“மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்
மதுரைக்காரரான கார்த்திகைப் பாண்டியன் தற்போது கோவையில் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தொகுப்பானது கடந்த 2015-ல் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பாகும். கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகளுடன் லட்சுமி சரவணக்குமார் மற்றும் போகன் சங்கரின் இக்கதைகள் குறித்த அனுபவக் குறிப்புகளுடன் தொகுப்பு வெளிவந்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின் ஒற்றை நேர்கோட்டிலான எதார்த்தவாதக் கதை சொல்லல் மட்டுமின்றி பல்வேறு வகையான கதையாடல் மொழிகளையும் வடிவங்களையும் உள்ளடக்கிய நிறைவான தொகுப்பு.
வாழ்வின் அபத்தத்தை இத்தனை அழகாக மொழிப்படுத்த இயலுமா என்ன? கதைகள் எல்லாவற்றிலும் அபத்தத்தின் ‘பொடனி அறைதலும்’ மீ-யதார்த்தத்தின் இருப்பும் நிகழ்ந்தபடியே இருக்கிறது.
ஒருவனின் நான்கு பரிமாண நிழல்களும் அவனது அகத்தைப் பிரதிபலிக்கும்போது எது உண்மையானது என்ற கேள்வி எழுப்பும் ‘நிழலாட்டம்’,
எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்ற இலக்கிய பீடங்களின் அதிகார இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் (இத்தனைக்கும் கார்த்திகைப் பாண்டியன் தன்னுள் உறைந்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத்தான் இந்நூலை சமர்ப்பித்துள்ளார்) “Viva Le Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும்”,
உடைந்து நொறுங்கிப் போன இதயத்துக்கும் அது நொறுங்குவதை பார்த்தபடியே உள்ளூர அதை ரசித்தபடியே இருக்கும் ஒரு மனதையும் பேசும் ‘அந்தரமீன்’,
தடித்து ஊதிப் பெருத்துப் போன தன் உடலின் மீதான சுயவெறுப்பு பெண்ணுடல் மீதான குரூர வன்முறையாய் மாறும் ‘பெருத்த மார்புகளுடைய ஆணின் கதை’,
வாழ்வின் பல்வேறு நிலையிலான அபத்தங்களை மையமற்ற வெவ்வேறு பாத்திரங்கள் வழியே நம்மோடு அந்தரங்க மொழியில் உரையாடும் ‘மர நிறப் பட்டாம்பூச்சிகள்’,
மகளைத் தொலைத்துவிட்டுத் தேடி வரும் கன்னியாகுமரியில் மகள் வயதொத்த பெண்ணுடன் ஏற்படும் உடல் ரீதியிலான உறவும் அது ஏற்படுத்தும் உணர்வு குறித்தும் அதை விவேகானந்தரோடு அருகருகே வைத்து உரையாடவிடும் ‘கன்னியாகுமரி’,
லத்தீன் அமெரிக்கக் கதைகளின் சாயலில் அற்புதமான ‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’,
சக மனிதன் மீதான நம்பிக்கை, நம்பிக்கையின்மை, பிறர் நேர்மை X சுய நேர்மை போன்ற முரண்களின் முடிச்சுகளை இயல்பாக எதார்த்த பாணியில் விவரிக்கும் ‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’,
பெருநகரத்தில் ஒருவனின் கைப்பேசி அணைந்து விடும் நொடியில் இருந்து அது மீண்டும் உயிர்ப்பிக்கும் வரை அவனுக்கு நேரும் ஒரு வித பாதுகாப்பற்ற தனிமையுணர்ச்சி பற்றிய ‘நவீன’ உணர்வுகளைப் பேசும் (அந்த வகையில் இதுவே முதல் என நினைக்கிறேன்) ‘தனி’,
மரணம் என்பதை நீட்சே, காம்யு வழி அறிந்து கொண்டவனும் தன் வாழ்நாள் முழுக்க கொடும் மரணங்களையும் அது ஏற்படுத்திய பீதியுணர்வுடன் வாழ நேர்ந்தவனுமான ஒருவன் முதன்முறையாக ஒரு மரணத்தை (மனதுக்கு நெருக்கமற்ற ஒருவர்) ஆழ்ந்து ரசித்து பார்க்க நேர்ந்தபின் ஏற்படும் ஆசுவாசம் பற்றிப் பேசும் ‘பரமபதம்’ என ஒவ்வொரு கதையும் வெகுநேர்த்தி – மொழிவழியாகவும் சொல்முறைவழியாகவும்!
மத்திய தர வர்க்க மனிதர்களின் பார்வையில் சொல்லப்படும் இக்கதைகளில் மனித உடலின் துய்ப்பும், மனித உடலின் வாதையும் தொடர்ந்து பதிவாகியபடியே இருப்பது தற்செயலாகத் தெரியவில்லை. கார்த்திகைப் பாண்டியன் மேற்கோள் காட்டிய காம்யூவின் வரிகளைச் சொல்லி முடிப்பதே இத்தொகுப்புக்குச் செய்யும் முத்தாய்ப்பான அறிமுகமாக இருக்கும் – ‘At any street corner the feeling of absurdity can strike any man in the face” – Albert Camus.
சமீபமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறுகதைத் தொகுப்புகளாக வாசிக்க நேர்வது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. த.ராஜனின் பழைய குருடி, பா.திருச்செந்தாழையின் விலாஸம் – இப்போது கார்த்திகைப் பாண்டியனின் மர நிறப் பட்டாம்பூச்சிகள்.
நூலின் விவரங்கள்:
நூல் : “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” (Mara Nira Pattampoochigal) சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : கார்த்திகைப் பாண்டியன் (Karthigai Pandian)
பதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
விலை : ₹.180
தொடர்புக்கு: www.ethirveliyedu.in – 04259 226012 – 99425 11302
எழுதியவர்:
✍🏻 – அன்புச்செல்வன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
