Karkaviyin Kavithaigal 10 கார்கவியின் கவிதைகள் 10

கார்கவியின் கவிதைகள்

1)
மிடறு மிடறாய் மனம்
****************************
நான் கூற
நினைத்ததை
தவிக்கும் நாணலுக்கு
இடையில் மிடறுகின்றது
யாரும் பேசிடாத
வரைமுறை உண்மை…………………

நீ இங்ஙனம் கொட்டித்தீர்க்கும்
சொற்களுக்கெல்லாம்
தாகம் தீர்த்துவிடுகிறது
மிடறுகளில் ஏற்கனவே
நீ கொட்டிவிடாத சொற்களின்
சிறு ஈரம்………………..

பாசாங்குகளில் சிறு விழுங்கல் இருந்தாலும்
ஏறி இறங்கும் ஒரு நொடியில்
சிறு மென்மையில்
துள்ளியாடுகின்றன
இந்த சரீரமிடறுகள்……………..

சிரத்தைத் தாங்கிய உனக்கு
மனதோடு தோன்றிய சொற்களைச் சற்று
தண்ணீர் தெளித்து வெளியேற்றிவிட
வழியில்லாமல் போன மிடறுகள்தான் கவலைக்கிடம்……………

சிறு நேராக
சற்று வளைந்தாடி
எலும்பில் சதைப்பற்றுக் குறைந்த உன் மிடறுகளில்
எத்தனை உறவுகள்
வறண்டு போயிருக்கும்
வளர்ந்து போயிருக்கும்………………

ஒரு சொட்டுத் தண்ணீரோ
பலர் ஏற்ற உண்மைகளோ
இலகுவாக
ஆழச்செல்கிறது
யார் வருவதையும்
செல்வதையும் கண்டுகளிக்காத
சிறிய மென்மை கொண்டதோர்
மிடறு மிடறாக மனம்……………..

2)
மாறா நிலைபாடு

*********************
உனது அனைத்துச் செயலிலும்………….
நீ கொண்ட
சிறு மௌனம் எப்படியும்
அதனைச் சரியாகச் செய்யும் அளவிற்கு
ஒரு நிலைபாடினை வழங்கும்……………………..
நீர் நிரம்பும் குவளை
முழுதும் நனைவதை எண்ணி
நனைவதில்லை…………….
அரை தம்ளர் நீரில்
ஆகாயம் சிறியதாக சுருங்கிவிடாது…………….
பார்வை என்பது
செயலின் ஒட்டுமொத்த
ஆழ்மௌனமே……………..

3)
நிரந்திரக் கடப்பு
********************
துண்டு துண்டாக
வெட்டப்பட்ட
நீர்க்குழாயில்
துண்டுபடாமல்
கோர்த்துச் செல்கிறது
நீரோட்டம்………………………
நிரந்தரமில்லாத
நீ எம்மாத்திரம்?…………………
எத்தனைத்
திருப்பங்கள் இருப்பினும்
கை கோர்த்து
நடைபோடுகின்றன

நீர்சுழிகள்…………………
நீ
நான்
எத்தனை நாம்……………….

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *