சூடா ஒரு டீ சாப்பிடலாமா?
வாங்க…வாங்க….!
ஒரு 238 லிட்டர் தண்ணி சாப்டு போங்க…
என்ன புரியலையா? ஒரு குவளை தேநீரை தான் (அதான்பா டீ) அப்படி சொல்றேன்.
என்ன சொல்றீங்க! ஒரு கப் டீயே அதிகபட்சமா 30 மி.லி. தானே இருக்கும்னு கேக்குறீங்களா? நானும் அப்படித்தான் நெனச்சிட்டு இருந்தேன் இந்த புத்தகத்தை படிக்கிற வரைக்கும்.
அப்படி என்ன சொல்லியிருக்கு இந்த புத்தகத்துல?
வேற என்ன?
எல்லாம் மூன்றாம் உலகப்போருக்கு காரணகர்த்தாவான “தண்ணீர்” மகாபிரபுவ பத்திதான். இவரென்ன பண்றாருனா வளரும் நாடுகள்/ மூன்றாம்தர நாடுகள் என மேற்குலகினால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளிலுள்ள மக்களின் தாகத்தைக் கூட சரியாக போக்காமல், வளர்ந்த நாடுகள் எனக் கூறிக்கொள்ளும் மக்களின் காலணிகளினுள்ளும், ஆடைகளினுள்ளும் ஒளிந்து கொள்கிறார். இதைத் தான் ‘மறைநீர்’ (virtual water) என்கிறார் நூலின் ஆசிரியர்.
விவரமாகவே சொல்கிறேன். நெல் மணிகளை உற்பத்தி செய்வதற்கு நீர் தேவைப்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால், நெல் விளைந்தவுடன் அதற்கு தேவைப்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. அதேசமயம் அந்த நீர் அந்த நெல்லிற்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே? அந்த நீர் தான் ‘மறைநீர்’. இந்த மறைநீர்தான் உலகவர்த்தகத்தின் ஆஸ்தான நாயகன். இதனடிப்படையிலான பொருளாதாரம் ‘மறைநீர் பொருளாதாரம்’ என நாமகரணம் செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் புரிந்துக்கொள்ள சில கேள்விகளை நம்முன் வைக்கிறார் நூலின் ஆசிரியர். (பதில்களையும் அவரே கொடுத்துவிடுவார், கவலை வேண்டாம்.)
“பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல்நாட்டினருக்கு, பின்னலாடை தொழிநுட்பம் தெரிந்த மேல்நாட்டினருக்கு, அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல்நாட்டினருக்கு, இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா? பின் ஏன் அதை மட்டும் இங்கே உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறார்கள்?”
“காலணி (shoe) தயாரிப்பிற்கு புகழ் பெற்ற இத்தாலி, ஏன் வாணியம்பாடியிலிருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை இறக்குமதி செய்கிறது? அதுவே பதப்படுத்திக் கொண்டால் இலாபம் இன்னும் இரட்டிப்பாகுமே?”
இப்படி பல ‘ஏன்’களுக்கு முதலாளித்துவ பொருளாதார பார்வை, அளிக்கும் பதில் “மலிவான மனிதவளம்” (அதாவது, நிறையபேர் வேலையில்லாத வெட்டிபசங்களா இருக்காங்கோமா, போனாபோகுதுனு நமக்கு அவங்க வேலைபோட்டுத் தாங்களாம்). இதுதான் உற்பத்தியை பெருக்க சரியான பொருளாதார உத்தி என, எனது பொருளாதார ஆசிரியர் கூறியதை நினைத்துக் கொண்டேன். அப்படி எனில் மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறார் ஆசிரியர்,
“சிக்கன நீர்ப்பாசன வேளாண்மைக்கு புகழ்பெற்ற இஸ்ரேல், பல வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஏன் ஆரஞ்சு பழங்களை ஏற்றுமதி செய்வதில்லை?”
“கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த சவூதி அரேபியா ஏன் உற்பத்தியை குறைத்துவிட்டு இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது?”
“பன்றி இறைச்சியை சீனர்கள் விரும்பி உண்ணும் போது, சீன அரசாங்கம் அதன் உற்பத்தியை கட்டுபடுத்தி வருகிறது?”
இங்கெல்லாம் “மலிவான மனிதவளம்” எனும் பதம் எந்த வினையையும் ஆற்றவில்லையே. ஆக, இந்த எல்லா கேள்விகளுக்குமான ஒருவரி பதில் ‘நீர் அரசியல்’ பலவரி பதில் ‘மறைநீர் பொருளாதாரம்’.(விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதே அளவுநீர் தான் இன்றும் உள்ளது. ஒரு சொட்டுகூட கூடவும் இல்லை, குறையவும் இல்லை. இது அறிவியல் உண்மை. பின் ஏன் இந்த அளவுக்கு நீர் தட்டுப்பாட்டு? இந்நூலின் ஆசிரியர் உலகநாடுகளைச் சுற்றிவந்து பல காரணங்களை அடுக்குகிறார். இங்கு, நாம் தமிழ்நாட்டிலிருந்து சில உதாரணங்களை மட்டும் காண்போம்.
சென்னை, ‘இந்தியாவின் டெட்ராய்ட்’என்ற பெருமையின் பின் 1.1 டன் எடையுள்ள ஒரு கார் உற்பத்திக்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீரைத் தாரைவார்க்கும் ஏமாளித்தனம் ஒளிந்துள்ளது. விளைவு, மாநிலத்தின் தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரே ஒரு பின்னலாடையின் மூலம் 2700 லிட்டர் தண்ணீர் கப்பலேரி செல்கிறது. நாம், உலகிலேயே மிக வேகமாக வளரும் நகருங்களுள் திருப்பூர்தான் முதலிடம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறோம்.வாணியம்பாடியிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் 1 கிலோ பதப்படுத்தப்பட்ட தோலின் மறைநீர் அளவு 16,600 லிட்டர். விளைவு, வேறென்ன பாலாறுக்கு பால் ஊற்றியது தான். இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தில் ஏமாளியாக இருந்த ஆப்பரிக்க நாடுகளின் தற்போதைய நிலமையை நம் நகரங்களோடு ஒப்பிட்டு பீதியை கிளப்புகிறார் ஆசிரியர். மேலும், மறைநீர் பொருளாதாரம், தண்ணீர் தட்டுப்பாடு இவற்றிற்கிடையேயுள்ள உறவையும் இதன் பின்னணியில் இருக்கும் சூழலியல் தீமைகளையும் அவர் பட்டியலிடும் போது ஆச்சரியகுறி எனும் அணிகலனை முகம் அணிச்சையாக அணிந்துகொள்கிறது.
ஒரு அணையின் மேல்பகுதியில் இருக்கும் மக்கள் அதை திறக்கக்கூடாது எனப் போராடுவதும், கீழ்ப்பகுதியில் இருக்கும் மக்கள் திறக்க வேண்டுமென போராடுவதும் உலக வழமை வேளாண் அரசியல். காவிரி நதிநீர் பிரச்சனையில் கூட தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையில் நடப்பது இதுதான். ஆனால் இதற்கு நேர்மாறாக உள்ளது தமிழகத்தில் ஓர் அணை. திருப்பூர் நகரிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள ஒரத்துப்பாளையம் அணைதான் அது. காவிரியின் துணைநதியான நொய்யலின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தான் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்ஞாகி அணைக்கு மேல்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக தான் அணையின் கீழ்ப்பகுதி மக்கள் அணையை திறக்க வேண்டாம் என போராட்டம் செய்கிறார்கள். இதன் கொடூரம், ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் இளநீர் செந்நிரமாக மாறி போனதால் குடிக்க எவருமின்றி தொங்கிக்கொண்டிருப்பதில் வெளிப்படுகிறது. வாணியம்பாடி தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றை இராசயண கழிவுநீர் தொட்டிபோல் மாற்றிவிட்டன.
இந்த பின்னணியில் தண்ணீர் தட்டுப்பாட்டை பாருங்கள், ஒருபக்கம் தண்ணீர் மறைநீராக ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், இருக்கும் சொற்பநீரும் மாசடைந்து கிடக்கிறது. இங்குள்ள குடிநீரில் 72 விழுக்காடு குடிக்க லாயக்கற்றது என்று தமிழக பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது.
(குறிப்பு: இந்த இரசாயண கழிவுகள் ஒரு வழியாகக் கடலை அடையும்போது, கடலோர காடுகளான கண்டல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கண்டலைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள நக்கீரனின் இன்னொரு புத்தகமான அலையாத்தி காடு என்பதை படிக்கவும்).
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் சாயத்தொழிற்சாலைகளோ, தோல் பதனிடும் தொழிற்சாலைகளோ இல்லை. இப்பொருட்களை அந்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது. இக்காரணத்தில் இந்நாட்டின் தலைநகரம் ‘நீரின் நகரம்’ என அழைக்கப்படுகிறது.
தண்ணீரும் அதைச்சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்த்து இது போன்ற வளர்ச்சி எனும் ஆயுதம் தாங்கிய தொழிற்சாலைகளினால் ஏற்படுத்தப்படும் சுகாதார, உடல்நல கேடுகள் எனும் காயங்கள் நிகழ்கால கண்ணீர் சாட்சியங்கள். அதற்கு தனியே மேலும் சில புத்தகங்களை எழுத வேண்டும். இறுதியாக, வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் உள்ள செல்வ சீமாட்டிகள் ஆடம்பர கட்டிலில் புரண்டு விளையாட, ஏழைகளும், ஏழைநாட்டு மக்களின் வளங்களும் வதைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ‘சிவப்பு பொருளாதாரத்தை’ கைவிட்டு, ‘பச்சை பொருளாதாரத்தைக் கையிலெடுக்க அரசுகள் முன்வர வேண்டுமென இப்புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.
– சூரியா சுந்தரராஜன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.