கன்வார் யாத்திரையும் காவிகளின் கனவுத் திட்டமும்
”கன்வார் யாத்திரை”செல்லும் வழியில் அமைக்கப்படும் உணவகங்களின் சொந்தக்காரர் பெயரையும் விலாசத்தையும் வைக்கும்படி போடப்பட்ட உத்திரப்பிரதேச மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளின் உத்திரவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அதன் பிறகே பலரும் கன்வார் யாத்திரை என்றால் என்ன என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தி பேசும் வட மாநிலங்களிலிருந்து சிவ பக்தர்கள் நடை வழிப்பயணமாக ஹரித்வார், கங்கோத்ரி, கோமுக் மற்றும் கேதார்நாத் போன்ற கங்கை பாயும் ஊர்கள்வரை சென்று கங்கை நீரை தாங்கள் கொண்டு போகும் சீசாக்களில் அடைத்து மீண்டும் நடை பயணமாக தங்கள் ஊர் திரும்பி அங்குள்ள சிவன் கோயில்களில் சிவராத்திரியின் போதோ அல்லது அமாவாசை தினத்தன்றோ கங்கை நீரை அபிஷேகம் செய்வார்கள். இப்படி சதுர் மாசியம் (ஜுலை முதல் ஆகஸ்டு வரை) காலத்தில் சோம வாரவிரதம் இருந்து இப்படி யாத்திரை செல்லும் பயணிகள் கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
யாத்திரையின் போது அவர்கள் தங்கள் தோளில் சுமந்து செல்லும் காவடி தான் கன்வார் என்று அழைக்கப்படும். 2010, 2011 வருடங்களில் மட்டும் கன்வாரி யாத்திரை சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 1.2 கோடியைத்தாண்டும். சிவ பெருமான் உலகத்தைக் காப்பதற்கு நஞ்சை உள்வாங்கியதை தணிப்பதற்காக அவர்மீது கங்கை நீரை பொழிந்ததன் ஞாபகர்த்தமாக இந்த யாத்திரை கடைபிடிக்கப் படுவதாக கூறுவார்கள்.
இப்படி லட்சக்கணக்கில் செல்லும் யாத்திரிகர்களுக்கு வழி நெடுக தண்ணீர் பந்தல்களையும் கழிப்பறைகளையும் தங்குமிடத்தையும் பல மாநில அரசுகள் அமைப்பதோடு சில தனியார் தொண்டு நிறுவனங்களும் ஆண்டு தோறும் அமைப்பார்கள். பல இசுலாமிய அமைப்புகளும் இந்த யாத்திரிகர்களுக்கான சேவையை மேற்கொள்வார்கள். யாத்திரிகர்கள் உணவு அருந்துவதற்காக பல திடீர் கையேந்தி பவனங்கள் வழி நெடுக அமைக்கப்படும். அதன் சொந்தக்கார்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஹரித் வாரத்தில் தான் கங்கை நதி இமயமலையிலிருந்து இறங்கி சம வெளியில் பாய்கிறது. அதனால் தான் அந்த இடத்தை ஹரியின் வாசல் என்று பெயரிட்டுள்ளனர். ஆண்டு தோறும் யாத்திரை செல்லும் கன்வாரியாக்கள் பலரும் தில்லி தலை நகரத்தின் வழியாக செல்லும் போது அங்கு கட்டுக்கடங்காத போக்குவரத்து நெருக்கடிஏற்படும். அச்சமயத்தில் யாத்திரிகர்களை ஒழுங்குபடுத்தி அவர்கள் திரும்பிச் செல்லும்வரை மேற்பாற்வையிடுவதே தில்லி காவல் துறைக்கு பெரும்பாடு. மாலையில் விமான நிலையம் செல்ல விரும்புபவர்கள் காலையிலேயே சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். இதுவரை இந்த யாத்திரையினால் பெரும் பிரச்சினைகள் ஏற்படவில்லை. ஆனால் இவ்வருடம் யாத்திரைக்கு முன்னதாக பா.ஜ.க தலைமையிலுள்ள உத்திரப்பிரதேச அரசும் உத்தரகாண்ட் மாநில அரசும் திடீரென்று ஒரு உத்திரவைப் பிறப்பித்தார்கள்.
யாத்திரை செல்லும் வழியில் உணவகம் அமைப்பவர்கள் தங்கள் உணவகங்களின் வாயிலில் உரிமையளார்களின் பெயரையும் விலாசத்தையும் பலகையில் எழுதிவைக்க வேண்டும் என்று அவ்வுத்திரவு கட்டளையிட்டது. இதுவரை இல்லாத வரையில் உரிமையாளர்கள் பெயரை ஏன் தெரிவிக்கவேண்டும்? அதன் மூலம் வேண்டுமென்றே வகுப்புவாதப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு இவ்விரு அரசுகளும் முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்பதனால் தான் உச்சநீதி மன்றம் இடைக்கால உத்திரவைவழங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னால் கன்வார் யாத்திரை செல்லும் வழியிலுள்ள முசாபர்பூரில் ஒரு உணவகத்தில் உணவு உட்கொண்ட கன்வாரியாக்கள் தங்களது விரதத்திற்கு விரோதமாக உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்கப்பட்டிருப்பதற்கு ஆட்சேபித்து கடையை அடித்துநொறுக்கினர். இது மட்டுமின்றி கன்வாரியாக்கள் யாத்திரையின் போது வேற்று மதத்தினரின் கடைகளை புறக்கணிப்பதற்கு ஏதுவாக இந்த பெயர்ப் பலகை உத்திரவு போடப்பட்டது தான் உண்மை.
இப்படி மதப் பிரச்சினைகளிலும் வணிக நோக்கத்தை கொண்டு வந்து மத வகுப்புவாதத்தை வளர்த்து வரும் போக்கு பெருகிவருகிறது. இதன் பின்னால் வணிகர்களின் சுயநலம் கூட இருக்கலாம். 1982-ம் வருடம் கன்னியாகுமரியில் மண்டைக்காட்டில் நடத்தப்பட்ட கலவரத்திற்குப் பின் பரவலாக அம்மாவட்டத்தில் சுவற்றில் புதிய வாசகங்கள் பதியப்பட்டன. அதில் இந்துவாக இரு. இந்துவை வானங்கு என்று போடப்பட்டிருந்தது. அவர்கள் குறிப்பிட்டது இந்து பத்திரிகையை அல்ல. இந்துக்கள் கடையில் வாங்கவேண்டும் என்று அவர்கள் கூற முற்பட்டனர்.
இப்படி நுகர்வோர் விருப்பப் பிரச்சினைகளில் கூட மத முன்னுரிமையைக் கொண்டு வரும் போக்கு ஆபத்தானது. நான் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் சாலமன் பாப்பையா தலைமையிலிருந்த மதுரை கம்பன் கழகம் என்னை ஆண்டு விழா ஒன்றுக்கு தலைமை தாங்க அழைத்தது பற்றி நான் திகைப்புற்றேன். நான் ஒன்றும் கம்பராமாயணத்தில் புலமைப் பெற்றவன் அல்ல. இருப்பினும் அவரது வற்புறுத்தலுக்காக அந்த விழாவில் கலந்துகொண்டேன். கம்பனின் ராமாயணத்தில் ஊறித்திளைத்தவர்கள் முன்னிலையில் நான் அதைப் பற்றி பேசாமல் இந்த மத வேற்றுமைகளை வலிந்து புகுத்துவது பற்றிப் பேசினேன்.
நான் ஆரம்பப்பள்ளி மாணவனாக இருக்கும் போது நான் படித்த பள்ளியில் ராம நவமி விழாகொண்டாடுவார்கள். அப்படி ஒரு தினத்தில் என்னுடைய ஆசிரியை என்னிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து பள்ளிக்கு வெளியில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் வெல்லமும் பருப்பும் வாங்கி வரக்கூறினார்கள். அதை வைத்து பானகமும் பருப்பும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடு அது. பணத்தைப் பெற்றுக்கொண்டு நான் கடைக்குச் செல்ல முற்பட்டபோது அந்த ஆசிரியை என்னிடம் எந்தக் கடையில் இந்த பொருட்களை வாங்குவாய் என்று கேட்டார்கள். எனக்கு அது பற்றி எந்த குறிப்பும் இல்லாததனால அவர்களையே கடையின் பெயரைச் சொல்லும்படி கேட்டேன். பள்ளியிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி இருக்கும் ஒரு கடையைக் குறிப்பிட்டு அங்கு தரமான வெல்லமும் பருப்பும் கிடைக்கும் என்றும் அந்தக் கடையிலிருந்து வாங்கிவா என்று கூறினார்.
நானும் அந்தக் கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு அந்த வெல்லத்திலிருந்து பானகமும் அப்பருப்பை ஊறவைத்து பருப்பும் மாணவர்களுக்குக் கொடுத்து ராம நவமி தினத்தை சிறப்பாகக் கொண்டாடினோம். அந்தக் கடையின் பெயர் சலாம் ஸ்டோர்ஸ். அதை நடத்தியவர் இசுலாமியர் ஒருவர். நம்முடைய மத விழாக்களைக் கொண்டாடுவதற்கும் அதற்கான பொருட்களை வாங்குவதற்கான நிறுவன உரிமையாளர்களின் மதங்களும் நமக்குப் பொருட்டல்ல. தரமான பொருட்களை வைத்துநம் முடைய மத விழாவைக் கொண்டாட வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்நிகழ்ச்சியை நான் என்னுடைய உரையில் குறிப்பிட்ட போது கம்பனின் ரசிகர்கள் கை தட்டி கரவொலி எழுப்பினர். மதத்தையும் வியாபாரத்தையும் சேர்த்துப் போட்டுக் குழுப்பிக் கொள்வது தேவையற்ற குழப்பம்.
இதனால் தான் கன்வார் யாத்திரையில் உச்சநீதி மன்றம் உணவகங்களின் உரிமையாளர்களின் பெயரை கட்டாயப் பதிவு செய்யவேண்டும் என்ற உத்திரவிற்குத் தடை விதித்து மீண்டும் ஒரு முறை இப்பிரச்சினையில் உள்ள குழப்பத்திலிருந்து நம்மை மீட்டுள்ளனர்.
கட்டுரையாளர் :
கே.சந்துரு
மேனாள் நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றம்
நன்றி :
ஜூ.விகடன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

