குருதிப் பூக்கள்
*******************
இரத்தமும் சதையும் குழகுழப்பில் வழிந்த பூக்கள்..!
குறைகளைச் சொல்லிக் கும்பிட்டுப் பிழைக்கும் குலப் பூக்கள்…!
உடல் மொழியில் வலிகள் மறைத்த பூக்கள்..!
உறுதியான வாழ்க்கைக் காம்புடைய பூக்கள்…!
ஓயாது கடிகாரம் உணர்வாய்க் கொண்ட பூக்கள்..!
வாசனை இல்லாத உறுதிச் சுவாசப் பூக்கள்..!
உளைச்சல் தனை உரமாய்க் கொண்ட ஆலமரப் பூக்கள்..!
மௌனத்தில் பல் இழித்து ரணத்தில் செழித்தப் பூக்கள்….!
காசைக் கரியாக்கும் மகன்கள் முன் உழைத்த பூக்கள்..!
கடுகு டப்பாவில் சேமிக்கும் மனை வங்கிக் கொண்ட பூக்கள்…!
மயங்கும் மாணாக்களை மகனாய்க் கொண்ட பூக்கள்..!
ஆம்…
ஆசைகளின் சவப்பெட்டி குருதிப்பூக்கள்…!
குலம் அறிந்து கும்பிட்ட சோற்றுப் பூக்கள்..!
குட்டக் குட்ட நில்லாது ஓடும் ஆற்றுப் பூக்கள்…!
நீட்டிய கைகளில் ஒரு ரூபாய் – இரு ரூபாய்க் கரிசனப் பூக்கள்..!
உலகை மாற்ற
ஆரம்பித்து
உறவை இழந்த பூக்கள்…!
எதிர்த்த பின்பும் பூக்கும் அதிசய அத்திப்பூக்கள்..!
உருண்டும் புரண்டும் மண் ஒட்டா உழைப்பை இழந்த பூக்கள்…!
உலகெலாம் சுற்றி ஓய்ந்து சுனங்கிய பூக்கள்…!
உயிர் தரித்து,
உலகம் பார்த்து,
உண்மையறிந்து,
உழைத்துச் சேர்த்த
ஆண் பூக்கள்…!
ஓய்வை மறைத்து,
உறக்கம் மரித்து,
உலகம் இழந்து
உருட்டும் பூனையாய்ப்
பெண் பூக்கள்….!
கலம் பெற்று
உறவு கொண்டு
கைப்பிடித்து,
கோல் கொடுத்து,
ஈசல் வழி முதல்
கால் கட்டிலின்
தொட்டில் வரை
தாய்ப் பூக்கள்…!
காலை எழுந்தவுடன்
கண்ணீர்
கண்ணில் கொண்டு,
கையில் பேனைக் கொண்டுத் தர அட்டை ஏந்தும் கல்விப் பூக்கள்…!
அப்பனில்லா விலாசத்தில் அனாதைப் பூக்கள்,
அடிவாங்கி உணவருந்தும் மழலைப்பூக்கள்…!
தரைப் பிறந்து,
தாலாட்டுப் பெற்று
கால் முளைத்து,
கட்டுக் கோப்பான பூக்கள்.
சலனங்கள் நிறைந்த பூக்கள்,
நல்லது கெட்டது நிறைந்த பூக்கள்….!
சாஸ்டாங்கக் காலடிப் பூக்கள்,
மன அழுத்த வெறுப்புப் பூக்கள்…!
ஊருக்கே உழைத்து உறவு வளர்த்த பூக்கள்..!
உள்ளத்தில் வலி கொண்ட – மறைத்த பூக்கள்…!
உளி கொண்ட சிற்பியின் வலிப் பூக்கள்…!
புன்னகையில் புவியை ஆள ஆண்- பெண்ணாய்ப் பூக்கள்….!
கருத்துகள்,
கவலைகள்,
ஏக்கங்கள்,
இயல்புகள்,
ஆசைகள்,
ஐக்கியங்கள்,
யதார்த்தங்கள்,
வாழ்த்துகள்,
கண்கள் வலித்து,
கண்கள் துடித்து,
ஆசை நேரத்தில்
அனைத்தையும் கடந்து செல்லும்,
கவலைகளில் பீதாம்பரி அழைத்த ஆண் பூக்கள்…!
தந்தைப் பூக்கள்…!
அந்த பெண் மனம்
***********************
யாருக்காக பிறந்தது இந்த பெண் பிண்டம்….
அழகான எண்ணங்களுடன், மேனி வண்ணங்களுடன்,
மிளிரும் ஆசைகளுடன் துள்ளிப்பிறந்த பிண்டம்….
பிறந்த இடம் பொறுத்து ஆசைகள் கருகளாயிற்று…..
சென்ற இடமெல்லாம் சிறப்பாக செயல்படுபவள் பெண்..
யாரையும் புண்படுத்தாத மனம் கொண்டவள் பெண்….
எதிர்த்து பேச எண்ணாதவள் பெண்…
எவரையும் எதிர்த்துப்பேச விடாத தைரியம் மிக்கவள் பெண்…
ஏக்கம் நிறைந்தவள் பெண்..
யதார்த்த உலகை ஒருபடி அளவில் அளந்தவள்…
கடுகுமணியை கூட கரம் விட்டு கொட்ட ஆயிரம் யோசனை கொண்டவள்….
கண்டவரின் வார்த்தைகளில் கசங்குபவளும், வாழ்த்துகளில் மின்னுபவளும் பெண்….
கடைசி பருக்கை உண்பவளும் பெண்,
இல்லாத பருக்கைக்கு நீர் நிரம்ப உறங்குபவள் பெண்….
கட்டும் துணியிலிருந்து கைக்குட்டைவரை கசக்கி மடித்துவைத்தவள் பெண்..
மார்துணி விழகாது மானம் காத்தவள் பெண்…
மானஸ்தன்களின் அன்னையும் அவளே,
மங்குனிகளின் தங்கையும்,அக்காளும் அவளே….
செம்பருத்தி செடிகளின் வாசம் பெண்….
மருதாணிகளின் செக்க சிவப்பு பெண்…
அடுப்படி சாம்பலில் கைரேகை பெண்…
அழகிய கோழிகுஞ்சிகளில் இரைப்பருக்கைகளில் பெண்…..
யாதார்த்த உலகமிது..
பெண்களின் யதார்த்தம் அறியா உலகமும் இதுவே….
பெண்மையை போற்றி வணங்குவோம்…
நட்பிற்கும் இதயமுண்டு
****************************
நட்புக்கு ஈடு இணை இங்கே ஏது….
கண்டவரை எல்லாம் கை கோர்த்து கொள்வது நட்புதான்…
காணாமல் பல கோடி வலைதளத்திலும் நட்புதான்..
கண்டிப்பாக நடந்து கொண்டு பிறது மன்னிப்பில் தரை இறங்குவது நட்புதான்…..
நாலு பேர் தவறா சொன்னாலும்,நான் இருக்கிறேன் என்று தோலுக்கு தோல் கொடுப்பது நட்புதான்….
நாற்றம் நிறைந்த சேற்றின் நடுவே இலைகளின் பாதுகாப்பில் அல்லியும் நட்புதான்…
பத்திலிருந்து ஒன்பது ஆன போதும் ஒருபோதும் நிற்காது சுற்றும் கோள்களின் சுழற்சி நட்புதான்….
நான்கு நாட்கள் பார்க்கவில்லை என்றாலும்..நமக்கென்ன என்று இருப்பதும் நட்புதான்..
நமக்கென்ன என இருந்த போதும் நன்றாக இருக்க செய்யும் மறைமுக செயலும் நட்புதான்…..
உலகத்தை ரசிக்க வைப்பது நட்புதான்…
உன்னை முழுவதுமாக உணர வைப்பதும் நட்புதான்….
வயது கடந்தது நட்புதான்-யார் வயது யாரென அறியாது தொடர்வது நட்புதான்…..
கருத்து வேறுபாடு நிறைந்த பொழுதும் வெறுத்து ஒதுக்காத தோழமை நட்புதான்..
இரும்பு கதவு கொண்டதல்ல நட்பு…
இளகிய இதயமும் கொண்டதுதான் நட்பு….
நட்பே துணை….
இறைவி
***********
எல்லாம் அவளாகி போனப் பிறகு வேறு என்ன நான் சொல்லி விடக்கூடும்….
ஆசையாக வாழ்ந்து அனைத்தையும் அனுபவித்து பட்டாம்பூச்சி போல் வாழ்வை அனுபவித்தவள்…
இங்கு நேரம் பார்த்து ஆட்கள் பார்த்து எனக்காக எல்லாம் சேர்த்து வைக்கிறாள்..
அவள் அன்னை தந்தை பிரிந்து என் அன்னை தந்தையை அவள் உடையவராய் ஏற்று அன்பும்,
ஆர்ப்பரிக்கும் பணிவிடைகளையும் சற்றும் மனம் கோணாது,முகம் சுழிக்காது செயல்படுத்துகிறாள்….
என் உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பானால்,என் சொந்தங்களின் புது சொந்தமானால்,..
என் வீட்டு செல்லங்களுக்கு அன்பானால்…அப்பாவின் அன்பும் அவளும் ஓர் மகளானால்….
மாமியார் மருமகளாய் இவர்கள் இல்லை,அம்மை-பெண்ணாய் பயணிக்கின்றனர்…
உடல் வழிகள் ஏராளம் இருந்தாலும் இன்முகத்துடன் என்னருகில்….
அதற்காகவே மணமுடித்தேன்..கைப்பிடித்து கால் பிடித்து அவள் துயரங்கள் நான் துடைப்பேன்….
அறிவில்லா சமுதாயம் பொண்டாட்டி தாசன் என்ற பெயர் சூடும்….
இருக்கட்டும் அது ஓரம்…
சமுதாயம் என் குடும்பத்தை பார்த்ததில்லை…
சமுதாயம் என் உறவுகளை பேணிக்காப்பதில்லை…
சமுதாயம் இல்லறவியலில் துணையில்லை…
சமுதாயம் என்னவளின் தலைவலிக்கு மருந்து இல்லை..
அம்மாவுக்கு அடுத்த இடம் அவளானாள்…அவளே என்றென்றும் அன்னையானாள்….
அன்னை கூட வாழ்நாளில் கடந்து போவார்…
அவள் காலம் முடியும் வரை என் நிழலென அவாள்…
பிள்ளைகளை பற்றிட பாதுகாத்து,பணிகளை அவள் தலைமேல் தான் சேர்த்து…
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதை உடைத்தவள்….
என்னவள்…
என் எல்லாம் அவள்…
என் இதயம் நிறைந்த இறைவி
என் மனைவி….
நொடிக்குள் அடைபட்டோம் நாம்
**************************************
அந்தப் புலனம் செயலியினை
முன்பார்வைக்கு
வைத்துக் கொண்டு
முழுநாளும்
கடந்துவிடுகிறது
அவ்வப்போது ரீஃப்ரஸ்
செய்து கொண்டு
நேற்று அனுப்பிய
‘சாப்பிட்டாயா’
எனும் சொல்லை மட்டும்
இன்றைய செய்திவரை
ஸ்குரோல் செய்து
சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன்….
ஏக்க ஏப்பங்களுக்கிடையே………..
மாதமொரு அப்டேட்களில்
பின்னிப் பிணைந்த
செயலிகளின்
ஆர்ச்சிவ்களில்
புதைந்து கிடக்கும்
எனது
எண்ணை எப்படி நான்
தட்டி எழுப்புவது……..
நான் என்னவோ
உன்னைப் பின்செய்து
உனது
தனிமையாக நீ
நடப்பது போல்
பின்பக்க வருத்தத்தை
நடையில் காண்பிக்கும்
கலர் சேடிங் கொட்டியுள்ள
கடைசி டீபி புகைப்படத்தைப்
பார்த்துக்கொண்டே
நகர்கிறேன்
எனது எண்ணின்
அலையும் நுண்ணலையும்
உன் நுகர்தலுக்கு அருகில் இல்லை என்பதறியாது…
ஒவ்வொரு இரவும்
மறுநாள் விடியலை
மறுபதிவு செய்யாமல்
தொடங்குவதில்லை
என் மறுநாளிடம்
கடன் வாங்கும்
நீ
எடுக்க மறந்த ஆர்ச்சீவ்களிலும்
மற்றும் பலனில்லாமல்
கிடப்பதனால்
மூன்று பின் செட்டப்களின்
மாற்று வழியின்றி
நொடியில் அடைபட்டோம்
நாம்…..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.