கார்த்திக் திலகன் கவிதைகள்

கார்த்திக் திலகன் கவிதைகள்

1)அன்பே என் அன்பே
************************
En Anbe Song Lyrics - DJ Mastermind feat Syed Subahan & Mash Supremacy
கனவுக்குள் வந்து நின்று
அழைப்பு மணியை அழுத்துகிறாய்
துள்ளும் மணியோசையில்
துயில் கலைந்து எழுந்துவிட்டேன்
எவ்வளவு நேரம் கைவலிக்க
அழைப்பு மணியை திரும்பத் திரும்ப  அழுத்துகிறாயோ அன்பே
கதவைத் திறந்து உன்னை உள்ளே அழைக்க முடியாமல்
விழிப்புக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்
முதலில் தூக்கத்தை திறந்து
பிறகு கனவைத்திறந்து
கனவினுள் இருக்கும் கதவினைத் திறந்து உன்னை உள்ளே அழைக்கவே
தவியாய் தவிக்கிறேன்
2) தியானம்
*****************
தியானம் செய்தால் என்ன கிடைக்கும் ...
நெருப்புத் தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட  தியான மண்டபம்
புகையால் வேயப்பட்ட கூரை
நடுவில் அமர்ந்திருக்கிறாள் 
சிறிய எலுமிச்சை பழங்களை கோர்த்ததுபோல் மணிமாலை அணிந்த பெண்
விம்மும் மார்புகளால் அதை ஜெபிக்கிறாள்
முதல் துளி கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல ஓடிவருகிறது அடுத்த துளி கண்ணீர்
3) காலிச் சொற்கள்
*********************
ஓரெழுத்துச் சொற்கள்: - Life of Tamil
சொற்களில் இருந்து
இறங்கிப் போய்
இரண்டு அர்த்தங்கள்
தெருவில் 
சண்டை இட்டுக் கொண்டன
காலிச் சொற்கள் சண்டையை
வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன
அவ்வழியே சென்ற குப்பை சேகரிக்கும் பைத்தியன்
அந்த காலிகளை பொறுக்கி
தன் சாக்கு பையில் போட்டுக்கொண்டு
போய்விட்டான்
இனி சண்டை முடிந்ததும் அந்த அர்த்தங்கள்
எங்கு போய் கூடடையும்
4) அளவை
**************
திருமதி பக்கங்கள் ...
எங்கள் ஊரும் மலையும் அருகருகே படுத்திருக்கும் காதலிணைகள் 
மலையின் காதல் மொழியை கேட்டு ஊர் கிரங்கி இருக்கும் நள்ளிரவில்
நான் தாபத்தில் விழித்திருப்பேன்
நீளமான விஷயங்களை அம்மலையைக் கொண்டு அளப்பது எங்களூர் வழக்கம்
நான் கூட என் பெருமூச்சை மலையின் அளவில் சொல்வதுண்டு
மூன்று மலை நீளத்திற்கு நான் விட்ட பெருமூச்சுதான் இன்று வரை என்
சாதனையாக இருக்கிறது
அது அவள் என்னை பிரிந்து சென்றபோது விட்டது
அதை விட நீளமான பெருமூச்சை என்னை விடச்செய்துவிட வேண்டுமென்று
பந்தயம் கட்டித் தோற்றுக் கொண்டிருக்கின்றன என் பெருந்துயரங்கள்
5) புள்ளியை நோக்கி நகரும் வட்டம்
***************************************
பிரமிள்: பிரமிள் கவிதைகள்
முதுமையில் இருந்து குழந்தைமையை நோக்கி பின்னோக்கி வாழ்ந்து பார்க்க வேண்டும் என்றான் கிழவன்
அப்போது நிரந்தரமாக பிரிந்து போனவர்கள் பழைய அன்போடு திரும்ப வருவார்கள் 
முதுமையின் சுருக்கங்கள் நெளிந்து இறங்கி எங்கேயோ நழுவி ஓடிவிடும் 
இல்லற சுகத்தை முடிவில் இருந்து தொடங்கி முதல்வரை அனுபவிக்கலாம் 
மீசை உதிர்ந்து அரும்பாகி பொழுதுகள்  சிரிப்புத்தோரணமாகத் தோன்றும் 
பிறகு மணலில் விளையாடி 
தாயின் மடியில் உறங்கி
குழந்தமையின் தெய்வீக ஒளியில் மூழ்கி
தான் காணாமலாகிவிடுவேன் என்று
புலம்பிக் கொண்டிருந்தான்
கிழவனை தோதாக மடியில் கிடத்திக் கொண்டாள் அவனது இல்லக்கிழத்தி
குழந்தையைப் போல தவழ்ந்து தவழ்ந்து வெளியேறிச் சென்றது அவனது உயிர்
Show 1 Comment

1 Comment

  1. Saradha Santosh

    விழிப்புக்குள் சிக்கிக் கொண்டு..
    விம்மும் மார்புகள்..
    அஅந்த அர்த்தங்கள் எங்கு போய் கூடடடையும்..
    மூன்று மலை நீளத்திற்கு நான் விட்ட பெருமூச்சு
    குழந்தையை போல தவழ்ந்து.. தவழ்ந்து.. வெளியேறிச் சென்றது அவனது உயிர்..

    கவிஞர் உயிரைக் கொடுத்து எழுதிய வரிகள்..

    மலையின் உச்சியில் உருவாகும்
    குறுகிய நீர்வீழ்ச்சி..
    ஆழப் பாய்ந்து..
    கரையை அகலப்படுத்தி..
    கடலைத் தேடி பாய்வதை போன்றது
    கவிஞர் கார்த்திக் திலகனின் கவிதைகள்.. நெஞ்சு நிறை வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *