கரையாத உறவொன்று – சிறுகதைத் தொகுப்பு நூலாசிரியர் மரிய வில்லியம் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வளர்ச்சி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். பணிக்காலத்தில் வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் பொறுப்பாளாராக இருந்துபோது ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்துடன் (AIIEA) இணைந்து அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் முனைப்புடன் செயல்பட்டார். இந்திய சமூக அறிவியல் கழகத்தின் மதுரை மாநகர் பிரிவின் தலைவராக இருந்து இருபதாண்டுகளாக அதனைச் செவ்வனே வழிநடத்தி வருகிறார். பணி ஓய்வுக்குப் பின்னர் சிறந்த எழுத்தாளராகப் பரிணமிக்கிறார்.
’கரையாத உறவொன்று’ எனும் அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு பத்து முத்தான சிறுகதைகளுடன் வெளிவந்துள்ளது. சிறுகதை இலக்கியத்தின் இலக்கணங்கள் அனைத்தையும் கடைப்பிடித்துள்ளார். இலக்கிய வகைமைகளில் சிறுகதை மிகவும் கடினமானது என்பதை அறிவோம். சிறந்த கதை சொல்லியாக இருந்தால் மட்டுமே சிறுகதை எழுத்தாளாராக வெற்றி பெற முடியும். சொற் சிக்கணம் அதன் தலையாய அம்சமாகும். பத்து பக்கங்களில் அடங்கும் சிறுகதையில் அனைத்து வர்ணனைகளையும் சுருங்கச் சொல்லிட வேண்டும். இரண்டு, மூன்று கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் வழி கதையை நகர்த்திச் செல்ல வேண்டும். வாசகர்கள் சற்றும் எதிர்பாராத திருப்பத்துடன் கதையை முடிக்க வேண்டும். மரிய வில்லியம் எழுதியுள்ள கதைகள் அனைத்தும் இந்த இலக்கணத்துடன் அமைந்ருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கிறது.
மரிய வில்லியத்தின் வெற்றி அவரின் நகைச்சுவை உணர்வில் உள்ளது. கதைகள் முழுவதிலும் அவரின் மெல்லிய நகைச்சுவை (Gentle Humour) இழையோடுகிறது. சிறந்த மொழிவளம் பெற்றுள்ளதால், கதைகளில் வார்த்தைகள் நடனமாடுமின்றன. மரிய வில்லியம் வார்த்தைகளைத் தேடிச் செல்லவில்லை. வார்த்தைகள் அவரைத் தேடி வருகின்றன. கதைகளின் கருப்பொருட்கள் அனைத்தும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளே. இருப்பினும் ஒவ்வொன்றும் வாழ்வின் மேன்மைகளைச் சொல்லிச் செல்லும் கதைகளாக விளங்குகின்றன.
தொகுப்பின் முதல் கதை ‘பாட்டி சுட்ட வடை; நகைச்சுவையின் உச்சமாகும். பங்காளிகளின் சொத்துச் சண்டையை அவர்களின் பாட்டி தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கிறார். இறுதியில் பாட்டி அவருக்கான இடத்தை சிரமம் ஏதுமின்றி பெற்றுவிடுகிறார். எல்லா பாட்டிகளும் வடை சுடுவதில் கெட்டிக்காரர்கள்தானே!
’மூக்குகள்’ மற்றுமொரு நகைச்சுவை மேலிடும் கதை. இன்றைய இளைய சமுதாயம் திருமண வாழ்வில் நீடித்திருக்க முடியாமல், அற்ப விஷயங்களுக்காக எல்லாம் மணவிலக்கு பெறும் அவலத்தைச் சொல்கிறது. தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு இளைஞனின் மனதில் ஏற்படும் சஞ்சலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார், அவனின் தாய் தேர்ந்தெடுத்துள்ள பெண் அழகாக இருக்கிறார். இருப்பினும் ஒரு சிறு பிரச்சனை. பிரச்சனைக்குத் தீர்வு தேடி மனநல மருத்துவரிடம் வருகிறான். தீர்வு கிடைப்பது என்னவோ ஒரு வழக்கறிஞரிடம். மேஜையில் குவிந்துள்ள கேஸ் கட்டுகளைக் காட்டுகிறார். அனைத்தும் சிறுசிறு பிரச்சனைகளுக்காக டைவர்ஸ் கேட்டு தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் ஆவணங்கள். குறைகள் இல்லாத மனிதப் பிறவிகளே கிடையாது. குறைகளை மறந்து, நிறைவுகளை எண்ணி உனக்குக் கிடைத்திருக்கும் பெண்ணுடன் இணைந்து வாழக் கற்றுக்கொள் என்று சொல்லி அனுப்புகிறார்..
தொகுப்பில் இரண்டு ஆழமான சமகால அரசியலைப் பேசும் கதைகள் இருக்கின்றன. ‘இறுதி ஊர்வலம்’ ஒரு காத்திரமான அரசியல் கதை. இடைத்தேர்தல் வருகிறது. எதிர்க் கட்சியினர் நேர்மையான வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆளுங் கட்சியினர் தேர்தலில் அனைத்து தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் எதிர்கட்சி வேட்பாளர் நேர்மையுடன் தேர்தலைச் சந்திக்க நினைக்கின்றார். இறுதியில் வெற்றியும் பெறுகின்றார். ஆனால் வெற்றி பெற்ற பின்னர் சற்றும் எதிர்பாராத விதமாக சபலத்திற்கு ஆளாகிறார். ஆளும் கட்சியின் குதிரை பேரத்திற்கு இரையாகிறார். ஆளும் கட்சியில் சேருகிறார். ஆனால் அவர் குடும்பத்தினர் கொதித்து எழுகின்றனர். அவருடைய மனைவியும், பிள்ளைகளும் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். நேர்மை அரசியல் அடையாளமாக அவர்களின் ’இறுதி ஊர்வலம்’ அதாவது வீட்டைவிட்டு வெளியேறுவது அமைகிறது,
’மனக்குவாரி’ மற்றுமொரு அரசியல் கதை. ஒரு தொகுதியில் இரு வேட்பாளர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நடக்கிறது. ஒருவர் அத்தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்றவர். ’மணற்குவாரி’ ஏலம் எடுத்து கொள்ளை லாபம் சுருட்டியவர். மீண்டும் வெற்றி பெற்று குவாரியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். ஆனால் தோல்வியைத் தழுவுகிறார். இருப்பினும் வெற்றி பெற்றவரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு தன்னுடைய தொழிலைத் தொடர நினைக்கிறார். ஆனால் அவர் மனக் கோட்டை மண் கோட்டையெனச் சரிகிறது. வெற்றி பெற்ற எம்எல்ஏ மணல் குவாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக்களுடன் இணைந்து தெருவிலிறங்கிப் போராடுவதைப் பார்த்து திகைத்து நிற்கிறார். கதையின் தலைப்பில் இருக்கும் ‘மனக்குவாரி’, மற்றும் ’மணக்குவாரி’ என்று வார்த்தை விளையாட்டிலும் மிளிகிறார் மரிய வில்லியம்.
‘அமங்கலன்’ சிறுகதை மூட நம்பிக்கைகளில் தோய்ந்துள்ள இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. தன் மனைவி இறந்த பிறகு தன்னுடைய ஒரே மகளுடன் வாழ்நாளைக் கழிக்கிறார் ஒரு பெரியவர். முற்போக்குச் சிந்தனைகள் நிறைந்த இப்பெரியவரின் மகள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவளாக இருப்பது வினோதமானது. அவர் அன்புடன் வளர்த்த பேத்தியின் திருமணத்தின்போது மகள் எடுக்கும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. மங்கலகரமான தன் மகளின் கல்யாணத்தில் ’அமங்கலன்’ ஆன தன் தந்தை கலந்துகொள்ளக் கூடாது என்ற அவர் மகளின் முடிவை என்னென்பது? என்று தொலையும் இந்த மூட நம்பிக்கைகள் என்று கேட்கத் தோன்றுகிறது.
‘கரையாத உறவொன்று’ கதை மாநகரங்களில் ’வளர்ச்சி’ என்ற பெயரில் நகரிலிருக்கும் குடிசைகளை இடித்துத் தள்ளும் அவலத்தைப் பேசுகிறது. மாநகர அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு எதிரில் ஒரு நிழல் தரும் மரம். அந்த மரத்தில் ஒரு காகம் கூடுகட்டி குஞ்சுகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது. அந்த அதிகாரி நாள்தோறும் அந்தக் காக்கைக் குடும்பத்தைப் பார்த்து மகிழ்கிறார். ஒரு நாள் ஆணையர் அலுவலகத்தில் முக்கியமான முடிவெடுக்கப்படுகிறது. பல்லாண்டு காலமாக நகரின் மையப்பகுதியில் இருக்கும் குடிசைகளை இடித்துத் தள்ளூவது என்ற கொடூரமான முடிவை எடுக்கிறார்கள். இப்படியான முடிவை எடுக்கும்போது அந்த குடிசைகளில் வாழும் அப்பாவி மக்கள் எங்கே போவார்கள் என்று அதிகார வர்க்கம் எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த முடிவை எடுத்த பின்னர் வீடு நோக்கி வரும் அதிகாரிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் வீட்டு எதிரில் இருந்த மரத்தை மின்சாரத்துறை அதிகாரிகளின் ஆணையின்படி வெட்டி வீழ்த்தியுள்ளனர். பாவம்! அந்தக் காக்கைக் குடும்பம்! முழுவதும் கூடோடு அழிந்து போயுள்ளது. காக்கைகள் கரையும் சத்தம் கேட்டு மனம் பதறி அமர்கிறார் அதிகாரி.
மற்ற கதைகளைப் புத்தகத்தில் படித்து மகிழுங்கள் வாசகர்களே. அனைத்துக் கதைகளும் படிப்பவர் மனதைக் கவர்ந்திடும் என்பதில் ஐயமில்லை. மரிய வில்லியம் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி தமிழ் கூறும் நல்லுலகை மகிழ்விப்பார் என்பதிலும் ஐயமில்லை.
நூலின் தகவல்கள் :
நூல்: கரையாத உறவொன்று – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: ச.மரிய வில்லியம்
விலை: ₹.100/-
கட்டுரையாளர்:
பேரா.பெ.விஜயகுமார் (Prof. P.Vijayakumar)
Secretary,
Indian School of Social Sciences,
Madurai Chapter,
Madurai.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

