“கருந்துளை” நாவல் ஆசிரியர்
கரன் கார்க்கியின் இயற்பெயர் தினகரன். சென்னை சூளைமேடு பகுதிக்கு அருகில் உள்ள ஜெகநாதபுரத்தில் மார்ச் 23 1967-ல் பிறந்தவர். பெற்றோர் ஜெயராமன், சகுந்தலா. ‘தாய்’ நாவல் எழுதிய சோவியத் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் மேல் கொண்ட பற்றின் காரணமாக கரன் கார்க்கி ஆனார். இவரது படைப்புகள் அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள், கருப்பர் நகரம், ஒற்றைப்பல், மரப்பாலம், திருடர்களின் கைகள் மென்மையானவை, சட்டைக்காரி போன்றவை ஆகும். பெற்ற விருதுகள் இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மாநில விருது 2010, கலை இலக்கிய பெருமன்ற விருது 2012, எழுச்சித் தமிழர் இலக்கிய விருது 2022, புதிய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் விருது 2024, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தற்போது திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும் இவர், திரைப்படத்தை இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.
கருந்துளை
கருந்துளையில் எட்டிப் பார்க்கையில் நூலுக்கு முகப்பாக ‘உள்ளத்தில் இருந்து’ என்னும் பகுதியை எழுதியுள்ளார் எழுத்தாளர் கரன்கார்க்கி. இந்தப் பகுதியில் “நிலத்தின் உண்மையான தத்துவ இருப்பு இங்கு கேள்விக்குரியதாக மட்டும் இல்லை நிரந்தரமற்றதாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகள் உங்களுக்கு புலம்பலாக தெரிந்தால் செல்லரித்த உங்கள் மனசாட்சியை கழற்றி எறிந்து விட்டு புதிய ஒன்றைப் பொருத்திக் கொள்ளுங்கள். இந்த நிலத்தில் எல்லா மனசாட்சிகுள்ளும் தத்துவ இருப்பு அற்ற பதற்றமான துயரம் இருக்கிறது. அதனால் தான் அது தனியாக இருக்கும்போது தெளிந்த மனசாட்சியாகவும் கும்பலாகச் சேரும்போது பயங்கர கோரைப்பற்கள் உடையதாகவும் மாறுகிறது” என்கிறார் மேலும் அவர்
முடிக்கும் பொழுது வழக்கமான வழியில் அமைதியாக ஓடும் நதி என்று எதுவுமே இவ்வுலகில் இல்லை என முடிக்கிறார். இதிலிருந்து இவரது சமூகத்தை குறித்த பார்வை புரிவதோடு சமூகத்தின் துயரை உணர முடிகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்பாகவும் ஒரு தத்துவத்தை தந்து செல்கிறார் அப்படி முதல் அத்தியாயத்தின் தத்துவமாக
நீங்கள் விரும்பியபடி
வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
தளறாமல் முயற்சி செய்யுங்கள்
உங்களுடைய உலகம்
உங்களிடமிருந்தே தொடங்குகிறது
சாக்ரடீஸ்
பின்பு நேரடியாக கதைக்குள் நுழைகிறார் எழுத்தாளர். இந்த கதையின் நாயகன் சமரன் முதுகலை தத்துவம் பயிலும் மாணவன். முதுகலை மாணவனுக்கே உரிய பாவனையையும், தத்துவம் படிக்கும் மாணவனின் மனநிலையையும் ஆசிரியர் மிகச் சரியாக காட்டுகிறார். சமரனுக்கு கானா, ராப், இசைஞானி, இசைப்புயல், சபாக்கள், இன்னிசை கச்சேரிகள், அதோடு பழமையான ஐரோப்பிய இசை தொகுப்புகளிலும் ஈடுபாடு உண்டு என்பதின் வழி எழுத்தாளரின் இசை குறித்த ஞானத்தை புத்தகம் நெடுக அறிய முடிகிறது. சமரன் தன் சக வகுப்பு மாணவி வெண்பாவை காதலிக்க தொடங்குகிறான் என கதை நகர்கிறது. எனினும் காதல் இங்கே இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு சமூகமும், சமூகம் சார்ந்த சிந்தனையும் முன்னனியில் நிற்கின்றன. இது மு. வரதராசன், சமுத்திரம், போன்றோரின் நாவலில் காதல் செய்ய சில அடிப்படையான நல்ல காரணம் வேண்டும் என்பதை போல நாவலிலும் கதாநாயகனின் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் காரணமாய் அமைந்து கதை நகர்வதன் ஊடே பல்வேறு நூல்களையும் நூல்கள் குறித்த அறிவையும் வாசகர்க்கு கடத்தி விடுகிறார் எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்கள்.
கிகோலோ என்ற ஆண்களின் பாலியல் தொழில் பற்றிய செய்தி புதிதாய் தெரிந்துக் கொண்ட செய்தி. இந்த சொல் பிரயோகம் அதனினும் புதிது. சுகு என்பவன் அதில் ஈடுப்பட்டு 52 லட்சம் ரூபாய் வைத்திருப்பதாக சொல்வதும், அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டிருக்கிறேன் ஆதலால் அந்த தொழிலில் இருந்து விடுபட்டு வருவது மிகவும் கடினம் என்பதும், ஏதோ ஒரு நோய் தொற்று தனக்கு இருப்பதாக எண்ணி பயப்படுவதும், தான் விரும்பும் பெண்ணும் தனக்கு வாடிக்கையாளர் பெண்ணாக தெரிவதாக புலம்புவதும், அதிலிருந்து வெளியில் வர இயலாத அளவிற்கு அது மிகப்பெரிய வலையமைப்பு என்பதும், இறுதியில் தற்கொலை செய்து கொள்வதும் என நகரும் இந்த பகுதி கதையில் சமரன் ஏன் எதுவும் செய்யவில்லை? எனக் கேள்வி தோன்றுவதற்கு இறுதியில் நியாயம் செய்கிறார் ஆசிரியர் என எண்ணத் தோன்றுகிறது.
இங்கே முழுமையாக ஆண் பாலியல் தொழில் பற்றிய ஞானம் இல்லாவிட்டாலும் பெண்ணை காட்டிலும் ஆணின் பாலியல் தொழில் சற்று எளிமையாகவே இருக்கும் என்று நம்புகிறேன். பெண்ணுக்கு கரு உண்டாதல், கரு கலைத்தல், அதன் பிறகான உடல்நலம் என பல்வேறு சிக்கல்கள் இருக்க… ஆணுக்கு அப்படி எதுவும் இல்லை. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருவருக்குமே பாதிப்பு உண்டாகும் என்பதை மறுக்கவும் இல்லை. ஆனால் பல பெண்கள் அந்த தொழிலில் ஈடுபட்டு தன் குடும்பத்தை நடத்த அதற்காக சுகு ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வினாவை தேக்கி நிறுத்துகிறது மனம்.
“செல்வாக்கு உள்ளவர்களால் கட்டப்பட்ட பணம் படைத்த ஆன்மீக நிறுவனத்தையே கலைத்துவிட்டு நான் மக்களிடம் உரையாற்ற போகிறேன் என்று கிளம்பியவர் ஜே கே. உலகமெங்கும் பயணித்த அந்த மனிதர் உலக மக்களைப் பார்த்து பல கேள்விகளை உண்மையாகவே கேட்டார். இந்த அழகான பூமியில் நாம் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையுடன் வாழ முடியவில்லை ஏன்? நம்மிடையே போர்களும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சமூக இன வேறுபாடுகளும் ஏன்? நம்மால் சமநிலையுடன் கலங்கமில்லாமல் வாழ முடியாதா? மக்களும் அரசாங்கமும் ஏன் வன்முறை மனநிலையுடன் இருக்கிறார்கள்? உண்மையில் மதங்கள் மனிதனுக்கு சமாதானத்தை வழங்கவில்லை முக்தி என்ற சொல்லே குருமார்களால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. குரு, மதம், உச்சாடனங்கள், மந்திரங்கள், ஆன்மீக அதிகார பீடங்கள் அனைத்தையும் நம்மால் மறுக்க முடியும். எனில், நம்மால் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும். நமது வாழ்வில் அடிப்படைகளை சீரமைக்காமல் வாழ்வு சீரடையாது. அதுபோல நம் மனதை சீர்படுத்தாமல் தியானத்தால் பயனில்லை. உண்மை ஒரு பாதையற்ற நிலமென்று ஜேகே சொல்ல, அவரை உலகின் புத்தனாக அறிவித்த ஆன்மீக கம்பெனியும் அதன் ஆன்மீக உறுப்பினர்களும் ஆடி அதிர்ந்து யாரை உலகின் புத்தனாக அறிவிக்க திட்டமிட்டனரோ அவரால் இனி லாபம் இல்லை என்று அவரை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்க முயன்றார்கள்.” என்பதும், “எதிர்பார்ப்புடன் மகாத்மாவை உருவாக்குகிறார்கள், அவரால் லாபம் இல்லை என்று தெரிந்த உடன் அவரை கொலை செய்து விடுவதே இந்திய ஆன்மீக உலகில் வழக்கமான ஒன்றுதானே.” என்று ஜே.கே புகழ் இழந்த கதையையும், இடையில் காந்தியை கொன்ற கதையையும் விண்டு வைத்து சமூகத்தை நகையாடுகிறார்.
அடுத்ததாக பேராசிரியர் முரளி. கல்லூரியில் மத அடையாளங்களுடன் இருந்த சில பேராசிரியர்கள் பேராசிரியர் முரளியை புறக்கணிப்பதை மாணவர்கள் கண்டு கொண்ட நாளில் அவரை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள் மாணவர்கள். அதில் முக்கியமானவன் சமரன் என்கிறார் எழுத்தாளர். இன்றும் நிர்வாகத்திற்கும் அரசிற்கும் குறைகளை சுட்டி மாணவர் நலனை விரும்பும் ஆசிரியர் மாணவர் மனதை கவர்வது இயல்பு என்னும் அனுபவ அறிவை அழகாய் காட்டுகிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை தத்துவம் என்றால் கடவுள், சொர்க்கம், ஆத்மா, பேராத்மா, பரமாத்மா என்ற சிந்தனையைத் தாண்டி அது வளரவே இல்லை. பொருள் முதல்வாத தத்துவங்கள் முன்பு, இந்த மண்ணிலே செழித்திருக்க, மாய தத்துவக்காரர்கள் அந்த தத்துவங்களை சிதைத்து ஒன்றுமில்லாமல் அழித்துவிட்டார்கள். பொருள் முதல்வாத தத்துவத்தை பேசுகிறவர்களை எரித்து சாம்பலாக்குவது காலம் காலமாக அவர்கள் பின்பற்றிய வழி. நரகாசுரன், நந்தன், மாவலி, வள்ளலார், வரலாற்றில் காணாமல் போன பல சித்தர்கள் என்ற உண்மையைப் பேசுகிற ஒரே பேராசிரியர் இந்த முரளிதான் என்கிறார். இந்தியாவில் 3 லட்சம் கடவுள்கள் இருப்பதாக சொல்கிறார்கள் அவ்வளவு பேரையும் படைத்தவன் மனிதர்கள்தான். உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு அளிக்கப்படுகிற விடையில் தான் கடவுள் நம்பிக்கைக்கான நியாயம் இருக்கிறது என்கிறார். புத்தர் ஒரு விளக்கத்தை தருகிறார் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு பொருள் எந்த விதத்திலும் வெளிப்படாது இருக்கும் என்றால் அது இருக்கிறது என்பது உண்மை அல்ல இது புத்தரின் வார்த்தை என்கிறார் பேராசிரியர் முரளி. ஆனால் எல்லாம் இறைவனே என்னும் பேராசிரியர் ஜடாயு “மனிதனால் ஒரு சொட்டு ரத்தத்தைக் கூட உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குகிற தத்துவம் எது?” என்பவர். என்று குறிப்பிட்டு (அடைப்புக்குள் செயற்கை ரத்தத்தை ஜப்பான் உற்பத்தி செய்துள்ளது. நாரா மருத்துவ பல்கலைக்கழக ஆய்வகத்தில் செயற்கை ரத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. காலாவதியான மனித ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. என்ற தகவலையும் அளிக்கிறார் ஆசிரியர்.) இப்படி பேராசிரியர்களை அவர்களின் ஆளுமைத்திறன் சார்ந்து மாணவர்கள் எப்படி கொண்டாடுவர் என்பதைக் காட்டுகிறார்.
“மதவாதிகள் சாக்ரடீசை ஏற்கமாட்டார்கள். இளைஞர்களை அவர் சிந்திக்கச் சொன்னார். எது சரியான அரசு? எது சரியான ஆட்சி முறை? என்று இளைஞர்களிடம் விவாதித்தார் என்பதால் அதிகாரம் அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி ‘எம்லாக்’ நஞ்சு தந்து கொன்றது. கோப்பர்நிக்கஸ் சூரிய மையக் கொள்கையை கண்டுபிடித்தாலும் மதவாதிகளுக்கு பயந்து 36 ஆண்டுகள் தான் கண்ட உண்மையை மறைத்து சாகும் தருவாயில் உண்மையை வெளியிட்டார். புருனே தான் கண்டடைந்த உண்மையை வெளிப்படையாகச் சொன்னார். பூமி தான் மட்டும் சுற்றவில்லை பூமியை அடுத்துள்ள வாயு மண்டலமும் அதனுடன் சேர்ந்து சுற்றுகிறது என்றார். அதற்காக மதவாதிகள் அவர் ரத்தம் கூட தரையில் சிந்தி விடாமல் கொல்ல எண்ணி அவரை எரித்து சாம்பல் ஆக்கிவிட்டார்கள். அறிவியல் கருத்துக்கள் மதத்துக்கும் நில பிரபுக்களுக்கும் ஆகாத ஒன்று. தேல்ஸின் மாணவர் பித்தாகரஸ் எல்லாப் பொருட்களின் அம்சமும் எண்தான், பிரபஞ்சத்தின் முதல் கொள்கையே எண்தான், அதனடிப்படையில் பூமியைக் கோளம் என்றும் நெருப்பை சுற்றுவதாகவும் சொன்னவர். அதனடிப்படையில்தான் தத்துவங்கள் படிப்படியாக வளர்ந்து இன்றைய நிலைக்கு வந்திருக்கின்றன என்பது போன்ற பல்வேறு கருத்துகளை கதாபாத்திரத்தின் வாயிலாக ஆசிரியர் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். கூடவே நியூட்டன், ஐன்ஸ்டின், என பலரை சற்றே ஆழமாய் அறியச் செய்கிறார்.
‘அர்த்தங்களற்ற உலகில் மனிதன் அந்நியனாகவே வாழ்கிறான்’
சார்த்தர்
காற்றில் நிர்வாணமாக நின்று
வெயிலில் உருகுவதைத் தவிர
இறப்பு என்பது வேறென்ன
கலில் கிப்ரான்
என தத்தவங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
“‘கர்மா’ என்பது மனசாட்சியை பாசங்கான அரை வெள்ளைக் கந்தலிட்டு மூடி, அறமற்ற முறையில் விரும்பியதை நுகர அவனை அனுமதிக்கிறது. அவனைப் பொறுப்பற்றவன் ஆக்குவதுடன் அளவற்ற குற்றங்களுக்கும் பரிகாரத்தின் வழியே அவன் தப்ப முடியுமென நம்பிக்கையூட்டுகிறது.”
“மரபு விதிகளின்படி வாழ்வது வீண். நமக்கான வாழ்வை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே மானுட வாழ்வின் பொருள்”
சார்த்தர்
“பெண்களின் அனைத்து வரலாற்றையும் ஆண்கள் எழுதியுள்ளனர். வரலாறு முழுவதும் பெண்கள் தங்கள் சொந்த நலனுக்காகச் செயல்பட முடியாது. நடிகைகள், நடன கலைஞர்கள், படைப்பாற்றல் மிக்க பெண்கள் மட்டுமே எப்போதும் தங்கள் பெண்மைக்கு ஏற்ற சுதந்திரத்தை அதிக அளவில் அனுபவித்திருக்கிறார்கள்.”
சிமோன் தெ பொவ்வார்
போன்ற சிறந்த தத்துவங்களையும் நூல் வழி அறிய முடிகிறது.
அத்தியாயம் 9 ன் ஆரம்பம் ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியும் அதற்கு மதிப்புள்ள ஒரு விலையையும் கொண்டுள்ளது என்ற தத்துவத்தின் வழி தொடங்குகிறது. கதை நாயகன் சமரனின் செயலுக்கான விலையாக இந்தப் பகுதியைக்கொள்ள வேண்டுமோ என்று எண்ணச் செய்கிறது.
சமரன் முதுகலை தத்துவம் படிக்கும் மாணவன். சமரன் வகுப்பிலே மிகவும் வித்தியாசப்பட்டவன். காதலிக்க பலர் முயலும் போதும் விரும்பாத அவனை ஒ… ஞானி ஆகி விடுவானே, தத்துவம் வேறு படிக்கிறானே என வாசக மனம் நினைக்கும்பொழுது அவன் வெண்பாவை காதலிக்க தொடங்குகிறான். வெண்பாவின் வழி பெண்ணின் நுட்பமான உணர்வை எழத்தாளர் கரன் கார்க்கி வாசகர்களுக்கு கடத்துகிறார். அதன் படி சமரன் மிகவும் இளைய வயதில் தன் துணையை இழந்து தன்னை வளரக்கவே காலத்தை தொலைத்த தன் தாயை வெண்பாவால் நினைத்து பார்த்து அவளை இன்னொரு திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கிறான்.
அதை இயல்பாய் சிரித்து மழுப்பி மறுக்கும் தாயை அவனால் புரிந்துக் கொள்ள முடிகிறது. இறுதியாக பல முறை பல சந்தர்ப்பத்தில் வெண்பாவோடு பழகினாலும் ஒரு நாளும் தன் காதலை சொல்லாத சமரன் ஒரு நாள் மாலை அவளை அருங்காட்சியகம் வரச்சொல்லி அவனும் கிளம்புகிறான். இன்று தன் காதலை சொல்லி விடுவான் என்று காத்திருக்கிறாள் வெண்பா. அப்போது சமரனுக்கு வண்டி ஓட்டுவதில் விருப்பம் அதிகம். அதிலும் போட்டி போட்டு வண்டி ஒட்டுவதில் அப்படி ஒரு விருப்பம். அப்படி அன்றும் தன்னை முந்தி சென்ற ஒருவனை ஓவர்டெக் செய்ய முயலும் கணத்திலே அது நடக்கிறது. ஆம் தூக்கி ஏறியப்படும் அவன் தன் நினைவை இழந்து கோமாவிற்குள் நுழைந்து விட்டதாக மருத்துவ உலகம் சொல்கிறது. ஐந்து மாத காலம் நினைவிழந்து மருத்துவமணையில் கிடக்கும் இடத்தில் அவன் மன ஓட்டத்தில் எதனை காண்கிறான் என்பதாகவே கதைத் தொடர்கிறது. அவன் தாய் இன்னொரு திருமணத்திற்கு எப்படி தயாராகிறாள், வெண்பா என்ன ஆனாள் என்பதே மீதக் கதை. அப்படி நினைவிழந்த நிலையிலும் சமரனின் சமூகம் குறித்த அக்கறை அவனை சமூகம் குறித்தே சிந்திக்கச் செய்கிறது என்பதே நாவலின் அடர்த்தி மிகுந்த முக்கிய பகுதி. உலகத்தின் போக்கை தங்களது அதிகாரத்தாலும் அடக்கு முறையாலும் மாற்றிய அத்தனை பேரும் மண்ணில் மக்காமல் அழுகி கொண்டு எப்படி தவிக்கிறார்கள் என உணர்த்துகிறார். ஆசிரியரின் இந்த கற்பனை மிகவும் சிறப்பு. உலகத்தை நமக்கு உணர்த்துவதோடு சமூகத்தின் ஈவு இரக்கமற்ற செயல்களையும் அதற்கான காரணகர்த்தாக்களையும் இந்த பூமி இந்த மண் தன்னுள் ஏற்கவே ஏற்காது என்று எழுத்தாளர் அவர்களுக்கு அளிக்க வேண்டிய தண்டனையைச் சொல்லி அவரது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். அந்த குமுறல் நமக்கும் பற்றிக் கொள்கிறது. இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும்… இவர்களுக்கு என்று நம் மனம் அழுவதை தடுக்க முடியவில்லை.
சக மனிதனுக்கு துரோகம் செய்யும் மனிதனை மண் மக்காமல் பார்த்துக் கொள்கிறது என்ற கற்பனை சிறப்பு. மக்காத அந்த கொடூரன்கள்களை இன்னும் கொடுமையாய் வருணனை செய்திருப்பது மிகுந்த அருவருப்பை கூட்டுகிறது. எனினும் மேலே சொன்னது போல் வேண்டும் இன்னும் வேண்டுமே இவர்களுக்கு என்று இன்றும் வசவையும் சாபத்தையும் கொடுத்து அவர்களின் அழிவை எண்ணச் செய்கிறது.
எழுத்தாளர் எழுத்தின் வழியிலே “உண்மையில் கடந்த காலத்தில் நுழைய அவன் அஞ்சுகிறான். அதே நேரம் எந்தக் கணத்திலும் கடந்தகாலக் கருந்துளைக்குள் தான் நழுவி விழுந்துவிடும் அபாயம் இருப்பதாலும், அது பேராசையுடன் தன்னை விழுங்கக் காத்திருப்பதாலும் மிக எச்சரிக்கையாக நழுவி ஓட முயலும் அவன் காலுக்குக் கிழே உறைபனி நொறுங்கி ஓசையெழுப்புகிறது.” கடந்த காலம் மிக அச்சுறுத்துகின்றதாக இருப்பதால் அதனுள் விழுந்து விடாமல் இருக்க அவன் பெரும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது. அது சூரியனையே விழுங்கும் பயங்கர கருந்துளையைப் போல அவனை எளிதாக விழுங்கி விடத் துடிக்கிறது. கடந்த கால கருந்துளையில் விழுந்து எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என்பதை இயல்பாய் கடத்துகிறார் கதையினூடாக.
சமரனின் காதலின் ஆழத்தை அவன் கனவில் எல்லா இடங்களிலும் காணும் டயனெல்லாவை கொண்டு அறிய முடிகிறது. ஒரு அழைப்பை விடவும் ஒரு காதல் உள்ள தழுவலை விடவும் ஒரு துடித்தெழும் முத்தத்தை விடவும் இணக்கமுள்ள ஒரு பார்வை அவன் இதுவரை கவனிக்காத அவனது இடது புறம் இருந்த மரப்பலகையின் துவாரத்தின் வழியே அவளது சுண்டு விரல் வேலிக்கு வெளியே நீண்டு தூண்டிலாய் வளர்ந்து வளைந்து ஒரு பூவை போல மணம் வீசி மலரின் சூல் என உயிர்த் துடிப்புடன் சுழன்று அசையும் அந்த விரல் தூண்டில் காலத்தின் அழைப்பாக கருதி அவன் தன் சுண்டு விரலை கோர்க்கிறான். அந்த முகம் அந்த புன்னகை, அந்த கதகதப்பு ததும்ப காலத்தை தூக்கி உரையாடும் அந்த விழிகள், பாரட்டிசைக்கும் இதழ்கள், பனியை உருக்கும் அனல் மூச்சு, உயிரூட்டும் முத்தம், எல்லாமே பழகிய தனக்கான ஒன்றுதான் என்று காதலையும் கனமாய் சன்னமாய் கடத்துகிறார். காதல் மட்டுமா….
நமது சின்ன வலிக்கு இவ்வளவு துடிக்கிறோம். போரில் ஆயிரமாயிரம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். காதலிகள், காதலன்கள், மகன்கள், மகள்கள், அப்பாக்கள், அம்மாக்கள், பாட்டிகள், பாட்டன்கள்…. இவ்வளவு உயிரையும் இழக்கிறோம் என உறவுகளில் விளிக்கையில் வலி கூடுதல் கனமாய் வலிக்கச் செய்கிறது.
அம்பேத்கரை “நான் நீ மட்டுமல்ல இந்தியாவில் இருக்கிற ஒட்டுமொத்த இளைஞர்களும் படிக்கனும். அப்பதான் நம் நாட்டோட உண்மையான வரலாறு நமக்கு புரியும்” என்று கூறி அம்பேத்கர் ஒரு மிகச் சிறந்த வரலாற்றறிஞர் என்பதை காட்டுகிறார்.
விதவிதமான துயரப் புலம்பல்கள், வெறுமையான முணுமுணுப்புகள், துயரம் ததும்புகிற எரிச்சல் ஓசைகள், ஓயாமல் கேட்கிற குடியிருப்புகளை நோக்கி வீடு நிலம் பறிக்கப்பட்ட மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் என அவர் சொல்வது வடசென்னை புலம் பெயர்ந்தோர் நிலையை எடுத்துக்காட்டுகிறது. காசுக்கு ஓட்டு விற்கும் நிலை, தேர்தல் நேரத்தில் வண்ண வண்ண சீன விளக்குகள், கைகூப்பும் மினுமினுப்பான அரை வெள்ளை தோல், பிரபலமான நளின உடல்கள், காமரசம் சொட்ட சொட்ட அசைந்தாடுகிற தேர்தலின் காம களியாட்ட மேடை கலை நிகழ்ச்சிகள், அதில் தான் எத்தனை வகையான கூத்துகள், மதி மயக்கும் நெளிவு சுளிவான ஆட்டங்கள், மேடையில் அழுகை, பாடல், நகைச்சுவை, மட்டமான மது புட்டிகள், வாக்குறுதிகள் என இதெல்லாம் எதற்கு? மக்களிடம் உள்ள அதிகாரத்துக்கான ஓட்டை திருடுவதற்கு முன்பு அவர்களுக்கு தரப்படுகிற தந்திரமான மயக்க மருந்துகள். எத்துணை சத்தியம் இது என உணரச் செய்கிறது.
“அரசியல் தெரிந்த வியாபாரியால் பொய்களைக் கூட நல்ல விலைக்கு சிரித்த முகத்துடன் விற்க முடியும். செங்கொடி வந்த பிறகு தானே இம்மா நேரம் தான் உழைக்கிற அளவுன்னு ஆச்சு. நமக்கு நேரம் காலம் தெரியாதுன்னு வேல நேரம் முடிஞ்சிடுச்சுன்னு உசுரமான மரத்தில ஏறி சிவப்பு கொடிகாரங்க கொம்பு ஊதுவாங்க. பொம்பளை ஆளுங்க முட்டிக்கு கீழ சேலை கட்டுனாங்க. முலைகளை மறக்க மாறப்ப போட்டாங்க. முன்னாடி எல்லாம் அப்படியா? சாட்டையடி சாணிபாலுன்னு. நாய் நரி கூட பரவாயில்லன்னு தானே நாம் கிடந்தோம். இப்போ விலைவாசி கூடிப்போச்சுன்னு அரைபடி நெல்லு கூட்டி கொடுங்கன்னு கேட்கிறோமே எந்த தைரியத்துல? அதெல்லாம் செங்கொடி தந்த பலத்துல தானே….” என்று இடதுசாரி கட்சியின் கருத்தை தூக்கி நிறுத்துகிறார் கரண் கார்க்கி அவர்கள்.
இனவெறியும், இன வெறுப்பும், இனம் குறித்த பெருமை, ஜாதி வெறுப்பு, நிறவெறுப்பு, உங்களுக்கு இருக்கும் என்றால் நீங்கள் ஆண், பெண், கிழவர், கிழவி, அல்லது பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைகளையும் பிரித்தெடுத்து கொலை செய்வீர்கள். என்று இனவெறி, நிறவெறி, மதவெறி சாதிவெறியின் கொடூரத்தின் உச்சத்தை சொல்கிறார். தேவையற்றதுகளின் அழிவிலிருந்து தேவையானவர்களின் வளம் பெருகுகிறது என்கிறார்.
மன உழைப்பு உடல் உழைப்பு இரண்டுக்கும் இடையில் ஒரு சுவர் கட்டி வைத்திருக்கிறீர்கள் மன உழைப்பு மேலானது. உடலுழைப்பு கீழானது. அது பிறவி பயனால் அமைந்தது என்ற காப்பு, அரணுக்குள் இயங்குகிறது. மன உழைப்புக் குட்டையை கலக்குகிறது உடல் உழைப்பு மீனைப் போல வழியற்று திகைக்கிறது. இதையெல்லாம் தத்துவம் என்று சொல்ல முடியாது. வலு உள்ளவர்களின் ஏமாற்று கருத்து ஒவ்வாத செத்த தத்துவங்கள் என்கிறார். உழைப்பின் சிறப்பை காட்டுகிறார். டால்ஸ்டாயின் ஆசை சிறுகதையை டக்கென கருத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறது மனது.
குடிநீரில் மலம் கலக்கும் அநாகரீக பண்பு எவ்வளவு மோசமானது. அயோத்திதாசர், பண்டிதர், ராமசாமி, போன்றோர் கவனிக்கப்படாமல் போனதன் வலியைச் சொல்கிறார். செல்வம் வயிற்றை நிரப்பும் உள்ளத்துக்கு ஒளியை தராது. நீங்கள் இனமாக குலமாக குலத்தின் கிளைகளாக ஜாதியாக ஜாதியின் உட்பிரிவாக ஆயிரம் ஆயிரம் துண்டுகளாக பிரிந்து கிடந்தீர்கள். கிடக்கிறீர்கள். இதையே தத்துவம் என்றும் அதை தர்மம் என்றும் சட்டம் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். என்று சாடுகிறார். காந்தியைக் குறித்தும் பல்வேறு விமர்சன பூர்வமான கேள்விகளையும் முன்வைக்கிறார்.
சிங்கார சென்னையை நாவல் முழுவதும் சிறப்பாக சுற்றி காட்டுகிறார். யானை கவுனி, சால்ட்கொட்டா, பக்கிங் கால்வாய், மரக்காணம், வால்டாக்ஸ்ரோடு, மூர்மார்க்கெட், சித்திக் சராய் பள்ளி வாசல், அல்லிகுளம், எம்டன் குண்டு நீலம் பதிப்பகம், இயக்குனர் மெலோனி, கலங்கரை விளக்கு, சிவப்பு கட்டிடங்கள் குறித்த விரிவான விவரனை, குஜிலி பாடல்கள், சென்னை ஊர் பெயர் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில் இருப்பது,காஸ்ட்லஸ் கலெக்டிவ் கானா, கானா பாலா, உலகநாதன், பழனி, கானா சுதாகர், பாடகர் அறிவு, கண்ணகி நகர் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், எழில் நகர் போன்றவற்றை அறிய முடிகிறது. சென்னையை முமுமையாக அறியாத எனக்கும் சென்னை மனதில் பதிந்துவிட்டது. டயனெல்லாவெ அவனது வெண்பா என்பது கதை ஓட்டத்தில் புரிகிறது. குதிரை, மாட்டிறைச்சி பற்றிய பல்வேறு தகவல்களைக் காண முடிகிறது.
பண்டைய சென்னை விமான நிலைய கட்டிடத்தை பார்க்கிறான் அந்த நேரம் அதன் ஒளி ஊடுருவும் அலங்காரமான கூரைக் கண்ணாடிகளில் இருந்து ஒன்று நொறுங்கி விழுகிற ஓசையும் கேட்கிறது அதற்கு காரணமான திறனற்ற சுருட்டல் ஒப்பந்த காரர்களின் உருவங்கள் இன்னமும் அந்த கண்ணாடி கூரையின் கீழ் உலவுவதாக சொல்கிறார்கள் என்று எதார்த்தத்தை எடுத்துக் காட்டுகிறார்.
அலெக்சாண்டர் இந்தியா வரை வந்து வெற்றி பெற்றது, பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை அமைத்தது, வெள்ளையர்கள் வந்து வெளியேறிய வரலாறு, சமணர்களின் கழுவேற்றத்தின் கனம், கடவுளையும் கரைப்பது, பஞ்சாங்கத்தால் பலதும் நடக்குது என்பதையும் அணில்கள் உதவிய பாலத்தையம், கிருஷ்ண லீலையை அவதார் லீலை என்றும், கருகிய வெண்மணியின் வலியையும், ஆணவப் படுகொலையின் ஆணவத்தையும், பாலஸ்தீனப் போரின் அவலத்தையும், வாச்சாத்தி வன்கொடுமையின் வக்கிரத்தையும், சென்னையின் சிவப்பு கட்டிடங்கள் உருவாகி வடசென்னையின் வரலாற்றில் தேட நேர்ந்த அவலத்தையும் நாஜி படையினரால் கொல்லப்பட்ட யூதர்கள் நிலையையும், வைணவ சமயக்கொள்கை காந்தயின் கல்விக் கொள்கை, நதிநீர்நிலை, சயாம் மரண ரயில் பாதை அமைப்பு திட்டம், இட்லர், முசோலினி, தளபதி ஒகாவா, ஆஷ்விட்ஸ் வதை முகாம், (இந்த முகாமின் நிகழ்வுகள் படிக்கும் போது அய்யோ மனம் துடித்ததுடன் நாமும் நாமே இறந்து விட வேண்டும் என நினைக்க வைத்தது. ஜோசப் மெங்கெலே, கார்ல் கிளாபெர்க், ஹோர்ஸ்ட் ஷமான் இவர்களெல்லாம் என்ன பிறவிகள் என நினைக்க வைத்தது.) கொடுமைகள் அய்யோ என அழ செய்தது. இப்படி பலவற்றையும் பட்டியலிட்டு நம்மை பரிதவிக்க செய்கிறார்.
ஓர் இடத்தில் இப்படி நக்கல் அடிக்கிறார் எழுத்தாளர். “இந்த உலகில் கடவுளின் தாய்கள் பரிசுத்த ஆவியினாலும் சூரியனாளும் காற்றினாலும் யாகங்களாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்” என்கிறார்.
இன்னொரு இடத்தில்
”நீ புரட்சி உண்டாக்கப் போகிறாய் என்று குற்றம் சாட்டுவது போல் சொன்னது.
ஏற்கனவே புரட்சித்தலைவரும் புரட்சித் தலைவியும் இருக்கும் நாட்டில் புதிதாக நான் என்ன புரட்சி செய்து விடப் போகிறேன் என்றேன் நான்
அவர்கள் அப்படி என்ன புரட்சி செய்தார்கள்? என்றது.
செக்க சிவந்த மினுமினுப்பான கவர்ச்சியின் மீது ஆணையாக அது அவர்களுக்கே தெரியாத போது எனக்கு எப்படி தெரியும். என்றேன் நான்.
நீயும் தானே நம்பிக் கொண்டிருந்தாய்.
ஆமாம் எல்லாம் நம்பிக்கை தானே. சினிமா புரட்சி சமூகப் புரட்சி என்று எல்லோரும் நம்புகிறார்கள். அதனால் நானும் நம்பினேன் செக்கச் சிவந்த மினுமினுப்பானவர்கள் பொய் பேச மாட்டார்கள், திருட மாட்டார்கள் என்று நம்ப வைக்கப்பட்ட ஊர் இது. என அவர் சொல்வது நல்ல நகைச்சுவை. இது எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வளவு வலி நிறைந்த பிரதியில் சில இடங்களில் இப்படி நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.
இந்நூலின் வழிய எலீவீஸலின்- இரவு (நாவல்) ஹோலோகாஸ்ட்,
கிகோலோ, சிமென் தெ பொவ்வார் (Simone de Beauvoir – the second sex) – அந்திம சடங்கு, மரபுகளுக்கு எதிரான காதலர்கள், ரேச்சல் ஏவரி – லேண்ட்ஸ் ஆப் ஸ்னோ அண்ட் சன்செட், நீட்சே, (Friedrich Nietzsche) சாருவாகா லோகாயுதவாதிகள், மேக்ஸ் ரிக்டரின் பியானோ, ழான் பால் சாத்தார், நக்பாவின் நிழல் – ஸ்டேஜ் பிளே, ரமாபாய் – அண்ணலின் ஆன்மா, அடங்க மறு, கறுப்பர்களின் காலம், ஜிலாண்டியா கண்டம், மக்காவ், மெலென்கோவி சுழற்சி, சால்ட்கொட்டா, ராபார்ட் பெல்லாஸ் சிஷோம், நம்பெருமாள், துபாஷி – டுபாக்கூர், இந்தோ – சாரசெனிக் பாணிக் கட்டிடக் கலை, குமிஸ், குவாஸ், நிக்கோலா பகானி ஜேம்ஸ் கேமரூன், ஐவரி,ஜெனரல் தனகா,கோயபல்லஸ், போன்றவை இந்நூலின் வழி நான் அறிந்த புதிய செய்திகள்.
இரண்டே தத்துவ வரிசை தான் இனம் நிறம் ஜாதி மதம் அடிப்படையிலான அடிமை தத்துவம். இன்னொன்று அறிவியல் அரசியல் சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் அடிப்படையிலான விடுதலை தத்துவம். ஆத்மாவென்பதே பகட்டான பொய்வார்த்தை. அது பேராசையுள்ள மனிதனின் ஏமாற்று. தனக்கு மரணமேயில்லையென்று மனத்திருப்தி கொள்ள மனிதன் உருவாக்கிய பாசங்கான கண்டுபிடிப்பு என்கிறார்.
இனிய பாடலுக்கு இடையில்
பிறந்த குழந்தையின் முதல் அழுகை ஒலி….
பனிக்காற்றின் சீழ்கையொலி
காதலின் துயர விசும்பல்,
பனி உருண்டையின் கதகதப்பு
அனல் மூட்டும் ஒரு முத்தம்…
எனத் தொடரும் அவர்
இருள்… இருள்… இருள்…
தளிரிலை சுழன்று சுழன்று
மணம் வீசும் பனியாக உதிர்கிறது
என முடிக்கிறார்.
இறுதியாக சொல்ல வேண்டும் என்றால் நாவல் வடிவில் அமைந்த மிகச்சிறந்த தத்துவ புத்தகம். தத்தவ புத்தகம் வடிவில் அமைந்த மிகச்சிறந்த நாவல். அரசியல் சிந்தனை சார்ந்த புத்தகம். கனவுலகத்தை காட்டுவதை ஏற்க சற்று தயக்கம் ஏற்பட்டாலும் கனவில் எதுவும் எப்படியும் நடக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். உண்மையில் பனி படர்ந்த சென்னையை காண எனக்கும் கூட ஆசையை தூண்டித்தான் விட்டுள்ளது கருந்துளை. பனி படந்த சென்னையில் கடந்த கால கருந்துளையில் சிக்காமல் வெற்றி பெற வழி காட்டும் கருந்துளை அனைவரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூலாகும்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “கருந்துளை” நாவல் |
| ஆசிரியர்: | கரன் கார்க்கி (Karan Karki) |
| வெளியீடு: | சீர் வாசகர் வட்டம் |
| விலை: | ₹.250 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 முனைவர் அ. இந்துமதி |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

