கார்கவியின் கவிதைகள்

Karkaviyin Kavithaigal 11 கார்கவியின் கவிதைகள் 11

கூடி விளையாடுவோம்
******************************
அழகிய கருவை மரம்
அதனடியில் நிழல் கைப்பிடித்து
கூட்டாஞ்சோறு படையல்

புது புது காய்கறி வாங்கி
புன்னகைகொண்டு
சமைக்க முனைந்து
தக்காளி சிறு துண்டு
வெங்காயம் பல உண்டு
வெண்சோறு வெந்தும் வேகாமல்
விருந்து ஒன்று தயாராகிறது

நிழல் விலகி தூரம் செல்ல
கையைப் பிடித்து நகரும் குழுந்தை
தூரத்தில் யாரும் இல்லை
உடன் விளையாட ஒருவருமில்லை

பரந்த கருவையிடம் பேச்சைக் கடந்து
சமையல் உணவைப் பந்தியிட்டு
சிறு சிறு கோபம் கொண்டு
வெந்தும் வேகாத சோறு
அகலமான பூவரச இலையொடு
சோறாக ஒரு மண்
மீனாக பல கற்கள்
கீரையாய் கருவையிலை
நீராக குளத்து நீர்.

யாருமில்லை என எண்ணாது
இருக்கும் இயற்கையை நட்பாய்ப் பாவித்து
நடக்கிறது விருந்து

ஒருபோதும் தனிமையை வேண்டாம்
இறுகப் பிடித்த கருவை நிழல் கதிரவன் சாய்ந்ததும்
கை நழுவிச் சென்றிட
விருந்தில் உப்பின்றி
கண்ணீரில் நிரப்புகிறது குழந்தை
இனியும் கூடி விளையாடுவோம்…

நகம் பட்டு கிழியுமா வானம்
**********************************
ஓய்ந்து அமர்ந்துவிட்டால்
ஓடும் நீரும் சிரித்து கொண்டே செல்லும்
பயம் என்று நீ எண்ணினால்
கரப்பான் பூச்சியின் கொம்புகள் கூட
காளையின் திமிலை கண்முன் நிறுத்தும்

கால்களின் வலி
கண்டிப்பாக உன்னை
வெற்றிக் கோட்டைத் தாண்டிப் பயணிக்க செய்யும்
எடைத்தாங்க மறுத்தால்
எத்தனைப் பேரை தள்ளிவிடும்
அந்த எடைதாங்கி

இயற்கையை வெறுத்தால்
இயலாத மனிதர்களையும்
எப்படித் தாங்கும் அந்த இடிதாங்கி

உறக்கம் கொடுத்த படுக்கைகள்
திசைகளைப் பார்த்து திரும்புவது இல்லை
மிதிபடும் என அறிந்த புற்கள்
முளையாமல் மண்ணுக்குள் புதைவதில்லை

வானை மீறிய மின்னல் ஒளி
வாசல் வர விரும்புவது இல்லை
இயற்கையில் விளைந்த இரும்பு கொண்டால்
உனை உரசிப்பார்க்கத் தயங்குவதில்லை

முயற்சியை முதிகெலும்பில் பொருத்தி
நம்பிக்கையைக் குருதியுடன் இணைத்து
வாழ்க்கையைப் பட்டியிலில் நிறுத்தி
வெற்றியை தராசில் உன்பக்கம் பொறுத்து..

தயக்கம் மறந்து பறந்திடு
வெற்றி உனக்கென சிறந்திடு

வாழ்க்கையை நினைத்துத் தயங்காதே
விரல் தாண்டிய நகங்களால்
வானம் ஒருபோதும் கிழிவதில்லை…

நான் ஆண்
**************
அம்மையின் கர்ப்பத்தில் அப்பனின் உயிர் நிரம்ப
அதிகளவு அப்பன் அன்பால் ஆணாக நான் பிறந்தேன்..
உடன் பிறப்புகள் வந்து பிறக்க
பிற்கால நிலை அறியாத
ஒண்ணுமண்ணுமாக காலம் கொண்டேன்..

படிப்பு நிறைந்தது,வேலை குறைந்தது
தங்கை பெரியவள் ஆனாள்..
அக்காள் அடுத்த வீட்டிற்கு தயாரானாள்
பணம் மட்டும் என் வீட்டையும்
பாக்கெட்டையும் சேர மறுத்தது

இருக்கும் வரை எல்லாம் செய்து
ஏதும் இருப்பு என இல்லாமல் சென்றனர்
என் தெய்வங்கள்..

பலர் முயற்சி செய் என்றனர்..
பலர் உன்னால் முடியாதது இல்லை என்றனர்..
எனைக் கண்டு மேல்நிலை வந்தவர் பலர்..
என் நிலை மட்டும்
தரையை மீறாத செருப்பாகத்
தேய்ந்தும் அறுந்தும் பயணிக்கிறது..

நிறைவாக வாழ்ந்தவர் இருந்தால்
கண்முன் வாருங்கள்.
கற்றுக்கொள்ளக் காத்திருக்கிறேன்..
கனமான மனதுடன்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.