துன்மார்க்கர்களின் வழி அழியும், நீதிமான்களின் வழி நிலை நிற்கும்! – ச.லெனின்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய கரசேவை என்கிற சிறுகதை தொகுப்பு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப்பாடு மிகஅருமையாக எல்லா கதைகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ மதத்திற்குள் உள்ள சாதிய உள்முரண்பாடுகளை கச்சிதமாக பல கதைகளில் விளக்குகிறார் ஜெயச்சந்திரன்.நபர் 1 : “ரதியுத்திரமாக கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட நாம் அனைவரும் பரிசுத்த ஜாதியாய் இருக்கிறபடியால் இகத்திற்கான ஜாதியை பற்றி, ரட்சிக்கப்படாதவர்களை போல் பேசுவது நல்லதல்ல” நபர் 2: “கர்த்தர் பாரபட்சம் காட்டுகிற தேவனல்ல என்றாலும், அவர்தம் சொந்த ஜனத்தின் மேல் பிரியமாய் இருந்தார். அவர்தம் மணவாட்டியாகிய சபைக்கு அஸ்திவாரக் கற்களாக லட்சத்தி நாற்பத்தினாலாயிரம் யூதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் ரகசியம் என்ன? தேவனுடைய வசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்”நபர் 3: “தேவன் ஒரு போதும் தீமையால் சோதிக்கிறவரல்ல என்று வேதம் சொல்கிறது.

(நீங்கள்) நடந்து கொள்வது தேவனுக்கும் அவரின்உன்னதமான ரட்சிப்புக்கும் விரோதமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”“உங்களில் பெரியவன் சிறியவனை போலவும், தலைவன் பணி விடைக்காரன் போலவும் இருக்க கடவன் என்று கிறிஸ்து கடைசி போஜனத்தின் போது தமது சிஷ்யர்களுக்கு சொல்லவில்லையா”“ரோமைச் சபையார் தேவனை அறிகிற அறிவைபற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால் தகாதவைகளைச் செய்யும்படி தேவன் அவர்களை கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி கேடான சிந்தனைக்கு (உங்களை) தேவன் ஒப்புக்கொடுத்திவிட்டார்”மேற்படி உரையாடல்கள் “இதோ ஒரு கன்னிகைகர்ப்பவதியாகி” என்கிற கதையில் வேவ்வேறு இடத்தில் வரும் விவாதங்களாகும். இதில் கிறிஸ்தவத்திற்குள் உள்ள சாதிய சிந்தனைகளையும் அதைஎதிர்க்கும் குரல்களையும் பார்க்கமுடியும். விவிலியத்தின் (பைபிள்) வசனங்கள் கதைக்களத்திற்கு ஏற்றாற் போல் ஆங்காங்கே சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. “ஒருவரும் சந்தேகப்படாதவாறு தனியாக ஒரு பெண்ணோடு இருக்க நேர்கிறபோது யோக்கிமாய் நடந்து கொள்கிற மனுஷன் பாக்கியவான். அவன் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க தகுதியுள்ளவனாகிறான்.துன்மார்க்கரோ அப்படி இராமல் காற்று பறக்கடிக்கும் பதரைப்போல் தம் மனதும், மாமிசமும் விரும்பியபடி நடந்து கர்த்தரை விட்டு வழிவிலகிப் போகிறார்கள். துன்மார்க்கரின் வழியோ அழியும். நீதிமான்களின் வழியோ நிலை நிற்கும்”இது “பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலே” எனும் கதையில் ஆண்-பெண்உறவு நிலை குறித்த விவாதத்தினூடே பயன்படுத்தப்பட்டுள்ள விவிலிய வரிகள். எல்லா மதமும் போதிக்கும், அச்சுறுத்தும், அவ்வளவே.
அதற்கு மேல் அவற்றால் ஒன்றும் செய்துவிட முடியாது தானே? பற்பல நூல்களை பயின்றவர்களாக இல்லாமல் கடவுள் தான் எல்லாம், விவிலியம்தான் அனைத்தும் என்று நம்பும் விசுவாசிகளுக்காவது அது வழிகாட்டக்கடவதாக. “சுவிஷேங்களின் சுருக்கம்” எனும் படைப்பில் டால்ஸ்டாயும், “கரமசேவ் சகோதரர்கள்” எனும் படைப்பில் தஸ்தயேவ்ஸ்கியும் கையாண்டுள்ளது போல் விவிலியத்தில் உள்ள வசனங்களையே முன்வைத்து எவ்வாறு அவை திருச்சபையாலேயே மீறப்படுகிறது என்பதை தனது கதைகளில் எடுத்துரைத்துள்ளார் ப்ரதிபா ஜெயச்சந்திரன்.டால்ஸ்டாயும், தஸ்தயேவ்ஸ்கியும் திருச்சபையிலும், கிறிஸ்தவர்களுக்குள்ளும் நிலவும் சாதியமுரண்களை கையாளவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தனர். ஆனால் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப் பாட்டோடு, இந்திய சமூகத்தில் உள்ள கிறிஸ்தவத்தை பற்றி எழுதும் போது சாதிய முரண்களை தவிர்க்க முடியாது தானே ? இந்திய சமூகத்தில் பார்ப்பனியத்தை விஞ்சிய சமணத்தையும், பௌத்தத்தையும் பிற்காலத்தில் பார்பனியமே சுவீகரித்துக்கொண்டது. புதிதாக வந்த கிறிஸ்தவ மதமும் பார்ப்பனிய சாதிய பாகுபாட்டிற்குள் தன்னை அடைத்துக்கொண்டது.எழவு சொல்லி, ஒருநாள், முட்டாய் தாத்தா ஆகிய கதைகள் கிறிஸ்தவ மதத்திற்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலை தலித் மக்களின் வாழ்வை வலியோடு பதிவு செய்கிறது.கரசேவை எனும் கதையில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை மிக நையாண்டியாக பிரசங்க வடிவில் ஆரம்பித்து இடித்தற்கான கடப்பாரை என்பதில் துவங்கி, உருவாக்குவதில் வளர்ந்து அதே நையாண்டியோடு முடித்தாலும், சிந்திக்க தூண்டும் கதியாக அமைந்துள்ளது.“வாழ்க்கைச் சதுரங்கத்தில் வார்த்தை காய்களை வெகு ஜாக்கிரதையாக நகர்த்த வேண்டும்.
”“உனக்கு என்னிடம் மறைக்கணும்னு தோணியிருக்கு, அல்லது மறைக்கக் கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு நான் உன்னோட நம்பிக்கையை இன்னும் பெறல, அது என்னோட தப்புதான், உன்னோட முழுநம்பிக்கையைப் பெறுமளவிற்கு என்னை தகுதியாக்கிக்கிறேன், சரியா?”இவை ‘அரவணைப்பு’ எனும் கதையில் வரும்சில வரிகள். இக்கதை, கணவன் மனைவி உறவைபேசுகிறது. உறவுச்சிக்கல்களை, புரிந்துகொள்ளுதலை, இணைந்த வாழ்க்கை பயணத்தை அழகாக ஒரே ஒரு சம்பவத்தை ஒரு சில பக்கங்களில் கதையாக்கி அழகுற சொல்லப்பட்டுள்ளது.“ஆதியாகம சாத்தான் எங்கெங்கு செல்கிறானோ அங்கெல்லாம் அவன் தன் நரகத்தையும் கொண்டு செல்வானாம்” என்றொரு வரி ‘சலிப்பு’ எனும் கதையில் உள்ளது. இதை வாசித்தபோது, ஜி.எஸ்.டி.,பணமதிப்பு நீக்கம் என எங்கெங்கு சென்றாலும் ஏழை எளியவர்களுக்கு நரகத்தை சுமந்து வரும் தற்கால சாத்தான் ஒன்றும் நினைவிற்கு வந்தது.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.120
நன்றி: தீக்கதிர்