கண்ணீரில் நனையும் உலகம் கவிதை – வசந்ததீபன்

Kanneeril Nanayum Ulagam Poem by Vasantha deepan வசந்ததீபனின் கண்ணீரில் நனையும் உலகம் கவிதை
கண்ணீரில் நனையும் உலகம்
____________________________________
பூக்கள் மலருகின்றன
உலகம் சந்தோஷம் கொள்கிறது
உதிர்வதை யாரும் கண்டு கொள்வதில்லை
வாராயோ மணமகளே வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பணமும், நகைகளும் சுமந்து வாராயோ
பறவைகள் காலத்தைக் கடக்கின்றன
எறும்புகள் கனவுகளைத் தாண்டுகின்றன
சப்பணமிட்டபடி
என்னைப் பிரிந்து செல்கிறேன்
கல்லாய் அவள் என்னுள் விழுந்தாள்
அலைகள் எழும்பி ஆடுகின்றன
நான் நீரில் அலையும் சருகு
நதிக் கரையில் நின்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது

இருளும் ஒளியுமாய் உலகம் சுழல்கிறது
தண்ணிக்குள் முதலை
தரைக்கு வந்தால் கரடி
இறக்கையற்ற நான்
இதயம் நீர்த் தடாகம்
கனவுகள் வண்ண மீன்கள்
கவிதைகள் நீர் ஊற்று
மழைத் துளிகள் உதிர்கின்றன
மண் கீறி வாசம் எழுகிறது
மகிழ்ச்சி கரை புரண்டோடுகிறது.
பகிரப் படாத துயரம்
என்னைத் தின்கிறது
பழுத்து உதிர
நேசம் தருணம் பார்க்கிறது
புதை குழியின் மேல் பூ அலங்காரம்
மெல்லிடையாள் மனம் புகுந்தாள்
சாகாமல் சாகிறேன்
மெல்லக் கொல்லும் விஷம் காதல்…காதல்
நீலக்கடல் சிவந்து நாறுகிறது
வேதனை பொழிகிறது இழப்பின் வானம்
கனவுகளைத் தின்று சாகிறது கடற்புறம்
தூண்டிலில் சிக்கியது மீன்
புழுக்களால் நிரம்பியிருக்கிறது
அதன் வயிறு
கடலில் விழுந்த மனிதன் புழுக்களானான்
புன்னகையில் ஒளிந்திருக்கும்

குறு வாள்
இதயத்தில் முளைத்திருக்கும்
விஷச் செடி
புறக்கணிக்கப்படும் அன்பு
குளிரில் நடுங்கும் பிச்சிப் பூக் கொடி
இளஞ்சூடால் தொடும்
இளங்காலை சூரியன்
அவன் வரவை எண்ணியபடி அவள்
அழகிய புயல்
கனவுகளில் வீசுகிறது
இரவுகளில் உதிக்கிறது சூரியன்
குழந்தைகள் ஆடிப்பாடுகிறார்கள்
சந்தோஷங்கள் பராமரிக்கப்படுகின்றன
மாற்று வழியில் செல்
தலை சாய்க்க துளி இடமில்லை
நகரத்து சந்துகளில் அலைந்து திரிகிறேன்
கைப்பிடியளவு நிலம் வேண்டும் பராசக்தி
கூடை நிறைய பலகாரங்கள்
உதடுகள் நிறைய முத்தங்கள்

என் கல்லறைக்கு அவள் வந்தாள்
இரத்தம் தோய்ந்த கத்தி
அவள் வீசும் புன்னகை
நானும் சாகத் தயார்
காடெல்லாம் பாழ்
நாடெல்லாம் அனல்
அழிவு தொடர்கதை
ஆகாயத் தாமரை அடர்ந்திருக்கிறது
நிறைய நெகிழி
நீர்க் கோழியை நினைத்தபடி குளம்
வயிறோடு மட்டும் பிறக்கவில்லை
இரண்டு கைகளோடு பிறந்திருக்கிறோம்
வம்சத்தை வேரறுக்க விடமாட்டோம்.
மீனுக்குப் புழு மேல் கண்
பிடிப்பவனுக்கோ மீனே குறி
புழுவுக்கோ வர்ண வலி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.