சிறுகதைச் சுருக்கம் 68: கார்த்திக் புகழேந்தியின் *அபகரி* சிறுகதை

Karthick Pugazhendhi (கார்த்திக் புகழேந்தி) Short Story Apakari (அபகரி சிறுகதை) Synopsis Written by Ramachandra Vaidyanath.கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தான் கண்டதை காண விரும்புவதை தனதேயான சொந்த மொழியில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே போகிறார் தமிரபரணி நதிதீரத்துக் கலைஞரான கார்த்திக் புகழேந்தி.

அபகரி

கார்த்திக் புகழேந்தி

மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம்.  இரண்டு வாரங்கள் பெய்த மழையில் கொஞ்சம் சேற்றுத்தனமான நிறம் கொண்டிருந்தது ஆறு.   ஆற்றங்கரையில் கல்மண்டபம் கட்டியவனின் கலைத் திறனை மெச்சுவார் யாரும் இந்த நேரத்தில் அங்கு இல்லை.  அவரவர்க்கு குளிக்கவும் துவைக்கவும் நேரம் பத்தவில்லை.  சிகைக்காய் பாக்கெட்டுகளும், சோப்பு உறைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக்கிடக்க ஆறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அத்தனை பேரின் அழுக்குகளையும் இழுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது . 

“ஏ சங்கரா, இந்த மந்திரம் பயலப்பார்த்தியா குளிக்க வருவானே?”

“அவனையேம்ணே தேடுதீய? எங்கே போய் எளவிழுத்திட்டு கெடக்கானுவளோ?”

?அந்த பரதேசி கைமாத்தா ஆயர்ரூவா வாங்கிட்டுப் போனான்.  நழுவிகிட்டே கிடக்கான்.  காலையிலே ஆத்துக்கு வருவாம் புடிச்சு புடலாம்ன்னு பார்த்தா பயல கண்ணுலயே காணமே.”

“கட்டையங் கூடத்தாண்ணே திரிவான்.  போலீஸ்காரரு உங்க கண்ணுலயே சிக்கலன்னா மாறி  எங்கள்வ கண்ணுல சிக்குவானுவளா?”

“அதுவுஞ் சரிதான்.  காந்திமதி தாயே, தண்ணி என்னா குளுரு குளுருது.  இங்க சவூதி எதும் உண்டோ?”

“பூராம் மண்ணுதான்.  தைரியமா எறங்குங்க.”

“இந்த மண்ணுக்கும்லா அலையுதானுவ, பேதில போவானுக.”

“எங்கைய்யா சொல்வாக, மண்ணு இந்த தாயோட மாரப்பு மாதிரி.  அவ சேலையை விலக்கி நமக்கு இந்த தண்ணிய தாரா.  அவ சேலையை அவக்கவுடாதீங்கலேன்னு.”

சங்கரன் ஆற்றங்கரையில் துணி வெளுக்கும் பாட்டையாவின் மகன்.  படிப்பு ஏறமாட்டேங்குதென்று பத்து பன்னிரெண்டு வயசிலே அப்பனோடு தொழிலுக்கு வந்துவிட்டான்.  இந்த ஆத்தை  நம்பி அழுக்குகளை வெளுக்கும் எத்தனையோ பேர்களில் இவன் குடும்பமும் ஒன்று.  துவைப்பு வெளுப்பு தேய்ப்பு என்று அழுக்குகளோடு உழலும் மனிதர்களுக்கு உள்ளத்தில் மட்டும் கொஞ்சமும் கறையில்லை.

“என்ன கொடியல எல்லாம் அவத்துக் கெட்டிட்டு இருக்கியா என்ன? இந்த ஐப்பசி வெள்ளம் ஏறுச்சுன்னா ஒங்க பாடும் சீரழிவுதாம் போ.”

“ஆமாம்ணே, தண்ணி கரையேறுச்சுல்லா வெளுப்புகளை காயப்போட வழியத்துப் போய்டக்கூடாதுன்னு மேலதள்ளி கொடி போட்டுருந்தோம்.  தேய்ப்புகள் குறைச்சுருச்சுன்னா கரைக்கு வந்தாதானே பொழப்பு.”

வருடக்கணக்காய் இந்த ஆற்றங்கரையில் நடந்த ஒரே தொழில்களில் மிச்சம் நிற்பது வெளுப்பும் சவரமும்தான்.  நாசவன் படு தேவலாம் சிரைத்தோமோ கழுவினோமா என்ற ஆற்றை மொண்டு பிழைத்துக் கொண்டு போய்விடுவான்.  வெளுப்பாளி பிழைப்பு ஆத்துக்கும் கரைக்கும் அழுக்கள்ளி வீணாய்ப்போனது.  தொழில் மாறலை என்றாலும் நவீனம் கொஞ்சம் புகுந்துதான் விட்டது.  வெள்ளாவிகள் வழக்கொழிந்துவிட்டன.  இன்றைக்கு சைக்கிள்களும் ஸ்கூட்டர்களும் வந்துவிட்டதால் கழுதைகளை எல்லாம் பார்த்து வருடங்களாகிவிட்டது.  

“மழையடிச்சாலும் வெள்ளம் வந்தாலும் உங்களுவ பொழைப்பை ஒருமாதிரி பொரட்டி போட்டுறது, என்னா  இப்ப நைனார் லாட்ஜுல அப்பாதானே வெளுக்காரு?”

“ஆமாண்ணே. தேரோட்டத்துக்கு வந்தியாலாண்ணே?”

“ஆமாப்பா, அதுக்கும் சேர்த்துத்தான்.  தங்கச்சிக்கு தலைப்புள்ள பொறந்திருக்கு.  மாமன் சீரும் செய்யணும்லா ரெண்டையும் முடிச்சு நாள ராத்திரி வண்டிக்கு கௌம்பனும்.”

“அந்தப் பக்கம் கொஞ்சம் வழுக்கும், இப்படி எறங்குங்க”.

“உங்கள்வ யெடத்தையெல்லாம் இடிக்கப் போறம்ன்னு பேசிக்கிட்டு கெடந்தாவளே, என்னாச்சு மாறி.”

“ஊருக்குள்ள போற சவத்தை ஆத்தங்கரை வழியா எடுத்துட்டுப் போவணும்ன்னு நோட்டீசு கொடுத்திருக்கானுங்க.  சரி சவம் போய்ட்டு போவுது நான்ன என்ன வேணாம்ன்னா தடுத்தோம்.  அதுக்காக நாங்க வாழ்ற எடத்தை அரசாங்கத்துதுன்னு பிடுங்க நாயா பேயா அலையுதானுவ.  எங்க மாமன் ஒருத்தர் கைக்குள்ள நாங்கள்ளாம் இருக்கறதால தப்பிச்சுக் கெடக்கோம்.”

“ஆத்தை நம்பி பொழப்பு பாக்குறது சரிதாம்டே.  வெள்ளம் வந்தா மாறி வீட்டுக்குள்ள வந்து அல்லல்படறததும் நீங்கதானே? அதுக்கு கரையொதுங்கி கெடந்தா நல்லதுதான!”

“கரைய ஏத்திக் கொடுக்கலாம்லாண்ணே.  இவனுவ மண்ணு அள்ளி சரிஞ்சதுதானே இந்த கரையெல்லாம்.  எதிர்த்தாப்டி பாருங்க மாஞ்சோலக்காரங்க பதினேழு பேரு செத்த ஒடனே என்னென்ன வேலை பார்த்தானுவ.  பார்த்துட்டுதானே இருக்கீய.  எண்ணே ஊரத்தாண்டி பொட்டல் காட்டுலே வீட்டைக்கட்டி வைச்சு அங்க போய் எங்கல இருங்கான்.  இந்தான்னா பேராச்சிகிட்டயும் காந்திமதிட்டயும் சாலைக்குமாரங்கிட்டயும் போய் நிப்போம்.  அங்கன எங்களுக்கு யார் நாதி”.  

“அதுசரி.  இந்த எடத்த வச்சி கர்மெண்டு என்னத்தத பண்ணப் போவுது.  அவனுவ மட்டும் வெள்ளத்துல  நீச்சலடிச்சா கெடக்கப் போறனுவ?”

Karthick Pugazhendhi (கார்த்திக் புகழேந்தி)

“ஏண்ணே ஜங்சனுக்குள்ல இருக்கற எங்கள காருவண்டிகூட வாராத பொட்டலுக்கு வெரட்டுதாம்ன்னா சும்மயாண்ணே?  அமைச்சர்மார்வல்லாம் வெள்ளம் வந்தாத்தான் இங்கன எட்டிப்பாக்காம்னு நெனைக்கீயளா? இந்த யெடத்து மேலதான் அவனுவள் கண்ணுல கொள்ளி .  ஊருக்கே பட்டா குடுப்பானவ, எங்கள நாயாப் பேயா அலையவுடுதானே ஏன்?  கேப்பாரில்லன்னா?  எடத்துல மேலயே குறி அவனோள்க்கு.”

“இந்த எடத்துக்கு பட்டா கெடையாதுன்ன.  சங்கடந்தான் .  என்ன ஒரு நூறு குடும்பங்க இருப்பியளாடே.”

“மிச்சத்த எங்க கொண்டு போயி சேக்க.  மாமன் வாடகைக்கு விட்டதே எழுவது வீடு தேறும்.  வெளியூர்ல பொழைக்க வந்ததுவ அதுவ இதுவன்னு ஒரு நாப்பது அம்பது குடும்பங்க தேறும்.  பஜாருக்குள்ள கடபோட்டவன்வ எல்லாம் இப்ப இங்கதானே கெடக்கான்.  இந்த பீகார் பயல்வ, பஞ்சுமுட்டாய் விக்கவனுவன்னு எல்லாவனுக்குக்கும் இங்க தான் குடியிருப்பு.  ஆனா எங்களுக்குள்ள ஒரு சச்சரவு வருதா பாருங்களேன்”.

“ஒரு கொத்தா வாழ்தீயன்னா நல்லா இருங்கடே,  எங்காதுக்கு வந்த வரைக்கும் இங்கன ஒரு பெரச்சனை வந்ததுன்னா அதே சாக்கா வச்சி, மொத்தமான கைழுவி விட்ருவானுங்க ஜாக்கிரதையா இருங்கலே.”

“காந்திமதி ஆத்தா, எங்களுக்கும் கண் தொறப்பான்னு நம்பிக்கிடுதோம்”.

இந்த சனங்கள் பல தலைமுறைகளாகவே ஆற்றங்கரையை ஒட்டி வாழ்பவர்கள்.  சுலோச்சன முதலியாரிடம் உன் காசைக்கொண்டு ஆற்றில் போடு என்று சொல்லிவிட வீராப்பில் தாமிரபரணிக்குக்கு குறுக்கே இந்த ஆற்றுப்பாலத்தைக்  கட்டி, இரட்டை நகரத்தையும் ஒன்றாக்கி இணைத்திருக்கிறார்.  பின்னால் வந்த வெள்ளைக்காரன்கள் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதுப்பாலம் கட்ட நினைத்தபோது நகத்தடி செங்கலையும் அசைக்கமுடியவில்லை.  அப்படி ஒரு கட்டுமானம்.  வேறு வழியில்லாமல் அதே ஒட்டி அகலப்பாலம் போட்டார்கள்.

பாலத்துக்கடியில் வாழும் இந்த மக்கள் அப்போதைய கட்டுமான வேலைகளில் கூட கூலியாக உழைத்தவர்கள்.  தெற்கு மண்டலங்களிலிருந்து திருநெல்வேலிக்குக் குடியேறின அநேக கூலிகளும் இந்த நிலத்தில் குடிபெயர்ந்தனர்.  அதற்கு முன்னமே  வெளுப்புத் தொழில் நடைபெற்ற இடம்தான் இது.  

கொக்குக்கு குருகு என்றொரு பெயருண்டு,  கொக்குகள் சூழ்ந்து நின்ற துறைதான் இன்றைக்குக் குறுக்குத் துறை. குட்டத்துத்துறை மீன் கடித்தால் எந்த ரோகமும் நிவர்த்தி ஆகிடும் என்பதால்தான் பாளையங்குட்டத்துறை என்று பேரே.  இன்றைக்கு பேராச்சி அங்கேதான் உக்கார்ந்துகொண்டு வண்ணாரப்பேட்டையாகக் காத்து நிற்கிறாள். இங்கே ஒவ்வொரு துண்டு நிலத்துக்கும் மக்களின் உழைப்பும் வரலாற்றுப் பின்புலமும் மறைவாக நிலைத்து நிற்கின்றது.  எத்தனையோ வெள்ளங்களைப் பார்த்த மக்கள் இன்னும் ஏன் இங்கேயே வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த ஆறுதான் அத்தாட்சி.  

தொண்ணூறுகளில் கரையுடைத்து வந்த வெள்ளம் இவர்களின் வாழ்வைப் புரட்டிப் போய்விட்டது.  அன்றைக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தப்பட்ட மக்கள்தான் மெல்ல மெல்ல நகருக்குள் ஐக்கியமாகி விட்டார்கள்.  ஆற்றை நம்பிப் பிழைப்பவர்கள் மட்டுமே தங்கள் ஈரத்துணி காயாமல் இங்கேயே மூக்கைப் பிடித்துக் கொண்டு இந்த நதிக்குள்ளே மூழ்கிக் கிடக்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் எங்கள் தண்ணீரைக் குடிக்கத் துவங்கின.   உள்ளூர் பெருச்சாளிகள் எங்கள் மணலைத் தின்று ஏப்பம் விட்டன.  இப்போது எங்கள் நிலங்களும் அவர்களுக்கு வேண்டும்.  

பாதுகாப்புக்கு என்று காரணம் சொல்லி எங்களை விரட்டி அடிக்கும் இதே ஆற்றின் மறுகரையில்தான் ஆட்சியர் அலுவலகம் முதல் அறிவியல் பூங்கா வரைக்கும் விஸ்தரித்துக் கிடக்கிறது.  

எங்கள் அடுத்த தலைமுறை மாநகரப் பேருந்தில் வந்து இந்த ஆற்றங்கரையையும் சுழித்தோடு நதியையும் வெறித்துச் செல்ல வேண்டிய நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் தவிக்கிறோம்.  நிலத்தை அபகரிப்பது எத்தனை பெரிய சுரண்டல் என்பதைச் சொல்லித் தராத கல்வியைத்தான் எங்கள் பிள்ளைகள் மீது சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தாகத்துக்கு தவிக்கும்போது யாரோ ஒரு வெள்ளைக்காரனிடம்தான் கையேந்த வேண்டுமென்று தெரிந்தும் தெரியாமலும் ஒரு கூட்டம் நெல்லையப்பன் தேரோட்டத்தில் விசிறியடித்த பன்னீர்த்துளி தங்கள் மேல் படாதா என்று சன்னதியை நோக்கிக் கைதூக்கிக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறது.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.