Kannanin Poems 3 கண்ணனின் கவிதைகள் 3

கண்ணனின் கவிதைகள்




ஒரு கணம்
சூப்பர் மேன்
மறுகணம்
தலையில் முக்காடிட்டப்
பூச்சாண்டி
இன்னொரு கணமோ
கண்களைக் கட்டியபடி
கண்ணாமூச்சி
வெட்டிடும் மின்னலாய்க்
கணம் தோறும்
காட்சிகள் மாறும்
குழந்தையின் கையில்
தலைதுவட்டக் கொடுத்தப்
பூத்துண்டு
வளரும் போது தான்
நமக்கு மறந்து விட்டது
அனைத்தும்

வீட்டுக்கு வீடு
பக்கத்து வீட்டில் சிறுநீரகப் பிரச்சினை
எதிர்த்த வீட்டில்
ரத்த அழுத்தம்
பக்கத்தில் மருத்துவருக்கு
சர்க்கரை
வீட்டில் ஒருவர்
நோயாளியெனினும்
வீடே மருத்துவமனை தான்

அவசர ஊர்தியின் அலறல்
***********************************
சன்னமாய்த் தொடங்கி
உச்சஸ்தாயியில்
உயிர் சற்றே உறையும்
குடல் முறுக்கி
ஓங்கரிக்கும்
வாகன ஓட்டிகள்
உயிர் காக்கும் தேவதைகள்
அப்பா அம்மா
இவளின் அப்பா அம்மா தம்பி
எத்தனை மருத்துவமனைகள்
கொசுக்கள் தூக்கிச் சென்ற
எத்தனையோ இரவுகள்
புரண்டு படுத்த நாற்காலிகளில் நினைவுத் தழும்புகள்
கடவுளுக்கு அடுத்துக்
கைதொழுத கணங்கள்
அவசர சிகிச்சைப் பிரிவின்முன்
வழிந்தோடும் கண்ணீர்
நெஞ்சைக் கிழிக்கும்
இழந்தவர்களின் ஓலம்
மதியம் இரண்டுக்கே
எங்கள் வண்டி முப்பத்திரண்டு
காய்கறி சந்தைக்குப்
போட்டியிடும் கூட்டம்
பார்த்துப் பார்த்து
மரத்துப் போச்சு மனசு
வாழ்நாளில் இவ்வண்டி
ஏறாத கால்கள்
பாக்கியம் செய்தவை

மூன்று நாட்கள்
*******************
உள்ளறையிலிருந்து கணவனுக்கு
குறுஞ்செய்தி
‘மேசையில் பொங்கல்’
கணவரிடமிருந்து மனைவிக்கு
‘இரவு உணவு வேண்டாம்
நண்பர் வீட்டில் பூஜை’
தானே நடை சாத்தி
திரை மூடி
முகம் பார்க்க விரும்பாமல்
முக்கண்ணனின் பாலகன்
அறிவிப்பு வெளியானது
மூன்று நாட்கள்
தரிசனம் ரத்து

பெயர்ப் பிழை
*****************
‘சுப்பிரமணி யாரு
இந்த மருந்து வாங்கிட்டு வாங்க’
‘சுப்பிரமணி மருந்து தயார்’
‘குமார் மருத்துவரைப்
பார்க்க வாங்க சுப்பிரமணி’
இருபது நாட்கள்
என் பெயர்
எனக்கே ஞாபகமில்லை
புதிய பதவியில்
அவசர சிகிச்சைப் பிரிவில்
நோயாளிக்கு உதவியாளர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *