ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - இறைமொழி
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - இறைமொழி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – இறைமொழி

 

 

 

இதன் தலைப்பும் அட்டைப்படமும் என்னை ஈர்த்தது. ஈர்த்தது என்று சொல்வதை விட தைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கறி விருந்து படைத்து, வெற்றிலையும் கொடுத்ததாகத்தான் நூலின் தலைப்பு கூறுவதாக எனக்கு பட்டது. அப்படி இருக்க எதற்காக ஒரு கை ஏந்துகிறது! அந்தக் கை தன்னுள் எப்பேற்பட்ட வலிகளைப் புதைத்துள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் ஏங்கும் ஒரு கை என்றுதான் எனக்குத் தோன்றியது. படித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, முடித்ததும் மீண்டு வர இயலா நிலை என்னுடையது.

சர்வ சாதரணமாக இன்றளவும் நடக்கும் ஒன்றுதான் இந்த சாதிப் பிரிவினை. ஏதோ நகர்ப்புறத்தில் இருப்பதால் அதன் வீச்சம் சற்று குறைந்து அல்லது மறைக்கப்பட்டு உள்ளதாகத்தான் தோன்றுகிறது. எனினும் சாதி ஏற்றத்தாழ்வு இன்றளவும் சக மனிதனை மனிதனாக மதிக்கத் தவறுகிறது என்பதுதான் நிதர்சனம்.
சூழ்ச்சியின் விளைவாக, பாதியில் வந்த சாதி மனிதனை படுத்தும் பாடு சொல்லில் அடங்காது. அதனை ஆசிரியர் கையாண்ட விதம் அருமை.

சாதியின் கோரச் செயல், மாணவப் பருவம் தொடங்கி இன்றளவும் அதன் தாக்கம் எப்படித் தொடர்கிறது என்பதை ஆசிரியர் “தன் வரலாறு” ஆக்கிப் படிக்கப் படிக்க நா வறண்டு போகச் செய்கிறார்.

ஏதோ ஒரு நாவல் படித்தோம் என்பது போன்று அல்ல இந்நூல். ஆசிரியரின் சொந்த வரலாறு. முன்னுரையில் அவர் கூறுகிறார், பல்துறையில் சாதித்து அல்லது வயதான காலத்தில் தான் இப்படியான ஒரு தன்வரலாறு எழுதும்படி அப்படி ஒன்றும் நான் செய்து விடவில்லை. “என் வலிகளைக் கடத்த முயற்சி செய்கிறேன்” என்று சொல்லி இருப்பார்.

26 அத்தியாங்கள் கூறும் அத்துனையும் வலிகள் நிறைந்தவை. சாதி பாகுபாடு கொஞ்சமும் கூசாமல் கோலோச்சுகிறது வன்மத்தை. அனுபவித்த அந்த பிஞ்சுக்கு மனம் எந்த அளவிற்கு ரணமாகி இருந்தால், மெத்தப் படித்து பேராசிரியராகிவிட்ட இந்த காலக் கட்டத்திலும் தன் ரணத்தைக் கடத்துகிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சாதி என்றால் என்ன என்பதே தெரியாத சின்னஞ்சிறு மாணவப் பருவத்தில் சக நண்பனின் வீட்டினுள் செல்லத் தயங்கிய சிறுவன், “பயப்படாம வாடா” என்று கூறும் தோழன். இதை ஆசிரியர் இவ்வாறு கையாண்டு இருக்கிறார். “நான் ஏன் பயப்படுகிறேன் என்பதை நானும் அவனும் எப்படி உணர்கிறோம் என்பதற்கான கேள்வி அர்த்தமற்றவைகளாக இருக்க முடியாது” என்று.

ஒரு பிஞ்சு உள்ளத்தில் இப்படியான பயத்தை, தயக்கத்தை ஏற்படுத்திய இந்தச் சமூகம் கட்டாயம் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கேட்கத்தான் வேண்டும்.
மெத்தப் படித்த நண்பனின் அருகில் அமரவும் கூசிய, வெற்றுடம்பில் நூலணிந்த நண்பன். கூசியது ஏன் அவனுக்கு?

சிறு வயதில் கைகோர்த்து பகிர்ந்துண்டு, களித்த அச்சிறுவன் வளர்ந்த பின் வேற்றுமையில் உழன்றது ஏன்? கற்பிதங்கள் அன்றி வேறென்ன என்பதை நம்மிடமே விட்டு விடுகிறார் ஆசிரியர்.

அறிவுக் கண் திறக்கும் பள்ளி ஆசிரியரின் வன்மம். தேசத் தலைவர்களின் புகைப்படங்களோடு அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தையும் சுவற்றில் மாட்டும் கட்டாயம் இருந்தபோது கற்பனைக்கும் எட்டாத ஒரு செயலைச் செய்துவிடுவது. அது வரிசையில் இருந்து சற்றே கீழ் இறக்கி ஆணி அடித்து அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டி விடச் செய்தது. ஆணி இன்னார்தான் அடிக்க வேண்டும் என்ற நிலைபாடு வேறு. அன்று அந்த ஆசிரியரின் மனதில் இருந்த வன்ம புகைக்கு காரணம் தெரியாத சிறுவன் வளர்பருவத்தில் அறிந்தபோது அண்ணலின் புகைப்படத்தை நேர்வரிசையில் மாட்ட கேட்டபோது தான் வாங்கிய அடியின் வலிக்கு இப்போது மருந்தானது என்னவென்றால், “இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் அம்பேத்கர் கடுப்பேறிக் கொண்டு இருப்பாரோ என்று தெரியவில்லை” என்று ஆசிரியர் சொல்வது தான். உண்மைதான். அதனால் தானே இன்னமும் அண்ணலின். சிலையை முட்கம்பிகளுக்குள் வைத்து உள்ளோம்!

தாழ்ந்த சாதியினர் முதல் மதிப்பெண் எடுத்தால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத சாதி வெறிபிடித்தவர்கள் ஆசிரியர்களாக இருந்தால் அங்கு படிக்கும் மாணவன் எப்படி தன் சந்தேகங்களைக் கேட்க முடியும் என்பது தான் இங்கு கேள்வி. இன்று வரை இதற்கு விடையில்லை.

பறவையாய் சுற்றித் திரிந்து சுதந்திரமாக வாழும் பருவம் தான் இளம் வயது மாணவப் பருவம். அப்படி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் இன்னார் மட்டும் பின் வரிசையில் நெருங்கி அமர இடத்தை ஒதுக்கீடு செய்திருந்தவர்களால் அந்த மாணவர்களின் மனச் சுதந்திரம் சிறைபட்டு விட்டதை உணரவாவது முடியுமா?
இன்றைக்கும் பலர் கேட்கும் கேள்வி, சாதியே வேண்டாம் என்று கூறுவோர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா என்பது. இப்படியான மனிதத் தன்மையற்ற இடஒதுக்கீடு இனியும் நேராதிருக்கத் தான் இன்று வழங்கப்படும் “இட ஒதுக்கீடு” என்பது அறிக.

இயற்கையில் பசி பொதுவானது. இதில் மனிதன் மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திப் பிளவுண்டு கிடக்கிறான். பசிக்கு உண்ண வந்த சிறுவனிடம் வேற்றுமை பாராட்டி, அதை உணரக் கூட முடியாத குழந்தைத்தனமான நிலையில் அச்சிறுவன், பதட்டத்தில் விவரம் அறிந்த தமையன், கடைக்காரர் கவனிக்கா வண்ணம் அவரின் கவனத்தை திசை மாற்ற தமையன் கேட்கும் “இன்னும் ரெண்டு போண்டா” கண்களில் நீரை வரவழைத்து மனது கனக்கச் செய்து விடுகிறது.

நண்பன் விரும்பி உணவு உண்ண அழைத்த போது அவனது தாயும் அன்போடு உணவு பரிமாறும் அவரின் சாதி வேற்றுமை சுடு சொல். தான் இன்னார் என்பது தெரியாது தன்னிடமே தன் இனத்தைக் கேவலமாகப் பேசும் அந்த அம்மையாரின் கையால் உண்ட உணவு அந்த இளைஞனுக்கு எப்படிப்பட்ட கூச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் உணரமுடியாது போக வாய்ப்பில்லை.

சாதி வர்க்க வேறுபாட்டை “புற்று நோய்” என்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் என்று கோடிட்டுக் காட்டும் ஆசிரியர், பள்ளியில் எவ்வாறெல்லாம் சாதி தன் இழி செயலைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மாணவனின் அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கவேண்டிய ஆசிரியர்களே அவர்கள் ஒதுங்கி வாழும் நிலையை ஏற்படுத்தி வைக்கிறார்கள். மாணவனின் சாதியைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நேரிடையாகக் கேட்க அவர்களுக்குக் கூச்சமாம்(!) குல சாமியின் பெயரைக் கொண்டு கண்டுபிடிக்கிறார்கள். தன்னை இந்தச் சமூகம் எப்படியான இழி பார்வை கொண்டு பார்த்தால், பயிலும் மாணவ மாணவிகள் ஊக்கத் தொகைக்குத் தங்களின் சாதி பெயரை அழைத்தும் சொல்ல முன் வராமல் இருந்து இருப்பர் என்பதை ஆழமாக நம்மை யோசிக்க வைத்து விடுகிறார் ஆசிரியர்.

தான் என்ன சாதி என்று சொல்லிக்கொள்ளும் போது ஏற்படும் பெருமிதம் இங்கு அனைத்து சாதியினருக்கும் வாய்க்கவில்லை. மற்ற சாதியினரைப் பெயரிட்டு அழைக்கும் போது அழைப்பவரிடமும் எந்த இழிவான எண்ணமும் இல்லை, அழைக்கப்பட்டவரிடமும் எவ்வித தாழ்வுமணப்பான்மையுமில்லை.

ஆனால் குறிப்பிட்ட சாதி பிரிவினரை அழைக்கும் தொனியே இங்கு தனிதான். ஏளனமாக, கிண்டலாக கூற மட்டுமே குறிப்பிட்ட சாதியினரை பெயரிட்டு அழைக்கப் படுவதால் தாங்கள் இன்ன சாதி பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளவே கூனி குறுகிப் போகும் நிலைக்கு அம்மக்களைத் தாழ்த்தியவர்கள் யார்? என்ன செய்யப் போகிறார்கள் என்பதே ஆசிரியரின் கேள்வியாக எனக்குத் தோன்றுகிறது
*ஒளவை* சொன்னது “இளமையில் வறுமை கொடியது!” ஆசிரியரின் ஒவ்வொரு பக்கமும் சொல்வது “தலித் இனத்தின் இளமையில் வறுமை கொடியது!”.

வறுமை வாட்டுவதைத் தாண்டி இன்ன இனம் என்ற சொல்லின் வன்மம் தரும் சூடு தாங்காது பொசுங்கிப் போகிறது அந்த இளைஞனின் மனது. மருந்து தேடி இன்ன காலம் வரை அவரின் பயணம்… என்பதை இந்நூலின் ஒவ்வொரு எழுத்தும் கடத்தி உள்ளது.
கறி விருந்து அருந்திய வீட்டின் கூலித் தொழிலாளி தன் உழைப்புக்குக் கூலியாக வாங்கும் கவுளி வெற்றிலையைக் கையால் கூட வாங்கத் தகுதியின்றி தன் “புடவை முந்தானையில்” வாங்கும் அவரின் நிலை… அதைத் தன்னிடமே பெருமையாக சாதித் திமிர் மேலோங்கிய நண்பனின் தாய், “அவர்கள் அப்படித்தான் வாங்குவார்கள், கையில் வாங்கக்கூடாது” என்று கூறும்போது உண்ட கறி சோறு தொண்டையில் சிக்கி சிக்கி உயிரைப் பிச்சித் தின்றதற்கு யார் காரணம்? இன்னும்கூட அந்த பருக்கைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டு உயிர் வதை செய்வதை படிப்பவரின் மனதில் பதிய வைக்கும் ஆசிரியர், சொல்லாமல் சொல்கிறார் இந்தக் கேடு கெட்ட சமூகக் கட்டமைப்பை.

அழகியலை, காதலை வர்ணித்து எழுத தனக்கும் ஆசைதான் ஆனால் “தான் பட்ட வலியைச் சொல்லவே வாழ்நாள் போதாத போது எங்கனம் அதை எழுதுவது” என்று கூறும் ஆசிரியர், ஆங்காங்கே காதலையும், அதன் சுவையையும், அது தந்த சாதி வலிகளையும், இயற்கையின் எழிலையும் நம்முள் கடத்திக் கொண்டுதான் செல்கிறார்
சாதியின் ஏற்றத்தாழ்வு மனிதனை மதிக்கத் தெரியாது,சமூகத்தைச் சீரழித்து,தானும் சீரழிந்து கொண்டுதான் உள்ளது. இதில் வாழ்வை இழந்து தடம் புரண்டு வாடும் விலைமாதர்களிடம் யாரும் தங்கள் சாதி யோக்கியதையைப் பார்ப்பதில்லை. மாறாக சாதி இழிவை அவர்களிடத்தும் பொருத்திப் பார்க்கும் மன சீக்காளிகள் “டேய் அவ பறச்சி மாதிரி இருக்கா டா” எனும் போது நெஞ்சம் செதிள் செதிளாக நொறுங்கிப் போகிறது.

எங்கும் சாதி எதிலும் சாதி. இது தான் இன்றைய நிலை நம் தேசத்தில். “கலை” அதற்கும் சாதி பார்க்கும் நிலை. இன்ன சாதியின் பெருமை கூறலாம் அன்றி இன்ன சாதியின் வலிகளைக் கூறக் கூடாதா? எழுந்த கேள்வி இன்னமும் தன் மனதில் ஏக்கமாக உள்ளதை ஆசிரியர் கூறும்போது அதே ஏக்கம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது அட்டைப்படத்தில் வந்த அண்ணன் “தொல். திருமாவளவன்” அவர்களின் புகைப்படம், ஆதிக்க சாதியின் இரத்தத்தைத் தாறுமாறாக கொதிக்க வைக்கிறது.

புகைப்படத்தை கிழித்து எறிந்த நண்பனின் சாதிவெறி, அவனது மனக்கசடை கழுவியெடுக்க யாருமில்லை இன்றுவரை.

எல்லோருமே சாதிப் பிரிவினையை விரும்புவதும் இல்லை. அப்படியே ஒன்று கலந்து விட்டாலும் சமூகம் அவர்களை எப்படி ஒதுக்குகிறது, அவர்தம் வளர்ச்சியில் கேடு செய்கிறது என்பதையும் “அரசியல் களத்தில்” காணப்படும் அப்பழுக்குகளை ஆசிரியர் கொஞ்சமும் வர்ணம் தீட்டாது காட்டுகிறார் *மனதிற்கு எப்போதுமே நிறமில்லை* ஆனாலும் “சாதியின் அடர் நிறம் சற்றும் குறையவில்லை” என்பதைத் தன் சொந்தக் காதலில் நிரூபித்து விடுகிறார். இதைத் தான் ‘நண்டு வேண்டாம் சாறு மட்டும் போதும் ‘ என்பர். புரிந்த அந்த காதல் மனது இழி நிலையின் உச்சியில் தன்னை நிறுத்த மறுத்துவிட்டது. நமக்கும் இந்த இடத்தில் சோகம் இழையோட பின் காதலியின் கற்பிதக் குணம் கண்டு சுதாரித்துக் கொள்கிறது.

“சட்டம் இயற்றிய மேதை, இன்னமும் கூட அவரின் *சிலை முட்கம்பிகளுக்குள்* தான் உள்ளது. வேற்று நாட்டவர், “பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர்” அவர்களுக்கு சிலை வைத்துப் பெருமை சேர்க்க நம் *துரு பிடித்த* தேசமோ இன்னும் திருந்தவில்லை, உணரவில்லை. இன்றளவும் அண்ணலை “சாதியின் தலைவராக” எண்ணும் அரை வேக்காடுகள் இருக்கும் வரை இப்படித்தான் அவர் பெருமையை உரைக்க, சிலைத் திறக்க முட்டுக் கட்டைப் போடுவர் என்பதனைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர் தன் சொந்த குடும்பத்தார் இழந்த உடல் உறுப்பும் கதறிய குரலும் இன்று வரை காவல் துறையினர் செவிகளில் சென்று சேரவில்லை என்பதனை இரத்தம் சொட்ட விவரிக்கிறார்.

நாட்டு நடப்பாகட்டும் நடந்த கொடுமையாகட்டும். தன் கருத்தாகட்டும், ஏதுரைப்பினும் ஆங்கே சாதியின் தலை நீண்டு தானுள்ளது. ஆதிக்க சாதியினர் சொன்னால் அதில் மாற்றுக்கருத்து கூட இல்லை. ஆனால் ஒரு தலித் கூறினால்…. அதில் ஆயிரமாயிரம் குற்றம் குறைகள். அப்படித்தான் திரு. பா. ரஞ்சித் அவர்களையும் சாடியது, ராஜராஜன் பற்றிய செய்திகளில். இன்றும் சமூக ஊடகம் அவரைத் தூற்றிக்கொண்டு தான் உள்ளது.

மன உளைச்சலை ஏற்படுத்தி அதில் குளிர் காயும் சாவியாய்ப் போன பயிர்கள்.
தனது பள்ளிப்பருவம் முதல் இன்று வரையும் ஓயாது துரத்தும் சாதி எனும் தீப்பந்தம் – அதை அழகாய் விளக்குகிறது ஆசிரியரின் ஒவ்வொரு அத்தியாயமும்.

உலக சந்தையில் நாகரிகம் தழைத்தோங்கி உள்ள இன்றைய காலக் கட்டத்திலும் உருவ கேலியும் தோற்றத்தை வைத்து முன் முடிவு செய்யும் பிற்போக்குத்தனமான செயலும் இருக்கிறது. அதிலும் இந்த சாதி…. இப்படி உடை உடுத்தினால், இப்படி தலை முடி வைத்திருந்தால் இன்னார்தான் என்று வசை பாடும் கோமாளிக் கூட்டம்.

அவர்களின் முக, மனத்திரைகள் வெகுவாக கிழிக்கப்பட்டு இருக்கின்றன இந்நூலில்.

“தலையாரி” என்ற சொல்லுக்குள் மறைந்திருக்கும் சோகங்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

“உயிர் வதைகளை தொழிலாகக் கொண்டு உயிர் வாழ்வதென்பது பெறும் வதை” என்று உதிரக் கோடுகளால் தன் துக்கத்தைத் தெளித்திருக்கும் ஆசிரியரின் மனக் குமுறல் தெளிந்த நீரோடை.

ஒரு நாள் கூட அந்த வாழ்வை வாழ முடியாது கற்பனையில் கூட. நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் ஒரு திரைப்படத்தை நம் கண் முன்னே வந்து போக வைக்கிறார். அந்த கதாபாத்திரம் ஒரு திரைப்படம் என்றாலும் நம் சுவாசப் பையின் சுடு காற்று மொத்த உறுப்பையும் தாக்கும். அப்படிப்பட்ட ஒரு கரு உண்மை வாழ்க்கையில் நடந்தால்… இன்னமும் கூட என்னுள் இருந்து அந்த ரணத்தைக் கொஞ்சமும் ஆற்றயியலவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தங்கள் வாழ்நாளைக் கழித்தத் தன் தலைமுறையினர் என்று சோகம் நிறைந்த வார்த்தைகளில் உதிர்க்கிறார் ஆசிரியர்.

இன்று பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் வாழும் மக்களின் நிலைக்கு மடாதிபாதிகள், பிராமணர்கள், ஆண்ட வர்க்கத்தினர் எந்த அளவில் பொறுப்பாகிறார்கள் என்பதனை விரல் நீட்டிச் சுட்டுகிறார் ஆசிரியர். தன் பாட்டன்களின் பெயரும் வரலாறும் தெரிந்துகொண்ட தன்னால் இன்னமும் கூட அதே நேர்கோட்டில் தான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராட வேண்டியுள்ளதே தவிர வேறு ஒரு மாற்றமும் இந்தச் சமூகத்தில் இல்லையே. பூட்டன், பாட்டன் ஆண்ட கிட்ட அடிமைகளானார்கள் என்றால் தந்தையின் நிலையோ “கட்சி எனும் போர்வையில் அடியாளாக…” என்று மனம் வெதும்பி நிற்கிறார்!

போராட்டம் இன்னமும் தொடர்கிறது என்பதைக் கோயிலில் தீ மிதித்தல் மூலம் செப்புகிறார். ஏகலைவனின் நிலையை ஆசிரியர் எடுத்துக்கொண்ட விதத்தை இங்கு நாம் ஆழ்ந்து சிந்திக்கத்தான் வேண்டும்.

மக்கட்செல்வம் அதிகரித்ததால் இன்றைக்கு நிலைமை அவ்வளவு துரோகமாய் இல்லை என்று முடிக்கிறார். என்றாலும் இன்னமும் கூட ஏளனப் பார்வையும் ஒதுக்கி வைக்கும் நிலையும் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

ஒரு சிறு மாணவனின் மனதில் எழுந்த கேள்விகள், பட்ட அவமானங்கள், தன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்ற மனப்புழுக்கம், கல்வி பல கற்றுத் தெளிந்தும் கற்றுக் கொடுக்கும் நிலையில் இருந்தும் கூட சமூகத்தை உன்னி போல் ஒட்டிக்கொண்டு இருக்கும் படிநிலைப் பாதகம், அதன் தாக்கம் தன்னை நிழல் போல் தொடர்வதை ஆழமாக நம்மில் கடத்தி விடுகிறார் ஆசிரியர்.

தொடர்ந்து தன்னை வாட்டும் நிலையை மிக அழகாக எவ்வித சொருகலோ கற்பனையோ இன்றி வரலாற்றுத் தடங்களை தடம் மாறாமல் எடுத்துக் கூறும் ஆசிரியர், தன் வரலாற்றுக்கு பல வரலாற்று நூல்களையும் சான்று காட்டுகிறார்.
ஒவ்வொரு அத்தியாயமும் இந்த ” சமூகத்தை நோக்கி வீசப்பட்ட கல்” என்று தான் எனக்கு தோன்றுகிறது “எப்பவோ ஏதோ நடந்தது” என்று மட்டும் சுலபமாக நினைக்க முடியவில்லை என்னால். ஆசிரியரின் வலிகளில் ஏனைய என்னையும் பாதித்தவைகள் தாம் என்ற அடிப்படையில் இந்த நூலின் சாராம்சம், வலிகள் எனக்கு மிக நெருக்கமாக உணரச் செய்கிறது. படித்து முடித்ததும், இல்லை பயணித்து முடித்ததும் புத்தகத்தின் அத்தியாயங்கள் என் மனதின் எடையைத் தாறுமாறாக கூட்டிவிட்டது. காரணம், பசுமரத்தாணியாக ஆசிரியரின் கொடும் அனுபவ நிகழ்வுகளும் என்னையும் ஆட்கொண்டு விட்டதால்!

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், ஆசிரியர் ஊரின் பெயர்களையோ, நபர்களின் பெயர்களையோ மாதிரியாகவோ மறைத்தோ சொல்லாதது தான். நான் எழுதும்போது எனக்கு சில மூத்த எழுத்தாளர்கள் கொடுத்த அறிவுரை என்னவென்றால், உண்மையான ஊரின் பெயரையோ ஆட்களின் பெயரையோ எழுத வேண்டாம் என்பதுதான். அது சிக்கலை உண்டாக்கும் என்பதால். ஆனால் இங்கு ஆசிரியரின் மன தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

திரைப்படக் கல்லூரியில் பேராசிரியராய்ப் பயணிக்கும் நூலின் ஆசிரியர் தன் வலிகளை வெள்ளித் திரையில் திரையிடவும் இதன் மூலம் என் வேண்டுகோளாக வைத்து என் நன்றியையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன்!

தோழமையுடன்,

இறைமொழி
(தமுஎகச உறுப்பினர்)
மாங்காடு

 

நூலின் பெயர் : கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் (சாதியினாற் சுட்ட வடு)
ஆசிரியர்: திருக்குமரன் கணேசன்
ஆண்டு: ஆகஸ்டு 2022
வெளியீடு: காலச்சுவடு.
விலை:175
பக்கங்கள்:135/

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்ப

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *