கவிதை: *கைகள்* – கார்குழலிகைகள்
————

ஓ சமகால மைதாஸ்களே!
இந்தக் கைகளுக்கு
மண்ணைத் தொட்டதும்
பொன்னாக்கும் பேராசையில்லை.
கை பட்டதெல்லாம் பொன்னாக
வேண்டி நின்ற
கிரேக்க மன்னன்
பசித்த நேரத்தில்
ஒரு கவளம் சோறுண்ண முடியாமல்
உயிர் துறந்த கதையை
மறந்துவிடவில்லை அவை.

தழைக்கும் பசுமையைப்
பொன்னெனப் போற்றும்
இயற்கையின் நியதியை
அறிந்த கைகள் இவை.
விளை நிலத்தில்
உழுதும் உழைத்தும்
உரமேறிய கைகள் இவை.

களைகளை அகற்றிப்
பயிர் வளர்த்தவை,
உணவு படைத்து
உயிர் காத்து,
இந்த உலகையும் காத்தவை.
ஊடே பரவும்
பதர்களைப் புடைத்தெறியப்
புதுப் பயிற்சி
தேவையில்லை அவற்றுக்கு.

சுட்டெரிக்கும் சூரியனும்
விரிந்த வானமும்
கொட்டும் மழையும்
வீசும் காற்றும்
விளையும் நிலமும்
பயிர் வளர்க்கும் கைகளின்
தொழில்முறைப் பங்காளிகள்.
கட்டிப் புரண்டு முட்டி மோதினாலும்
விட்டுவிலகாத கூட்டாளிகள்.

மண்ணும் மட்டையும்
காடும் மாடும்
புழுவும் பூச்சியும்
தோள்கொடுக்கும் சகாக்கள்.

இந்தக் கைகள்
தம்மை அடித்து விரட்டும்
குண்டாந்தடிகளுக்கு
அபயச் சின்னம் காட்டி
அருள் செய்யும்,
தாகத்துக்கு நீர் கொடுக்கும்,
பசித்த வயிற்றுக்குத்
தான் உண்ணும் தட்டிலிருந்து
சோறும் ஊட்டும்.

தினந்தோறும் புத்துயிர்ப்பு கொள்ளும்
இந்தக் கைகளுக்குச்
சொந்தமான இதயங்களை
காலாவதியான தோட்டாக்கள்
உரசிச் செல்கையில்
மண்ணில் சிந்தும்
ஒவ்வொரு துளி கண்ணீரும்
இன்னும் ஆயிரம்
விடுதலை விதை முளைக்க
வளம் பாய்ச்சும்.

கார்குழலி