1. குறிஞ்சித் திணை
—————————
ஆறுகளுக்குப் பெண்பால்
பெயர் சூட்டியது
யாரெனத் தெரியவில்லை.
மலைகளுக்குத்தான்
வைத்திருக்க வேண்டும்.
ஆறு மகிழ்ச்சியில்
கரைபுரண்டோடுகிறது.
கோடை வந்தால்
காய்ந்து வறண்டுபோகிறது.
இருப்பைக் காட்டுகிறது
அல்லது
இல்லாது போகிறது.
மலை ஒருபோதும்
சப்தமிடுவதில்லை.
தன்னால் உருவான
ஆறுகளின் எல்லா
அழிச்சாட்டியத்தையும்
பார்த்துக்கொண்டிருக்கிறது
அம்மாவைப்போல.
2
கன்னன் வில்லாளன்
****************************
மாதக்கடைசியில்
வெகு நேர
சிந்தனைக்குப்பின்
சிக்கன் பிரியாணி
கட்டச் சொல்கிறான்.
வாங்கிவிட்டு இறங்குகையில்
வாசலில் ஒருவன் யாசிக்கிறான்.
கண்களில் பசி திரவமாய்
கசியக் காத்திருக்கிறது.
கணநேரம் தாமதித்து
பிரியாணியைக் கைமாற்றிவிட்டு
புன்னகைத்தவாறு போகிறான்.
யாசித்தவன் கண்ணனா
என தெரியாது.
தந்தவன் கர்ணனாக இருக்கக்கூடும்.
எழுதியவர்
கௌ. ஆனந்தபிரபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.