தேநீர் இடைவேளை
***********************
கூடி அமர்ந்த குழுக்கள்
பரப்பரப்பாக சிலர்
பதட்டத்துடன் சிலர்…
நாளை என்ன நடக்கும் எனும் எண்ணத்தில் பலர்
இன்றைய நிலையில் எந்த மாற்றமும் வேண்டாமென
மற்றும் பலர்…!
ஆற்றங்கரை ஓரங்களில் அணிதிரண்டனர் பலர்..
ஆண்டு அனுபவித்தவர்கள் பலர்…!
அந்த சாலையோரத்தில் எல்லைக்கல்லில் குளிர்…
வந்த வண்டிகளும்
போன வண்டிகளும்
நின்று இளைப்பாறிச் செல்கின்றன..!
இன்றொடு முடியும்
இந்த மாலையில்
எத்தனையோ யோசனை
எத்தனையோ கவலைகள்..!
அத்தனையும்
நிரம்பி வழியும்
இந்த இனியதோர் தேநீர் இடைவேளையில்
கொஞ்சம் செய்திகளும்
கொஞ்சம் இனிப்பும்
நினைவுகளோடும்
வர்ணிப்புகளொடும்
அமைதியாகக் கடந்து செல்கின்றன….
கவிஞர் கார்கவி✍🏻
நாகப்பட்டினம்
இசையும் இதயமும்
***********************
நிலவாக நீ வர இயல் கொண்டு நா மலர்ந்தேன்…!
நினைவாக நீ மலர மலராக தினம் மலர்ந்தேன்…!
ஊடுபனி காதணைக்க கரம் நீட்டி உனையணைத்தேன்..!
வண்டாக ரீங்காரமிட்டு இதயம் நுழைய நான் விழைந்தேன்…!
மாரி போல நீ பொழிவாய்..!
ஒவ்வொரு சொட்டிலும் இசை பொழிவாய்…!
மின்னல் போல கண்ணில் படு..!
வெளிச்சம் இல்லை விருந்தாக செவிக்கு கொடு…!
இயற்கையே இசையாய்-என்
இதயமே இசையாய்…!
உலகமே நீயாய்- நின்
இதயத்தில் சிறு துளியாய்…!
தூண்டிலாடும் மனத்தே- நீ
சிறு வீணை கொண்டாயேயடி..!
இதயமே
என் இளம் வீணை ரகசியமே…!
இதோ
என் இதயராகங்களிலிருந்து வழங்குகிறேன்
இந்த
அடர்ந்த இருள்
கானகத்தில்
அள்ளிப்பருகிட
இசையாய் வழியும்
என் காதல்.
மகிழ்வின் பின் யாரோ
***************************
நான்
மகிழ்வாகத்தான்
இருக்கிறேன்
என் நானை
கூர்ந்து பார்க்கும்
உன்
கண்களுக்கு…!
யாராலும்
அறிய இயலாத
பூதக் கண்ணாடிகளை
கொண்டு பிறந்த
உமக்கு மட்டும்
எப்படி
தெரியவருகிறது…!
என்
கவலைகளின்
கானல் கடலில்
கவிழும்
காகிதக் கப்பலில்
மொத்த மன எடைகளை
நிரப்பிய
தருணங்கள் மட்டும்…!
சைட்_ஆஃப்_சனீஸ்வர்
***************************
புல்லி க்ரௌடு
நோ டவுட்
தட் இஸ் கோயில்
சைட் ஆஃப் சனீஸ்வரா….
ஆம்
இருக்குற ஏழரை இயர்ஸ்
தாண்டி கரணம் போடுற
எனக்கு. மறுபடியும்
இஸடார்ட்டிங் ஏழ்ரைஐஐ…..
வாரவாரம் அம்மா தேய்க்காத
ஜின்ஜெல்லி மிச்சத்துல
மொத்த ஏழரையும்
தீர்ந்துபோச்…….
கார்த்திகா சியாக்கா
இப்போ கனகா சியக்கா
ஆனதுதான் கொஞ்சம் வருத்தம்…
கருப்புத்துணி கலரா இருந்தா
துண்டு கட்டாம குளிக்கிற அப்பாக்கு கோவனமாவாது
இருந்திருக்கும்….
வாசலுல முப்பது
வாசல் தாண்டுனா அம்பது
சூடம் பத்தி அம்பது
சுட சுட இட்லி அம்பது
இட்டிலி போல மல்லிப்பூ அம்பது
மொத்த துணிய
உருவிப்போட்ட
அப்பாக்கு கோவனத்த
கலட்டி போன மணமல்ல
நேத்துதா வாங்குனாதால….
பொட்டிக்குள்ள போடச்சொன்ன
துணியெல்லாம்
படியோரம் பல்லிழிக்கு
வாய் திறந்து கெடக்குது பெட்டி….
ஒரு சொட்டு எண்ணெயில
ஆரம்பிச்ச பரிகாரம்
இப்ப சிந்தால்,மெடிமிக்ஸ் ல
நுரை நுரையா முடிஞ்சு போகுது…..
துணிமாத்த அறை அறிய இடங்கோடுத்த
பெரியகுளத்துக்கு
ஆம்பளைக்கும் மானம் இருக்குறத தண்ணில எழுதி விட்டுருச்சி போல…..
துணிமாத்தி புருசனும் புள்ளையும் நடுக்கல்ல
இப்பதான் ஐபுரோவும்,லிப்ஸ்டிக் தேடுது அந்தாண்ட ஒரு அக்கா….
வேண்டிறது சனி
தொப்பையனுக்கு எதுக்குயா
தேங்கா…சோடி வேற அம்பது……
அன்னதானம் அந்தபக்கம்
ராசிக்கொரு கேட்டலாக்குல
என்ராசிக்கு விரையமாம்
இருபது சாப்பாடு தரணுமாம்…..
எதுக்கினே தெரியும்
விளக்கும் எண்ணையும்
துணையோடு போறதால
வாங்கிக்கிட்டா எண்ணெயும்….
செருப்பு போட இலவசம்
பேக் வைக்க இலவசம்
சிரிச்சிக்கிட்டே
மொத்தத்தையும்
அர்ச்சனைல லாக் பன்னிட்டாப்டி…….
இந்தபக்கம் டோக்கன்
அந்த பக்கம் டோக்கன்
சாமிக்கே வியர்த்துடன்
இந்த வட்டத்த சொன்னா….
அறியாத சாமி
அரை நொடி பாக்க
அந்தப்பக்கம் அம்பது டோக்கனு
இந்தபக்கம் நூறு டோக்கனு…
அந்த அரைக்குள்ள
ஏழரைய சரிபன்ன
கட்டம்பாக்குற
அந்த மனுசனுக்கு தெரியாதது
வருத்தம்தா…..
எப்படியும் ஏழரை கன்ஃபார்ம்
என்னவோ
இன்னைக்கே முடியுறமாறி
முழுசா முழுவிட்டு வான்
வீட்லேந்து போனுவேர….
கும்பிடாத நின்னுனு
சொல்லியனுப்புன
அம்மாகு தெரியாது
கும்புடலனா இன்னும் ஒரு ஏழ்ரைய சேத்துவிட்டா என்ன செய்யனு…..
வருசா வருசம்
ராசிவிட்டு ராசி மாற்ற
ஈஸ்வரா
காலம்புல்லா
கூட வரமாறி லேடீஸ்வரனா
மாடிஃபை ஆகிட்டியேயா……
சாதகத்த
மாத்திடுற
கொஞ்சம் பாத்து
பன்னி விடுமய்யா….
ஏற்கனவே ஏழரை பல சீரொக்கல பின்னடி தாங்கி நிக்கிது
இப்ப நீ வர கன்பார்ம் பன்னிபுட்ட
என்னத்த சொல்ல
ஏற்கனவே விரையத்த
அனுபவிச்சவனுக்கு
வேர என்ன விரையம்
கொடுப்ப நீ
நீ கொடுத்தாலும் விரையம்
ஆக ஒன்னுமில பிகாஸ்
இரிந்தாதானே விரையம் பன்ன..
சோ….
இத்தோட நீ முடிச்சிக்கிர
இந்த கும்பராசிக்கு…
இயர் ஆஃப்டர் வில் மீட்
அவர் சைட் ஆஃப் சனீஸ்வரா……..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.