“அறம்” என்ற தமுஎகசவின் உட்கிளை ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் கையில் இலங்கும் 75 பேரின் பேனாக்கள் முதன்முறையாய்க் கவிதைகள் எழுதியிருக்கின்றன.
கடந்த 2019ஆம் ஆ;ணடு ஜுன் 23 அன்று சென்னையில் துவங்க்ப்பட்ட தமுஎகச அறம் கிளை தமிழகமெங்கும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. அக்கு பங்சர் மருத்துவத்தின் வழியே நலவாழ்வுப்பணியாற்றும் அவர்கள் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு செயல்படுகிறார்கள் என்றால் ஆச்சர்யந்தான்.ஆச்சர்யம் அல்ல: யதார்த்தம். உடலுக்கு சிகிச்சை அக்கபங்சர். மனதுக்கு சிகிச்சை இலக்கியம். அவர்களின் பார்வையைப் பண்பாட்டுத் திசைநோக்கித் திருப்பிவிட்ட பெருமை மாநிலக்குழு உறுப்பினரும் அறம் கிளைச் செயலாளருமான தோழர் உமர் பரூக் அவர்களையே சாரும்.
தோழர் உமர்பரூக் இளம் வயதிருந்தே இலக்கியத்தின் மீதும் பண்பாட்டுத்தரவுகள்மீதும் அளவிலா ஆர்வம் கொண்டு கற்றுத் தேர்ந்தார். அவரும் தமிழ்மணியும் இணைந்து நடத்திய கவியரங்கங்களும் இலக்கியம் ;சார்ந்த சிறுபத்திரிகைகளும் அந்த நாளில் அதிகம் கவனம் பற்றவை. பிறருக்கும் பயன்தந்து தஙகள் திறமையையும் வளர்த்துக்கொண்டனர். பெற்ற திறமையை வீணடிக்காமல் தமிழ்பேசும் சகலருக்குமான பயன்பாடாய்த் தகவமைத்துக் கொண்டிருக்கிறார் உமர்பரூக்.
முதலில் திரைக் காட்சிகள் வழியாக அறம் கிளை உறுப்பினர்களை இலக்கியத்தின் பக்கம் ஈர்த்தார். அடுத்து சிறுகதை நூல்களை வாசிக்கத்தந்தார். காட்சி உருவில் கண்டவற்றையும் எழுத்து ரூபத்தில் வாசித்தவற்றையும் பற்றி ஏதேனும் எழுதச் சொன்னார். அவர்களும் மனமுவந்த எழுதினார்கள். அந்தப் பதிவுகள் இலக்கிய இன்பம் நனி சொட்டச் சொட்ட மிளிர்ந்தன. பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைக் கண்டும் வாசித்தும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கட்டுரைகளை எழுதியுள்ளனர் அறம் கிளை உறுப்பினர்கள்..
இந்தியாவில் 33 விழுக்காட்டுக்கே இன்னும் கதவுதிறக்காத நிலையில் அறம் கிளையின் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமான பெண்கள் வாசிக்கவும் எழுதவும் ஓங்கிய கரலில் தங்கள் கருத்துக்களைப் பேசவும் உரிமைபெற்றவர்களாய் மாறியிருக்கின்றனர். இப்படியான ஒரு சாதனை பண்பாட்டுத்தளத்தில் நிகழ்ந்திருப்பது அறம் கிளையில் தவிர வேறெங்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
வாசித்ததைப் பதிவுசெய்வது என்ற நிலையைத் தாண்டி அடுத்த அடி எடுத்துவைக்கும் விதமாக ஹைக்கூக் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள். “கண்ணுக்குத் தெரிந்த கடவுள்” என்ற தலைப்பில் அந்தநூல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஹைக்கூ இயக்கத்தின் முன்னத்தி ஏர் மு. முருகேஷ் பயிற்சிதந்து எழுதவைத்திருக்கிறார். 75 பேனாக்கள் தங்கள் மென்மையினும் மென்மையான கவிதைப்பூக்களை அந்தநூலில் பூக்கவைத்துள்ளார்கள்.
ஹைக்கூ என்பது மூன்றுபரிகளைக் கொண்ட ஜப்பானிய கவிதைமரபு. முதல் இரண்டு வரிகளில் ஒரு சங்கதியைச் சொல்லி மூன்றாவது வரியில் மேல்சொன்ன சங்கதியோடு சம்பந்தப்பட்ட ஆனால் வாசகமனம் எதிர்பாராத இன்னொரு விஷயத்தைச் சொல்வதுதான் ஹைக்கூ.
“மரத்திலிருந்து உதிர்ந்த பூ
மீண்டும் மரத்தின்மேல்.
வண்ணத்துப்பூச்சி.”
ஜப்பான் மொழியில் வெளிவந்த முதல் ஹைக்கூ இதுதான் என்று சொல்கிறார்கள். பூ பட்டாம்பூச்சியாய் விலகும் அல்லது பரிணாமப்படும் இடந்தான் ஹைக்கூவின் மையம். இந்த மரபை உள்வாங்கிய கவிஞர்கள் அநேகமாக உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள் என்கிறார் கவிஞர் மு முருகேஷ்.
“கண்ணில் தெரியும் கடவுள்” தொகுப்பு எழுபத்தைந்து கிஞர்களின் 252 கவிதைகளைக் கொண்டிருக்கிறது. இதிலும் பெரும்பான்மையினர் பெண்கள். அதாவது 47 பெண்கள். 28 ஆண்கள். மொத்தம் 75 பேனாக்கள் வரிசையிட்டு நிற்கின்றன. முன்னது பின்னது என்று பிரித்துப்பார்க்கமுடியவில்லை. எல்லாமே ஏதாவது ஒருவகையில் சிறப்படைந்திருக்கின்றன.
இப்போதெல்லாம் நோய்கள் முற்றி மனிதர்கள் அல்லாடுகிறார்கள். யார் எந்த மருந்தைச்சொனனாலும் அதை வாங்கி உட்கொளகின்றனர். எப்படியாவது நோய் குணமாகவேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு. சில பத்து வருடங்களுக்கு முன்பு பழையசோறு உடலுக்கு ஆகாது என்று அறிவுரை கூறினார்கள் மருத்துவர்கள். பழைய சோற்றில் சக்கரைச் சத்து என்று சொல்லப்படுகிற நீரிழிவு நோய்க்கான பொருள்திணிவு அதிகம் இருக்கிறதாம். இப்போது அதே வாசகம் தலைகீழாய் மாறிவிட்டது. உடல் உபாதையைப் போக்கக்கூடிய ஈஸ்டு பூச்சிகள் பழைய சோறில் அதிகம் பொதிந்துகிடக்கிறதாம். நட்சத்திர உணவகங்கள் இந்த “அறிவுரை” யைக் காசாக்கும் நோக்கில் தங்கள் விடுதியில் கழைய சோறு கிடைக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இந்தச் சூழலை எள்ளல் நடையுடன் இயம்புகிறது ஒரு ஹைக்கூ.
“இன்றைய சிறப்பு உணவு
நட்சத்திர உணவகத்தில்
‘பழைய சோறு.”
அங்கதச்சுவையுடன்கூடிய இந்த ஹைக்கூவை எழுதிரயிருப்பவர் கவிதா பிருத்வி. நட்சத்திர உணவகத்தின் ஆடம்பரப் பதார்த்தங்களை மட்டுமே புரிந்தவர்கள் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். மேல் இரண்டு வரிகளுக்கும் அடிவரிக்கும் இருக்கும் முரண்தான் ஹைக்கூவின் இயல்பு.
இன்னொரு கவிதை மு. தனஞ்செழியன் எழுதியது.
“அசையாத அம்மாவின் இமைகளை
விளையாட்டாய் மூடின
பிஞ்சு விரல்கள்.”
அனிமல் பிளானெட்டில் பார்த்த ஒரு காட்சி! தாய் யானை நோயுற்றுக் கீழே சரிகிறது. குட்டி யானை அம்மாவை எழுப்பப் பெருமுயற்சி சய்கிறது. தாய் யானை எழுந்தரிக்காத நிலையில் மடியை உறிஞ்சி உறிஞ்சிப் பால் கேட்கிறது. அம்மா இறந்ததைப் புரிந்துகொள்ளாத குட்டி யானைபோல ஒரு மனிதக் குழந்தையும் செய்கிறது. இறந்துகிடக்கிறாள் எனத் தெரியாமல் விளையாட்டாய் அம்மாவின் இமையை மூடிய பிஞ்சுவிரல்கள் வாசிப்பவரைக் கண்கலங்க வைக்கின்றன.
இரா. ஜெயந்தி எழுதிய ஒரு ஹைக்கூ மிகுந்த ரசனைக்குரியது.
“உறக்கத்திலும்
காலைக்கட்டிச் சிரிக்கும்
கொலுசு.”
இப்படி வாழ்வியல் பிரச்சிணைகள், வணிகமருத்துவம் பற்றிய எச்சரிக்கை, அறம் சார்ந்த அறிவுசைகள், நையாண்டிச் சித்திரங்கள், படிமக்கூறுகளுடன் கூடிய சொல்லாடல்கள் எனப் பலப்பல கோணங்களில் பதிவிடப் பட்டிருக்கின்றன.
கொரோனாக் காலத்தின் நடவடிக்கைகளை முன்வைத்தும் பல ஹைக்கூக்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்றைமட்டும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். ப. செந்தில் எழுதியது.
இப்போதெல்லாம் நிறைய மனிதர்களை அடையாளங்காண்பது எளிதாக இல்லை. எல்லா மனிதர்களும் முகக்கவசம் பூட்டி முகமற்றவர்களாய்த் திரிகிறார்கள். அவர்களின் குரலை வைத்தோ உடல் நடையின் பரிமாணத்தை வைத்தோதான் அடையாளங் காண வேண்டியிருக்கிறது. இதைப்பரிகாசம் செய்யும் அழகான ஹைக்கூ இது.
“புன்னகை முகம் பார்த்தே
நாளாகி விட்டது
முகக்கவசம்.”
எல்லாப்படைப்புக்களும் தகுதியானவைதான். சில இடங்களில் படிமக்கூறுகளும் பதியமிட்டிருக்கின்றன. வாசிக்க வாசிக்க இன்பம் பொழிகிறது. இவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் புதிய உத்திகளோடும் உள்ளடக்கக் கூறுகளோடும் இவர்களின் பேனா மேன்மையடையும் என்பதில் சந்தேகமில்லை.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
கண்ணில் தெரியும்கடவுள்!
(ஹைக்கூக் கவிதைகள்.)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
அறம் கிளை.
அகநி பதிப்பகம்.
பக்கம் 80
விலை ரூ 70/


நன்றி தோழர் தேனி சீருடையான்.
தங்களின் விமர்சனம் எழுத்தின் துவக்கத்தில் இருப்பவருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
தங்களின் அழகிய விமர்சனம் கண்ணில் தெரியும் கடவுளை மீண்டும் வாசிக்க தூண்டுகிறது … வாழ்த்துகள் தோழர்