தினப்பிரதி
*************
நேற்றைப் பிரதி எடுத்து
கசக்கிய கண்களுடன்
கோழிக்குஞ்சுகளை திறந்துவிட்டு
தூக்கத்தின் விழிப்பில்
சமையலறை அடைகிறாள் அம்மை….
அயர்ந்த உறக்கத்தில்
தலைக்குமேல் வானொலியை
ஒரு திருகு திருகி
வாயடைத்து மறுபக்கம் புரள்கிறார் அப்பன்…
நிமிராத இருசக்கர வாகனம் மேல் ஏறி
எட்டி எட்டிப் பார்த்து அழைக்கிறது
‘பாப்பு’ எனும் பூனை…..
எழுந்தாரா என மகனைக் கேட்ட ஒலியில்
தட்டுத் தடுமாறி தேடுகிறார்
அப்பன் ஆறாம் விரல் சுருட்டை….
திருந்தவே மாட்டார் எனப் பொறுமிக்கொண்டே
பொறுப்பாக டீ கொண்டு வைத்துச் செல்கிறார் அம்மை…..
இன்று போல்தான் தினமும் எனத் தோன்றிய
வார்த்தைகளைச் சரளப்படுத்தி
கடுகுடன் சேர்ந்து வெடித்துக் கொண்டே அவள்….
அம்மா….
இடியும் இங்குண்டு..!
************************
ஆணாகப் பிறந்துவிட்ட காரணத்தால்- என்
மழையின் ஈரத்தை அறியாதவன் நான்…!
உணர்வுகளை உள்ளடக்கி- என்
உறவுகளுக்காகவும்
குடும்பத்திற்காகப் பிறப்பெடுத்தவன் நான்…!
மழை நீரைத்தொட்டாலும்
ஏதோ ஒர் வெறுமை- என்னை
ஈரமாக நனைக்கிறது…!
பணம் என்ற சொல்லுக்கு- என்
உடல் முழுதும் ரணமும்
உள்ளங்கை செந்நிறமும்
பதிவேடுகள் அமைக்கின்றன…!
பிறப்பு
படிப்பு
காதல்- என்
வாழ்க்கை இத்தனையும்
இளகிய கசப்பு பாகாய் கரைந்தோடுகிறது மனதில்……!
இரை போட்டால்
திடுக்கிடும் பூனைக்குட்டிகளின் நிலை போல
வெறுமையிலும்
நிம்மதியின்மையிலும்- என்னை
ஆட்கொள்கிறது
அவ்வப்போது
மூடிய மனதில்
இடியும் இங்குண்டு
என்று….!
கடைசிப் பக்கம்
*******************
ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன்
தினம் தூக்கும் சோல்னா பையில் நிரம்பிய கல்வியை
தினம் சுரண்டி
மென்று செல்கின்றனர்
கழுதை கெட்டாலும் வராத குட்டிசுவர் மேதைகள்…
இல்லத்தை அடைந்ததும் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்
இன்றைய நாள் முடிவின்
நாளைய கடைசி பக்கங்களை…!
நடனமாடும்_கனவு
***********************
நான்கு அறைகளை இருகப்பற்றி
போர்வை போர்த்திக் கொள்கிறது உறக்கம்
யாரோ கைப்பிடிக்கிறார்
கன்னத்தை கிள்ளுகிறார்
இதழுக்கு ஈரம் சேர்க்கிறார்
‘ச்சி’ என முனகலோடு புரண்டு படுக்கும் மகளைக் கண்டு
கண்ட கனவை எல்லாம் இடது கையில் போர்வையாய்
ஓரம் தள்ளும்
எதிர்கால கனவாடிய
பெற்றோரின் கனவு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.