நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) – நூல் அறிமுகம்
– தேனிசீருடையான்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில்நுட்பம் என்ற துறை மாயவலை விரித்து உலக அறிவுஜீவிகள் அனைவரையும் வளைத்துப் பிடித்து மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. ஏழ்மையில் அமிழ்ந்து கிடக்கும் இந்தியா போன்ற நாடுகளின் வேலையில்லாப் பட்டதாரிகளை உள்வாங்கி அவர்கள் வாழ்வை நட்சத்திர ஜொலிப்பாய் மின்னச் செய்கிறது. மின்னும் நட்சத்திரங்கள் அறிவியல் பூர்வமாக உண்மை ஒளி படைத்தவை. ஆனால் இந்த மண்ணுக்கு வரும்போது மின்மினியாய் மட்டுமே குறைந்த ஒளி தருகிறது. மிகச்சிறிய துணைக் கோளாகிய நிலா தரும் ஒளியில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அவை தருவதில்லை, ஆனால் ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அந்த வலைக்குள் விழும்படியாக தங்களைத் தாங்களே ஒப்படைத்துக் கொள்கிறார்கள் நம் இளைஞர்கள் என்பதோடு தாங்கள் பெரிய அளவில் ஒளி பொருந்தியவர்கள் என்ற கற்பனைச் சிந்தனையோடு உலா வருகிறார்கள்.
மென்பொருள் தொழில்நுட்ப வருகையை ஒட்டி, தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான செயல்பாடுகள் பிரம்மிக்க வைக்கின்றன. அது விரித்திருக்கும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்ட பின் தமிழ்நில வாழ்வின் யதார்த்தத்தில் இருந்து விலகி கற்பனா லோகத்தில் சஞ்சரிக்கிறார்கள் புதிய பட்டதாரிகளும் அறிவுஜீவிகளும்.
தகவல் தொழிநுட்பம் என்பது முழுக்க முழுக்க புள்ளி விவரக் கணக்குகள் சார்ந்தது. அமெரிக்க வங்கி ஒன்றுக்கான ப்ராஜெக்ட்டுக்காக சென்னையில் இருந்து செயல்படும் ஐடி நிறுவனம் ஒன்றின் கதைதான் இந்த நட்சத்திரவாசிகள் (#Natchathiravaasikal) நாவல்.
அமெரிக்காவில் பகல் என்றால் இங்கு இரவு. பெரும்பாலும் இரவில்தான் தமிழ் இளைஞர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதுவே பெரும் மன உளைச்சலைத் தந்து விரக்தியை உண்டு பண்ணுகிறது. இந்த நாவலில் வருவதுபோல இருபது வயதுக்கு உட்பட்ட புதிய இளைஞர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், பல வருடங்கள் பணியாற்றி அனுபவப்பட்டவர்கள் விரக்தி மனோபாவத்தோடும் அலைகிறார்கள்.
பெரும் ப்ராஜெக்ட் ஒன்றைக் களத்தில் இருந்து செய்யும் இந்த நிறுவனம் பல இளைஞர்களை வேலைக்கு எடுத்து வேலை வாங்குகிறது. லட்சத்தைத் தொடும் சம்பளம் என்பதால் பலரும் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். அந்த கம்பனியின் எம்டி சத்தியமூர்த்தி. அவருக்குக் கீழ் பணியாற்ற வந்த வேணுகோபால் தனது அயராத உழைப்பால் முன்னேறி, சத்தியின் இடம் நோக்கி நகர்கிறார். வேணுவின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் சத்தி உள்ளூரப் பொறாமைக் கண்கொண்டு நோக்கினாலும் வெளிப்படையாக வேணுவை ஊக்கப்படுத்தியபடி பேசுகிறார்.
வேணுவுக்குக் கீழ் சஞ்சீவி என்ற சாஜு, நித்திலன், பனிமலர், அர்ச்சனா உள்ளிட்ட பலர் பணியாற்றுகின்றனர்.
சாஜு நுட்பமான அறிவு படைத்தவர். அவர் இல்லை என்றால் அந்த ப்ராஜெக்ட் முழுமையடையாது. என்று நினைக்கும் அளவுக்குத் தன்னை மேம்படுத்திக் கொள்கிறார். வேணுவுக்குப் பொறாமை. அதனால் சாஜுவுக்குக் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, வெளிநாடு செல்ல வேண்டிய விசா முதலியவற்றை வழங்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார். சாஜுவுக்கு ஈகோ கூடுகிறது. கம்பனி தன்னால்தால் கூடுதல் லாபம் ஈட்டுகிறது என்ற யதார்த்தம் புரிந்து வேணுவிடம் முறையிடுகிறார். அவரும் அடுத்து பார்ப்போம் என்று சொல்லி ஒரு வருடத்தைக் கடத்திவிட, சாஜுவுக்குக் கோபம் உண்டாகி விலகல் கடிதம் தருகிறார். நிச்சயம் தனது விலகல் கடிதம் ஏற்கப்படாது என்ற நம்பிக்கை சாஜுவுக்கு. ஆனால் வேணுவின் வக்ர மனம் சாஜுவைத் தண்டிக்க நினைத்து அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறார். புதிதாய் வேலைதேடி எந்தக் கம்பனிக்குப் போனாலும் இந்த அளவு சம்பளம் கிடைக்காது என்பது வேணுவின் கணக்கு; அதனால் விலகல் பேப்பரை அவராக வாபஸ் வாங்குவார் என்று நினைக்கிறார். ஆனாலும் இருவரும் ஈகோ காரணமாகத் தங்கள் நிலையில் உடும்புப் பிடியாய் இறுக்கிக் கொள்கின்றனர்.
விளைவாக வேணு மேற்கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் பலவீனப்படுகிறது. நட்டம் இல்லை என்றாலும், லாப ஈவு குறைகிறது. சத்தியமூர்த்தி, ஸ்டீஃபன் என்ற இளைஞன் மூலம் வேணுவுக்கு நெருக்கடி தந்து அவரைப் பணியிலிருந்து விலகச் சொல்கிறார். வேணு எவ்வளவோ கெஞ்சியும், மன்றாடியும் ஸ்டீஃபன் அசையவில்லை. வேணு ஓர் அடிமையைப் போல கெஞ்சுகிறார். குழந்தைகள் படிப்புக்கும் வீட்டு லோனுக்கான இ.எம்.ஐ கட்டவும் என்ன வழி என்று எடுத்துச் சொல்லியும் கம்பனி ஏற்கவில்லை. பாதிச் சம்பளம் தந்தாலும் போதும் என்ற அளவுக்குக் கீழிறங்கிய பிறகும் கம்பனி இரக்கம் காட்டவில்லை. சாஜுவால்தான் கம்பனிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. வருவாய் இழப்புக்கு என்பதை விட லாபத்தில் குறைவு உண்டானது. வருவாய் இழப்பு வேணுவின் திறமையின்மை முக்கியக் காரணம் என அறியப்பட்டு வேணு பணிநீக்கம் செய்யப்படுகிறார். வேணுவின் சம்பாத்தியம் பறிபோனது. இனி எந்த வேலைக்கும் போக முடியாத கையறு நிலையில் வேணு கம்பனியிலிருந்து வெளியேறுகிறார்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. எல்லா நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் சாதாராணத் தொழிலாளிக்குக் கூடப் பணிப் பாதுகாப்பு இருக்கிறது. எடுத்த எடுப்பில் ஒருவரைப் பணி நீக்கம் செய்துவிட முடியாது. விசாரணை, இடைநீக்கம், பிறகு தவிர்க்க முடியாத தருணம் வந்தாலதான் டிஸ்மிஸ். ஆனால் இந்தக் கம்பனியில் விசாரணை செய்யாமல் கூட வேணு நீக்கப்படுகிறார் ஒரு பெரு நிறுவனத்தின் எம்டிக்கு அது கிடைக்கவில்லை. ஒரே நொடியில் அவர் வெளியேற்றப்படுகிறார். அவரால் நீதிமன்றத்துக்குப் போக முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனென்றால் அது அமெரிக்க வங்கி. அமெரிக்காவின் ஆணை இந்திய நீதிமன்ற வரம்புக்குள் வரமுடியாது.
ஊடாக நித்திலன், அவன் மனைவி மீரா ஆகியோரின் தாம்பத்தியம் இன்னொரு தன்முனைப்புப் பகுதியாய் நெடும்பயணம் செய்கிறது. ஐடி கம்பெனியில் பணியாற்றுபவன் என்ற கவர்ச்சிகரமான பிம்பம் மீராவையும் அவள் பெற்றோரையும் வசீகரிக்க்கிறது. நவநாகரீக எண்ணம் கொண்டவனாய் இருப்பான் என்ற நோக்கில் தன்னைக் காதலித்தவனை நிராகரித்து நித்திலனைக் கல்யாணம் செய்கிறாள் மீரா. தன் தந்தையின் மத்திய அரசுப் பணி காரணமாக இந்தியா முழுக்கப் பயணம் செய்து சுதந்திரப் பறவையாய்த் திரிந்தவள் மீரா. தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று அவள் நினைக்கும் அதே வேளை, அவள் தன் கட்டுக்குள் இருக்கவேண்டும் என்று நித்திலன் நினைக்கிறான்.
அவளுடைய நடவடிக்கைகள் பிடிக்காமல் வெறுக்கிறான் நித்திலன். அவள்மீது சந்தேகப் பார்வை பட்டு சண்டை சச்சரவு அதிகரித்துப் பிரிகின்றனர். மீரா மின்னஞ்சல் மூலம் தனது விலகலை அறிவிக்கிறாள். தனது தோழியின் விடுதியில் சென்று தங்கப் போவதாகவும், தன்னைத் தேடி வரவேண்டாம் என்றும் எழுதிவிட்டுச் சென்று விடுகிறாள். தான் திரும்பவும் நித்திலனோடு சேர வேண்டுமா என்பதைப் பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறாள். இருவரும் நாவலில் ஒன்றிணையாமல் விடுபடுகின்றனர். நித்திலனின் காலத்துக்கு ஒவ்வாத, அவனது அந்தஸ்துக்கு ஏற்பு இல்லாத குணத்தால் அவர்கள் இணையப் போவதில்லை என்று நாவல் மறைமுகமாகப் பிரகடனப்படுத்துகிறது.
லாப நோக்கக் கம்பனிகள் மனிதாபமானம் சிறிதும் இல்லாமல் இயங்குகின்றன என்பதே நாவலின் மையம்.
அடுத்து செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதில் தேர்ச்சி பெறப் போகும் இளைஞர்கள் இன்னும் கூர்மையான அறிவுஜீவிகளாகவும் பணத்துக்கான ஏவலாளிகளாகவும் ஆகப் போகிறார்கள் என்று நினைக்கும் போது லாபம் என்ற பருப்பொருளின் விஸ்வரூப வளர்ச்சி என்னாகப் போகிறதோ என்று பயமாக இருக்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை பறிபோகப் போகிறது. செயற்கைத் தேன் தடவிய நஞ்சுப் பொட்டலமாய் அவர்களின் வாழ்வு அமையப் போகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் “டார்த்தீனியம்” என்றொரு குறுநாவல் எழுதியிருக்கிறார். அமெரிக்க அரசால் இந்தியாவில் தூவப்பட்ட பார்த்தீனியம் என்ற நஞ்சுச் செடி காடுவெளியிலும், மலைமுகடுகளிலும், வயல் பரப்புகளியிலும் வளர்ந்து நிலத்தை விஷமாக்கிவிட்டு இறுதியாக ஒவ்வொரு வீட்டுத் தாவாரத்திலும் வளர்ந்து பரவுகிறது. மனிதனுக்குள் விஷத்தைச் செலுத்துகிறது. அதுபோல்தான் இந்த தகவல் தொழில் நுட்பமும், செயற்கை நுண்னறிவுத் திறனும் ஒவ்வொரு மூளையிலும் புகுத்தப்பட்டு வாழ்க்கை நாசமாகப் போகிறது. இதுதான் நாவலின் பேசுபொருள்.
இன்றைய வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியப் படைப்பு “நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal).”
நூலின் விவரம்:
நூல்: நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal)
ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்பிரமணியன்.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்.
பக்கம்: 262.
விலை: ரூ.300/
நூல் அறிமுகம் எழுதியவர்:
எழுத்தாளர். தேனிசீருடையான்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

