ஈடாகப் பறி கொடுக்கும் பெயர் தெரியாத ஒரு தாயைக் கண்டு கண்ணீர் சிந்துகிறார். அதே போலக் கடனைக்கட்ட முடியாத நிலையில் கடன் கொடுத்தவனின் மோசமான தாக்குதல்களால் மனம் உடைந்து நெருப்பு வைத்துக்கொண்டு தெருவில் தன் கண்முன்னால் மடியும் ஓர் ஏழையின் அவல வாழ்க்கையையும் பதிவு செய்கிறார். வெறும் பார்வையாளனாக அல்ல; மாறாக, இந்தக் கொடுமைகளைச் சுட்டெரிக்கும் சூரியக்கதிர்கள் போன்று தகிக்கும் சொற்களால் சாடுகிறார்.

இவர் முன்னின்று நடத்திய தலித் சங்கர்ஷ் சமிதி மாநாட்டை வாழ்த்திப்பேசிய போது, “ பாறைகளின் மீதும் மொக்குகள் மலர வேண்டும்” என்று தேவனூரு மகாதேவ சொல்கிறார். சித்தலிங்கையாவின் வாழ்வின் தடங்களைப் படிக்கையில், வேறு யாரையும் விட, சித்தலிங்கையாவே அப்படி பாறைகளின் மீது மலர்ந்த ஒரு கவி மொக்குதான் என்று நமக்குப் புலனாகிறது. என்றும் வாடாத, இதழ்கள் உதிராத அபூர்வ மொக்கு !

கமலாலயன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *