தானே அது நின்று போகும் வகையிலான அனுபவ ரீதியிலான எழுத்து வகைமை இவருக்குக் கைவரப்பெற்றது. இதற்கு மேல் ஒரு வரி, ஒரு வார்த்தை  ஆகாது என்று…கம்பீரமாய்த் தலை நிமிரும் முடிவுகள்.

வாசகன் எண்ணிப் பார்க்காத வழிமுறைகளில் சிந்தித்து, எளிமையான, யதார்த்தமான அறிந்த சொற்களாய் இருப்பினும், அறிந்த சூழலாய் இருப்பினும், அதனை இடம் பார்த்துப்  பயன்படுத்தி, இதுவரை சொல்லப்படாத வழிமுறையில் சொல்லி,  கதையை இதமாயும், ஸ்வாரஸ்யமாயும், கருத்தோடும் நகர்த்திச் செல்ல வேண்டும் என்கிற அக்கறை ஒரு தரமான படைப்பாளிக்கான லட்சணங்களாய் நின்று இவரது படைப்புக்களை உயர்த்திப் பிடிக்கிறது.

கலாரசனை இல்லாதவன், அழகுணர்ச்சியில்லாதவன், நுணுக்கமான பார்வையில்லாதவன் படைப்பாளியாய் பரிணமிக்க முடியாது என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை ஒரு படைப்பாளி  தன் ஒவ்வொரு படைப்பிலும் வெவ்வேறுவிதமான களங்களையும், நிகழ்வுகளையும் பரிசீலித்துப் பார்த்துக் கொண்டே பயணிக்க  வேண்டும் என்பதும். அப்படியில்லையென்றால் வாசகனுக்கு அவனை சாதாரணனாய் அடையாளம் காட்டிக் கொடுத்து ஒதுக்கி வைத்து விடும் என்பது சத்தியமான உண்மை. அப்படிப் பரீட்சார்த்தமாய் எழுதிக் கொண்டே பிடிவாதமாய்ப் பயணிக்கும்  ஒரு படைப்பாளிக்கு எந்தக் கட்டத்திலும் திருப்தி என்பதோ, போதும் என்றோ தோன்றவே தோன்றாது. இன்னும்…இன்னும்…என்றுதான் இருக்கும்.

ஆனால் அப்படியான படைப்புக்களை நிறையத் தந்து, தான் சிறுகதைகளில் சாதித்து விட்டதாகவே மகிழ்ந்து தன்னைச் சந்திக்கும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அரிய பணியில் உற்சாகத்தோடு ஈடுபட்டார் இவர்.  ஆனால் இன்று நம்மோடு இல்லை அவர். அதுதான் நம்மின் பெரும் துயரம். அது திரு கந்தர்வன்.

புதிதாய் ஒரு அலுவலகத்திற்கு வேலைக்குச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள சூழலையும், ஆட்களையும், அவர்களின் அசைவுகளையும், பேச்சுக்களையும் நிதானமாய்க் கவனித்து, எத்தனை விஷயங்கள் இயந்திர கதியாய் இயங்குகின்றன, என்னென்னவெல்லாம் காலப் போக்கில் வெறும் சடங்குகளாய் ஆகிவிடுகின்றன, அப்படியான விஷயங்கள் எப்படியெப்படி அவரவர்களின் சாமர்த்தியங்களாய், சாதனைகளாய்ப் பேசப்படுகின்றன என்பனவான சம்பவங்களை, நிகழ்வுகளை சூழலுக்குப் படு பொருத்தமாய்ச் சொல்லி, ஸ்வாரஸ்யமாயும், உற்சாகத்தோடும் கதையை நகர்த்திச் செல்கிறார் கந்தர்வன்.

இந்தக் கதையின் தலைப்பு “தெரியாமலே…” . தெரிந்தும் தெரியாமலேதான் அங்கு எல்லாமும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த இருப்பையும் சூழலையும் யாராலுமே மாற்றியமைக்க முடி யாது என்பதுதான் யதார்த்தம்.

அந்த மனிதனை அவர்கள் தினமும் பார்க்கிறார்கள். அவனும் அவர்களை, அவர்களது நடவடிக்கைகளை, பேச்சுக்களை பார்க்கவும் கேட்கவும் செய்கிறான். அவர்களில் ஒருவனாய் அன்றாடம் வந்து போய்க் கொண்டிருக்கிறான். ஆனால் எந்தச் செயலுக்கும் ஒரு கால நிர்ணயம் என்பது கிடையாது என்கிறவிதமாய் அவனின் வருகையும், அவர்களது பார்வையும் வருவதும், பார்ப்பதுமாய் வெறுமனே கடந்து கொண்டிருக்கிறது. காரிய சித்தி என்ற ஒன்று என்றுதான் நிகழ்வது? அந்த அக்கறை அவர்களுக்கும் இருப்பதாய்த் தெரியவில்லை. அவனும் கடைசிவரை அவர்களை விடுவதாய் இல்லை. தெரியாமலே….கடந்து கொண்டிருக்கும் விரயமான, அதே சமயத்தில் ஏனிப்படி என்கிற ஏக்கமான, என்றுதான் இதற்கு முடிவோ என்கிற ஆதங்கமான நாட்களாய்  அவை கழிகின்றன……

இதற்கு மேல் அழகாக, அக்கறையாக அரசாங்க அலுவலகங்கள் அடங்கிய ஒரு பெரிய வளாகத்தின் சூழலை இயல்பாய் வடித்தெடுக்க முடியுமா? என்கிற கேள்வி கடைசியில் நம் மனதில் தோன்றி அந்த மஞ்சள் பையைக் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு, கையில் தொங்க விட்டுக் கொண்டு, அன்றாடம் விடாமல் எதற்கோ, என்ன தேவை கருதியோ அலைந்து கொண்டிருக்கிறாரே அந்தக் கிராமத்தானை, அவனுடைய கோரிக்கைகளை என்றுதான் பூர்த்தி செய்து வைக்கப் போகிறோம் என்கிற ஏக்கத்தோடேயே நாமும் அந்த வளாகத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து நிற்கிறோம். அது யாருக்கும் புரியாத நிலையிலும் அவன் தன்னியல்பாய் இறங்கிச் செய்யும் ஒரு செயல் அவனை இவர்களிலிருந்து உயர்த்தி மேலே நிறுத்துகிறது.

லேசில் மாற்ற முடியாத, காலம் காலமாய்ப் படிந்து போன, யந்திர கதியாகிவிட்ட அன்றாட நடைமுறைகளை இத்தனை துல்லியமாய், ஸ்வாரஸ்யமாய் வேறு எப்படி விவரிக்க முடியும்…..இதுவரை எவரும் இத்தனை அழகாய்ச் சொல்லியதில்லை என்பதுதான் உண்மை.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழு குழுவாகத் தேநீர் அருந்தப்போகும் ஊழியர்களுக்கு மத்தியிலான அந்த சம்பாஷணையைப் பாருங்கள்….

கந்தர்வன்

எழுத்தாளர் கந்தர்வன்

“தேநீர் அருந்தியதும் குழுக்கள் உடன் நாடு திரும்பியதில்லை. கான்டீனுக்கு எதிரே உள்ள மைதான வெளியில் மூன்று நான்கு மரங்கள் பெரிது பெரிதாக நிற்கின்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவந்து பரப்பப்பட்ட மர இனம் என்று அவற்றின் உயரத்தை அண்ணாந்து பார்த்து ஒருவர் சொன்னார். அந்த மரத்தடிக்குப் போய் நின்று முதல் நாள் மாலை தாங்கள் பிரிந்த பின்பிருந்து அந்த நிமிடம் வரை அவரவர் வீடுகளிலும் வெளியிலும் நடந்தவற்றைச் செய்திகளாகவும், அதிசயங்களாகவும் கதைகள் போலவும் பேசுவார்கள். எதையும் வெகு சுவையாகச் சொல்பவர்கள் என்று எங்கள் குழுவில் இரண்டு மூன்று பேர் உண்டு. பெரும்பாலும் கூட்டத்தை அவர்களே ஆக்ரமித்துக் கொள்வார்கள்.

விதிக்குப் புறம்பாக வந்த பில்லை எப்படிக் கண்டுபிடித்துத் திருப்பி அனுப்பினார் என்று சொல்லி யாராவது ஒருவர் தனது அறிவு மற்றும் சூட்டிகைகளை விளக்கிப் பேசுவதுதான் வழக்கமான மாநாட்டுத் துவக்கமாக இருக்கும். அதன் பின் அதிகாரி பற்றி, அவர் குடும்பம் பற்றி, பத்திரிகைச் செய்திகள் பற்றி, கண்ட காட்சிகள் பற்றி என்று மாநாட்டில் பேசுவதற்கென்றே தயாரித்து வந்த உரைகள் போல்…….

மூன்றாம் நாளே கவனித்தேன். எங்கள் கூட்டம் தாண்டி ஒரு கிராமத்துக்காரர் மஞ்கள் பை ஒன்றைக் கையில் தொங்கவிட்டபடி, நாங்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டு நின்றார். முகத்தில் கவலை அதிகமாயிருந்தும், நாங்கள் பேசிவிட்டு உரக்கச் சிரிக்கும் நேரங்களில் அவர் உதட்டிலும் பொசுங்கலாய் ஒரு புன்னகை வந்து போனது. ரகசிய சங்கதிகளை நாங்கள் மெது குரலில் பேசுகையில் அவர் எங்கள் வட்டத்தை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்துக் காதோரம் கை வைத்துக் கேட்டுவிட முயற்சிப்பார்….

என்று தனது தேவைக்காக அந்தக் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தை அணுகும் அந்தக் கிராமத்தானின் அன்றாட அலைச்சலை, அந்தச் சூழலுக்குப் பழகிப்போகும் தன்மையை….நாம் புரிந்து கொண்ட அளவில்….பொறுமையா இருந்துதான் காரியத்தை சாதிச்சாகணும் என்கிற  சகிப்புத் தன்மையை….போகிற போக்கில்  சொல்லிப் போகும் அழகிருக்கிறதே….அது கந்தர்வனுக்கு என்றே அமைந்த படைப்புத் திறமை. மனிதர்களை, இயற்கையை நேசிக்கத் தெரிந்த ஒருவனால்தான் இத்தனை அற்புதமாய் ஒன்றைப் படம் பிடிக்க முடியும்.

மாற்ற முடியாத இந்தச் சூழலை எப்படி விவரித்தால் மனதில் நிற்கும் என்பதை வடித்திருக்கும் விதத்திற்கு இன்னும் எத்தனையோ இடங்கள் உண்டு இக்கதையில்.

வளாகத்தில் கால்நடைகளின் புழக்கம் அதிகம். வளாகத்தைச் சுற்றி வீடுள்ளவர்கள் இங்குள்ள புல் படுகைகளை நம்பி ஆடு மாடு வளர்த்து வருகிறார்கள். இங்கு கலெக்டராக வந்த வெளி மாநிலத்துக்கார ஐ.ஏ.எஸ். அதிகாரி, பி.ஏ.வைக் கூப்பிட்டுக் கோபமாக இரண்டு தகவல்களைச் சொன்னாராம். முதலாவது இந்த வளாகத்தினுள் அலையும் மனிதர்களை விடவும் கால்நடைகளின்  எண்ணிக்கை அதிகம். இரண்டாவது அவர் காருக்குக் கூட இடம் தராமல் அந்த ஒல்லித் தார் ரோட்டின் குறுக்கே வரிசையாகப் படுத்துக் கொண்டு உறாரன் ஒலிகளுக்கு மதிப்புத் தராமல் மாடுகள் அசை போட்டபடி படுத்துக் கிடந்தன என்றாராம். அந்தக் கோபத்தோடு பல உத்தரவுகளையும் போட்டார். அதன்படி ஆடு மாடு எதுவும் வளாகத்துக்குள் வர முடியாதவாறு வாசல்களில் இரும்புக் குழாய்கள் பதிக்க வேண்டும், மீறி நுழையும் கால் நடைகளைப் பவுண்டில் அடைக்க வேண்டும்…கால்நடை சொந்தக்காரர்கள் அபராதம் செலுத்திய பின்னர்தான் விடுவிக்க வேண்டும். மேற்கண்ட உத்தரவுகள் போர்க்கால அடிப்படையில் அமல்படுத்தப்பட்டன. சரியாக ஒரு மாதம் கழித்து மாடுகளும் ஆடுகளும் உள்ளே ராஜநடை போட்டன. வாசலில் பதித்த கம்பிகளின் மேல் நடக்கப் பயின்றுவிட்டனவாம்…”

“பல அலுவலகங்களின் வாயில்களில் தலையில் சிவப்பு விளக்கோடு கார்களும் ஏராளமான ஜீப்புகளும் தடபுடலாகத் தெரியும். முந்தைய வாரத்திலோ, மாதத்திலோ நடந்த வேலைகள் பற்றி அடிக்கடி ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும். சிமெண்டு கலர் சபாரி அணிந்து கனத்துப்போன அதிகாரிகள் உடம்புகளைத் தூக்கிக் கொண்டு வேகம் வேகமாகப் படி ஏறுவார்கள். இந்த ஜீப்புகளுக்கு நடுவில் மஞ்சள் பைக்காரர் அலுவலக முகப்புகளை வெறித்துப் பார்ப்பதை சில தடவை அந்தப் பக்கம் போகும்போது, வரும்போது பார்த்திருக்கிறேன்…”

என்னவொரு அற்புதமான விவரிப்பு பாருங்கள். கதையைப் படிக்கையில் நீங்கள் அந்த வளாகத்திற்கள் போய் விடுவீர்கள். அங்கேயே சுற்றித் திரிவீர்கள். அடப்பாவமே…! இந்த ஆளுக்கு அவரின் தேவை என்றுதான் முடியும்? என்று ஏங்குவீர்கள்.

வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சினை ஆடு குட்டி போடப்போகிறது என்பதை வேறு திசையில் ஒரு வக்கீல் பின்னால் போய்க் கொண்டிருந்த அந்த மஞ்சள் பைக்காரர், ஆடு நின்ற திசையைப் பார்த்துவிட்டு ஓடி வருகிறார். தலைப்பாகையை இறுகக் கட்டிக் கொள்கிறார். குட்டி வெளியில் வர உதவுகிறார். குட்டியின் மேலிருந்த திரவத்தை வழித்துவிட்டு குட்டியின் நான்கு கால்களிலுமிருந்த குளம்பைக் கிள்ளி எறிந்து தரையில் விடுகிறார். குட்டி ஆடுகிறது. விழுந்து எழுகிறது. ஆடுவதும் விழுவதுமாயிருக்கிறது. ஆடு குட்டியை நக்கிக் கொடுக்கிறது. மஞ்சள் பைக்காரர் ஆட்டின் கனத்த மடியில் குட்டியை விடுகிறார். சிறிது நேரமானதும் குட்டியைக் கையில் தூக்கிக் கொண்டு ஆடு நடக்கும் திசையில் பின்னால் நடந்து. யார் வீட்டு ஆடோ…வீடு வரை கொண்டு விட்டு வருவோம் என்று போகிறார். இவர்கள் பேசிக் கொள்கிறார்கள்….மஞ்சள் பை ஒற்றைக் காதோடு முழங்கையில் ஆடிக் கொண்டே போகிறது….

வளாகத்தில் கூடி நிற்கும் எவருக்கும் எதுவும் தெரியவில்லை. அன்றாடம் மரத்தடியில் கூடும் பேன்ட்டும், சட்டையும், கடிகாரமுமாய் நின்ற இவர்களுக்கும் அந்த ஆட்டின் நிலை கண்டு  உடனடியாய் என்ன உதவி செய்ய வேண்டும் என்று தெரியாத நிலையில்  அந்த மஞ்சள் பைக்காரரின் சாதுர்யச் செயல்பாடு அவர்களைப் பிரமிக்க வைக்கிறது. அதில் அந்த மனிதன் நமக்கென்ன வந்தது என்று நிற்கவில்லை. தொட்டால் பிரச்னை வருமோ என்று கருதவில்லை. அந்தச் சினை ஆட்டின் அவஸ்தை அவரை அப்படி விரைந்து இயக்குகிறது. உதவும் கரங்கள். கிராமத்தானின் மனசு.

ஆண்டுகள் கடந்து போய்விடுகின்றன. அப்போதும் மாறாத அந்தக் கூட்டம். மாறாத வளாகத்தின் சூழல். தவறாமல் கூடும் அவர்கள். அது பதினோரு ஆண்டுகள் கழிந்த பொழுது. எத்தனை ஆண்டுகள் கழிந்தால்தான் என்ன…இந்த அரசு அலுவலகங்களின் நிலை மாறவா போகிறது? செக்கு மாட்டினைப் போல் இயங்கிக் கொண்டிருக்கும் மந்தமான நிலை. அங்கு எதுவும் ஆகும்போதுதான் ஆகும். அசையும் போதுதான் அசையும். அந்த ஊழியர்களின் கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்.

“ஆட்டுக்கு என்ன செய்யணும்னு இந்தாளுக்குத் தெரியுது. இந்தாளுக்கு என்ன வேணும்னு யாருக்குமே தெரியல….”

இதற்கு மேல் அரசு அலுவலகங்களின் அவல நிலையை வேறு எப்படிப் பகடி செய்து சொல்ல முடியும்? மனதில் தோன்றிய இந்த மெல்லிய கருவை, சராசரி மனிதனின் மனதிற்குள் எழும் இந்தப் பாமரத்தனமான வினாவை….எப்படி விவரித்துச் சொன்னால், எந்தவகை நடைமுறைகளைப் படம் பிடித்தால் அழுத்தமாக, ஆதங்கமாக அதை மனதில் நிறுத்த முடியும்? என்று யோசித்து, படிக்கும் வாசகனுக்குப் பரிச்சயமில்லாத வெளியை, அல்லது பரிச்சயமானதே என்று கொண்டாலும்  என்னென்ன நடைமுறைகளினால் அரசு அலுவலகப் பணிகள் தடைபடுகின்றன, தள்ளிப் போகின்றன, கிடப்பில் கிடக்கின்றன என்பதை அவர்களின் அன்றாடச் சூழல்களின் மூலமே விவரித்து மறைமுகமாயும் நேரடியாயும் உணர்த்தி, அவையே அவர்களின் சாமர்த்தியமான செயல்பாடுகளாய் வலம் வருவதான ஒரு தோற்ற உண்மையை வலியுறுத்தி, இவைகளுக்கு நடுவில்தான் பொது ஜனம் தங்களையும் உட்படுத்திக் கொண்டு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய  கால நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதை நேருக்கு நேர் முகத்திலடித்தாற்போல் போட்டு உடைக்காமல், பல வருடங்களாய்ப் பழகிப் படிந்து போய்க் கிடக்கும் அந்த நடைமுறைப் போக்கிலேயே போய் உண்மையை உணர்த்தி நிற்கும் பாங்குதான் இந்தப் படைப்பின் வியப்பார்ந்த இலக்கியத் தன்மையாய் நின்று நம்மை பிரமிக்க வைக்கிறது.

எதற்கென்று தெரியாமலே அந்த மஞ்சள் பைக்காரர்  வந்து போய்க் கொண்டிருப்பதை அன்றாடம் பார்த்துப் பார்த்தே கழித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு கடைசிவரை அது தெரியாமலே போகிறது என்பதுதான் விந்தை. சட்டென்று ஒரு சினையாட்டின் தேவையைப் புரிந்து கொண்ட அந்தக் கருணை மிகுந்த நேயமிக்க எளிய மனிதனின் கால வியர்த்தமான தேவையை அந்தப் பெரிய வளாகத்தின் ஒருவர் கூடப் புரிந்து கொள்ளாமையும், அதுபற்றி அக்கறை கொள்ளாமையும், அந்த ஒரேயொரு தனி மனிதனுக்கான அவலம் மட்டுமா? என்பதை உய்த்து உணரும்போது நம் மனம் கனத்துப் போகிறது.

ஜனநாயகம், சுதந்திரம் என்கிற பெயரில் நாம் எத்தனை பொறுப்பற்ற மனிதர்களாய்  மாறிப் போய்க் கிடக்கிறோம்? எத்தனை சுயநலமிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்பதான சிந்தனைகளையெல்லாம் கந்தர்வனின் இப்படைப்பு நமக்குக் கிளர்த்தி விடுகிறது.

ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு ஒரேயொரு சின்ன விஷயம் மனதை உறுத்தினால் போதும்….அதைச் சுற்றி எப்படியெப்படியான கோணங்களில் புள்ளிகளையிட்டு அதை ஒரு சிறந்த கோலமாக்க முடியும் என்பதில் அதீத வெற்றி கண்டிருக்கும் படைப்புதான் இந்தத் “தெரியாமலே….” .

தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன். நைந்து அழியும் மத்தியதர வாழ்வுக்கு ஊடாக நம்பிக்கை ஒளியுடன் துவங்கிய கதைப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற படைப்பாளி. சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும், நடையும் இவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உணர்வே இவர் கதைகளின் அடையாளம் என்கிறார் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

அது எத்தனை சத்தியமான உண்மை…!

——————————————————–

உஷாதீபன், எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)          மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்), ராம் நகர் (தெற்கு)12-வது தெரு, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில், மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188) .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *