விக்னேஷ் குமுளையின் தமிழ்த் திரைப்படமான கற்பாரா (Karparaa) - முதுமை, புறக்கணிப்பு மற்றும் குடும்பப் பிணைப்பு - https://bookday.in/

கற்பரா – திரை விமர்சனம்

கற்பரா (Karparaa) – திரை விமர்சனம்

இயக்கம் – விக்னேஷ் குமுளை

( தமுஎகச மாநிலக்குழு சார்பாக திருவாரூரில் நடந்த உலகத்திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட #கற்பரா என்னும் திரைப்படத்தின் அனுபவ பகிர்வு)

தாயும் சேயும் நிலமும் வாழ்வும் சூழலியலும்.

முதல் காட்சியிலே பழுத்து முதிர்ந்த தாய்க்கிழவி ஒருத்தி காட்டப்படுகிறாள். அவள் வீட்டின் திண்ணையில் நிசப்தமாய் படுத்துக்கிடக்கிறாள். நம் வீட்டின் திண்ணையில் இப்படி ஒடுங்கி கிடக்கும் கிழவிகளை கவனிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த நீண்ட காட்சி நிச்சயமாய் மனதை சலனப்படுத்தும்.

நம் வீட்டின் முதியவர்கள் அவர்கள் நாம் இப்போது கிளைகளாய் விரிந்து இருப்பதற்கான மூல வேர்கள் அல்லவா. கிட்டத்தட்ட மீண்டும் குழந்தையாகி போனார்கள்.

நாம் குழந்தையாக இருக்கும்போது அவர்கள் நம்மிடம் காட்டிய அன்பு அவர்கள் மீண்டும் குழந்தையாகி போன பின்பு அவர்களுக்கு ஆறுதலுக்காவது கிடைக்காதது வாழ்வின் இரக்கமில்லாதவைகளில் ஒன்று.

ஒவ்வொரு காட்சிகளும் நம்மை உற்று நோக்க வைக்கிறது. கவனமில்லாமல் இயந்திரத்தனமாய் வாழும் இந்த வாழ்க்கையில் ஒரு நிமிடம் நம்மை அமர வைத்து மௌனமாய் இந்த பரந்த வாழ்வின் வெளியை நம் முன்னே திரையிட்டு காட்டுகிறது.

இது மாதிரியான படங்கள் எல்லாம் நம்மை என்ன செய்து விடும். நம்முடைய ஆர்கசத்தை தூண்டி உற்சாக மிகுதியில் ஆட்டம் போட வைத்து விடுமா? இல்லை. அப்படி செய்யாது.

விக்னேஷ் குமுளையின் தமிழ்த் திரைப்படமான கற்பாரா (Karparaa) - முதுமை, புறக்கணிப்பு மற்றும் குடும்பப் பிணைப்பு - https://bookday.in/

இல்லையென்றால் நம் கவலைகளை எல்லாம் சில சில மணி நேரங்களுக்கு மறந்து நம்மை மகிழ்வுடன் வைத்திருக்குமா? அப்படி வைத்திருந்தால் அது ஒரு நல்ல கலை ஆகுமா? போதை கூட அப்படித்தான் வேலை செய்கிறது.

சரி உண்மையில் கலை என்னதான் செய்ய வேண்டும். நம் உள்ளுணர்வுகளை அசைத்துப் பார்க்க வேண்டும். அது நம்மை கேள்விகள் கேட்க வைக்க வேண்டும். நம் வாழ்வில் நம்முடைய கவனத்தை நமக்குள் தீர்க்கமாக செலுத்த வேண்டும். என்னை சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் அறிவுப்பூர்வமாகவும் அதே நேரத்தில் உணர்வுப்பூர்வமாகவும் என்னை மேம்படுத்த வேண்டும்.

இந்த கற்பரா மாதிரியான திரைப்படங்கள் அதைத்தான் செய்கின்றது. அதுவும் தமிழில் இப்படி திரைப்படங்கள் வெளிவருவது போற்றுதலுக்குரியது.

என்னுடைய புரிதலில் இது மாதிரியான திரைப்படங்களை ஒரு தியான மனநிலையில் தான் அணுக வேண்டும். தியானம் என்றதும் ஏதோ வேற்று உலகத்து வாசிக்குச் சொந்தமானது என்று நினைத்து விட வேண்டாம் மனதின் இயல்பான நிலைதான்.

ஆல மரமும் அதன் விழுதுகளும், மரமே தெய்வமாய் வீற்றிருக்கும் காட்சியும், மழை மேகங்களும், தொலைக்காட்சி பெட்டிகளுக்குள் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைய கைபேசிகளுக்குள் அடங்கி கிடக்கும் இளைஞர்களும், முதிர்ந்து கிடக்கும் தாயும், அறுந்து கிடக்கும் வேர்களும், முட்டி முட்டி பால் குடிக்கும் கன்றும், நாய்க்குட்டிகளும், தாய்க்கோழியின் சிறகுகளுக்குள் அடையும் கோழிக்குஞ்சுகளும், மண்ணும், மக்களுமாக காட்சி வழி கதை சொல்கிறது.

ஒரு காட்சியில் அந்த முதிர்ந்த தாயின் முலைக்காம்புகள் காட்டப்படும். பிழிந்தெடுத்த சக்கையாய் அது கிடக்கும். ஒவ்வொருவருக்கும் அந்த காட்சி ஒவ்வொரு விதமான உணர்வுகளை ஏற்படுத்தலாம்.

முதுமை எல்லோருக்கும் வரும். இயற்கை தான் படைத்ததில் எல்லாவற்றுக்கும் ஒரு வாழ்வை வைத்திருக்கிறது. வாழ்வு முடிந்ததும் அதனதன் மூலக்கூறுகள் அதன் அதனிடம் கலந்து விடுகின்றன. மீண்டும் புதிய வாழ்வு தளிர்க்கின்றன. மனிதர்கள் விலங்குகள் பறவைகள் மரங்கள் செடி கொடிகள் அனைத்திற்கும் ஒரே விதி தான்.

ஒவ்வொரு நாளின் வாழ்வும் முதுமையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்த விதிகளில் முதுமை மனிதனுக்கு மட்டும் மிகக் கொடியதாக இருக்கிறது. ஏனென்றால் அவன் உணர்வும் சிந்தனையும் ஞாபகங்களும் கொண்ட ஒரு உயிர்.

விக்னேஷ் குமுளையின் தமிழ்த் திரைப்படமான கற்பாரா (Karparaa) - முதுமை, புறக்கணிப்பு மற்றும் குடும்பப் பிணைப்பு - https://bookday.in/

இன்றைய தலைமுறைக்கும், வீட்டின் முதியவர்களுக்குமான ஒரு தொடர்பான அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் தவிர வேறு எந்த வகையிலும் உணர்வு ரீதியிலான பந்தமே இல்லாமல் போவதும், மனிதர்கள் தொழில்நுட்ப எந்திரங்களுக்குள் மூழ்கி போவதுமாக இருந்தால் அது எங்கு போய் முடியும்? இந்தக் கேள்வி இந்த திரைப்படத்தை காணும் போதே ஏற்பட்டு விடுகிறது. நிச்சயமாக நுண் உணர்வுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பலவிதமான ரசாயனங்களை மண்ணில் தெளித்து மண்ணின் நுண் உயிர்கள் அழிந்து மண் விளையத் தகுதியற்றதாக மாறும் ஆபத்தை போன்றது. (ஒரு காட்சியில் கூட மண்ணில் மருந்து தெளிக்கும் காட்சியை நான் குறியீடாக பார்க்கிறேன்) எனவே இங்கு எல்லாவற்றிலும் சமநிலை தேவைப்படுகிறது. அறிவியலும் மனித உணர்வுகளும் ஒன்றுக்கொன்று சமநிலையுடன் இருப்பது சூழலை சொர்க்கமாக வைத்திருக்கும். பிறப்பையும், முதுமையையும், இறப்பையும் சுமை மிகுந்ததாக இல்லாமல் வைத்திருக்கும்.

நம்மைச்சுற்றி இருக்கும் முது மனிதர்கள் பழையவர்கள் அல்ல. கடந்த கால வாழ்வனுபவங்களும் அந்தந்த நிலங்களின் கதைகளும் கொண்ட நூலகங்கள். அந்த நூலகங்களின் பொக்கிஷ உணர்வுகள் இந்த கைபேசிகளில் கிடைத்து விடுவதில்லை.

பூமி மனிதனுக்கு மட்டுமே உரியது அல்ல எல்லா உயிர்களுக்கும் ஆனது. பூமித்தாயின் கர்ப்பத்தில் ஈசலுக்கும் வாழ்வு இருக்கிறது. நம்மை சுற்றி நம் சுற்றுச்சூழலில் கவனத்தை ஈர்க்கச் செய்யும் அற்புதமான திரைப்படம் #கற்பரா

இந்த திரைப்படத்தின் உரையாடலில் இயக்குனரிடம் #கற்பரா பொருள் குறித்து கேட்டார்கள். அவர் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே படம் பார்த்த சிலருக்கு இது சினிமாவா? எது எதையோ பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்று புலம்பினார்கள் சிலர். அவர்களுக்கு பிறகு எப்படி பதில் சொல்வது.

எந்த ஒரு கலைப்படைப்பு ஆயினும் அதை நுகரக்கூடியவர்களையும் பங்குபெறச் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் படைப்பாளியே பேசிக் கொண்டிருந்தால் அங்கே உரையாடல் எப்படி நிகழும். கலைப்படைப்புகளின் அற்புதமே அதுதானே. அவரவர் தன் சுய அனுபவங்களின் மூலம் அந்த படைப்பை அணுகும்போதும் அதிலிருந்து உரையாடல்கள் நடைபெறும் போதும் அது பங்கு பெறுபவர்களின் அறிவுத்தளத்தை பரந்துபடுத்தும்.

#கற்பரா என்பதன் பொருள் கர்ப்பம் சூல் விட தொடங்கும் ஆரம்ப நிலை. தஞ்சாவூர் அருகில் #கற்பராட்சாம்பிகை என்ற ஒரு கோவில் உள்ளது. அந்த தெய்வம் கருவைக் காத்தருளும் தாயாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறாள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

விக்னேஷ் குமுளையின் தமிழ்த் திரைப்படமான கற்பாரா (Karparaa) - முதுமை, புறக்கணிப்பு மற்றும் குடும்பப் பிணைப்பு - https://bookday.in/

நான் இந்த தலைப்பை இதனுடன் பொருத்திப் பார்த்தேன். இந்தப் படத்தின் அம்சங்கள் கூட அதுதான் என எண்ணினேன். பூமித்தாயின் மடியில் இருந்து சூல் விடத் தொடங்கும் அந்த ஆரம்ப நிலை. பூமி நம் ஆதி அன்னை அல்லவா. இந்த எனது கருத்தை திரைப்பட கலந்துரையாடலில் நான் பதிவு செய்தேன். புரிந்தவர்கள் கைகளை தட்டி பதிலுரைத்தார்கள்.

திரைப்படத்தின் கடைசி காட்சி மிக அற்புதமான ஒரு ஓவியத்தை போன்றது. ஜப்பானியர்கள் மழை குறித்த ஓவியங்களில் அற்புதங்களை நிகழ்த்தியவர்கள் . உலகப் புகழ்பெற்ற வான்கோ கூட ஜப்பானிய மழை ஓவியங்களின் தாக்கத்தில் சில படைப்புகள் நிகழ்த்தி இருப்பதாக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் ஒரு கட்டுரையில் வாசித்த ஞாபகம்.

அப்படி இந்த படத்தின் கடைசி மழை காட்சி அற்புதமான ஒரு ஓவியம் போல இருந்தது. மழை குறித்து நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். வெறுமனே அதன் அழகியலில் மட்டும் இல்லாமல் கலைஞர்கள் மழையை அதையும் தாண்டிய ஒரு உணர்வாக நம்மிடம் காட்சிப்படுத்துகிறார்கள். அதுதான் இங்கே கலையாக உருமாறுகிறது.

இயற்கை எப்போதுமே கடந்த காலத்தில் இருப்பது இல்லை. அது நிகழ்காலத்தில் தான் இருக்கிறது. பௌத்த ஞான மரபும் கூட அதுதான். படம் முழுக்க கற்பராவில் அதுதான் நிறைந்து கிடப்பதாக நான் பார்க்கிறேன்.
கற்பரா மாதிரியான திரைப்படங்கள் எல்லோருக்குமான திரைப்படங்கள்தான். அது நம் பால் மண்டல வெளிக்கு அப்பாற்பட்ட சூத்திரம் ஒன்றும் அல்ல. அசாதாரணமானமும் அல்ல. மிகவும் எளிய போதையில்லாத தெளிந்த நீர

கற்பரா பூமித்தாய் குறித்த ஒரு அழகிய ஜென் கவிதை.

கட்டுரையாளர் : 

– மு கோட்டை ராஜ்
தமுஎகச திரைப்பள்ளி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *