கப்பலோட்டிய கதை என்று இந் நூலுக்குபெயரிட்டாலும் இது கதை அல்ல ஒரு நிஜமான வரலாற்று ஆய்வு நூல் ஆகும். விடுதலைப்போராட்ட காலத்தில் வ உ சி ஐயா அவர்கள் மேற்கொண்ட சுதேசி இயக்கத்தின் வரலாற்று நூலாகும். 30க்கும் மேற்பட்ட நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இரண்டு ஆய்வுக்கட்டுரைகள் உட்பட 21 பின்னிணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று பக்கங்களில் ஆதாரக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவ்வளவு நிறையும் ஈர்ப்பும் கொண்ட நூல் இதுவாகும்.
1905ல் வங்கப்பிரிவினை என்பது மிகப் பெரிய போராட்டங்கள் துவங்கி காங்கிரஸில் மித வாதம், தீவிரவாதம் என இரு பிரிவும் சுதேசி இயக்கத்தில் சுதேசிப் பொருட்களை ஊக்குவிப்பது, அது மட்டுமில்லாது அந்நியப் பொருட்களை புறக்கணிக்கத்தல் என இரண்டு சூழ்நிலைகள் நிலவிய போது வ உ சியின் இயக்கம் துவங்கிறது. அதாவது 1906ல் இருந்து இவரது அரசியல் பயணம் தொடங்குகிறது என்கிறார் ஆசிரியர்.
இச் சூழலில் பிரிடிஷ் கப்பல் கம்பெனி வர்த்தகச் சுரண்டல் மட்டுமின்றி 20க்கும்மேற்பட்ட சுதேசி கப்பல் கம்பெனிகள் அழிவுக்குள்ளாகியதும் உள்ளூர் வர்த்தகரான ஹாஜி பக்கீர் முகம்மது சேட் கப்பல் கிடைக்காமல் துயரப்படுவதும் அதுவே 1906ல் வ உ சி சுதேசிக் கப்பலுக்கான பதிவு செய்யும் நிகழ்ச்சியாக அமைகிறது.
வ உ சியும் 10 லட்ச ரூபாய்க்கு இரண்டு கப்பல்கள் வாங்கினால் அத்ன் மூலம் கிடைக்கும் வரவு செலவு குறித்து பட்டியலிட்டு ஒரு வருடத்தில் இரண்டு சுதேசிக் கப்பல்களால் பத்து லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று விவேகபாநுவில் எழுதிய கட்டுரையை ஆசிரியர் தருவது சிலிர்ப்பை உருவாக்குகிறது. இது வ உ சியின் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை நாம் காண முடிகிறது. இதற்குரிய மூலதனத்தை ரூ 25 வீதம் 40000 பங்குகளை திரட்டுவதற்கு வழிகாட்டுகிறது.
சுதேசிக் கம்பெனியின் தலைவர் பாண்டித்துரைத் தேவர் தமிழ்நாட்டிலும், வ உ சி பிற மாநிலங்களிலும் பங்குகளைத் திரட்டிய செய்தியும் குறிப்பிடப்படுகிறது. பம்பாயில் திலகரைச் சந்தித்தது அவர் ஆதரவு பெறுவதும் நடைபெறுகிறது. ஒரு வழியாக வ உ சி யின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கிறது.
எஸ்.எஸ்.காலியா, லாவோ என்ற இரண்டு கப்பல்கள் தூத்துக்குடி வந்ததை 1907, மே 25 இந்தியா இதழில் மகிழ்ச்சி அடைந்து வ உ சி யைக் கொண்டாடி எழுதுகிறார். பாரதி கொண்டாடிய வ உ சியை எத்தனை பேர்கள் கொண்டாடுகிறார்கள் என்று ஆசிரியர் வேதனைப்படுகிறார்.
இப்படியாக வ உ சி யின் கடின உழைப்பில் புறப்பட்ட கப்பல்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சி கொடுத்த இடர்கள், செய்த சதிகள், சூழ்ச்சிகள் சுதேசிக் கப்பல்களுக்கு நெருக்கடி கொடுத்தன. வ உ சிக்கு ஒரு லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க முனைந்துள்ளதையும் அதை ”தமிழன் தனிப் புகழ் கொண்டவன் மானமே பெரிதென மாறாமலிருப்பவன்’ என்று இடித்துரைத்தாராம். மேலும் கம்பெனி நடத்துகின்ற உறுப்பினர்களிடையே போட்டி பொறாமையும் உருவாகி கப்பல் கம்பெனி மூடும் நிலைக்குச் சென்றது. தனது உறுப்பினர்களே கைவிட்ட நிலையில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் கப்பல் கம்பெனியில் இருந்து வ உ சி விலகினார்.
இதன் பின்னாக மிகவும் முக்கியமான பணியான கோரல் மில் போராட்டத்தை தொழிலாளர்களுக்காக வ உ சி மேற்கொண்டார் எனவும் அப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக தன் மனைவியின் நகையை விற்றும் உதவினார் எனப் படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது. கோரல் மில் போராட்டமே முதல் தொழிற்சங்கப் போராட்டம் என்கிறார் ஆசிரியர். திரு தமிழ்செல்வன் அவர்களின் நூலை தரவாக்குகிறார். இந்தப் போராட்டத்திற்காக வ உசி, சுப்ரமணிய சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து நெல்லை எழுச்சி குறித்தும் எழுதியுள்ளார். முனைவர் இரா. வெங்கடசலபதி அவர்களின் நூலைத் தரவாகத் தருகிறார்.1908 மார்ச் 12ந் தேதி பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பபட்டார்.
வ உ சி பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் போது பல்வேறு சூழ்ச்சிகளால் கப்பல் கம்பெனி சுதேசித் தன்மையை இழப்பதும் பின்னர் கோயம்புத்தூர் சிறையில் இருந்த போது பாரதி கம்பெனியைக் காப்பாற்ற தர்ம நிதி கேட்டு வ உ சி யின் படம், சரித்திரம் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கான விளம்பரம் செய்து நிதி திரட்டுகிறார். அதன் விளம்பரப் படத்தையும் ஆசிரியர் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இறுதியாக கம்பெனி நஷ்ட்டத்துடன் மூடப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் பங்குதாரர்கள் வ உ சிக்கு கடன் நோட்டீஸ் விட்டுள்ளனர். அது குறித்து தனிப்பாடல் திரட்டில் இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். என் மனது குன்றினாலும் உடம்பு குன்றினாலும்…..என ஆரம்பித்து எமனே வந்தாலும் ..காலால் மிதித்திடுவேன் என்ற வ உ சி யின் மனோதிடத்தை என்னவென்பது.
கண்ணனூர் சிறையில் இருந்து 1912 டிசம்பர் 24ல் விடுதலை ஆகி சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பதும் வறுமையில் வாடியதும் பெருந்தலைவர்கள் ஒதுங்கி நின்றதும் நம் கண்ணில் நீர் வரவழைக்கிறது. சென்னையில் இருந்த போது பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் தொழிற் சங்கத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். புதுச் சேரியில் பாரதியை சந்தித்துள்ளார்.சுதேசிக் கப்பலை எதிரிகளான ஆங்கிலேயர்களுக்கு விற்று விட்டதைக் கடுமையாகச் சாடி கவிதை எழுதிகிறார் பாரதி.
இன்னூலில் வ உ சியின் சிறை வாழ்க்கை குறித்து சிறை வரைந்த சித்திரம் என்ற கட்டுரையில் நாற்பதாண்டு கால தீவாந்தீர தண்டனை படிப்படியாகக் குறைக்கபட்டு நாலே முக்கால் ஆண்டு தண்டனை காலத்தில் அவர் செக்கிழுத்தது, கயிறு திரித்தது என அவர் பட்ட துயரங்கள் குறித்தும் ஆனால் அவரின் ”அடி பணியாமை பண்பு” என்றும் குறையவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
”நாடு கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க சுதேசப் படை கட்டிப் போர் செய்யுங்கள்” என சுதேசிக் கப்பல் கம்பெனி ஆரம்பிப்பதற்காக குரல் கொடுத்த வ உ சி யின் குரல் தற்போதைய ஆளும் அரசு சுதந்திர இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களை கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்படுவதை நாம் தடுத்தாக வேண்டும் என்பதாக அவர் குரல் நம் காதில் ஒலிக்கிறது.
சின்னஞ் சிறுவயதில், அதன் பின்னர் சில தடவைகள் பார்த்த, கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நம் கண்களைக் குளமாகியது. ஆனால் இந் நூல் அதற்கு மேல் கருத்துச் செறிவுமிக்கதாய் இருப்பதால் வ உ சி பற்றிய பல நூல்களை மென் மேலும் படிக்கத் தூண்டுகிறது.அதற்குரிய தரவுகளையும் அவர் கொடுத்துள்ளார்.அதற்குப் பாராட்டுகள். அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் திரு நா,ராஜேந்திரன் அவர்களின் அணிந்துரை, ஆய்வாளர் ரெங்கையா முருகன் அவர்களின் செறிவுமிக்க வாழ்த்துரை ஆகியன இந்நூலுக்கு மணி மகுடமாய் அமைந்துள்ளன.
இந்த நூல் குறித்து பல பக்கங்கள் விமர்சனம் எழுதலாம் என்ற நிலையில் இந்த விமர்சனம் முழுமையானதல்ல என்றே கருதுகிறேன்.
*மொத்தப்பக்கம்:208 *வெளியீடு: நீந்தும் மீன்கள் *விலை ரூ 250 ஆசிரியர் தொடர்புக்கு: 73588 11322.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

