பாலுறவுக் குற்றங்கள் எந்த வயதினர், எந்த பாலினர் சம்பந்தப்பட்டு நிகழ்ந்தாலும் எது காரணம் யார் காரணம் என்பது தெளிவாய் தெரிந்தாலும் நமக்கு நாமே திரைப் போட்டு மென்மேலும் குற்றங்கள் அதிகரிக்க ஏதுவாகி விடுகிறோம்!

எல்லா பாலியல் குற்றங்களுக்கும் ஒரே அடிப்படையான காரணம் பாலுறவு குறித்த சரியான புரிதலும் பார்வையும் இல்லாததேயாகும். காதலைப் பற்றி பாடப்புத்தகங்களில் கூட சிலேகிக்கும் நாம் காமம்/ பாலுறவு என்ற பதங்களுக்கே ஜெர்க் ஆகிவிடுகிறோம்.

Nothing is better than nonsense என்பது மட்டுமல்ல nothing also leads to nonsense என்பதும் நிதர்சனமான உண்மை! அறியாத வயதில் அறியவைப்பதுமில்லை, புரியாத வயதில் புரியவைப்பதுமில்லை!

எந்தளவிற்கு பாலுறவைக் கட்டிக் காக்கிறோம் என்பதற்கு உதாரணம் 90களில் பத்தாம் வகுப்பு உயிரியல் பாடத்தில் இனப்பெருக்க உறுப்புகள் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடத்தை தடை செய்தனர்! பாலுறவு குறித்த அறிவியலைத் தடை செய்து விட்டு, கேட்டாலே பாலுணர்வைத் தூண்டும் சினிமாப் பாடல்களை பட்டித் தொட்டி எங்கும் பரப்பிவிட்டனர். இது தான் நாமிருந்த சமூகம்!

இருக்கும் சமூகம் இதை விட மோசமானதாகத் தான் இருக்கிறது! பாலுணர்வைத் தூண்டுதல் தவறல்ல, ஆனால் வெளிப்படையான பாலியல் கல்வி இன்றைக்கும் ஆண் பெண்ணுக்கு தனித்தனியாக பூ, காய், கனி என தாவரங்களின் இனப்பெருக்க முறைகள் மூலமாக இலைமறை காயாகத் தான் கற்பிக்கப் படுகிறது!

எந்த வயதில் பாலியல் கல்வி, எந்த அளவிற்கு பாலியல் கல்வி என்பதற்கெல்லாம் ஒரு வரைமுறை தேவையில்லை. பாலுணர்வு போன்ற சிற்றின்பங்கள் ஒன்றும் பேரின்பம் கிடையாது என்பதை பாலின பேதமின்றி எல்லா மனங்களிலும் விதைத்தல் மட்டுமே ஒரே தீர்வாகும்.

முதல் படியாக உடலின் எல்லா மண்டலங்களிலிருந்து இனப்பெருக்க மண்டலத்தை தனிமைப்படுத்தும் ஓரவஞ்சனையைக் கைவிட முயல வேண்டும். அந்த மண்டலத்தை அருவருக்கத் தக்கதாகவும் பதுக்கிவைப்பதும் எதற்கும் உபயோகம் கிடையாது. விகல்பமில்லாத வயதில் ஹார்மோன் உந்ததுதலுக்கு முந்தைய பருவத்திலேயே மற்ற மண்டலங்களை படிப்பிக்கச் செய்வது போல கற்பித்தல் வேண்டும். உறுப்புகளின் பணிகள், வளர்ச்சி மாறுபாடுகள், தாய்மைப் பேறு, ஹார்மோன் உந்துதல் குறித்து அறிவியல் முறைப்படியே அறிவித்து விடல் வேண்டும்.

பாலியல் கல்வியை மட்டும் தனிமைப்படுத்தி பட்டும் படாமல் பூசி மொழுகுவது எதிர்மறையான பார்வையைத் தான் திணிக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இது மட்டும் தான் வித்தியாசம், பெண்கள் போகப் பொருள் அல்ல என்பதை அறியாத வயதிலேயே முறைப்படி அறிவித்து ஹார்மோன் சித்து விளையாட்டு வயதை எட்டும் முன்னரே ஹார்மோன் விளைவிற்கு மனதளவில் ஆண் பெண் இருவரையும் பக்குவப்படுத்தல் நலம்.

ஆணும் பெண்ணும் அனாடமி தவிர அனைத்திலும் சமம் என்பதான பார்வை ஏற்படுத்துதலே இன்றியமையா அடிப்படை மாற்றம். இதை புரிந்து கொண்டாலே எல்லா வயதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய சுயகட்டுப்பாடு கிடைத்துவிடும்.

எதனால் இது குட் டச், எதனால் இது பேட் டச், ஏன் அன்னியர் நெருங்கும்போது உசாராக வேண்டும் என்பதெல்லாம் தெரிவிக்காமல் வெறும் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுப்பது ஒன்றும் உபயோகம் கிடையாது. இது பலாத்கார சூழலில் தற்காப்பாக இருக்குமே ஒழிய பலாத்காரத்தை முற்றிலும் ஒழிக்காது. எப்படி சொல்லிக் கொடுப்பது, யார் சொல்லிக் கொடுப்பது என்ற குழப்பமே தேவையில்லை. யாரிடம் குழந்தை மிகவும் நம்பகமாய் இருக்கிறதோ அவர்கள் கற்றுத் தரலாம்.

‘Reproductive system for kids” என்பது போன்ற படங்களுடன் கூடிய புத்தகங்கள் ஏராளமாய் கிடைக்கின்றன. கூச்சமில்லாமல் இருக்கவேண்டும் என்ற விசயத்தை கூச்சத்தோடு சொல்லித் தருவது உபயோகம் இல்லை. கற்றுத் தருபவர் முதலில் தெளிவாயும் சங்கோஜமின்றியும் இருத்தல் அவசியம்.

டீன் ஏஜை எட்டும்போது சங்கோஜமில்லா மன நிலையை எட்டும் வகை செய்ய வேண்டும். எந்த குழப்ப மன நிலையையும் எந்த சந்தேகத்தையும் ஏதாவது ஒரு பெற்றோரிடமாவது தெரிவித்து தெளிவு பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாய் வளர்த்தல் அவசியம். தன்னைக் கட்டுப்படுத்த பழகியவனால் எந்த போட்டியையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்தவர்களாய் செதுக்குதல் சிறப்பு.

டீன் ஏஜ் பருவத்தில் சுய இன்பம், pornography போன்றவை குறித்து சரியான தெளிவினை அளித்திடல் வேண்டும். நாம் தெரிவிக்காவிட்டாலும் இவை குறித்து வேறு எங்கிருந்தோ தெரிந்து கொள்ளத் தான் போகிறார்கள், ஆனால் பெற்றோர்/ ஆசிரியர்களை விட யார் சரியான விதத்தில் தெரிவித்து விட முடியும்?

இதெல்லாம் நம் கலாசாரத்திற்கு ஒத்து வருமா, நம் மதத்திற்கு சரிவருமா என யோசிப்பதில் பலனில்லை!
இவ்வளவு காலம் கலாசாரத்தைக் கட்டிக் காத்து எவ்வளவு வல்லுறவுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.

மனமாற்றம், அடித்தளத்திலிருந்து மனமாற்றம் என்பதன் மூலமாக பாலியல் குறித்த பார்வையை முழுமையாக மாற்றாமல் ஆன்றாய்டு, சமூக வலைத்தளங்கள், போர்னோகிராபி, பெற்றோர் வளர்ப்பு இவற்றையெல்லாம் குறை சொல்வதில் எந்த பலனும் கிடையாது. அது தவிர குழந்தைகளைக் கண்காணித்தல், சமயப்பற்றாளர்களாய்,சாமியார் பற்றாளர்களாய் வளர்த்தல் உபயோகமில்லை, கடவுள் போர்வையில் தான் நிறைய காமங்கள் துவைக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே!

குழந்தைகளயும் அவர்களின் கைபேசிகளையும் கண்காணித்தலை விட கொடூரமான விசயம் ஏதுமில்லை!
முதலில் காமம் குறித்து பெற்றோரின் பார்வை மாறட்டும்!
பிறகு குழந்தைகளின் பார்வை தெளிவாகட்டும்!!
பிறகு சமூகமே களையற்ற காமக்கசடற்றதாய் வளரட்டும்!!
இது வருமுன் காப்பதல்ல!
வராமல் காப்பதாகும்!

 

                        எழுதியவர்
                   அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

2 thoughts on “கற்க காமம் கசடற – அ.சீனிவாசன்”
  1. இன்றைய சூழலில் sex Education கண்டிப்பாக குழந்தைகளுக்கு தேவையான ஒன்று.
    அதன் தேவை மற்றும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற ஆசிரியரின் ஆணித்தரமான கட்டுரை அருமை.
    முதல் கட்டுரை எனில் மேலும் வளர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *