ஒரு நாவல் – ஒரே நாவல் – ஒரே நாவலில் இவ்வளவு விசயங்களை – பல்வேறு தரப்பட்ட தகவல்களை வாசிக்கும் வாசகனுக்கு சலிப்பின்றி கதையினூடே கூறி நாவலை சுவாரஸ்யமாக நகர்த்த இயலுமா? முடியுமென்று நிரூபிக்கிறது எழுத்தாளர் சரவண கார்த்திகேயனின் *”கன்னித்தீவு“* நாவல்.
சமகால அரசியல், வரலாறு, புவியியல், சூழலியல், பொதுவுடைமை, நாத்திகம், ஆன்மீகம், மனிதம், காதல், கலவி என அத்தனையும் ஒருங்கே நாவலின் வழியே தொட்டுச் சென்றுள்ளார் நூலாசிரியர்.
நாவலின் கதையைக் கூறலாமா? வேண்டாமா?🤔🤔 வேண்டாம். அதுதான் நீங்களே வாங்கி வாசிக்கப் போகிறீர்களே அப்புறம் எதற்கு நான் வேறு கூறி உங்களின் இனிமையான அனுபவத்தைக் கெடுக்க வேண்டும்?
நாவலில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரமென்று யாரைக் கூறுவது???
காதல் மணம் புரிந்த தன் மனைவியை இமைப்பொழுதும் பிரியாது, அவள் மகிழ்வே தன் மகிழ்வாய் எண்ணி வாழும், உள்ளூர் அரசியல் முதல் சாதி, மத உருவாக்கம் – வளர்ச்சியின் அடி முதல் நுனி வரை அறிந்தும் தன் கருத்தை மற்றவர் மீது திணிக்காமல் இயல்பாய் வாழ்வினை எதிர்கொள்ளும் முருகனையா?
அல்லது
கடவுள் நம்பிக்கை முதல் உணவு வரை தன் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான கணவனாயினும் அவனின் கருத்துகளுக்கும் முழு மரியாதையும், உரிமையுமளித்து, தான் கொண்ட கடமையில் சிறிதும் வழுவாது உயிர் போகும் நிலை வரையிலும் கூட அதற்காய் முழு ஈடுபாட்டுடன் உழைத்து, தன்னைக் காத்தோருக்கு நாகரிக வளர்ச்சியின் வாயில் திறக்கும் பார்வதியா?
அல்லது
கர்ப்பிணி என்ற ஒரே காரணத்திற்காய் தங்கள் நம்பிக்கைக்கும், குல வழக்கத்திற்கும் மாறாக ஒரு இனக்குழுவினரையே முழுதாய் சமாளித்து அவளுக்கு உற்ற தோழியாய் மாறி பிரியும் தருணத்திலும், பிரிந்த பின்னும் வருத்தமுற்றிருக்கும் மரியாவா?
இவர்களில் யார் எனக்கு பிடித்த கதைமாந்தரென பிரித்தறிய இயலா நிலையிலேயே இருக்கிறேன் நாவலை வாசித்து முடித்து இவ்வளவு நேரம் ஆனபின்னும்.
உண்மையில் இவர்கள் அனைவரையும் விட, ஏராளமான தரவுகளோடு வாசகர்களைத் தன் வார்த்தைகளின் நுனியிலிருத்தி நாவலின் ஆதி முதல் அந்தம் வரை வாசிப்பில் அயற்சியின்றி சூழலியல் மீது ஓர் ஆர்வத்தினையும் ஏற்படுத்தச் செய்த நூலாசிரியர் திரு. சி. சரவண கார்த்திகேயன் அவர்கள் எனை மிகவும் கவர்கிறார் என்று கூறுவேன்.
நாகரிகமானவர்கள் என்று கூறிக் கொள்ளும் மனிதர்களின் மூச்சுக்காற்று படும்வரை பழங்குடியினர் அவரவர் வழியே இயற்கையோடு இணைந்த வாழ்வினையே மேற்கொள்கின்றனர். நாம் தான் நாகரிகமென்ற பெயரில் இயற்கையிலிருந்து அவர்களை பிரிப்பதோடு சூழலையும் கெடுத்து இயற்கை அன்னையையும் கருவறுக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி பழங்குடியினர் தீவினை ஆசிரியர் கண்முன் காட்டும் போது எழுகிறது.
ஒரு நூல் வாசித்ததும் நமக்குள் அது ஒரு மனப்போராட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் அதை வாசித்ததில் அர்த்தமில்லையென்றே பொருள். அவ்வகையில் இந்நூலை வாசித்தபின்னும் என்னுள் தோன்றியவை இவை:
இயற்கையன்னையின் உணவுச்சங்கிலியை சீர்குலைக்காமல் வாழும் ஓர் இனக்குழுவிற்கு பார்வதி, நெருப்பின் பயனை உணர்த்தாமலே இருந்திருந்தால் அவர்கள் தாய் மடியின் கதகதப்பிலேயே இன்னும் சில நூறு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள் தானே? என்ற உணர்வு தோன்றியது.
இயற்கை முறையில் சுயபிரசவம் என்பது முன்பொரு காலத்தில் இருந்திருக்கலாம், இன்றும் சில பழங்குடியினரிடம் இருக்கலாம் எனினும் அது வளர்ந்து வரும் அறிவியல் சூழலில் தனிமனித பாதுகாப்பிற்கு ஏற்புடையதல்ல என்பதை நூலின் இறுதியில் ஆசிரியர் தனியே கூறியிருந்தாலும் அந்தப் பகுதியை நாவலில் தவிர்த்திருக்கலாம் என்பதும் என் எண்ணம்.
இன்னும் நிறைய…… வாய்ப்பிருப்பின் நூலாசிரியரிடமும் இவை பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும்.
எனினும் நாவலை வாசிக்கையில் ஒரு பரபரப்போடும், ஆர்வத்தோடும் நாவலின் வரிகளிலிருந்து இமைகள் விலகாது ஒரே மூச்சில் வாசித்துவிட வைக்கும் அருமையான நாவல் *”கன்னித்தீவு”*
வாசிப்பும், பகிர்வும்
*~ திவாகர். ஜெ ~*
கணித ஆசிரியர்
காஞ்சிபுரம்.
நூல் : கன்னித்தீவு
ஆசிரியர் : சி. சரவண கார்த்திகேயன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 270
விலை : ₹ 280
வகை : நாவல்