மரபை வெட்டியும் ஒட்டியும் புத்திலக்கியங்கள் பயணிக்க ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டு குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை இலக்கிய உலகில் பதிய விட்டுள்ளது. உலக இலக்கியப் போக்கின் அங்கமாக இந்திய இலக்கிய வெளியில் உருவான புத்திலக்கியக் கோட்பாடுகளும் ஏற்கப்பட்ட மரபுகளின் மீதும், கட்டமைக்கப்பட்ட புனிதங்களின் மீதும் தம் கருத்துக்களை எடுத்துவைத்து, விவாதத்துக்கு உட்படுத்தி, புதிய கருத்துருவாக்கத்திற்கு வழிகோலின.
புத்திலக்கிய அமைப்பில் ஏற்பட்ட மரபு மாற்றமே கவிதை என்னும் அமைப்பாகும். காலத்தின் தேவையை ஒட்டி எந்த ஒன்றிலும் புதுமைகளைப் புகுத்தி பார்க்கும் தன்மை, மனித சமூகத்தின் அடிப்படையான குணாதிசயமாக இருந்திருக்கிறது. இருக்கிறது. இனியும் இருக்கும். இம்மாற்றங்களை எக்காரணம் கொண்டும் தவிர்த்துவிட்டு நடக்க இயலாது. போற்றிப் புகழ்ந்து வினாக்களுக்கு அப்பாற்பட்டது என்று கட்டமைக்கப்பட்ட மரபுகள், புனிதங்கள் பலவும் தற்காலிக தக்கவைப்புகளைச் சாத்தியப்படுத்திக் கொண்டனவேயன்றி காலத்தை வென்று நிலைபெற இயலவில்லை என்பதை வரலாற்றுத் தடயங்கள் நமக்குப் புலனாக்குகின்றன. இத்தகைய இயங்குதளத்தை, இயக்கத்தை நவீனம், பின்னை நவீனம் என்ற கோட்பாட்டு அளவீடுகளால் வரையறுத்துக் கூறுகின்றனர் இலக்கிய, வரலாற்று அறிஞர்கள்;.
சமூக நிலைகளில் மேல் தமது பார்வைக் கோணத்தை பதியச் செய்யும் படைப்பாளன், தனது படைப்பின் உள்ளீடுகளில் பன்முகத்தன்மையும், தனிநபர் உணர்வும் வெளிப்படுமாறு முன்வைக்கிறான். அமைப்பியலை விடவும் உள்ளீடுகளுக்கு அதிகம் மதிப்பளிக்கும் படைப்பாளன் மக்களின் குரலாய் சமூகத்தின் தேவையை வெளிப்படுத்துவதாகவே தனது படைப்பினை அமைக்கிறான்.
இன்குலாப் மக்கள் குரல்
‘கவிதை வெறும் மனதின் குரலாக நின்று விடுவதன்று: அது மக்களின் குரலாக திசைகள் தோறும் எதிரொலிக்கும் இயக்கம்.’ என்கிறார் பேரா.ஞானி அவர்கள்.
கலை யாருக்கானது என்பதை படைப்பு எழுகின்ற காரணத்தையும், இயங்கும் தளத்தையும், தன்மையையும் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. எத்தகுதியினராயினும் படைப்பை வழிபடுநிலைக்கும், புகழ் நோக்கமுமாகப் படைக்கின்றவர்களிடத்தில் நூலாக மட்டும் குறுகிவிடுகிறது. சமூக விடுதலை தளங்களில் இயங்குகின்ற படைப்பாளனால் மட்டுமே கலையை மக்களுக்கானதாக பயன்படுத்துதல் இயலும்.
கலையைக் காப்பாற்றி வைக்க முயலும் கலைஞனிடம், படைப்பு என்பது கலையோடுச் சேர்த்து காலந்தோறும் பயணப்பட்ட அதே பிற்போக்குத்தனங்களையும் தக்க வைக்கின்ற முயற்சியாக அமைந்து விடுகிறது. இதுபற்றித் தெளிவாக அறிந்திருந்த இன்குலாப், சமூக விடுதலையினை இயங்குதளம் ஆக்கிக்கொண்டு மரபுகளோடுடளானத் தமது போரைத் துவக்கி காந்தள் நாட்களாய் நடத்துகிறார்.
காந்தள் நாட்கள் எழுகின்ற காலச்சூழல் நுணுகி நோக்கி ஆய்தற்குரியது. சமகால விழுமியங்களோடும் நிகழ்வுகளோடும் தன்னையும், தன் கருத்தியலையும் பொருத்திப் பார்த்து சமூகத்தின் தேவை இன்னதென்று உணர்ந்து, தம் இலக்கியப் படைப்பை வடிவமைத்துக் கொண்ட இன்குலாப், கவிதை உருக்கொள்ளும் காரணிகளை வாசகன் அறிந்திடும் நாட்குறிப்பு அடிக்குறிப்புகளாக வைத்துச்செல்கிறார். தனது காலத்தின் அறிவுசால் வரலாற்று நாட்காட்டியாக காந்தள் நாட்களைக் கசிய விடுகிற இன்குலாப், மக்களுக்கான களப்போராட்டத்தைத் தாண்டி காலந்தோறும் நிலைத்திடுகின்றக் கருத்துப்போரையும் முன்னெடுக்கிறார்.
சமகால பிரச்சினைகளிலிருந்து அவற்றின் வேர்களைத்தேடி பயணிக்கின்ற படைப்பாளன், மரபுகள் எனும் புனிதக் கட்டமைப்புக்குள் பிற்போக்குத்தனத்தின் வேர்கள் ஆழப்பதிந்துள்ளதை அறிந்து, அதன் மீதான தாக்குதலை எங்ஙனம் தொடுக்கிறார். என்பதை இக்கட்டுரையின் வழியாக அறிய முயல்கிறோம்.
இலக்கியத்தை சனநாயகப்படுத்திய இன்குலாப்
சமூக மாற்றத்தை நிர்ணயிக்கும் கூறுகளில் கலை, பண்பாடு, இலக்கியம், அறிவு இயல் என்பவற்றைப் புறக்கணித்துவிட இயலாது. படைப்பாளன் கண்ணுற்ற வாழ்க்கைச் சூழலுக்கும், எண்ணவோட்டத்திற்கும் இடையே நடக்கும் ஓயாத போராட்டமே கவித்துவத்தின் ஊற்றுக்கண்ணாக காந்தள் நாட்களில் வெளிப்படுகிறது.
இன்குலாப், ஏற்கப்பட்ட மரபுகளை எதிர்நின்று வாதிடும் நிலைப்பாட்டின் பாற்ப்பட்டு, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார். கல்வி மரபு, சட்ட மரபு, பெண்ணிய மரபு, தேசிய மரபு, சமய மரபு, இலக்கிய மரபு என பலபட்டத் தளங்களில், மாறுபட்டக் கோணங்களிலுமாக காந்தள் நாட்களின் வரிகள்தோறும் நகர்கிறார். இன்குலாபின் கூற்றுக்களும் வலிமையான வினாக்களும் குரலற்ற மக்களின் பெருங்குரலாக ஒலிப்பதை ஒட்டி, காந்தள் நாட்களை சமூக மாற்றத்துக்கான படைப்பாகக்கொள்ள முடிகிறது. எந்த ஒரு நிகழ்வையும் மேம்போக்காக விமர்சித்துவிட்டு, தீர்வை நோக்கி நகராமல் வினாக்களை மட்டும் தொடுத்து திருப்திப்பட்டுவிடுவது படைப்பாளனுக்கு அழகல்லவே. இன்குலாப் பிரச்சனைகளுக்கானத் தீர்வை நோக்கிய நகர்வை இலக்காக்குகிறார். மரபுகளையும், புனிதங்களையும் விவாதத்துக்கு உட்படுத்துகிறார்.
கவிஞர் இன்குலாப்
பொது விவாதங்களில் கயமையும் பிற்போக்கும் எப்போதும் அடிபட்டுப்போகும் என்பதை நன்குணர்ந்த இன்குலாப் மரபுகளையும் புனிதங்களையும் பொதுவெளிக்கு இழுத்து வந்து விவாதத்திற்கு உட்படுத்த முனைகிறார். வாசகனுக்குள் இருக்கும் மனிதன் அல்லது கவிஞன் விழித்துக் கொள்ளுதலும், தன்னை உணர்தலும், தான் சார்ந்த சமூகத்திற்கானத் தேவையை அறிதலும் இன்குலாபின் காந்தள் நாட்கள் சாத்தியப்படுத்தி நிற்கின்றன.
பயன்படும் மரபு, பயன்படா மரபு
இந்தியப் பண்பாட்டுத்தளத்தைக் கருத்தில் கொண்டால் மரபுகள் என்பவை முன்னையோரால் தீர்மானிக்கப்பட்டு ஏற்கப்பட்ட நடைமுறை என்று தெளியலாம். காரணங்களை ஆராயாமல் முன்னை ஏற்பாடுகள் அனைத்தும் உகந்தவை என்று வாதிடுதல் போன்றே உதவாதவை என வாதிடுதலும் பிழைபட்டுவிட வாய்ப்புளது. ‘முன்னையப் பண்பாட்டின் வளமையை சகித்துக் கொள்ள இயலவில்லை என்றால், சமூக மாற்றத்திற்கான எந்த அசைவையும் ஏற்படுத்திவிட இயலாது’ என்கிறார் லெனின்.
புனிதங்களை தம் படைப்புகளின் வழியாக ஆய்வுக்குட்படுத்திய இன்குலாப், தமிழர் பண்பாட்டை முற்றுமுழுதாய் புரட்டிப் போட்டு தான் சமூக மாற்றம் உருவாகும் என்று கருதிட காந்தள் நாட்கள் இடமளிக்கவில்லை. அதேவேளையில் இந்திய சமூகச்சூழலில் பெரும்பான்மை மரபுகள் ஏற்புக்கு உகந்தவை அல்ல என்பதையும் குறிப்பிடாமல் இல்லை. இன்குலாப் படைப்புக்களத்தில் பயன்படும் மரபு, பயன்படா மரபு என மரபுகளைப் பாகுபடுத்திக் கொண்டு செயல்படுகிறதை அறிய முடிகிறது. பயன்படும் மரபுகளை வாழ்த்திட பலரும் இருக்கின்றபோது, தமிழ் இலக்கியப்பெருவெளியில் பழமரபுகளின் வீச்சினால் விளிம்பு நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களில் ஒருவராக நின்று தமது வினாக்களைத் தொடுக்கிறார்.
தேவையை நிர்ப்பந்தமாக்கும் இன்குலாப்
ஒரு சமூகத்தின் எல்லா காலங்களிலும் கட்டமைப்பு ரீதியாகவும் பொருளியல் அடிப்படையிலும் வாழ்வுரிமைத் தளங்களில் புறந்தள்ளப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாகப் படைப்பாளர்களின் குரல்களே எதிர்வினை அளித்திட முடியும். படைப்பாளனுக்கு தன் சமூகத்தைப் பற்றிய புரிதலும் நோக்கும் அவசியமாகிறது. மக்களுக்கான படைப்பு என்பது சமூகத்தைப் பிரதிபலிப்பதாக அமைவதாகும். இத்தகைய புரிதலிலிருந்து பார்க்கின்றபொழுது மிகச்சரியான படைப்பாளனிடமிருந்து வெளிப்பட்ட மிகச்சரியான படைப்பாக காந்தள் நாட்களைக் கொள்ள முடிகிறது. இந்நூலில் அடிக்குறிப்புகள் வழியாக உற்று நோக்குகின்ற பொழுது 2007ஆம் ஆண்டு காலகட்டத்தின் பதிவாகக் கொள்ள முடிகிறது.
தமிழகம் தனது பண்பாட்டை முற்றுமுழுதாய் புரட்டிப் போட்டுத்தான் சமூக மாற்றத்தை அடைய முடியும் என்பதில்லை. மாற்றமும், புரட்சியும் ஒரு நெடும்பயணம். தேவைகளே நிர்பந்தம் ஆகி, மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்தின் தேவையை மக்களுக்கு உணர்த்துவதும், நிர்பந்தத்திற்கு சமூகத்தை வழிநடத்துவதுமே முற்போக்கான படைப்பாளனின் இலக்காக இருக்க முடியும். அவ்வகையில் இன்குலாப் தமது காந்தள் நாட்களைச் சமூகத்தின் தேவையை உணர்ந்து படைத்தளித்துள்ளார். இன்குலாபின் வினாக்கள் தொடுக்கப்பட்டுள்ள களங்களை இக்கட்டுரை வழியாகக் கண்ணுறலாம்.
கல்வி மரபில் இன்குலாப்
இந்தியச் சமூகங்களில் கல்வி மரபாவது நெடுங்காலமாய் பிற்போக்குத்தனங்களைத் தூக்கிப் பிடிக்கின்ற பார்வையுடனேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றளவும் பெருமளவு அதன் நிறம் மாறவோ, மாற்றத்துக்கு உட்படுத்திக்கொள்ளவோ இல்லை என்பதே களம் தரும் உண்மையறிக்கை. காந்தள் நாட்களில் எழுகின்ற இன்குலாபின் அக்கினி நாவுகள் இந்தியக் கல்விமரபை வலுவாய் வினவுகின்றன.
“துரோணாச்சாரியாரின் கையில் வில்லாய் இருந்தது
வகுப்பறையில் பிரம்பாய் நீண்டது”
என்று அன்றைக்கும் இன்றைக்குமான மாற்றமின்மையைக் குறித்துக் காட்டிய இன்குலாப், ஐவருக்காக பலலட்சம் பாமர வீரர்களை பலிகொண்ட மகாபாரதத்தையும் இங்கே நினைவு கூறுகிறார்.
“பாரதம் நீடிக்கும் மட்டிலும்
பள்ளிச் சுவர்களில் குருதி கசியும்” என்கிறார்.
“கையில் பிரம்பும்
மனசில் பொருளுடனும் ஆசிரியன்” என்றும்,
“தாலாட்ட இறந்தகாலம்
தண்டிக்க நிகழ்காலம்” என்றும்,
“மிதிபட்டுத் துடிக்கும்
(ஏகலைவன்) கட்டை விரல்களும்,
(சேலம் தனம்) கண்களும்
(இந்தியக்) கல்வியும்”
என்று இன்குலாப் சமூகத்தின் இயல்புகளோடும் காரணங்களோடும் கல்வி மரபின் மாற்றத்திற்கானத் தேவையை நிர்பந்தமாக்கிட முயலுகிறார்.
சட்ட மரபில் இன்குலாப்
இந்தியச் சமூகத்தின் சட்ட முறையை அரண் செய்ய சிபிச்சக்கரவர்த்தி, மனுநீதிச்சோழன் என்பதாய் பலப்பல கட்டி வைத்த கட்டுக்கதைகளை ஓரமாய் விசிறிவிட்டு நீதிதேவதையின் இறுக்கிக் கட்டப்பட்ட கண்களையும்,கயிறுகளையும் அவிழ்த்து இயல்புகளை நோக்கி நகரச் செய்து உணர்வுடையச் செய்கிறார் இன்குலாப்.
“சட்டம் அறம் செய்யும் சாவின் பலிபீடம்
அதிகமாய் கரைபடுகிறது ஊமையர்களின் குருதியால்”
சட்டமரபின் மேல் சப்தக்கோடரிகளை ஏவுகிறார்.
“மனசாட்சி வற்றிப்போன சட்டம்
காலாவதியான தீர்ப்புகளையே
மீண்டும் கரகரக்கிறது”
என்கிற இன்குலாபின் குரல் இந்தியாவின் மூன்றாம் தூணை அசைத்துப் பார்ப்பதாய் அமைகிறது. காசு உள்ளவர்களுக்கு யாவும் வாய்க்கின்ற சமூகத்தில் சட்டமரபு மட்டும் விதிவிலக்காக இருக்க வாய்ப்பில்லை என்கிற இயல்பினையே
“லட்சங்களில் விலை போகும்
வாதங்களை வாங்க
போதுமானதாக இல்லை
எங்கள் வாழ்க்கை”
என்று கவிவரிகளில் வடிக்கிறது காந்தள் நாட்களின் கவிதை வரிகள்.
“வாய் இல்லாதவர்களுக்கு
உறுதி செய்யப்படுகிறது
கைவிலங்கு, தடியடி, சிறை, தூக்குக்கயிறு…
வாழ்க்கையைத் தவிர” என்றும்,
“மனசாட்சியை உறங்க விட்டிருந்தால்
வசப்பட்டிருக்கும் வசந்தம்” என்றும் இன்குலாப் எடுத்து வைக்கும் வாதங்கள் இன்னும் விடையின்றியே பொதுமன்றங்களின் சுவர்களில் தொங்கிக்கொண்டு இருப்பதை களநிலவரமறிந்தோர் ஒப்புவர்.
பெண்ணிய மரபில் இன்குலாப்
மனித மாண்பிற்கு உகந்ததல்லாத பிற்போக்குத்தனமான மரபுகளை பலபட்டனவாக தனக்குள் பாதுகாக்கும் இந்திய சமூகங்கள் எல்லா மக்கள் கொள்ளும் பொதுவான அடக்குமுறைகளை பெண்கள் மீது பரவலாகத் திணித்து இருக்கின்றன. இவ்வழக்கு முறைமைகளால் பாதிக்கப்பட்டவற்றுள் பெரும்பான்மை பெண் சமுதாயமே என்பதில் மறுப்பில்லை. பெண்களுக்கு எதிரானவைகளாக ஏற்படுத்தப்பட்ட மரபுகளும் புனிதங்களுமாகக் கட்டமைக்கப்பட்ட யாவும் காலந்தோறும் இறுக்கமடைந்ததும் பரிணமித்ததும் சமூகச் சீர்திருத்தவாதிகள், செயற்பாட்டாளர்கள் தம் செயல்பாடுகளாலேயே தளர்ச்சி கொண்டுள்ளமையும் உண்மை. இதன் மீதான பார்வையை எல்லாத் தளங்களிலும் ஒலிக்கச் செய்துள்ளார் இன்குலாப்.
“மௌனமும் புன்னகையும் இசைவு
அழகும் பொறுமையும் அடையாளம்
மிதிக்கும் கால்களை வருடும் பசுமை”
எனவாறாகக் கட்டமைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பெண்ணியக் கோட்பாடுகளை இன்குலாப் அவமானச்சின்னங்களாக்கிட முயலுகிறார். இத்தகைய பிற்போக்கான அடையாளங்களைத் தாண்டி வரவேண்டியத் தேவையை, சமகாலப் பெண்டிர்க்கு கவிதை வரிகளால் அறைகூவலாக்கி நிற்கிறார்.
தேசியவாதத்தில் இன்குலாப்
காந்தள் மலர்
இந்திய தேசியத்தின் போதாமையும், தமிழத் தேசியத்தின் தேவையையும் நன்கு உணர்ந்த இன்குலாப் எப்போதும் மக்களின் பக்கம் நின்று அவர்தம் உளப்பாங்குகளையே தமது தேசியப் பார்வையாக காந்தள் நாட்களில் பிரதியெடுத்து வைக்கிறார். இந்திய தேசியத்தில் பாமரமக்கள் அடைகின்ற இன்னல்களை, பிரிவினைகளால் ஏற்படுகின்ற தாக்குரவுகளை, மனிதம் மதியாதப் பிற்போக்கு மரபுகளை, அறிவுக்கு ஒவ்வாத வழக்குகளைக் கைக்கொள்ளுதலால் விளையும் இழிவுகளைக் கருத்தில் கொண்ட இன்குலாப்,
“மலம் திணித்த கைகளும்
வல்லாங்கு செய்த குறிகளும்
ஒன்றுபட்டு கொண்டாடவோ? ” (சுதந்திர தினம்)
என சரியான வினாவை மிகச்சரியாக எடுத்து வைக்கிறார்.
“குடம் குடமாய் வியர்வை
அடியுரமாய் எம் சாம்பல் விடுதலைப்போரில்…
கிளை உரசும் மாளிகைக்கும்,
எங்கிருந்தோ வரும் பறவைகட்கும்
கிடைக்கின்றன சுதந்திரக் கனிகள்…
சப்புக் கொட்டும் வாயுடன் எம் குஞ்சுகள்…”
என்றவாறு, இந்திய விடுதலைக்குப் பின்னும் விடியாத விளிம்புநிலை, உழைக்கும் வர்க்கமான பாமரர்களின் பக்கங்களைக் காட்சிக்குக் கொண்டுவருகிறார். இன்குலாப் இந்தியப் பன்முகப் பண்பாட்டுச் செறிவை உள்வாங்கிக் கொண்டு அதன் பிற்போக்குகளைக் களையும் முயற்சிக்கின்ற தன்மை காந்தள் நாட்களின்வழி எளிதுணரத்தக்கது.
“தன் இனம் காக்க நஞ்சு தரிக்கும்
காந்தளம் பூக்களே தமிழ் ஈழத்தின்
தேசிய மலர்”
என்றவாறு தன்னுணர்ச்சி, அழகுணர்ச்சிப் பாக்களிலும் மனக்கிடக்கையினைப் பதியவிடத் தவறினாரில்லை.
சமய மரபுகளில் இன்குலாப்
இலக்கியப்படைப்பு என்பது சமூக நிலவரத்திற்கான எதிர்வினை என்ற தொனியிலேயே அமைகின்ற இன்குலாப் படைப்புகளை உற்றுநோக்கிட, சமயம் என்கிற கட்டுமானமே பிரச்சினைகளின் ஊற்றுக்கண் என்பதாகவும், மரபுகளின் வேர்கள் ஆழப் புதைந்திருக்கும் தளங்கள் அவையே என்பதாகவும், புனிதங்களைச் சுமந்து கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதாகவும் அறிய முடிகிறது. இதனை இன்குலாப் பெரியாரியச் சிந்தனையோடு மட்டுமல்லாமல், மார்க்சியச் சிந்தனையோடும் அணுகுதலைக் காணமுடிகிறது. வெகு மக்களின் உணர்வுகளுக்குள் ஒன்று கலந்திருக்கின்ற சமயங்களில் பிற்போக்குத்தனங்களை காந்தள் நாட்களில் சுட்டிக்காட்டி, அதன் வேர்களை அசைத்துப் பார்க்க முயல்கிறார் இன்குலாப்.
சமயங்களை குறித்து இன்குலாப் கூறுகையில்
(நாத்திகம்) “உன்னை மறுத்ததே அல்லாமல்
உடைத்தது இல்லை” என்றும்,
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டு உடைத்தார்கள் பக்தர்கள்” என்றும்,
அமைகின்ற வரிகளில் அவர்தம் சமயப்பார்வையும் கொள்கைநிலையும் கட்புலனாகிறது.
“அடித்தளம் மாறும்போது மேல்கட்டுமானம் தானாகவே மாற்றத்தை ஏற்கும்” என்கிற லெனின் கண்டுணர்ந்து உணர்த்தியக் கூற்றை, வரலாற்றுரீதியாக இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கத்தோலிக்க கிறித்தவ மரபு எதிர்கொண்ட மாற்றங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இதனை ஒட்டியே இன்குலாபின் கருத்துநிலையினையும் அணுகிடுதல் இவர்தம் கவிதைகளின் உட்கிடக்கைகளை அறிய வழிவகுக்கும்.
09-08-2007’ல் எழுதப்பட்ட இன்குலாபின் வரிகள்,
“அல்லாஹ் என்னை தலாக் சொன்ன
நாள் முதலாக நான் இத்தாவில் இருக்கிறேன்.
எந்த உணர்வில் விரிக்க
ஒரு தொழுகை பாயை வைத்திருப்பேன்” என்று கூறுகிறது.
இவ்வரிகளின் உள்ளார்ந்த விவாதத்தை அன்றைக்கே, இஸ்லாமியமும், இந்தியமும் கவனத்திற் கொண்டிருந்தால், 2018’ல் இந்துத்துவம் இதனைப் பயன்படுத்தி செய்த அரசியல் காழ்ப்புகளுக்கு வழியின்றிப் போயிருக்குமன்றோ? இவ்வகையில் இன்குலாப் ஒரு காலச்சக்கரத்தின் தண்டவாளமாகவே நிலைபெறுவதைக் காணமுடிகிறதன்றோ!
மரபுகளைத் தாண்டி ஒலித்த இன்குலாப்
சமூகத்தின் எல்லாக் கூறுகளிலும் தன் உணர்ச்சியைக் கலந்து, தன் கருத்தை எடுத்து வைத்து குரலற்றோருக்கான குரலாக வாதிட்ட இன்குலாப், வெறுமனே மரபுகளை வினவுதலோடு மட்டுப்படாமல் தீர்வை நோக்கியப் புறப்பாட்டையும் துவக்கி வைக்கிறார்.
“காளையார்கோவில் காடுகளில் வெறிகொண்ட மின்மினிகள்…
பிரான்மலை வென்றெறி முரசமுமாய்…
திருப்பத்தூரில், திருச்சுழியில், கமுதியில், பாஞ்சாலங்குறிச்சியில்
மீண்டும் இறுகின தூக்குக்கயிறுகள்”
என்று வரலாறுகளைப் புரட்டிப்பார்த்து, எவையெல்லாம் சமகாலத்திய இழிவுகளின் காட்சிகளையும் அவற்றின் காரணிகளாக நிற்கின்ற மரபுகளையும் வினவுகின்ற இடத்திற்கு வந்து விடுகிறார் இன்குலாப். இதனாலேயே மக்கள் கவிஞராய், சமூகப் போராளியாய், புரட்சிக்காரராய், கலகக்காரராய் அடையாளப்படுத்தப்படுகிற இன்குலாப், எளிய மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட படைப்பாளராய் நிலைபெறுகிறார்.
இன்குலாப் எனும் குரலின் தேவை
காந்தள் நாட்கள் சமகாலத்தின் எல்லா நிகழ்வுகளின் மீதும் தமது கருத்தினை உரக்கப் பேசியிருக்கும் இன்குலாப், அவர்களின் குரல் தற்போது மார்க்சிய இலக்கியப் பெருவெளியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தையும் நம்முன் கொண்டுவருகிறது. சாதிய, ஆணவப் படுகொலைகள், மதவெறி பரப்புரைகள்,; திட்டமிடப்பட்ட பொருளியல் தடுமாற்றங்கள், அரசியலமைப்பின் மேலான நம்பகத்தன்மையைக் கெடுக்கின்ற நடவடிக்கைகள், திணிக்கப்பட்ட மரபுகள், பசு பாதுகாப்பு போன்ற புனிதங்கள், சமய காழ்ப்புகள் மற்றும் வெறுப்புணர்வு வெளிப்பாடுகள், கருத்துச் சுதந்திரத்தின் தடைநிலைகள் என பலபட்டதற்கான நிகழ்வுகளைக் காத்திரமாக வினவிட இலக்கிய வெளியில் ஏற்பட்டுள்ள போதாமையில் இருந்து இன்குலாப் எனும் புரட்சிக்குரலின் தேவையை உணர முடிகிறது. சமூகத்தேவைக்கும், தீர்வுகளை நோக்கிய நிர்பந்தத்திற்கும் பாதை சமைக்கின்ற படைப்பாளிகளுள் இன்குலாப் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறார்.
தமிழர் அறம் பிறழ்ந்த காலத்தில் நீதிநெறி போற்றிய வள்ளுவர் தொடங்கி பாரதியார், பாரதிதாசன் என மரபுகளை வினவிய புலவர்கள் வரிசையில் இன்குலாப் உயர்வாக வைத்துப் போற்றுதலுக்குரிய கவிஞர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மாற்றத்திற்கான சமூகமாக இந்திய சமூகத்தை நிலைநிறுத்துவதற்கும் இன்குலாப் எனும் மாக்கவியின் பங்களிப்பு அபரிமிதமானது என்பதை இந்திய பொதுவெளி அறியும். சுயத்தை இழந்து மக்கள்நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு காலங்கள் தோறும் மக்களுக்கான குரலாக ஒலித்த இன்குலாப் போற்றப்பட தக்கவர் என்பதை காந்தள் நாட்கள் சான்றாகி நிறுவுகிறது. சமூக மாற்றத்திற்கான வழிகாட்டிகளாக இன்குலாபின் படைப்புகள் அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
– சி.விஐய்,
முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம் (SFI),
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை(சுயநிதி),
அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), கருமாத்தூர்.