கண்ணனின் கவிதைகள்

Kannan Poems 5 கண்ணனின் கவிதைகள் 5

இன்னொரு முகம்
************************
இளமையை உறிஞ்சியபின்
சக்கையாய்த் துப்பி விட்டு
தன்னம்பிக்கையை
பிளிறலுடன்
காலிலிட்டு நசுக்கி விட்டு
பிச்சைக்காரனாய்
திருவோடு ஏந்தவைத்து
திரும்பிப் பார்க்காவிடில்
கோழையாய் அழவிட்டு
தெருப்பெயருக்காய்
தெருநாயாய் அலையவிட்டு
பாடத்தை விட்டு விட்டுப்
பெயரை எழுத வைத்து
பிணம் தின்னும் கழுகாய்
இதயத்தைக் கிழித்து விட்டு
கண் இமைகளை
ஆணியடித்து மாட்டிவிட்டு
தடதடக்கும் வண்டியை
மூளையில் இரவெல்லாம்
ஓடவிட்டு
தாடி வளர்த்து
தன்னையே மறந்து
பித்துப்பிடிக்க வைக்கும்
இந்த இன்னொரு
முகம் தான்
எத்தனை அழகு
இக்காதலுக்கு

அழுதுகொண்டே இருக்கிறார்கள்
**************************************
யாரோ எப்போதும்
அழுதுகொண்டே
இருக்கிறார்கள்
அழுகை தொற்றுகிறது
கொட்டாவி போல
அழுகை வழிந்தோடி
அறையை நிரப்புகிறது
மருத்துவக் கடவுளை
மன்றாடி
வேண்டுகிறார்கள்
கைகள் கூப்பியபடி
கதறுகிறார்கள்
ஆனாலும் அந்த
வார்த்தைகள் வந்து சேர்கின்றன
‘எங்களால முடிஞ்சத செஞ்சிட்டம்
கூட்டிக்கிட்டுப் போய்டுங்க’
வார்த்தைகளின்
வலி தாங்காமல்
புயற்காற்றில்
வாழையாய்
ஒடிந்து மடங்கி
விழுகிறார்கள்
எத்தனையோ பார்த்த பூமி
தாங்குகிறது இவர்களையும்

பிறந்தநாள்
**************
பிறந்தநாள் பலூன் வெடித்த
அடுத்த நாள் கேட்டேன்
‘அடுத்த பிறந்தநாள் எப்ப?’
தாமதமின்றி உடனே பதில்
‘நாளைக்குக் காலையில வரும்’
வளர்ந்த பின்
வருடத்திற்கு ஒரு முறைதான்
வருகிறது பிறந்தநாள்

ஒருநாள் கூத்து
******************
திறந்திருந்த கதவினூடே
திபுதிபுவென
நுழைந்தனர்
ஒருவர் கேட்டார்
‘எத்தன ஓட்டு, நாலா?’
மற்றுமொருவர்
‘உங்க மனைவிக்கு
தூரத்து சொந்தம்’
அடுத்த நாள்
மற்றொருவர் சொன்னார்
‘உங்க மனைவிக்கு
நெருங்கிய சொந்தம்’
பிறிதொரு நாளில்
இன்னொருவர்
‘நல்ல தண்ணீர் வரலயா?’,
‘ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்’
ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேஷங்கள்
என்ன, இத்தனை சொந்தங்களை
ஒரு நாளும்
பார்த்ததில்லை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது b[email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.